Published:Updated:

`இந்தி தெரியாது போடா', `தமிழ் எங்கள் வேலன்; இந்தி நம்ம தோழன்' - டி-ஷர்ட் அரசியல் பின்னணி!

டி-ஷர்ட் அரசியல்
டி-ஷர்ட் அரசியல் ( Twitter Images )

``டி-ஷர்ட் அணிவது கோமாளித்தனம் என்றால், அதையேதான் எங்கள் எதிர்த்தரப்பைச் சேர்ந்தவர்களும் செய்துவருகிறார்கள். தி.மு.க முன்னெடுத்த ஒரு விஷயத்தை எங்களைக் குறைகூறும் கட்சிகளே பின்பற்றுகிறார்கள் என்பதுதான் தி.மு.க-வின் வெற்றி.'' - உடன் பிறப்புகள்

தமிழகத்தில் கடந்த ஐந்தாறு ஆண்டுகளுக்கு முன்னர் டி-ஷர்ட்டுகளுக்கென பிரத்தியேக ஷோ ரூம்கள் ஆங்காங்கே திறக்கப்பட்டன. `தம்பி டீ இன்னும் வரல', `ஆணியே புடுங்க வேண்டாம்', `ஆஹான்ன்ன்...' உள்ளிட்ட வடிவேலு வசனங்களைக் கொண்ட டி-ஷர்ட்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வியாபாரரீதியாக வெற்றியுமடைந்தன. சென்னை, கோவை போன்ற பெருநகரங்களில், நிறைய இளைஞர்கள் வடிவேலு வசனங்களைக்கொண்ட டி-ஷர்ட்டுகளை அணிந்திருப்பதையும் காண முடிந்தது.

வடிவேலு டி-ஷர்ட்
வடிவேலு டி-ஷர்ட்
Fullyflimy

இந்தியாவில் காலம் காலமாக கிரிக்கெட் ரசிகர்கள் சச்சின், தோனி எனத் தங்களுக்குப் பிடித்த கிரிக்கெட் வீரர்களின் பெயர்களைப் பொறித்த ஜெர்ஸி டி-ஷர்ட்டுகள் அணிவது வழக்கமாக இருந்தது. அதன் பிறகு கடந்த சில ஆண்டுகளாக தங்களுக்குப் பிடித்த நடிகர்கள், சூப்பர் ஹீரோக்களின் படங்களோடும், பிடித்த வசனங்களோடும் வெளியிடப்பட்ட டி-ஷர்ட்டுகளையும் விரும்பி அணியத் தொடங்கினர். நடிகர்கள், கிரிக்கெட் வீரர்களைத் தொடர்ந்து தலைவர்களான பெரியார், அம்பேத்கர், பாரதியார் உள்ளிட்டவர்களின் புகைப்படங்களைக் கொண்ட டி-ஷர்ட்டுகள் சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டன. குறிப்பாக, திருவள்ளுவர் படங்களோடு தமிழ்மொழியைக் கொண்டாடும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்ட டி-ஷர்ட்டுகள் தமிழக இளைஞர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றன.

இப்படி தமிழகத்தில் சில ஆண்டுகளாகவே இருந்தவந்த டி-ஷர்ட் கலாசாரத்தில், கடந்த சில நாள்களாக அரசியல் நெடி வீசத் தொடங்கியிருக்கிறது. காரணம், தி.மு.க சார்பாக வெளியிடப்பட்ட டி-ஷர்ட்டுகள்தான்.

கடந்த மாதம் தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, சென்னை விமான நிலையத்தில் தன்னிடம் இந்தியில் பேசிய மத்திய தொழில் பாதுகாப்புப் படை (சி.ஐ.எஸ்.எஃப்) தலைமைப் பெண் காவலர் ஒருவரிடம், ``நீங்கள் சொல்வது எனக்குப் புரியவில்லை. ஆங்கிலம் அல்லது தமிழில் பேசுங்கள்" எனக் கூறியதாகவும், அதற்கு அந்தப் பெண் காவலர், ``நீங்கள் இந்தியர்தானே?'' எனக் கேள்வியெழுப்பியதாகவும் கூறியிருந்தார். இந்தச் சம்பவம் குறித்து #HindiImposition என்ற ஹேஷ்டேக் உடன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார் கனிமொழி. கனிமொழியின் இந்தப் பதிவு சமூக வலைதளங்களில் பல விவாதங்களைக் கிளப்பயது.

விதவிதமான டி-ஷர்ட்கள்
விதவிதமான டி-ஷர்ட்கள்
Twitter/Kanimozhi
கனிமொழி கேட்ட 600 டி-ஷர்ட், பற்றவைத்த யுவன்... `இந்தி தெரியாது' டி-ஷர்ட் வைரல் பின்னணி!

அந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, கடந்த மாதம் `இந்தி தெரியாது போடா', `ஐ யம் ஏ தமிழ் ஸ்பீக்கிங் இந்தியன்' போன்ற வாசகங்களைக்கொண்ட டி-ஷர்ட்டுகளை கனிமொழியே வடிவமைத்து வெளியிட்டார். இந்த டி-ஷர்ட்டை இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவும் `மெட்ரோ' பட நாயகன் சிரிஷும் அணிந்துகொண்டு ட்விட்டரில் பதிவிட்ட புகைப்படம் இந்திய அளவில் டிரெண்டானது. நடிகர் சாந்தனு - கீர்த்தி தம்பதி, நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், இயக்குநர் வெற்றிமாறன், தி.மு.க இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் என்று பிரபலங்கள் பலரும் இந்த டி-ஷர்ட்டை அணியவே, பொதுமக்கள் மத்தியிலும் பிரபலமானது. இதையடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படத்துடன் ஒரு பதிவை வெளியிட்டார் கனிமொழி. அந்தப் பதிவில்...

ஒரு சிறிய தீப்பொறி காட்டுத்தீயாகி இருக்கிறது. இந்தித் திணிப்பு என்பதை எதிர்க்கும் சட்டைகளை வெளியிட்டபோது யாரும் எதிர்பாராத அளவு இது இளைஞர்களிடம் வரவேற்பு பெற்றிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இந்தத் தலைமுறையும் மொழி உணர்வில் சளைத்ததல்ல.
கனிமொழி, எம்.பி

இதைத் தொடர்ந்து தி.மு.க தலைவர் ஸ்டாலின், தமிழக மேப்பில், பெரியார், அண்ணா, கருணாநிதி ஆகியோரின் புகைப்படங்களும் `தமிழ் எங்கள் உயிர்' என்ற வாசகமும் அச்சிடப்பட்ட டி-ஷர்ட்டை அணிந்துகொண்டு சைக்கிளிங்கில் ஈடுபட்டிருப்பது போன்ற புகைப்படங்கள் வெளியாகின. அதற்கடுத்த வாரம் `Ban NEET' என்ற வாசகம் பொறித்த டி-ஷர்ட்-ஐ போட்டுக்கொண்டு ஸ்டாலின் சைக்கிளிங் செய்வது போன்ற புகைப்படம் ஒன்றும் வெளியிடப்பட்டது.

ஸ்டாலின்
ஸ்டாலின்
Twitter/Udhaystalin

இதற்கிடையில், எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்களும் டி-ஷர்ட் அரசியலில் களமிறங்கினர். தி.மு.க எதிர்ப்பாளர்கள் சார்பில் `தி.மு.க வேணாம் போடா' என்ற வாசகம் பொறித்த டி-ஷர்ட்டும், தமிழக பா.ஜ.க இளைஞர் அணி சார்பில் `நான் இந்தி கற்றுக்கொள்ளும் தமிழன்டா' என்ற வாசகம் பொறித்த டி-ஷர்ட்டும் சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டன.

தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த்தின் மகன் விஜய பிரபாகரன் இந்தி மொழி கற்றுக்கொள்ளலாம் என்பதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் `அன்னை மொழி காப்போம்... அனைத்து மொழியும் கற்போம்' என்ற வாசகத்தோடு இருக்கும் டி-ஷர்ட்டை அணிந்துகொண்டு தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டார். அந்தப் புகைப்படத்தோடு கருத்து ஒன்றையும் ட்விட்டரில் பதிவு செய்திருந்தார் விஜய பிரபாகரன்,

நாங்கள் எந்தக் கட்சியையும் காப்பி அடிக்கவில்லை. நாங்கள் அவர்களுக்கு எதிரானவர்களும் அல்ல. தமிழக இளைஞர்களுக்கு அவர்கள் தவறான விஷயங்களைக் கற்றுக்கொடுக்க நினைப்பதைத்தான் நாங்கள் எதிர்க்கிறோம். அதுவும் அவர்கள் ஸ்டைலிலேயே!
விஜய பிரபாகரன், தே.மு.தி.க

மறைமுகமாக தி.மு.க-வை தாக்கித்தான் இந்தப் பதிவைப் போட்டிருந்தார் விஜய பிரபாகரன். இப்படி பா.ஜ.க, தே.மு.தி.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தி.மு.க-வின் டி-ஷர்ட் அரசியலுக்கு தி.மு.க பாணியிலேயே பதிலளித்துவந்தன. ஆனால், அதற்கெல்லாம் தி.மு.க-வினர் எந்த ஒரு ரியாக்‌ஷனும் காட்டியதாகத் தெரியவில்லை. மேலும், இந்த விஷயத்தில் தி.மு.க-வினர் அடுத்தகட்டத்துக்குச் சென்று டி-ஷர்ட் அணிந்து நூதன முறையில் போராட்டம் நடத்தவும் தொடங்கியிருக்கின்றனர்.

விஜய பிரபாகரன்
விஜய பிரபாகரன்
Twitter/VijayPrabhakaran
`மெரினா புரட்சி' முதல் மொழிப் பிரச்னை வரை... மார்க்கண்டேய கட்ஜுவும் தமிழர்களும்!

கடந்த வாரத்தில், தி.மு.க எம்.பி கனிமொழி நாடாளுமன்றத்தில், ``மதுரையில் கட்டப்படுவதாக அறிவிக்கப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனை எப்போது கட்டி முடிக்கப்படும்?'' என்று கேள்வியெழுப்பினார். அதற்கு, ``ஜப்பான் சர்வதேச வங்கியிலிருந்து நிதியுதவி அளிப்பதைப் பொறுத்துத்தான் மதுரை எய்ம்ஸ் குறித்துத் தெரியவரும்'' என்று பதிலளித்தார் மத்திய சுகாதாரத்துறை இணையமைச்சர் அஸ்வினி குமார் செளபே.

மதுரை எய்ம்ஸ் டி-ஷர்ட்
மதுரை எய்ம்ஸ் டி-ஷர்ட்
Twitter/Kmoorthy

இந்தச் சம்பவம் நடந்த அடுத்த இரண்டே நாள்களில், `மதுரைக்கு எய்ம்ஸ் வருமா, வராதா?' என்ற வாசகம்கொண்ட டி-ஷர்ட் அணிந்துகொண்டு, மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையவிருக்கும் தோப்பூரில் மரம் நட்டு, நூதன போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட தி.மு.க-வினர் ஈடுபட்டனர்.

இதற்கிடையில், திருப்பூரில் தமிழக பா.ஜ.க தலைவர் எல்.முருகன் தலைமையில் நடைபெற்ற விழா ஒன்றில் பாரதியார் புகைப்படமும் `எம்மொழியும் கற்பேன்டா; தடுக்க நீ யாரடா' என்ற வாசகமும் பொறித்த டி-ஷர்ட் அறிமுகப்படுத்தப்பட்டது. அதேபோல பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற விழா ஒன்றில் `தமிழ் எங்கள் வேலன்; இந்தி நம்ம தோழன்' என்று வேல் படம் அச்சடிக்கப்பட்ட டி-ஷர்ட்டுகளை தமிழக பா.ஜ.க-வின் கலை மற்றும் கலாசார பிரிவின் தலைவர் காயத்ரி ரகுராம் வெளியிட்டார்.

பா.ஜ.க  டி-ஷர்ட்
பா.ஜ.க டி-ஷர்ட்
திருப்பூர்: `எம்மொழியும் கற்பேன்டா; தடுக்க நீ யாரடா!’ - இது பா.ஜ.க-வின் டி-ஷர்ட் டிசைன்

கடந்த இரு தினங்களுக்கு முன்னர்கூட, அண்ணா புகைப்படத்தோடு `நான் திராவிட நாட்டைச் சேர்ந்தவன்' என்ற பொருள்படும்படியான ஆங்கில வாசகம்கொண்ட டி-ஷர்ட்டை அணிந்துகொண்டு ட்விட்டரில் புகைப்படம் ஒன்றைப் பதிவிட்டிருந்தார் தி.மு.க இளைஞரணிச் செயலாளர் உதயநிதி.

அண்ணா டி-ஷர்ட்
அண்ணா டி-ஷர்ட்
Twitter/Udhaynidhi stalin

தி.மு.க கையிலெடுத்திருக்கும் இந்த டி-ஷர்ட் அரசியல் குறித்து பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்தவர்கள் சில கருத்துகளை முன்வைக்கிறார்கள்.

`` `அரசியல் சாணக்கியர்’ என்று பெயர் பெற்ற தி.மு.க முன்னாள் தலைவர் கருணாநிதி வழிநடத்திய தி.மு.கழகம் இன்று பிரஷாந்த் கிஷோரின் அறிவுரைகளைக் கேட்டுச் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவரும் இவ்வேளையில் பிரஷாந்த் கிஷோர் சொல்வதையெல்லாம் அப்படியே செய்துகொண்டிருக்கிறது தி.மு.க. அதிலொன்றுதான் இந்த டி-ஷர்ட் விவகாரம். தான் உடல் ஆரோக்கியத்தோடு இருப்பதைக் காட்டுவதற்காகத்தான் சைக்கிளிங் செய்து புகைப்படங்களை வெளியிட்டுவருகிறார் ஸ்டாலின். அந்தப் புகைப்படங்களில் இது போன்ற டி-ஷர்ட்டுகளை போட்டுக்கொண்டு மக்களை ஏமாற்ற நினைக்கிறார்.

சைக்கிளிங், டி-ஷர்ட் என இரண்டு யோசனைகளையும் பிரஷாந்த் கிஷோரின் டீம்தான் ஸ்டாலினுக்குச் சொல்லியிருக்க வேண்டும். ஆனால், இது சுத்த கோமாளித்தனம் என்பதைக்கூட அறியாமல் தி.மு.க-வைச் சேர்ந்தவர்கள் செய்துகொண்டிருப்பதுதான் அவலம். இந்தி தெரியாது என்று சொல்லும் தி.மு.க குடும்பத்தினர் அனைவருக்கும் நன்றாக இந்தி தெரியும். அவர்கள் மட்டும் இந்தி கற்றுக்கொண்டு, மக்களைக் கற்றுக்கொள்ளக் கூடாது என்கிறார்கள். இதெல்லாம் வெறும் அரசியல் நாடகம்தான். டி-ஷர்ட் அணிந்து தமிழை வளர்ப்பது, ஆட்சியைப் பிடிப்பது என்று பகல் கனவு கண்டுகொண்டிருக்கும் தி.மு.க-வுக்கு வரும் சட்டமன்றத் தேர்தலில் தமிழக மக்கள் பாடம் புகட்டுவார்கள் என்பதில் சந்தேகமில்லை'' என்கிறார்கள் ஆளும்கட்சியின் கூட்டணியைச் சேர்ந்தவர்கள்.

இதற்கு பதிலளிக்கும்விதமாக தி.மு.க-வைச் சேர்ந்த நிர்வாகிகள் சிலர், ``டிரெண்டுக்கு ஏற்றாற்போல மாறுவதில் என்ன தவறு இருக்கிறது... நல்ல விஷயத்தை எப்படிச் செய்தால் என்ன... கொரோனா ஊரடங்கால், சமூகப் பிரச்னைகளுக்காகப் போராட்டங்களையெல்லாம் பெரிய அளவில் நடத்த முடியவில்லை. அதற்கு மாறாக டி-ஷர்ட் மூலம் எங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்தோம். இதன் மூலம் இளைஞர்கள் மத்தியில் தி.மு.க-வுக்கு ஆதரவு பெருகியிருப்பதை யாராலும் மறுக்க முடியாது. டி-ஷர்ட் அணிவது கோமாளித்தனம் என்றால், அதையேதான் எங்கள் எதிர்த்தரப்பைச் சேர்ந்தவர்களும் செய்துவருகிறார்கள். பா.ஜ.க, தே.மு.தி.க உள்ளிட்ட சில கட்சிகளைச் சேர்ந்தவர்கள் டி-ஷர்ட்டுகளை அறிமுகப்படுத்தியிருக்கிறார்களே... தி.மு.க முன்னெடுத்த ஒரு விஷயத்தை எங்களைக் குறை கூறும் கட்சிகளே பின்பற்றுகிறார்கள் என்பதுதான் தி.மு.க-வின் வெற்றி. இன்னும் சில மாதங்களில் தி.மு.க ஆட்சியைப் பிடித்த பின்னர் எது கோமாளித்தனம் என்பது அவர்களுக்கெல்லாம் புரியும்'' என்று கொதிக்கிறார்கள் உடன்பிறப்புகள்.

ஸ்டாலின்
ஸ்டாலின்
`ஜனநாயக இந்தியாவை முடக்குவது தொடர்ந்து கொண்டேயிருக்கிறது!' - கொதிக்கும் ராகுல் காந்தி

இந்த டி-ஷர்ட் அரசியல் குறித்து அரசியல் விமர்சகர்கள் சிலர், ``தேர்தல் நெருங்கிவரும் காரணத்தால்தான் டி-ஷர்ட்டை வைத்து தி.மு.க அரசியல் செய்யத் தொடங்கியிருக்கிறது என்றே தோன்றுகிறது. ஆனால், தி.மு.க-வினர் நினைத்ததைவிட இந்த டி-ஷர்ட்களுக்கு இளைஞர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு கிடைத்திருக்கிறது என்பது உண்மைதான். `தி.மு.க அறிமுகப்படுத்திய டி-ஷர்ட்டுகளுக்கான ஆர்டர்கள், திருப்பூருக்கு லட்சக்கணக்கில் வருகின்றன' என்ற செய்திகள் இதை உறுதிப்படுத்துகின்றன. அதனால் நிச்சயம் இந்த டி-ஷர்ட் அரசியலை தி.மு.க தொடர்ந்து செய்யும் என்பதில் சந்தேகமில்லை. 2014-ல் ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலம் மோடி தன்னுடைய இமேஜை இளைஞர்கள் மத்தியில் உயர்த்திக்கொண்டு, பிரதமர் அரியணையில் ஏறினார். அதைத்தான் தமிழகத்தில் டி-ஷர்ட் மூலம் தி.மு.க செய்ய நினைக்கிறது. டி-ஷர்ட்டை வைத்து இளைஞர்களைக் கவரலாமே தவிர, அதைப் பெருமளவில் வாக்குகளாக மாற்ற முடியாது. தி.மு.க டி-ஷர்ட்களில் சொல்லும் விஷயங்களை நிஜத்தில் செயல்படுத்தினால் மட்டுமே அவர்களுக்கான ஆதரவு பெருகும்'' என்கிறார்கள்.

இறுதியாக அரசியல் நோக்கர்கள், ``அண்ணா, பெரியார் உள்ளிட்ட தலைவர்களின் புகைப்படத்தை டி-ஷர்ட்டில் வைத்துக்கொண்டால் மட்டும் போதாது. பெரியாரின் சமூகநீதி கருத்துகளை நடைமுறைக்குக் கொண்டுவருவதிலும், அண்ணாவின் ஆட்சியை மீண்டும் தமிழகத்துக்குக் கொடுப்பதிலும்தான் தி.மு.க-வின் உண்மையான வெற்றி அடங்கியிருக்கிறது'' என்கிறார்கள் சுருக்கமாக.
அடுத்த கட்டுரைக்கு