Published:Updated:

துர்கா ஸ்டாலின் வீட்டை முற்றுகையிட்ட நிர்வாகி; `கப் சிப்' அறிவாலயம்... கழுகாரின் அரசியல் அப்டேட்ஸ்

கழுகாரின் அரசியல் அப்டேட்ஸ்
கழுகாரின் அரசியல் அப்டேட்ஸ்

கழுகாரிடமிருந்து வந்திருந்த மின்னஞ்சலைத் திறந்து பார்த்தோம். உள்ளே கொட்டிக்கிடந்தன தகவல்கள்...

கட்சித் தலைவர் ஸ்டாலினா, சபரீசனா?

  • தி.மு.க தலைவர் ஸ்டாலினின் மருமகன் சபரீசனின் பெரியம்மா, சில நாள்களுக்கு முன்பு நீலாங்கரையில் இறந்துபோனார். அந்தத் துக்க நிகழ்வுக்கு தி.மு.க-வின் முக்கிய பிரமுகர்கள் பலரும் சென்று அஞ்சலி செலுத்தினார்கள். அப்போது அங்கிருந்த சபரீசனிடம் கட்சியின் மூத்த நிர்வாகிகளே காட்டிய பவ்யத்தைப் பார்த்து தொண்டர்கள் வாயடைத்துப்போனார்கள். துக்க வீடு என்றும் பார்க்காமல், `கட்சிக்கு தலைவர் ஸ்டாலினா, சபரீசனா?’ என்று பெரிய பட்டிமன்றமே அங்கு நடந்ததாம்!

ஸ்டாலின்
ஸ்டாலின்

மாமியார் வீடு முற்றுகை... அறிவாலயம் கப்சிப்!

சீர்காழி ஒன்றிய தலைவருக்கான வேட்பாளரை மாற்றிவிட்ட விவகாரத்தில் நாகை மாவட்டம், திருவெண்காட்டிலுள்ள துர்கா ஸ்டாலினின் தாய் வீட்டுக்கு முன்பாக தி.மு.க-வினர் முற்றுகைப் போராட்டம் நடத்தினார்கள். அந்தப் போராட்டத்தின் பின்னணியில் இருந்தவர் தி.மு.க மாவட்ட பொறுப்பாளர் நிவேதா முருகன்தான் என்று மாவட்ட நிர்வாகிகள் பலரும் ஸ்டாலினைச் சந்தித்து புகார் அளித்தனர். ஆனால், அவர்மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தலைவரின் மாமியார் வீட்டையே முற்றுகையிடச் சொன்னவர்மீது நடவடிக்கை எடுக்க தலைவருக்கு என்ன தயக்கம் என்று கொதிக்கிறார்கள் ஏரியா உடன்பிறப்புகள்!

`நான், உங்களைப் போல் இல்லை ஜெயக்குமார்!' -டிஎன்பிஎஸ்சி முறைகேடு புகாரால் கொதித்த அப்பாவு

தப்பிக்கப் பார்ப்பது அப்பாவுவா... இன்பதுரையா?

டி.என்.பி.எஸ்.சி ஊழலில் தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ அப்பாவு சம்பந்தப்பட்டிருக்கிறார் என்று அதிரடியாக ஒரு குற்றச்சாட்டை கிளப்பியிருக்கிறார் அமைச்சர் ஜெயக்குமார். இன்பதுரைக்கு எதிராக அப்பாவு போட்ட தேர்தல் வழக்கு நிலுவையில் இருக்கிறது. இப்போது தேர்வு முறைகேட்டில் அப்பாவு பெயர் அடிபட ஆரம்பித்திருப்பதால், அதற்கான ஆதாரங்களை உடனடியாகச் சேகரித்து அப்பாவுமீது வழக்கு பாய்ச்சி ஆட்டம் காணவைக்கத் திட்டமிட்டிருக்கிறதாம் ஆளும்தரப்பு.

ஜெயில்பூரா அ.தி.மு.க-காரன்தான்!

கே.சி.பழனிசாமி கைதானபோது...
கே.சி.பழனிசாமி கைதானபோது...

அ.தி.மு.க-விலிருந்து நீக்கப்பட்ட பிறகு, `இரட்டை இலைச் சின்னத்தைப் பயன்படுத்துகிறார்’ என்ற புகாரில் முன்னாள் எம்.பி-யான கே.சி.பழனிசாமியை கைது செய்தது போலீஸ். அவர் ஜாமீனில் வந்தவுடனே கோவை அவினாசி சாலையிலுள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை போட முடிவு செய்திருக்கிறார். ஆனால், அதற்கு போலீஸ் அனுமதி மறுத்துவிட்டது. கொதித்துபோன கே.சி.பி, ``அ.தி.மு.க-காரனுக்கு எதிரி, அ.தி.மு.க-காரனேதான். ஜெயில்ல நான் ஒரு தி.மு.க-காரனைக்கூட பார்க்கல. உள்ளாட்சித் தேர்தல்ல சீட் கேட்டு கிடைக்காதவங்க, உள்ளூர் அமைச்சர் குடும்பத்த எதிர்த்துக் கேள்வி கேட்ட அ.தி.மு.க-காரங்கதான் உள்ளே இருக்காங்க. கோயமுத்தூர்லயும் ஒரு குடும்பத்தோட ஆட்சிதான் நடக்குது’’ என்று கடுமையாகக் கொந்தளித்தார்.

வாரியம் செஞ்ச காரியம்!

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் செயலாளராக இருந்த ராஜமாணிக்கத்தின் மகன் துர்கா சங்கருக்கும், ஏ.டி.ஜி.பி. ஜாபர்சேட்டின் மனைவி பர்வீனுக்கும் வீட்டு வசதி வாரியத்தில் மனையிடம் ஒதுக்கியது தொடர்பாகத் தனித்தனியாக இரண்டு வழக்குகள் லஞ்ச ஒழிப்புத்துறையால் பதிவு செய்யப்பட்டு, உயர் நீதிமன்றத்தில் விசாரணை நடந்துவருகிறது. இந்த வழக்குகள் ஜெயலலிதாவின் தனிப்பட்ட விருப்பத்தின்பேரில், போடப்பட்ட வழக்குகள் என்று அப்போதே பேசப்பட்டது. அந்த வழக்கின் விசாரணை இறுதிக்கட்டத்தை எட்டிக்கொண்டிருக்கிறது.

துர்கா சங்கர் தரப்பில், `இந்த வழக்கில் முகாந்திரம் இல்லை, தள்ளுபடி செய்ய வேண்டும்’ என்று மனு போடப்பட்டிருக்கிறது. லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் ஆஜரான அரசு வழக்கறிஞர், அதற்கு ஆட்சேபம் தெரிவிக்காமல் சம்மதித்துவிட்டார். இதனால் கோபம் அடைந்த நீதிபதி, ‘குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்யலாம் என்று எப்படிச் சொல்லலாம்?’ என்று காய்ச்சி எடுத்திருக்கிறார். அதனால் வழக்கு தள்ளுபடியாக வாய்ப்பில்லாமல் போயிருக்கிறது. ஒருவேளை அந்த வழக்கு தள்ளுபடியானால் அதன் அடிப்படையில் ஜாபர்சேட் மனைவியின் மீதான வழக்கும் தள்ளுபடியாகிவிடும்.

கரைவேட்டிகளிடம் கெஞ்சும் காக்கி!

தஞ்சாவூரில் காவல்துறையின் முக்கிய அதிகாரி ஒருவர், அதே மண்டலத்தில் வலுவாக செட்டில் ஆகிக்கொண்டிருக்கிறார். இப்போது அவருக்கு புரொமோஷன் வரப்போகிறது. எப்படியாவது அங்கேயே பணியில் தொடர வேண்டுமென்பதால் திருச்சி மண்டலத்தில் இருக்கும் பதவியைக் கைப்பற்ற டெல்டா அமைச்சர்கள் உள்ளிட்ட ஆளும்கட்சி வி.ஐ.பி-க்களைச் சந்தித்து, ‘என்னைக் கொண்டு வந்தால் நீங்க எதிர்பார்க்கிறபடி நடந்துக்குவேன்’ என்று கெஞ்சிக்கொண்டிருக்கிறாராம்.

மூன்று கோஷ்டிகளால் திண்டாடும் மதுரை!

அமைச்சர்கள் செல்லூர் ராஜு, ஆர்.பி.உதயகுமாருக்கும் இடையே நடக்கும் பவர் பாலிடிக்ஸ் மதுரை மாவட்டத்தைத் தாண்டி அனல் வீசுகிறது. மதுரை புறநகர் மேற்கு மாவட்டச் செயலாளரான ராஜன் செல்லப்பா தனியாகக் கோஷ்டி அரசியல் நடத்திக்கொண்டிருக்கிறார். இந்த மும்முனை கோஷ்டி பிரச்னையால்தான் நாடாளுமன்றம் மற்றும் உள்ளாட்சித் தேர்தலில் மதுரையில் அ.தி.மு.க-வுக்கு பின்னடைவு ஏற்பட்டது. ‘ஒற்றுமையாக செயல்படுங்கள்’ என்று எடப்பாடி பல முறை வார்னிங் கொடுத்துவிட்டார். ஆனால், எந்தப் பலனும் இல்லை. கோஷ்டி பூசல்களால் தன்னை வீழ்த்திவிடுவார்கள் என்ற அச்சத்தில் தன்னுடைய திருமங்கலம் தொகுதியிலயே அதிக கவனத்தைச் செலுத்திவருகிறார் ஆர்.பி.உதயகுமார்.

அடுத்த கட்டுரைக்கு