Published:Updated:

ஃபரூக்கி, குணால்... குறிவைக்கப்படும் காமெடியன்கள் - கர்நாடகாவில் கருத்துச் சுதந்திரம் என்ன ஆச்சு?!

ஃபரூக்கி, குணால்

கர்நாடக மாநிலம், பெங்களூரில், ஸ்டாண்ட் அப் காமெடியன் முனாவர் ஃபரூக்கியின் நகைச்சுவை நிகழ்ச்சி ரத்துசெய்யப்பட்டு பத்து நாள்கள்கூட ஆகாத நிலையில், மற்றொரு ஸ்டாண்ட் அப் காமெடியனான குணால் கம்ராவின் நகைச்சுவை நிகழ்ச்சியும் ரத்துசெய்யப்பட்டிருக்கிறது.

ஃபரூக்கி, குணால்... குறிவைக்கப்படும் காமெடியன்கள் - கர்நாடகாவில் கருத்துச் சுதந்திரம் என்ன ஆச்சு?!

கர்நாடக மாநிலம், பெங்களூரில், ஸ்டாண்ட் அப் காமெடியன் முனாவர் ஃபரூக்கியின் நகைச்சுவை நிகழ்ச்சி ரத்துசெய்யப்பட்டு பத்து நாள்கள்கூட ஆகாத நிலையில், மற்றொரு ஸ்டாண்ட் அப் காமெடியனான குணால் கம்ராவின் நகைச்சுவை நிகழ்ச்சியும் ரத்துசெய்யப்பட்டிருக்கிறது.

Published:Updated:
ஃபரூக்கி, குணால்

கடந்த சில தினங்களுக்கு முன்னர், பெங்களூரில் நடக்கவிருந்த முனாவர் ஃபரூக்கியின் நகைச்சுவை நிகழ்ச்சி கடைசி நேரத்தில் ரத்துசெய்யப்பட்டது. பல்வேறு இந்து அமைப்பினரும் கொடுத்த புகாரை அடுத்துத்தான் அந்த நிகழ்ச்சி ரத்துசெய்யப்பட்டதாக பெங்களூரு காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்திருந்தன. ஏற்கெனவே, இந்துக் கடவுள்களை அவமதித்துப் பேசியதாகக் கூறி, ஃபரூக்கி மீது பல்வேறு மாநிலங்களிலும் வழக்குகள் பதியப்பட்டிருக்கின்றன. கடந்த சில மாதங்களுக்கு முன்னர்கூட ஒரு வழக்கில் கைதாகி, பின்னர் ஜாமீனில் வெளியானார் ஃபரூக்கி. பெங்களூரில், அவரின் நிகழ்ச்சி தடைசெய்யப்பட்டதற்கு எதிராக நெட்டிசன்கள் பலரும் சமூக வலைதளங்களில் கொதித்தெழுந்தனர். அந்த நிகழ்ச்சி தடை செய்யப்பட்டதற்கு ஆதரவாகவும் சில குரல்கள் எழுந்தன.

முனாவர் ஃபரூக்கி
முனாவர் ஃபரூக்கி

இந்த நிலையில், தற்போது பெங்களூரில் நடக்கவிருந்த குணால் கம்ராவின் நகைச்சுவை நிகழ்ச்சியும் ரத்துசெய்யப்பட்டிருக்கிறது. இது குறித்து பெங்களூரு போலீஸார், ``நிகழ்ச்சி நடக்கவிருந்த அரங்கத்துக்கு அக்கம் பக்கத்தில் வசிக்கும் மக்கள், அந்த நிகழ்ச்சியை ரத்து செய்ய வேண்டும் என்று கோஷமிட்டு தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தனர். நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் முறையாக எங்களிடம் அனுமதி பெறவில்லை. அதனால்தான், அந்த நிகழ்ச்சி திடீரென ரத்துசெய்யப்பட்டிருக்கிறது. இது தொடர்பாகப் புகார் ஏதும் பதிவாகவில்லை. நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அவர்களாகவேதான் ரத்துசெய்துவிட்டார்கள்" என்றிருக்கிறார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

குணால் கம்ரா தனது ட்விட்டர் பக்கத்தில், ``பெங்களூரு மக்களே! அடுத்த 20 நாள்களில் பெங்களூரில் நடக்கவிருந்த எனது நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்துசெய்யப்படுகின்றன என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன். இரண்டு காரணங்களுக்காக எனது நிகழ்ச்சிகள் ரத்துசெய்யப்பட்டிருக்கின்றன. முதலில், 45 பேர் அமர்ந்து நிகழ்ச்சி பார்ப்பதற்கு எங்களுக்குச் சிறப்பு அனுமதி கிடைக்கவில்லை. அடுத்தது, அதையும் மீறி நான் நிகழ்ச்சியை நடத்தினால் நிகழ்ச்சி ரத்துசெய்யப்பட்டு, அந்த இடம் இழுத்து மூடப்படும் என்று எனக்கு மிரட்டல்கள் வந்தன. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்தக் கட்டுப்பாடுகள் இருக்கலாமென நினைக்கிறேன். என்னையும் அவர்கள் ஓர் உருமாறிய கொரோனா வைரஸின் திரிபாகக் கருதுகிறார்கள்போல'' என்று பதிவிட்டிருந்தார். மற்றொரு ட்விட்டர் பதிவில்...

ஒரு ஃபரூக்கி-யின் நகைச்சுவை நிகழ்ச்சி நடக்காதபோது, ஒரு கம்ரா-வின் நிகழ்ச்சி மட்டும் எப்படி நடக்கலாம்? எங்களை ஒடுக்க முயல்பவர்கள் குறைந்தபட்சம் சமத்துவத்துடன் செயல்படுகிறார்கள் என்பது ஆறுதலான விஷயம்!
குணால் கம்ரா

மிகக் குறைந்த நாள்களுக்குள்ளாக, அடுத்தடுத்து இரண்டு நகைச்சுவைக் கலைஞர்களின் நிகழ்ச்சிகள் ரத்துசெய்யப்பட்டிருக்கின்றன. அதுவும் இந்தியாவின் ஐடி தலைநகரான பெங்களூரில் இப்படியான சம்பவங்கள் நிகழ்ந்திருப்பது நெட்டிசன்கள் பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியிருக்கிறது. இதையடுத்து, பெங்களூரைச் சேர்ந்த நெட்டிசன்கள் பலரும் தங்களது அதிருப்தியை சமூக வலைதளங்களில் பதிவு செய்துவருகின்றனர்.

குணால்
குணால்

அவர்களில் சிலர், ``பெங்களூரில் கருத்துச் சுதந்திரம் இல்லாமல் போய்விட்டது. வலதுசாரி அரசுதான் இதற்குக் காரணம்'' என்று கருத்து பதிவிட்டுவருகின்றனர். ``எடியூரப்பா, கர்நாடக முதல்வராக இருந்தவரைகூட இப்படியான நிகழ்வுகள் அரங்கேறவில்லை. பசவராஜ் பொம்மை முதல்வராகப் பொறுப்பேற்ற சில நாள்களில் இப்படியான சம்பவங்கள் அதிகரித்திருக்கின்றன'' என்ற குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்பட்டுவருகின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இரண்டு நகைச்சுவை நிகழ்ச்சிகள் ரத்தானதற்கும் எதிராக பல்வேறு நகைச்சுவைக் கலைஞர்களும் தங்களது கண்டனங்களைப் பதிவுசெய்துவருகின்றனர். மேலும், இந்தச் சம்பவங்களுக்கு பெங்களூரு தெற்கின் எம்.பி-யாக இருக்கும் தேஜஸ்வி சூர்யாதான் காரணமாக இருக்கக்கூடும் என்ற சந்தேகங்களையும் கிளப்பியிருக்கிறார்கள் நகைச்சுவைக் கலைஞர்கள்.

அர்னவ் ராவ் என்ற நகைச்சுவைக் கலைஞர், ``எங்களுக்கு எதிராகச் செயல்படும் எவரும், ஏன் வெளிப்படையாகப் பேச மறுக்கிறார்கள்?'' என்று கேள்வியெழுப்பியிருக்கிறார். மற்றொரு நகைச்சுவைக் கலைஞரான மாலிக், ``அரசியல்வாதிகள் இது போன்ற விஷயங்களில் ஈடுபட்டால்தான் பிரபலமடைய முடியும். அதனால்தான் இப்படிச் செய்கிறார்கள்'' என்றிருக்கிறார்.

`கர்நாடகாவில் கருத்துச் சுதந்திரம் பாதிக்கப்பட்டிருக்கிறதா?' என்ற கேள்விக்கு, ``கர்நாடகாவில் சமீபகாலமாக `கலாசார பாதுகாவலர்கள்' என்ற பெயரில் சிலர் கலவரங்களை ஏற்படுத்திவருகிறார்கள். கடந்த சில நாள்களுக்கு முன்னர், பதின்வயதுடைய மூன்று பேர், இந்துக்களின் புனித ஸ்தலமான தலக்காவேரி பகுதியில் நின்று நடனமாடி, சிறு வீடியோ வெளியிட்டனர். அதற்காக அவர்கள் மூவரையும் கட்டாயப்படுத்தி மன்னிப்புக் கேட்கவைத்தனர். தொடர்ந்து, வகுப்புவாத வன்முறைகளைத் தூண்டும் வகையிலான சம்பவங்கள் கர்நாடகாவில் அதிகரித்துவருகின்றன.

மாநிலத்தில் அதிகரித்துவரும் இது போன்ற சம்பவங்கள் பற்றி முதல்வர் பசவராஜ் பொம்மையிடம் கேள்வியெழுப்பப்பட்டபோது, ``உணர்வுகள் புண்படுத்தப்படும்போது, ​​எதிர்வினைகள் ஏற்படுவது இயற்கையானது. இளைஞர்கள், இந்த உணர்வுகளை மனதில்வைத்து அதன்படிதான் செயல்பட வேண்டும்'' என்று கூறினார். இந்த பதில், கர்நாடகாவில் அதிகரித்துவரும் வகுப்புவாதக் கலவரங்களைத் தூண்டும் செயல்களை நியாயப்படுத்தும் வகையிலேயே இருக்கிறது. தொடர்ந்து இது போன்ற சம்பவங்கள் நிகழாமல் பார்த்துக்கொள்ள, கர்நாடக அரசு உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்'' என்கிறார்கள் கர்நாடக அரசியலை உற்று நோக்குபவர்கள்.

முதல்வர் பசவராஜ் பொம்மை
முதல்வர் பசவராஜ் பொம்மை

பா.ஜ.க ஆதரவாளர்கள் பலரும், ``நகைச்சுவை நிகழ்ச்சிகள் ரத்தானதற்கும் அரசுக்கும் எந்தச் சம்பந்தமுமில்லை. மக்கள் நடத்திய போராட்டங்கள் காரணமாகவும், காவல்துறையில் அளிக்கப்பட்ட புகார் காரணமாகவும்தான் நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டிருக்கின்றன. எதற்கெடுத்தாலும் பா.ஜ.க-வைக் குறை சொல்வது தற்போது ஃபேஷனாகிவிட்டது'' என்று சொல்லிக் கொதிக்கிறார்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism