Published:Updated:

பா.ஜ.கவின் சரிவுக்குக் காரணமான 4 விஷயங்கள்!

Modi and Amit Shah

நாடாளுமன்றத் தேர்தலில் பெற்ற வெற்றிக்குப் பிறகு நடைபெற்ற மாநிலத் தேர்தல்களில் பா.ஜ.க தொடர்ந்து பின்னடவுகளைச் சந்தித்து வருகிறது. இதற்குக் காரணம் என்ன?

பா.ஜ.கவின் சரிவுக்குக் காரணமான 4 விஷயங்கள்!

நாடாளுமன்றத் தேர்தலில் பெற்ற வெற்றிக்குப் பிறகு நடைபெற்ற மாநிலத் தேர்தல்களில் பா.ஜ.க தொடர்ந்து பின்னடவுகளைச் சந்தித்து வருகிறது. இதற்குக் காரணம் என்ன?

Published:Updated:
Modi and Amit Shah

2014-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் வென்று இந்தியாவின் ஆட்சிக் கட்டிலில் ஏறியது பாரதிய ஜனதா கட்சி. தனிப்பெரும்பான்மையோடு ஆட்சியைப் பிடித்த பா.ஜ.கவினர் இந்தியாவில் காங்கிரஸ் ஆட்சி இல்லாத மாநிலங்களை உருவாக்குவதே எங்களின் லட்சியம் என்று சபதமிட்டனர். அவர்கள் சொன்னபடியே ஆட்சிக்கு வந்த இரண்டு ஆண்டுகளுக்குள்ளாகவே 22 மாநிலங்களில் தங்கள் வெற்றியை நிலை நாட்டினார்கள். அதில் அருணாசலப் பிரதேசம், அஸ்ஸாம், சத்தீஸ்கர், கோவா, குஜராத், ஹரியானா, இமாசலப் பிரதேசம், ஜார்க்கண்ட், மத்தியப் பிரதேசம், மணிப்பூர், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட் ஆகிய மாநிலங்களில் நேரடியாகவும் மற்ற 9 மாநிலங்களில் கூட்டணி ஆட்சியையும் பிடித்தனர்.

2019-ல் இதே நிலைமை நீடிக்கவில்லை என்றுதான் கூற வேண்டும். நாடாளுமன்றத் தேர்தலில் ஆட்சியைத் தக்க வைத்த பா.ஜ.க-விற்கு மாநிலங்களில் ஆட்சியை நிலைநிறுத்த முடியவில்லை. தேர்தல் முடிந்த ஆறு மாதத்தில் ஹரியானா, மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் போன்ற மாநிலத் தேர்தலில் பெரும் பின்னடைவைச் சந்தித்தனர்.

இந்தத் தொடர் சரிவுக்கான காரணங்கள் என்னென்ன என்பதை விரிவாகப் பார்ப்போம்.

Modi
Modi

சிறுபான்மை மக்கள் மீது நடத்தப்படும் வன்முறைகள்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இந்தியா என்பது மதச்சார்பற்ற நாடு. இந்த நாட்டின் குடிமக்களை இந்த மதத்தைத்தான் பின்பற்ற வேண்டும் என்று சொல்லிக் கட்டாயப்படுத்த யாருக்கும் அதிகாரம் கிடையாது. ஆனால், கடந்த சில ஆண்டுகளில் அதுபோன்ற பல்வேறு சம்பவங்கள் அரங்கேறிவிட்டன. முக்கியமாக, கடந்த மே மாதம் 25-ம் தேதி டெல்லி அருகேயுள்ள குர்கான் மாவட்டத்தில் முகமது பரக்கத் என்னும் இளைஞர் மாலை நேரத்தில் மசூதிக்குச் சென்று தொழுகை நடத்திவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது ஐந்து பேர் கொண்ட கும்பல், அவரை வழிமறித்து, அவரின் தலையில் இருந்த குல்லாவைப் பறித்து `ஜெய் ஹனுமான்' கோஷமிடச் சொல்லி வற்புறுத்தியுள்ளனர். ஜார்க்கண்ட் மாநிலம் கர்ஸ்வான் மாவட்டத்தில் 24 வயது இளைஞர் அன்சாரியை, திருடன் என்று சொல்லி கடுமையாகத் தாக்குகிறது ஒரு கும்பல். அந்த இளைஞரை 'ஜெய் ஶ்ரீராம்', 'ஜெய் ஹனுமான்' என்று சொல்லுமாறு கட்டாயப்படுத்தியது அந்தக் கும்பல்.

'ஜெய் ஶ்ரீராம்' கடவுளின் பெயரால் நிகழும் வன்முறைகள்!
'ஜெய் ஶ்ரீராம்' கடவுளின் பெயரால் நிகழும் வன்முறைகள்!

தாக்கப்பட்ட அந்த இளைஞர் 18 மணிநேரம் கழித்து, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலன் அளிக்காமல், உயிரிழந்தார். மாட்டிறைச்சி உண்டதற்காக தலித் மக்கள் மற்றும் இஸ்லாமியர்கள் மீதும் தாக்குதல்கள் அரங்கேற்றப்பட்டன. இந்தியாவில் மோடி பிரதமராகப் பதவிக்கு வந்தபின்னர், 39 பேர் மாட்டிறைச்சி உண்டதற்காகக் கொல்லப்பட்டுள்ளனர். இதில் அதிகம் இஸ்லாமியர்களே. சட்டத்தின் வாயிலாகவும் அவர்கள்மீது தாக்குதல்கள் தொடர்ந்து நடத்தப்பட்டுதான் வருகிறது. அதில், முக்கியமானது குடியுரிமை திருத்தச் சட்ட மசோதா. இந்துக்களால் இது ஆதரிக்கப்படும் என்ற பா.ஜ.க கனவு பொய்த்துப்போனது. இது வேற்றுமையில் ஒற்றுமை காணும் நாடு என்பதை அவர்கள் மறந்துவிட்டார்கள். பா.ஜ.கவின் தொடர் தோல்விகளுக்கு இதுவும் ஒரு முக்கியக் காரணம்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பா.ஜ.க வினருக்கு எதிராகப் பதியப்படும் பாலியல் வழக்குகள்

2017-ம் ஆண்டு உத்தரப் பிரதேச, உன்னாவ் மாவட்டத்தின் பா.ஜ.க எம்.எல்.ஏ குல்தீப் சிங் செங்கார் மீது பதினேழு வயதுச் சிறுமி பாலியல் வழக்கை தொடர்ந்தார். நீதி கேட்டுப் போராட்டம் நடத்திய சிறுமியைப் பல தொந்தரவுகளையும் இழப்புகளையும் சந்திக்க வைத்தது இந்த அரசு. போராடிய அந்தச் சிறுமியின் தந்தையைக் கைது செய்து, விசாரணையின் போது லாக் அப்பில் அவர் இறந்தார். தந்தையை இழந்தும் நீதிக்காகப் போராடிய அந்தச் சிறுமியை லாரி ஏற்றிக் கொல்லவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. காயங்களுடன் தப்பிய அவருக்குத் துணையாக இருந்த ஒரு சில உறவுகளையும் இழக்க வைத்தது அந்தத் சம்பவம். தன் உயிருக்கு ஆபத்து இருப்பதால் பாதுகாப்பு வேண்டுமென உச்ச நீதிமன்றத்துக்கு அனுப்பிய அந்தச் சிறுமியின் கடிதத்தை மறைக்க முயற்சி செய்தது மட்டுமன்றி, இதற்குப் போராடிய பலரையும் தடியடி நடத்தி களைக்க முற்பட்டது உத்தரப்பிரதேசக் காவல்துறை. அதுமட்டுமல்லாமல் 72 வயதான பா.ஜ.க, எம்.பி சுவாமி சின்மயானந் மீது அவர் நடத்தும் கல்லூரியின் மாணவி பாலியல் புகார் கொடுத்தார்.

உன்னாவ் எம்.எல்.ஏ குல்தீப் சிங்
உன்னாவ் எம்.எல்.ஏ குல்தீப் சிங்

அந்தப் பெண்ணிடம் போதிய ஆவணங்கள் இருந்தும் உத்தரப் பிரதேச போலீஸ் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. பின்னர் டெல்லி போலீஸிடம் புகார் கொடுத்து வழக்குப் பதிவு செய்தார். போதிய ஆவணங்கள் இருந்தும் வழக்கை பதிவு செய்யக் கூட காவல்துறை முன்வருவது இல்லை. இந்த மெத்தனப் போக்கு பாதிக்கப்பட்டவர்களை மட்டுமல்லாமல், அவர்களுக்கு வாக்களித்த மக்கள் ஒவ்வொருவரையும் அலட்சியம் செய்கிறது. வாக்களித்து அவர்களைத் தேர்ந்தெடுத்துச் சட்டத்தின் வாயிலாக மக்களைக் காப்பாற்றுவார்கள் என்பது மாறி, அதிகாரத்தை வைத்து தவறு செய்பவர்களைக் காப்பாற்ற முயற்சிகளை மேற்கொள்கின்றனர். இது போன்ற விஷயங்களும் பா.ஜ.க அரசு மீது மக்களுக்குக் கோபத்தை ஏற்படுத்தியிருக்கக் கூடும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்தியாவில் ஏற்பட்டப் பொருளாதார வீழ்ச்சியும் அதன் விளைவும்

நாட்டில் ஏற்பட்ட மோசமான பொருளாதார வீழ்ச்சியும் பா.ஜ.க தோற்றதற்கு முக்கியக் காரணம். நெருக்கடி காலகட்டத்தின் போது பயன்படுத்த வேண்டிய மக்களின் வரிப் பணம், ரிசர்வ் வங்கியில் இருந்த தொகை, மத்திய அரசு ஏற்படுத்தியப் பொருளாதார வீழ்ச்சியைச் சரி செய்யப் பயன்படுத்தப்பட்டது. தினம்தினம் ஏற்றம் கண்ட பெட்ரோல் டீசல் விலை மற்றும் உச்சம் தொட்ட வெங்காயம் விலை சாமானிய மக்களுக்கும் பல பிரச்னைகளைத் தந்தது, ரூ.20 விற்ற வெங்காயம் கிடு கிடுவென உயர்ந்து ரூ.100 யைத் தொட்டது. இதற்கு மழைதான் காரணம் எனச் சொன்னாலும் பதுக்கல்களும், வர்த்தகச் சூதாட்டங்களும் காரணமாக இருக்கலாம் என்று யூகிக்கப்படுகிறது. வரலாறு காணாத அளவில் வீழ்ச்சியடைந்த கார்கள் விற்பனை அரசின் பொருளாதார வீழ்ச்சியை அப்பட்டமாகப் பிரதிபலித்தது. ``அனைத்து மக்களும் ஓலா ஊபர் போன்ற வாடகை கார்களைப் பயன்படுத்துவதால் யாரும் சொந்தமாக கார்கள் வாங்க முன்வருவதில்லை”என பா.ஜ.கவினர் சொன்ன காரணம் அனைவரையும் வெறுப்படையச் செய்தது.

வெங்காயம்
வெங்காயம்

பொருளாதாரப் பிரச்னைகள் குறித்து யார் பேசுவதையும் கேட்காமல் இருந்தது அரசு. அதைப் பற்றிப் பேசாமல் இருக்க வேறு சில பிரச்னைகளுக்குத் திசை திருப்பிவிடவும் மூடி மறைக்கவும் பல முயற்சிகளை மேற்கொண்டது மத்திய அரசு. இது மக்களிடையே எதிர்ப்பலைகளை ஏற்படுத்தியிருக்கலாம். கடந்த பத்தாண்டுகளில் இல்லாத அளவு வேலையில்லாதோர் எண்ணிக்கை இரட்டிப்பாகி இருக்கிறது. பொருளாதார இழப்புகளால் பல தொழில்கள் நசிவடைந்து பலர் வேலை இழக்கவும் நேரிட்டது மட்டுமல்லாமல் தற்கொலைகளும் நடந்தன. பணமதிப்பிழப்பு நடவடிக்கை தொடங்கிய போதே பொருளாதார வீழ்ச்சி தொடங்கிவிட்டதெனப் பொருளாதார ஆர்வலர்கள் பலரும் குற்றம் சாட்டுகின்றனர்.

மாநிலக் கட்சிகளுடன் ஏற்பட்ட கூட்டணி இழப்பு

பா.ஜ.க வீழ்ந்ததற்கு மற்றுமொரு முக்கியக் காரணம், மாநிலக் கட்சிகளுடன் ஏற்பட்ட கூட்டணி இழப்புகள். இது மகாராஷ்ரா மற்றும் ஜார்க்கண்ட் ஆகிய இரண்டு மாநிலங்களுக்குப் பொருந்தும். மகாராஷ்டிராவில் கடந்த முப்பது ஆண்டுகளாகக் கூட்டணியில் இருந்த சிவசேனா கட்சி முன்வைத்த நிபந்தனைகளை ஏற்க மறுத்தது பா.ஜ.க. அவர் கேட்ட இரண்டரை கால முதலமைச்சர் பதவி, அமைச்சரவையில் சரிபாதி இடம் இதை வழங்கியிருந்தால் பா.ஜ.க - சிவசேனா கூட்டணி ஆட்சியைப் பிடித்திருக்கும். ஆனால், சிவசேனா இது போன்ற நிபந்தனைகள் கோரவில்லை என பா.ஜ.கவும், நாங்கள் இந்த நிபந்தனை பேரில்தான் கூட்டணிக்கு ஒப்புக்கொண்டோம் என சிவசேனாவும் மாறி மாறி ஒருவரையொருவர் குற்றஞ்சாட்டிக் கொண்டதால்தான் தேர்தலுக்குப் பிறகு கூட்டணியில் பிளவு ஏற்பட்டது.

மகாராஷ்டிரா பா.ஜ.க - சிவசேனா கூட்டணி
மகாராஷ்டிரா பா.ஜ.க - சிவசேனா கூட்டணி

அதே போல, ஜார்க்கண்ட் மாநிலம் தோன்றி 19 ஆண்டுகளில் 15 ஆண்டுகள் பா.ஜ.க வின் ஆட்சிதான் அங்கு நடந்து வந்தது. அப்படி இருந்த மாநிலத்தில் பா.ஜ.க தோற்கக் காரணம் தேர்தலின்போது அவர்கள் எடுத்த கூட்டணி முடிவுகள்தான். கடந்த முறை நடந்த தேர்தலின் போது மாநிலக் கட்சியான ஏ.எஸ்.ஜே.யு உடன் கூட்டணி அமைத்தது பா.ஜ.க. இந்த இரு கட்சிகளும் இணைந்து 35% சதவிகித வாக்குகளைப் பெற்று ஆட்சியைப் பிடித்தனர். இம்முறை 20 இடங்களைக் கேட்ட ஏ.எஸ்.ஜே.யு கட்சியினருக்கு அவர்கள் கோரிய இடங்களைத் தர மறுத்த பா.ஜ.க தனித்துப் போட்டியிட்டது. இதில் 34% சதவிகித வாக்குகளை பா.ஜ.கவினரும் 9% சதவிகித வாக்குகளை ஏ.எஸ்.ஜே.யு கட்சியினரும் பெற்றனர். இவர்கள் இந்தத் தேர்தலில் இணைந்திருந்தால் பா.ஜ.க எளிதாக தேர்தலில் வெற்றி வாகை சூடியிருக்கும்.

- தனிமொழி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism