Published:Updated:

அமைச்சரவையில் இடம்பெறாத உதயநிதி ஸ்டாலின் - காரணம் என்ன?

உதயநிதி ஸ்டாலின்
உதயநிதி ஸ்டாலின்

மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதியின் பெயர் இடம்பெறவில்லை. அதற்கு என்ன காரணம்?

2021 சட்டமன்றத் தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் தி.மு.க வெற்றியைப் பெற்றது. அதையடுத்து, யாரெல்லாம் அமைச்சரவையில் இடம்பெறுவார்கள் என்பது பற்றிய விவாதங்கள் அரசியல் வட்டாரத்தில் எழுந்தன. தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் நாளை (மே 7) முதல்வர் பதவியை ஏற்கவிருக்கும் நிலையில், அமைச்சரவையில் யாரெல்லாம் இடம்பெறப்போகிறார்கள் என்கிற எதிர்பார்ப்பு அதிகரித்திருந்தது. இந்த நிலையில், அமைச்சரவை பட்டியல் இன்று (மே 6) வெளியிடப்பட்டுள்ளது.

ஸ்டாலினுடன் உதயநிதி
ஸ்டாலினுடன் உதயநிதி

அமைச்சரவைப் பட்டியலில், முந்தைய தி.மு.க ஆட்சிகளில் அமைச்சர்களாக இருந்த பலர் இடம்பெற்றுள்ளனர். தவிர, மா.சுப்பிரமணியன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்பட புதிதாக 10 பேர் அமைச்சர்கள் ஆகிறார்கள். இதில், உதயநிதி பெயர் இடம்பெறாதது பலரையும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

முன்னாள் முதல்வரும் தி.மு.க-வின் முன்னாள் தலைவருமான மு.கருணாநிதி மறைவுக்குப் பிறகு, மு.க.ஸ்டாலின் தி.மு.க தலைவர் ஆனார். அதன் பிறகு, உதயநிதி ஸ்டாலினை தி.மு.க இளைஞரணி செயலாளராக 2019-ம் ஆண்டு ஜூலை 4-ம் தேதி அப்போதைய தி.மு.க பொதுச்செயலாளர் க.அன்பழகன் நியமித்தார். அது, வாரிசு அரசியல் என்று அரசியல் வட்டாரத்தில் விமர்சிக்கப்பட்டது. ஆனால், தி.மு.க-வுக்குள் அது பெரிய சலசலப்பை ஏற்படுத்தவில்லை. தி.மு.க இளைஞரணி செயலாளராக இருந்துகொண்டே திரைப்படங்களிலும் உதயநிதி தொடர்ந்து நடித்துவருகிறார்.

உதயநிதி
உதயநிதி

2021 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட உதயநிதிக்கு வாய்ப்பு வழங்கப்படுமா என்ற கேள்வியும் எதிர்பார்ப்பும் மேலோங்கியது. அவர் தேர்தலில் போட்டியிட மாட்டார் என்று செய்திகள் வெளியாகின. அவருக்கு சீட் வழங்கப்படுமா என்பது கடைசிவரை சஸ்பென்ஸாகவே இருந்தது. ஆனால், வேட்பாளர் பட்டியலை ஸ்டாலின் அறிவித்தபோது, உதயநிதியின் பெயர் இடம்பெற்றது. சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி வேட்பாளராக அவர் அறிவிக்கப்பட்டார். வேட்பாளராக ஆனதுடன், தி.மு.க கூட்டணி வேட்பாளர்களுக்காக மாநிலம் முழுவதும் தீவிரப் பிரசாரத்திலும் உதயநிதி ஈடுபட்டார். ஸ்டார் பேச்சாளராக அவர் வலம்வந்தார்.

தி.மு.க மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் உதயநிதி வெற்றிபெற்றார். அதன் பிறகு, அமைச்சரவையில் உதயநிதி இடம்பெறுவாரா, அவருக்கு எந்தத் துறை வழங்கப்படும் என்கிற கேள்விகள் அரசியல் வட்டாரத்தில் விவாதிக்கப்பட்டன. இந்த நிலையில், மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் யாரெல்லாம் இடம்பெறுவார்கள் என்பது தொடர்பான இரண்டு பட்டியல்கள் வாட்ஸ்அப்பில் வைரலாகின.

அதில் ஒரு பட்டியலில், தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதிக்கு உள்ளாட்சித்துறை வழங்கப்படவிருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், அது ஒரு பொய்யான பட்டியல் என்று தி.மு.க வட்டாரத்தில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டிருக்கும் அமைச்சரவைப் பட்டியலில் உதயநிதியின் பெயர் இடம்பெறவில்லை.

உதயநிதி
உதயநிதி

சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தின்போது விகடன் யூடியூப் சேனலுக்கு உதயநிதி ஸ்டாலின் அளித்த சிறப்புப் பேட்டியில்,``நான் அமைச்சர் பதவியை ஏற்றுக்கொள்ள மாட்டேன்” என்று உதயநிதி கூறியிருந்தார். தற்போது, ஏன் அவர் அமைச்சரவையில் இடம்பெறவில்லை என்பது குறித்து தி.மு.க வட்டாரத்தில் விசாரித்தோம். ``தி.மு.க வாரிசு அரசியல் செய்கிறது என்கிற விமர்சனத்தைத் தவிர்க்க வேண்டும் என்பது அமைச்சரவையில் உதயநிதி சேர்க்கப்படாததற்கான காரணங்களில் ஒன்று.

ஸ்டாலின் முதல் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வரை... யாருக்கு என்ன துறை?! -வெளியானது அமைச்சரவை பட்டியல்

மேலும், இன்னும் சில ஆண்டுகளுக்கு அவர் திரைப்படங்களில் தொடர்ந்து கவனம் செலுத்தட்டும் என்று ஸ்டாலின் குடும்பத்தினர் கருதுகிறார்கள். தொடர்ந்து பல திரைப்படங்களில் நடிப்பதன் மூலமாக தமிழக மக்கள் மத்தியில் உதயநிதி இன்னும் பிரபலம் அடைவார். அவரது எதிர்கால அரசியலுக்கு அது பயன்படும். ஸ்டாலினும்கூட தி.மு.க இளைஞரணி செயலாளராக இருந்தபோது, திரைப்படத்திலும் தொலைக்காட்சித் தொடரிலும் நடித்தார். மக்கள் மத்தியில் அவர் கூடுதலாகப் பிரபலமடைவதற்கு அது உதவியாக இருந்தது. அதைப்போலவே, இன்னும் சில ஆண்டுகளுக்கு உதயநிதி திரைப்படங்களில் நடிக்கட்டும் என்று அவரின் குடும்பத்தினர் விரும்புகிறார்கள்” என்றனர்.

உதயநிதி
உதயநிதி

மேலும், ``வாரிசு அரசியல் என்கிற விமர்சனத்தைத் தவிர்ப்பதற்காக, இப்போதைக்கு அவர் அமைச்சரவையில் சேர்க்கப்படவில்லை. அதே நேரத்தில், ஓராண்டு காலம் கழித்து நிச்சயம் அவர் அமைச்சரவையில் சேர்த்துக்கொள்ளப்படுவார்” என்றும் தி.மு.க வட்டாரத்தில் சிலர் கூறுகிறார்கள்.

அடுத்த கட்டுரைக்கு