Published:Updated:

பஞ்சாப்பில் ஆம் ஆத்மி ஆட்சி... கைகொடுத்ததா `டெல்லி மாடல்' - அமோக வெற்றிக்கு காரணங்கள் என்ன?!

ஆம் ஆத்மி

பஞ்சாப்பில் ஆட்சியைப் பிடித்த ஆம் ஆத்மி... மிகப் பெரிய வெற்றிக்குக் காரணங்கள் என்ன?!

பஞ்சாப்பில் ஆம் ஆத்மி ஆட்சி... கைகொடுத்ததா `டெல்லி மாடல்' - அமோக வெற்றிக்கு காரணங்கள் என்ன?!

பஞ்சாப்பில் ஆட்சியைப் பிடித்த ஆம் ஆத்மி... மிகப் பெரிய வெற்றிக்குக் காரணங்கள் என்ன?!

Published:Updated:
ஆம் ஆத்மி

நடந்த முடிந்த பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலில், கிட்டதட்ட 90 தொகுதிகளில் முன்னிலை பெற்று அம்மாநிலத்தில் தனது வெற்றியை உறுதி செய்திருக்கிறது ஆம் ஆத்மி. டெல்லி, பஞ்சாப்பிலுள்ள ஆம் ஆத்மி தொண்டர்கள் காலை முதலே கொண்டாட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். ஆட்சியிலிருந்த காங்கிரஸுக்கு மிகப் பெரும் சரிவை ஏற்படுத்தி, ஆம் ஆத்மி இமாலய வெற்றியடைந்தது எப்படி?

அரவிந்த் கெஜ்ரிவால்
அரவிந்த் கெஜ்ரிவால்

கைகொடுத்த `டெல்லி மாடல்'!

கடந்த 2017 தேர்தலில், 20 இடங்களில் வெற்றிபெற்று பஞ்சாப்பில் எதிர்க்கட்சி அந்தஸ்தைப் பெற்றது ஆம் ஆத்மி. இந்தத் தேர்தலுக்காக 2021-ம் ஆண்டிலிருந்தே தீவிர பிரசாரங்களை மேற்கொண்டார் ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால். அந்தப் பிரசாரங்களில் `டெல்லி மாடல்' என்பதை முன்வைத்து கெஜ்ரிவால் பேசியது பஞ்சாப் மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றது. காங்கிரஸ் ஆட்சிமீது அதிருப்தியிலிருந்த பஞ்சாப் மக்கள், அண்டை மாநிலமான டெல்லியில் அறிவிக்கப்படும் திட்டங்களைக் கூர்ந்து கவனித்துவந்தனர். அந்த வேளையில், ஆம் ஆத்மியினர் டெல்லி மாடல் குறித்து பஞ்சாப்பில் பேசியது எளிதாக அம்மாநில மக்களிடம் சென்று சேர்ந்திருப்பதைத்தான் தேர்தல் முடிவுகள் உணர்த்துகின்றன.

பஞ்சாப்பின் முக்கியப் பிரச்னைகளான மின்வெட்டு, மின்கட்டண குளறுபடிகளைக் கையிலெடுத்த அரவிந்த் கெஜ்ரிவால், `டெல்லியைப்போலவே இங்கும் இலவச மின்சாரம் வழங்குவோம். அதுவும், ஒரு குடும்பத்துக்கு மாதம் 300 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்குவோம். தடையில்லா மின்சாரம், குடிநீர் வசதியும் செய்து தரப்படும்' எனப் பிரசாரம் மேற்கொண்டார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

உட்கட்சிப் பூசல்களால் சரிந்த காங்கிரஸ்!

இதற்கிடையில், காங்கிரஸ் கட்சிக்குள் நடந்த உட்கட்சிப்பூசல்களால், பஞ்சாப் காங்கிரஸின் முகமாக விளங்கிய அமரீந்தர் சிங் காங்கிரஸை விட்டு விலகினார். அவர் விலகிய பின்னரும், உட்கட்சிப் பஞ்சாயத்துகள் ஓய்ந்த பாடில்லை. இதை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட ஆம் ஆத்மி கட்சியினர், ``கட்சியையே கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ள முடியாதவர்கள். ஆட்சியை எப்படி வழி நடத்துவார்கள்'' என காங்கிரஸுக்கு எதிராகப் பிரசாரம் செய்தனர்.

பஞ்சாப் காங்கிரஸ் - அம்ரீந்தர், சித்து
பஞ்சாப் காங்கிரஸ் - அம்ரீந்தர், சித்து

ஆம் ஆத்மியின் இந்தப் பிரசாரங்களுக்கு இளைஞர்கள் மத்தியில் மட்டுமல்லாமல், எளிய மக்கள் மத்தியிலும் நல்ல பலன் கிடைத்திருக்கிறது. அதைத்தான் இந்தத் தேர்தல் முடிவுகளும் காட்டுகின்றன. தலித் மக்கள் அதிகம் வாழும் பஞ்சாப்பில், தலித் சமூகத்தைச் சேர்ந்த சரண்ஜித் சிங் சன்னியை முதல்வர் வேட்பாளராக அறிவித்தது காங்கிரஸ். ஆனால், தலித் மக்களின் வாக்குகளைச் சிரோமணி அகாலி தளம் கூட்டணியில் இடம்பெற்ற மாயாவாதியின் பகுஜன் சமாஜ் கட்சி பிரித்துவிட்டதாகத் தெரிகிறது. இதனால், மேலும் பின்னடைவைச் சந்தித்திருக்கிறது காங்கிரஸ் கட்சி. இந்தப் பின்னடைவு ஆம் ஆத்மிக்கு ப்ளஸாக அமைந்துவிட்டது.

ஆக மொத்தத்தில் டெல்லி மாடலும், காங்கிரஸ் கட்சிக்குள் ஏற்பட்ட பிரச்னைகளும் பஞ்சாப்பில் ஆம் ஆத்மி, அமோக வெற்றிபெறக் காரணங்களாக அமைந்திருக்கின்றன!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism