Published:Updated:

`ராஜாவுக்கு செக்; செல்வகணபதிக்கு பதவி!'- சேலம் தி.மு.க-வில் என்ன நடக்கிறது?

ராஜா தன் தந்தை செய்த செயலைவிட, `நான் இந்தச் செயலை செய்திருக்கிறேன்' என்று தலைமை உணரும்படி செய்திருக்க வேண்டும். அதைச் செய்யத் தவறிவிட்டார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் கடந்த 21-ம் தேதி நடைபெற்ற தி.மு.க தலைமை செயற்குழு கூட்டத்தையடுத்து கொங்கு மண்டலத்தில் விரைவில் மாற்றம் வரும் எனக் கொங்கு மண்டல கழக உடன்பிறப்புகள் எதிர்பார்த்துக்கொண்டிருந்த நிலையில், சேலம் கிழக்கு மாவட்ட பொறுப்பாளராக இருந்த வீரபாண்டி ராஜா அப்பதவியிலிருந்து நீக்கப்பட்டு மேற்கு மாவட்ட செயலாளர் சிவலிங்கம் நியமிக்கப்பட்டிருக்கிறார். வீரபாண்டி ராஜாவுக்கு தி.மு.க தேர்தல் பணிக்குழுச் செயலாளர் என்ற டம்மி போஸ்டிங் கொடுக்கப்பட்டிருக்கிறது.

இதையடுத்து, வீரபாண்டி ராஜாவும் அவருடைய ஆதரவாளர்களும் கோபத்தின் உச்சத்தில் இருக்கிறார்கள். ``எங்க அண்ணன் இரவு பகல் பாராமல் கட்சியை தன் உயிர் மூச்சாக நினைத்து உழைத்ததற்கு கட்சித் தலைமை கொடுத்த பரிசுதான் இந்தப் பதவி பறிப்பா?'' என்று சகட்டு மேனிக்குப் பாய்கிறார்கள்.

வீரபாண்டியார்
வீரபாண்டியார்
எம். விஜயகுமார்

ராஜாவுக்கு ஏன் இந்தப் பின்னடைவு?

வீரபாண்டி ராஜாவுக்கு தி.மு.க-வில் ஏற்பட்ட இந்தப் பின்னடைவு தொடர்பாக சேலம் தி.மு.க வட்டாரத்தில் விசாரித்தோம்.

``வீரபாண்டியார் என்கிற வீரபாண்டி ஆறுமுகம் தி.மு.க-வின் தூண்களில் ஒருவராகக் கருதப்பட்டவர். அவர் ஒரு தனி ஆளுமை மிக்கவர். சேலம் பூலாவரியில் தனி ஒரு மனிதராக இருந்து அண்ணாவையும் கலைஞரையும் கூட்டிவந்து கூட்டம் போட்டு கட்சியை வளர்த்தவர். அவசர நிலை காலகட்டத்தில் பனிக்கட்டி மீது படுக்க வைத்து அடித்துத் துன்புறுத்தியும், தன் வயதான தாய் மீது சாராய வழக்கு போட்டு, `கலைஞர் என் தலைவர் இல்லை' என்று சொன்னால் விட்டு விடுவதாகக் காவல்துறையினர் எச்சரித்தபோதும் `கலைஞர்தான் என் தலைவர் என்ற என் தாரக மந்திரத்தை எந்த நிலையிலும் மறுதலிக்க மாட்டேன்' என்று உறுதியாக நின்றவர்.

பின்னாளில் `கலைஞரை மட்டுமே என் தலைவராக ஏற்றுக்கொள்வேன்' என்று வீரபாண்டியார் சொன்னதற்காக தன் சொந்தக் கட்சியினரால் அவமதிக்கப்பட்டார் என்பது தனிக் கதை. தேர்தல் என்று வந்துவிட்டால் சுற்றிச் சுழன்று வேலை பார்ப்பார். தன் தொகுதிக்குட்பட்ட அனைத்துக் கிராமங்களிலும் உள்ள ஓரிருவர் பெயரை மனப்பாடமாக வைத்திருப்பார். குறிப்பாகத் தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட கிராமங்களுக்கு நேராகச் சென்று அமர்ந்து, அவர்களின் பெயரைச் சொல்லிக் கூப்பிடுவார். நெகிழ்ந்து போய் தலைகுனிந்து நிற்கும் அவர்களிடம் உரிமையாக, ``இது தி.மு.க-வின் கோட்டை என்பது தலைவர் கலைஞர் வரை தெரியும். ஆனால், இங்கு சமீபகாலமாக அ.தி.மு.க-வினர் வருவதாகக் கேள்விப்பட்டேன்'' என்று அவர் சொல்லி முடிப்பதற்குள் ``ஐயா இது எப்போதும் தி.மு.க கோட்டை தான். மாற்றுக்கட்சியைச் சேர்ந்த ஒரு ஆளைக் கூட உள்ளே நுழைய விடமாட்டோம்'' என்பார்கள்.

வீரபாண்டியார்
வீரபாண்டியார்
எம். விஜயகுமார்

அவர்களிடம் ஒரு தொகையைக் கொடுத்து `இது கோயில் செலவுக்கு வச்சுக்கோங்க' என்று சொல்லிவிட்டுச் செல்லுவார். மொத்த கிராமமும் சிந்தாமல் சிதறாமல் தி.மு.க-வுக்கு வாக்களிக்கும். இதுவே தேர்தல் யுத்தியாகக் கடைப்பிடித்தது மட்டுமல்லாமல் மக்களின் கோரிக்கைகளையும் நிறைவேற்றிக் கொடுத்து, தான் மட்டுமல்லாமல் தன் ஆதரவாளர்களையும் வெற்றி அடையச் செய்வார். இதனாலேயே தன் தலைவனிடமும் கேள்வி கேட்கும் அளவுக்குத் துணிச்சல் மிக்கவராக வாழ்ந்து மறைந்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அவரின் அர்ப்பணிப்பான பணிக்காகத்தான் தி.மு.க தலைமை அவரின் மகன் வீரபாண்டி ராஜாவுக்குக் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் பதவி கொடுத்தது. ராஜா தன் தந்தை செய்த செயலைவிட, `நான் இந்தச் செயலை செய்திருக்கிறேன்' என்று தலைமை உணரும்படி செய்திருக்க வேண்டும். அதைச் செய்ய தவறிவிட்டார். தன் தந்தையிடம் பணியாற்றிய பனமரத்துப்பட்டி இராஜேந்திரன் சேலம் மத்திய மாவட்டச் செயலாளராகவும், சிவலிங்கம் மேற்கு மாவட்டச் செயலாளராகவும் இருக்கிறார்கள். ஆனால், தன்னை கிழக்கு மாவட்டச் செயலாளர் கூட ஆக்காமல் கட்சித் தலைமை வெறும் பொறுப்பாளராகவே வைத்துக் கொண்டு அவமானம் செய்கிறது என்று புலம்பிக் கொண்டிருந்தாரே தவிர தானும் தன் தந்தையைப் போல தி.மு.க-வில் அசைக்க முடியாத சக்தி என்று நிரூபித்துக் காட்டவில்லை.

ராஜா
ராஜா
எம். விஜயகுமார்

தி.மு.க வாரிசு அரசியலை விரும்பாதது இல்லை. ஆனால், தகுதியை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்பதைத்தான் விரும்புகிறது. வீரபாண்டி ராஜாவை நம்பி கடந்த 2016 சட்டமன்ற தேர்தலில் சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்றத் தொகுதிகளில் சேலம் வடக்கு பனமரத்துப்பட்டி ராஜேந்திரனுக்கும், சங்ககிரி, ஆத்தூர் கூட்டணிக் கட்சியான காங்கிரஸுக்கும் கொடுத்துவிட்டு மீதி உள்ள 8 தொகுதியையும் வீரபாண்டி ராஜாவுக்கும் அவருடைய ஆதரவாளர்களுக்கும் கொடுத்தது.

அதை ஒரு வாய்ப்பாக எடுத்துக்கொண்டு தன் தந்தையின் பாணியைப் பின்பற்றியாவது கிராமந்தோறும் சென்று சென்டிமென்டாகப் பேசி இருந்தாலே போதும் நிச்சயம் வெற்றி பெற்றிருக்க முடியும். தன் ஆதரவாளர்களையும் உசுப்பிவிட்டு களப்பணியோடு மக்களைக் கவனிக்கவும் செய்திருந்தால் குறைந்தது 7 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கலாம். ஆனால், எந்தக் கிராமத்துக்குள்ளும் போகாமல் ஜீப்பை விட்டு இறங்காமல் மந்திரி வீட்டு கன்றுக் குட்டியைப்போல இருந்ததால் தானும், தன் ஆதரவாளர்களும் தோல்வியடையும் சூழலைச் சந்தித்தார். இந்த நிகழ்வில் இருந்தே தலைமைக்கு இவர் மீது அதிருப்தி ஏற்பட்டது. நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலுக்கும் தீவிர பிரசாரத்தை மேற்கொள்ளவில்லை.

கடிதம்
கடிதம்
எம். விஜயகுமார்

கிழக்கு மாவட்டத்துக்கு உட்பட்ட அயோத்தியாப்பட்டணம் ஒன்றியத்தில் மொத்தம் 19 கவுன்சிலர்கள். அ.தி.மு.க 6 பேரும், தி.மு.க கூட்டணி 7 பேரும், சுயேச்சை 6 பேரும் இருந்தார்கள். 10 பேர் இருந்தால் ஒன்றியக் குழுத் தலைவர் ஆக முடியும். தி.மு.க ஒன்றிய பொறுப்பாளர் விஜயகுமார் 11 கவுன்சிலர்களை வைத்திருந்தார். விஜயகுமாரின் மனைவி அங்கு ஒன்றிய குழுத் தலைவராக வந்திருக்க வேண்டும். ஆனால், கிழக்கு மாவட்டச் செயலாளர் ராஜா குட்டையைக் குழப்பிவிட்டதால் இரண்டு பேர் அ.தி.மு.க-வுக்கு வாக்களித்தார்கள்.

இதனால் தி.மு.க ஒன்றியக் குழுத் தலைவர் ஆக முடியவில்லை. அதேபோல ஏற்காட்டில் 6 உறுப்பினர்கள். அ.தி.மு.க 3 பேரும், தி.மு.க 3 பேரும் வெற்றி பெற்றார்கள். ஏற்காடு ஒன்றிய குழுத் தலைவருக்கு வேட்பாளர்களை தி.மு.க நிறுத்தாததால் அ.தி.மு.க போட்டியின்றி வெற்றி பெற்றது. இது அனைத்தும் ஆதாரபூர்வமாக தகவல் கொடுத்ததையடுத்து கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர் பதவியிலிருந்து ராஜா நீக்கப்பட்டு, டம்மியான மாநிலத் தேர்தல் பணிக்குழுச் செயலாளர் பதவி கொடுக்கப்பட்டிருக்கிறது, ராஜா வகித்த கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர் பதவி மேற்கு மாவட்டச் செயலாளராக இருந்த சிவலிங்கத்துக்கும், சேலம் மேற்கு மாவட்டச் செயலாளர் பதவி தி.மு.க தேர்தல் பணிக்குழு செயலாளர் செல்வகணபதிக்கும் வழங்கப்பட்டிருக்கிறது'' என்றார்கள்.

சிவலிங்கம்
சிவலிங்கம்
எம். விஜயகுமார்

இதுபற்றி வீரபாண்டி ராஜாவின் கருத்தை அறிய தொடர்புகொண்டோம். ஆனால், அவரைத் தொடர்புகொள்ள முடியவில்லை. அவருடைய ஆதரவாளர்கள், ``அண்ணன் கட்சிக்காக எவ்வளவோ அவமானங்களை சகித்துக்கொண்டு கட்சிதான் உயிர் மூச்சாக நினைத்து உழைத்துக் கொண்டிருந்தார். சேலம் முதல்வர் தொகுதி என்பதால் பண பலத்தாலும், அதிகார பலத்தாலும் ஆட்களை விலைக்கு வாங்குகிறார்கள். என்ன செய்ய முடியும்? சேலத்தில் மட்டும்தான் வாக்கு குறைவா? கொங்கு மண்டலம் முழுவதும்தானே வாக்கு குறைவு? ஏன் மற்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் அண்ணன் மீது மட்டும் நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள். இது கட்சித் தலைமை பழி வாங்குவதைப்போல இருக்கிறது'' என்று சீறுகிறார்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு