Published:Updated:

`அவசரகதியில் கூட்டணி; தலைவர்களின் அதிருப்தி’ - குமாரசாமி ஆட்சியின் முடிவுக்கு என்ன காரணம்

சத்யா கோபாலன்

பல நாள்களுக்குப் பிறகு கர்நாடகாவில் நடந்த அரசியல் சர்ச்சை நேற்று முடிவுக்கு வந்துவிட்டது.

குமாரசாமி
குமாரசாமி ( ANI )

காங்கிரஸ், அதிருப்தி எம்.எல்.ஏ-க்களை சமாதானப்படுத்த பல முயற்சிகளை மேற்கொண்டது, அது முடியாமல் போனதால் அவர்கள் நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை. இதனால் 99 வாக்குகள் மட்டுமே பெற்று பெரும்பான்மை இல்லாமல் ஆட்சியை இழந்தார் குமாரசாமி. 105 வாக்குகளைப் பெற்ற பா.ஜ.க, இன்று ஆளுநரைச் சந்தித்து ஆட்சியமைக்க உரிமைகோரவுள்ளது.

வெற்றி பெற்ற பா.ஜ.க
வெற்றி பெற்ற பா.ஜ.க
Twitter/@BJP4Karnataka

2018-ம் ஆண்டு கர்நாடகாவில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் 79 தொகுதிகளிலும், பா.ஜ.க 105 தொகுதிகளிலும், மதச்சார்பற்ற ஜனதா தளம் 37 தொகுதிகளிலும் வெற்றிபெற்றது. அந்த மாநிலத்தில் ஆட்சியமைக்க 113 இடங்கள் தேவைப்பட்ட நிலையில் எந்தக் கட்சியும் பெரும்பான்மை பெறவில்லை. அதனால் அதிகமான இடங்களில் வெற்றிபெற்ற பா.ஜ.க ஆட்சியமைக்க உரிமை கோரி எடியூரப்பா முதல்வராக பதவியேற்றார். ஆனால், இதை ஏற்கமறுத்த காங்கிரஸ் உச்சநீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்தது. அதன் முடிவில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 4 நாள்கள் மட்டுமே முதல்வராக இருந்த எடியூரப்பா நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தாமல் தன் பதவியை ராஜினாமா செய்தார்.

`குமாரசாமியைக் கலங்கவைத்த 6 வாக்குகள்' - நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியுற்ற கர்நாடக அரசு!

அந்தச் சம்பவம் நடந்து ஒரு வருடத்துக்குப் பிறகு நேற்று மாலை காங்கிரஸ்- ம.ஜ.த கூட்டணியிலான ஆட்சி கவிழ்க்கப்பட்டுள்ளது. தன்னால் பெரும்பான்மையை நிரூபிக்கமுடியாததால் குமாரசாமி முதல்வர் பதவியை ராஜினாமா செய்து அந்தக் கடிதத்தை நேற்று இரவு 8:30 மணிக்கு கர்நாடக ஆளுநர் வஜுபாய் வாலாவிடம் அளித்தார். அவரின் கடிதம் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக ஆளுநரும் அறிவித்துவிட்டார்.

ராஜினாமா செய்த குமாரசாமி
ராஜினாமா செய்த குமாரசாமி
ANI

ஆளுநரைச் சந்தித்துவிட்டு வெளியில் வரும்போது செய்தியாளர்களிடம் பேசிய குமாரசாமி, `அனைத்தும் முடிந்துவிட்டது. பெரிய கணம் இறங்கியதாக உணருகிறேன். இந்த உலகிலேயே மிகவும் சந்தோஷமானவன் நான்தான்’ எனக் கூறிவிட்டுச் சென்றுள்ளார். குமாரசாமியின் ஆட்சி கவிழ்ந்ததற்குக் கூட்டணியே காரணம் எனப் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

எப்படியேனும் ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்ற கட்டாயத்தில், இந்தக் கூட்டணி இணைந்துள்ளது. கர்நாடகாவில் உள்ள காங்கிரஸ் தலைவர்கள் சிலருக்கு ம.ஜ.தவுடனான கூட்டணி பிடிக்கவில்லை என்றும் அதனால் கூட்டணிக்குள் சர்ச்சை நடந்ததாகவும் கூறப்படுகிறது. இதற்கு ஏற்றார்போல் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க அதிக பெரும்பான்மை பெற்று வெற்றி பெற்றது. இவை அனைத்துமே கர்நாடக அரசு கவிழ்ந்ததற்குக் காரணமாக கூறப்படுகிறது.