Published:Updated:

பொதுத்துறை நிறுவனங்களுக்கும் டி.என்.பி.எஸ்.சி மூலம் ஆள் சேர்ப்பு..! - என்னென்ன மாற்றங்கள் ஏற்படும்?

நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன்
News
நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன்

மின் வாரியம், ஆவின் உட்பட மாநில அரசின் பொதுத்துறை நிறுவனங்கள் அனைத்திலும் டி.என்.பி.எஸ்.சி மூலமாக ஆள்சேர்க்கை நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலமாக அரசுப் பணியாளர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். மாநில பொதுத்துறை நிறுவனங்கள், அரசுக் கழகங்கள், சட்டபூர்வமான வாரியங்கள், மாநில அரசின் கட்டுப்பாட்டில் வரும் பொதுத்துறை நிறுவனங்கள் ஆகியவற்றுக்கான பணியாளர் சேர்ப்பு அந்தந்த துறைகள் மற்றும் கழகங்கள் மூலமாகவே இதுவரை நடைபெற்றுவந்தது.

அரசுப் பணிகளுக்குத் தேர்வு
அரசுப் பணிகளுக்குத் தேர்வு

இந்த நிலையில், மாநில அரசின் பொதுத்துறை நிறுவனங்கள், சட்டபூர்வ வாரியங்கள், அரசுக் கழகங்கள் ஆகியவற்றுக்கான பணியாளர் சேர்க்கை தொடர்பான பணிகள் டி.என்.பி.எஸ்.சி-யிடம் ஒப்படைக்கப்படும் என்று நிதி மற்றும் பணியாளர் நலத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சட்டமன்றத்தில் அறிவித்தார். இதன் மூலம் ஆவின், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், தமிழ்நாடு மின் வாரியம், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் என அனைத்துக்கும் டி.என்.பி.எஸ்-சி மூலமாகவே இனி பணியாளர் சேர்க்கை நடைபெறும்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

தமிழக அரசின் இந்த முடிவு சில பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் என்ற கருத்தை ஒரு சிலர் முன்வைத்தாலும், பெரும்பாலோர் இதை வரவேற்றுள்ளனர். இது குறித்து ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரியும், அரசியல் திறனாய்வாளருமான பாலச்சந்திரனிடம் பேசினோம்.

``தங்களுக்கான பணியாளர்களை தாங்களே சேர்ப்பது என்கிற மாநில அரசின் கழகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், அரசு வாரியங்கள் ஆகியவற்றுக்கான தன்னாட்சி அதிகாரத்தை இது பாதிக்கிறது என்பது ஓர் அம்சம்.

மற்றபடி, இது வரவேற்கத்தக்க நடவடிக்கை. நிர்வாகம் சிறப்பாக இருக்க வேண்டும் என்பதில் எப்போதுமே அக்கறையுடன் செயல்படுபவர், அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன். எனவே, அவரது இந்த முயற்சி நல்ல பலன்களைக் கொடுக்கும் என்று நம்புகிறேன்.

பாலச்சந்திரன்
பாலச்சந்திரன்

பொதுத்துறை நிறுவனங்களில் பணியாளர்களைச் சேர்ப்பதற்கான அதிகாரம் அந்த நிறுவனங்களிடம் இருக்கும் காரணத்தால், பணி நியமனங்களில் உள்ளூர் அரசியல்வாதிகள், உயர்மட்ட அரசியல்வாதிகள், அதிகாரிகள் ஆகியோரின் ‘பிரஷர்’ அதிகமாக இருக்கும். அதனால், தேவையற்ற நியமனங்களுக்கும் தேவைக்கு அதிகமான நியமனங்களும் நடைபெறும். அப்படியிருக்கும்போது, டி.என்.பி.எஸ்.சி-யின் கீழ் இது வந்துவிட்டால், தேவையற்ற நியமனங்கள் தவிர்க்கப்படும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பணியாளர்களைச் சேர்க்கும் பணி டி.என்.பி.எஸ்.சி-யிடம் போகும்போது, உங்களுக்கு எத்தனை ஊழியர்கள் தேவை, எத்தனை அதிகாரிகள் தேவை என்று கேட்பார்கள். தற்போது இருக்கும் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளின் எண்ணிக்கை விவரங்களையும் கேட்பார்கள். எல்லாவற்றையும் பார்த்துவிட்டு, அதிகமான ஊழியர்கள், அதிகாரிகளை நிறுவனங்கள் கேட்டால், இத்தனை பேர் போதும் என்ற முடிவை டி.என்.பி.எஸ்.சி எடுக்கும்.

மின் வாரியம்
மின் வாரியம்

தமிழ்நாடு அரசின் நிதி நிலைமை சிரமத்தில் இருக்கிறது. எனவே, தேவையற்ற பணி நியமனங்களைக் கட்டுப்படுத்துவதன் மூலமாக, பொதுத்துறை நிறுவனங்கள் லாபம் ஈட்டுவதும், லாபத்தில் பங்குத்தொகையை அரசுக்கு வழங்குவதும் அதிகமாவதற்கான வாய்ப்பு இருக்கிறது. எனவே, இது தேவையான ஒரு நடவடிக்கைத்தான்” என்றார் பாலச்சந்திரன்.

இது குறித்து தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் (சி.ஐ.டி.யு) பொதுச்செயலாளர் ராஜேந்திரனிடம் பேசினோம். ``அரசின் இந்த முடிவு வரவேற்கத்தக்கது. அதே நேரத்தில், மின் வாரியத்தைப் பொறுத்தவரையில் ஒரு பிரச்னை இருக்கிறது. அதாவது, மின் வாரியத்தில் பல ஆண்டுகளாக வேலை செய்துவரும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் சுமார் 10 ஆயிரம் பேர் இருக்கிறார்கள். இவர்களில், இந்த வேலையை மட்டுமே நம்பி தொடர்ச்சியாக வேலை செய்பவர்கள் சுமார் 8 ஆயிரம் பேர். இவர்களில் 40 வயதைக் கடந்த பலரும் இருக்கிறார்கள்.

ராஜேந்திரன்
ராஜேந்திரன்

ஆள்சேர்ப்பு டி.என்.பி.எஸ்.சி-க்குப் போய்விட்டால், ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு சிக்கல் வரும். எழுத்துத் தேர்வு நடத்தி பல்வேறு தகுதிகளை வைப்பது என்பது ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு பொருத்தமானதாக இருக்காது. இதில் எங்களுடைய ஆலோசனை என்னவென்றால், பத்தாண்டுகளாகப் பணியாற்றும் தொழிலாளர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்கிற தமிழக அரசின் முடிவின்படி, மின் வாரிய ஒப்பந்தத் தொழிலாளர்களைப் பணி நிரந்தரம் செய்துவிட்டு, பிறகு டி.என்.பி.எஸ்.சி-யிடம் இந்தப் பொறுப்பை ஒப்படைக்கலாம். அதன் பிறகு, ஒப்பந்தத் தொழிலாளர்களே இனி கிடையாது என்ற நிலையைக் கொண்டுவந்தால் நன்றாக இருக்கும்” என்றார் ராஜேந்திரன்.

தமிழக அரசின் இந்த நடவடிக்கையை ஜேக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர் வெங்கடேசன் வரவேற்கிறார். ``இது ஒரு நல்ல நடைமுறை. டி.என்.பி.எஸ்.சி மூலமாக ஆள்சேர்ப்பு நடைபெறும்போது, அதில் தவறுகள் நடப்பதற்கு துளியும் வாய்ப்பு இருக்காது. பணி நியமனங்கள் வெளிப்படைத்தன்மையுடன் நடைபெறும்.

வெங்கடேசன்
வெங்கடேசன்

எந்த ஆட்சி வந்தாலும் அரசியல் தலையீடு இல்லாமல் பணி நியமனங்கள் நடைபெறும். தகுதியான நபர்களுக்கு பணி கிடைப்பதற்கு வாய்ப்பு ஏற்படும். காலம் கடந்த நடவடிக்கை என்றாலும், இது மிகவும் வரவேற்கத்தக்கது. உயர் நீதிமன்ற நீதிபதிகள் தேர்வையும் டி.என்.பி.எஸ்.சி-யின் கீழ் கொண்டுவந்தால் நன்றாக இருக்கும்” என்றார்.