Election bannerElection banner
Published:Updated:

திமுக நிர்வாகிகள் வீடுகளில் ஐ.டி ரெய்டு; செக் வைக்கும் டெல்லி - 5 தொகுதிகளில் தேர்தல் நிறுத்தமா?

சபரீசன்
சபரீசன்

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினின் மகள் செந்தாமரை சபரீசன் மற்றும் கரூர் தி.மு.க வேட்பாளர் செந்தில் பாலாஜி ஆகியோரின் வீடுகள் உட்பட சில இடங்களில் இன்று வருமான வரிச் சோதனை நடந்தது. திடீரென வருமான வரிச் சோதனை நடத்துவதற்கான காரணம் என்ன?

திரும்பிய பக்கமெல்லாம் தி.மு.க உறுப்பினர்களின் வீடுகளில் வருமான வரித்துறையினரின் சோதனை நடந்துகொண்டிருக்கிறது. தேர்தல் நேரத்தில் மத்திய அரசின் கட்டுப்பாட்டிலிருக்கும் வருமான வரித்துறை மூலம் நடத்தப்படும் இந்தச் சோதனைகளை `அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை’ என்று அரசியல் கட்சித் தலைவர்கள் கருத்து தெரிவித்துவருகின்றனர். அதேநேரத்தில், `மக்களுக்குப் பணம் கொடுப்பதைத் தடுக்க, தேர்தல் ஆணையம் நடத்தும் நடவடிக்கைதான் இந்த வருமான வரிச் சோதனைகள்’ என்று மற்றொருபுறம் விளக்கம் கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.

தமிழகத்தில், குறிப்பாக தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினின் மகள் செந்தாமரை மற்றும் கட்சியின் நிர்வாகிகள் வீடுகளில் - நடத்தப்படும் வருமான வரித்துறை சோதனைகளின் நோக்கம் என்ன என்பதைத் தெரிந்துகொள்ள விவரமறிந்த சிலரிடம் விசாரித்தோம். ``குறிப்பிட்ட ஐந்து தொகுதிகளில் தேர்தலை நிறுத்திவைக்கும் ஐடியாவில்தான் இந்த வருமான வரித்துறை சோதனைகள் நடத்தப்படுகின்றன. குறிப்பாக, வாரிசுப் பிரமுகரின் தொகுதியைக் குறிவைத்து மத்திய அரசு சில சித்து விளையாட்டுகளை நடத்த ஆரம்பித்திருக்கிறது. தமிழ்நாட்டிலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வாரிசு பிரமுகர் வெற்றிபெற வேண்டுமென, `ஆலயம்’ தரப்பில் முடிவெடுக்கப்பட்டிருப்பதால், அதற்காகத் தொகுதி முழுவதும் ஸ்வீட் பாக்ஸ் மணம் கமகமக்கிறது. இதை மோப்பம் பிடித்துத்தான் இந்த ரெய்டு காட்சிகள் அரங்கேறுகின்றன” என்றவர்கள், ``தி.மு.க-வுக்கும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கும் `நீங்கள் வெற்றிபெற்றாலும் உங்களின் கடிவாளம் எங்கள் கையில்தான்’ என்பதை உணர்த்துவதற்காக மத்திய அரசு செய்யும் வேலைதான் இவை” என்றும் கூறுகின்றனர்.

நீலாங்கரை சபரீசன் வீடு
நீலாங்கரை சபரீசன் வீடு

``வருமான வரித்துறை சோதனையின் மூலம் ஏதாவது கிடைத்ததா?” என்று வருமான வரித்துறை வட்டாரங்களில் விசாரித்தோம். ``சோதனையில் பணமாக ஏதுவும் கிடைக்கவில்லை. ஆனால், சில டாக்குமென்ட்டுகள் கிடைத்துள்ளன” என்றனர். இந்த டாக்குமென்ட்டுகளை வைத்து தி.மு.க வேட்பாளர்கள் சிலருக்கு செக் வைக்க முடியுமா என்று டெல்லி தலைமை ஆலோசித்துவருகிறதாம்.

தேர்தலுக்கு இன்னும் நான்கு தினங்களே மீதமிருக்கும் நிலையில், இந்த ரெய்டு காட்சிகள் தமிழக அரசியலை தகிக்கவைத்திருக்கின்றன.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு