Published:Updated:

‘அவர் வந்தால் நானும் வருகிறேன்’! - ராஜினாமாவைத் திரும்பப் பெற்ற கர்நாடக எம்.எல்.ஏ

ராஜினாமா செய்த கர்நாடக எம்.எல்.ஏக்களில் ஒருவர் மீண்டும் காங்கிரஸுக்கு ஆதரவு அளித்துள்ளார்.

ராஜினாமவை திரும்ப பெற்ற எம்.எல்.ஏ
ராஜினாமவை திரும்ப பெற்ற எம்.எல்.ஏ ( ANI )

கர்நாடகா மாநிலத்தில் காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி நடைபெற்று வருகிறது. சமீபத்தில் ஆளும் கட்சியைச் சேர்ந்த 16 எம்.எல்.ஏக்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்ததால் அங்கு அரசியல் குழப்பம் நீடித்து வருகிறது.

ராஜினாமவை திரும்ப பெற்ற எம்.எல்.ஏ
ராஜினாமவை திரும்ப பெற்ற எம்.எல்.ஏ
ANI

எம்.எல்.ஏக்களின் ராஜினாமாவால் அம்மாநிலச் சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார். இது ஒரு புறம் இருக்க மற்றொரு புறம் அதிருப்தி எம்.எல்.ஏக்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் காங்கிரஸ் கட்சியினர் ஈட்டுப்பட்டு வந்தனர். அவர்கள் முயற்சியின் விளைவாக ராஜினாமா கடிதம் அளித்த 16 எம்.எல்.ஏக்களில் ஒருவர் மட்டும், தான் தொடர்ந்து காங்கிரஸில் இருக்க விரும்புவதாகவும் தன் ராஜினாமாவைத் திரும்பப் பெறுவதாகவும் அறிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.டி.பி நாகராஜன் என்பவர் தான் தன் ராஜினாமா அறிவிப்பை திரும்பப் பெற்றுள்ளார். கர்நாடகாவில் காங்கிரஸ் தலைவரான டி.கே சிவகுமார் நேற்று காலை நாகராஜன் வீட்டுக்கு நேரடியாகச் சென்று அவரிடம் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளார். அதன் முடிவில்தான் தன் ராஜினாமா அறிவிப்பை திரும்பப் பெற்றுள்ளார் நாகராஜன்.

ராஜினாமவை திரும்ப பெற்ற எம்.எல்.ஏ
ராஜினாமவை திரும்ப பெற்ற எம்.எல்.ஏ
ANI

இதையடுத்து அம்மாநில முன்னாள் முதல்வர் சித்தராமையா வீட்டுவாசலில் செய்தியாளர்களைச் சந்தித்த நாகராஜன், “ நான் காங்கிரஸிலேயே இருக்க விரும்புகிறேன். சபாநாயகரைச் சந்தித்து என் ராஜினாமா கடிதத்தையும் திரும்பப் பெறவுள்ளேன். என்னுடன் இணைந்து ராஜினாமா செய்த எம்.எல்.ஏ சுதாகரையும் மீண்டும் காங்கிரஸில் இணைய வலியுறுத்துவேன். ஒருவேளை அவர் இணைந்தால் நானும் இணைவேன். அவர் வரவில்லையெனில் நான் தனியாக வந்து எந்த பயனும் இல்லை” எனத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக 12 எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்த பிறகு அவர்களைத் தொடர்ந்து ஜூலை 10-ம் தேதி நாகராஜனும், சுதாகரும் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். கர்நாடக சபாநாயகருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்த 10 எம்.எல்.ஏக்களில் நாகராஜனும் ஒருவர்.

எம்.எல்.ஏ நாகராஜன்
எம்.எல்.ஏ நாகராஜன்
ANI

ராஜினாமா செய்த 16 எம்.எல்.ஏக்களில் ராஜினாமா இன்னும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. ஒருவேளை அவர்களில் ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்பட்டால் அம்மாநில எம்.எல்.ஏக்களில் எண்ணிக்கை 209- ஆக இருக்கும். இதற்கிடையில் ஆட்சி அமைக்கத் தேவையான எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை 101- ஆக மாறும். தற்போதைய நிலைமையில் ஆளும் கட்சிக்கு போதுமான பெரும்பான்மை இல்லை. ஆனால் பா.ஜ.க தனியாக 105 எம்.எல்.ஏகளை கொண்டுள்ளது. அங்கு நடக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பில் ஆட்சி மாற்றமும் ஏற்படலாம் என்ற சூழலில் தற்போது ஒரு எம்.எல்.ஏ ஆளும் கட்சிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.