Published:Updated:

கைகொடுக்காத கடைசிக்கட்ட முயற்சிகள்! - இன்பதுரையின் எம்.எல்.ஏ பதவி தப்புமா?

ராதாபுரம் தொகுதியில் பதிவான வாக்குகள் இன்று மீண்டும் எண்ணப்படுவதால், அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு நிலவுகிறது.

இன்பதுரை
இன்பதுரை

நெல்லை மாவட்டம் ராதாபுரம் சட்டமன்றத் தொகுதிக்கான தேர்தலில் தி.மு.க சார்பாகப் போட்டியிட்ட அப்பாவு, `வாக்கு எண்ணிக்கையின்போது தபால் வாக்குகளைச் சரியாக எண்ணவில்லை. அத்துடன், கடைசி மூன்று சுற்று வாக்கு எண்ணிக்கையும் முறைப்படி நடக்கவில்லை. அதனால் அவற்றை மீண்டும் எண்ணுமாறு உத்தரவிட வேண்டும்’ எனச் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.

அப்பாவு
அப்பாவு

அ.தி.மு.க-வைச் சேர்ந்த எம்.எல்.ஏ-வான இன்பதுரை, `வாக்கு எண்ணிக்கையில் எந்த முறைகேடும் நடக்கவில்லை. தபால் வாக்குகளுக்கான படிவத்தில் நடுநிலைப் பள்ளிகளின் ஆசிரியர்கள் சான்றொப்பம் அளிக்க அதிகாரம் கிடையாது. அதனால் அந்த வாக்குகள் செல்லாததாகிவிட்டன’ எனத் தெரிவித்தார்.

அந்த வழக்கில் கடந்த 1-ம் தேதி தீர்ப்பளித்த நீதிபதிகள், ’ராதாபுரம் சட்டமன்றத் தொகுதியில் பதிவான தபால் வாக்குகளையும் அந்தத் தொகுதிக்கான 19, 20 மற்றும் 21-ம் சுற்றுக்கான வாக்குகளையும் மீண்டும் எண்ண வேண்டும்’ என உத்தரவிட்டனர். அந்தத் தீர்ப்பு வெளியானதும் அதை எதிர்த்து இன்பதுரை சார்பாக உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த மனு நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பாக நேற்று (3-ம் தேதி) விசாரணைக்கு வந்தது.

`நீதி, நியாயம் ஒருபோதும் தோற்காது...!'- மறுவாக்கு எண்ணிக்கை தீர்ப்பு குறித்து அப்பாவு

இன்பதுரை சார்பாக ஆஜரான வழக்கறிஞர்கள், `தபால் வாக்குகளுக்கான படிவத்தில் நடுநிலைப் பள்ளிகளின் ஆசிரியர்கள் சான்றொப்பம் அளிக்க அதிகாரம் உள்ளதா என்பது தொடர்பாக நாங்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளோம். அதன் விசாரணை நடக்க இருப்பதால் மறுவாக்கு எண்ணிக்கை விதிக்கப்பட்ட தீர்ப்புக்கு மூன்று வாரம் தடை விதிக்க வேண்டும்’ என வாதிட்டனர். அதற்கு அப்பாவு தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்ட நிலையில், இன்பதுரையின் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இந்த நிலையில், தேர்தல் ஆணையம் சார்பாக மறு வாக்கு எண்ணிக்கைக்குத் தயார் நிலையில் இருப்பதாக நீதிமன்றத்தில் உத்தரவாதம் அளிக்கப்பட்டது. அதனால் நீதிமன்றத்தில் ஏற்கெனவே பிறப்பிக்கப்பட்ட தீர்ப்பின் அடிப்படையில், இன்று (அக்டோபர் 4-ம் தேதி) காலை 11.30 மணிக்கு மறு வாக்கு எண்ணிக்கை நடத்த நீதிபதி ஜெயச்சந்திரன் உத்தரவிட்டார்.

Madras HC
Madras HC

இதனிடையே, தபால் வாக்குகளுக்கான படிவத்தில் நடுநிலைப் பள்ளிகளின் ஆசிரியர்கள் சான்றொப்பம் அளிக்க அதிகாரம் உள்ளதா என உச்ச நீதிமன்றத்தில் இன்பதுரை தாக்கல் செய்த மனுவை அவசர வழக்காக ஏற்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டதால் திட்டமிட்டபடி இன்று வாக்கு எண்ணிக்கை நடக்கிறது.

மறு வாக்கு எண்ணிக்கை நடக்க வேண்டிய 19, 20 மற்றும் 21-ம் சுற்றுக்களுக்கான வாக்குப் பெட்டிகளும் தபால் வாக்குகளும் நெல்லையிலிருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சென்னை உயர்நீதிமன்றத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டன. 24 வருவாய்த்துறை அதிகாரிகளும் நெல்லையிலிருந்து சென்றுள்ளனர்.

`3 மாநிலங்களில் கைவரிசை; வங்கிகள்தான் முதல் இலக்கு!' - திருச்சி கொள்ளையில் சிக்கிய கும்பலின் பின்னணி

இன்று நடக்க இருக்கும் மறு வாக்கு எண்ணிக்கை காரணமாக அரசியல் கட்சியினரிடம் பரபரப்பு தொற்றிக்கொண்டிருக்கிறது. மறு வாக்கு எண்ணிக்கைக்குப் பின்னர், ராதாபுரம் தொகுதிக்கான எம்.எல்.ஏ மாறுவாரா அல்லது அதே சட்டமன்ற உறுப்பினரே தொடருவாரா என்கிற எதிர்பார்ப்பால் தொகுதி மக்களிடமும் ‘திக்..திக்..’ சூழல் நிலவுகிறது. மறுவாக்கு எண்ணிக்கைக்குத் தடை கோரி இன்பதுரை மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்காதநிலையில், அரசியல் வட்டாரத்தில் இந்த விவகாரம் பரபரப்பைப் பற்றவைத்துள்ளது.