Published:Updated:

நாடற்றவர்களின் கடவுச்சீட்டு | வேலி பாய்ந்த அகதி | பகுதி - 15

நாடற்றவர்களின் கடவுச்சீட்டு ( pixabay )

அந்த வேலி அலாரம் சிவப்பாக பொறிகாட்டியவுடன், கட்டுப்பாட்டு அறை அதிகாரி, வானொலியில் ``கோடு யெல்லோ” என்று அலறியடிக்க, கிழக்குப் பக்கமாக அதிகாரிகள் ஓடிச்சென்று பார்ப்பதற்குள், அகுனா லாகவமாக வேலியால் பாய்ந்து...

நாடற்றவர்களின் கடவுச்சீட்டு | வேலி பாய்ந்த அகதி | பகுதி - 15

அந்த வேலி அலாரம் சிவப்பாக பொறிகாட்டியவுடன், கட்டுப்பாட்டு அறை அதிகாரி, வானொலியில் ``கோடு யெல்லோ” என்று அலறியடிக்க, கிழக்குப் பக்கமாக அதிகாரிகள் ஓடிச்சென்று பார்ப்பதற்குள், அகுனா லாகவமாக வேலியால் பாய்ந்து...

Published:Updated:
நாடற்றவர்களின் கடவுச்சீட்டு ( pixabay )
``இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும் கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் கருத்துகள் அல்ல!” - ஆசிரியர்.

குயிலனும் மனைவியும் விடுதலையான செய்தியால் முகாமெங்கும் அகதிகள் குதூகலமான தருணங்கள் ஒருவாறு ஓய்ந்தன. ஆனால், தடுப்பு முகாம்களில் மிதக்கும் காற்றுக்கு, சீராக வீசுவதற்கு விருப்பமிருப்பதில்லை. சற்று நேரத்தில், அலறிய பாதுகாப்பு அதிகாரிகளின் வானொலிகளால் முகாம் நிலமே பதறியது.

முகாமின் கட்டுப்பாட்டு அறையிலிருந்து

``ரெஸ்போன்ஸ்... ரெஸ்போன்ஸ்... கோடு யெலோ... சார்ளி கம்பவுண்ட் ஈஸ்ட் பென்ஸ்”

– (Response Response Code Yellow – CHARLIE compound – East fence) என்று அலறிய அதிகாரியின் குரல், பாதுகாப்புக்காகப் பல்வேறு இடங்களிலும் நின்றுகொண்டிருந்த அதிகாரிகளின் கை வானொலிகளில் வெடிச்சத்தமாக எதிரொலித்தது.

அல்பா கம்பவுண்டுக்கும் சார்ளி கம்பவுண்டுக்கும் இடையிலான கோட்டைக் கதவுகள் போன்ற இரும்புப் படலையை எங்கிருந்தோ ஓடிவந்த மூன்று அதிகாரிகள் அவசர அவசரமாக இழுத்துப் பூட்டினார்கள்.

அகதிகள் எல்லோரையும் அவரவர் அறைகளுக்கு உடனடியாகப் போய்விடுமாறு அதிகாரிகள் கலைத்தார்கள். சிறுவர்கள் கூச்சலிட்டபடி பெற்றோருடன் ஓடினார்கள். பெரியவர்களுக்கும் என்ன நடந்தது என்று எதுவும் புரியாமல், குறைந்தபட்சம் புதினத்தை அறிந்துகொண்டாவது அறைக்குள் போகலாமே என்ற அங்கலாய்ப்புடன் ஆங்காங்கே நின்று அதிகாரிகளை எட்டிப்பார்த்தார்கள்.

சில அதிகாரிகளின் நடத்தையில் விகாரம் தெரிந்தது.

தங்களது கட்டளைகளுக்கு அடங்காதவர்களைக் கோபத்தோடு கலைத்துச் சென்று, அவரவர் அறைகளுக்குள் தள்ளிவிட்டார்கள்.

திசைக்கொன்றாக ஓடிய அகதிகளால் சார்ளி கம்பவுண்ட் மைதானமே புழுதியால் நிறைந்தது.

அடிக்கடி நிகழாத இது போன்ற சம்பவங்களில், என்னதான் சுவாரஸ்யம் என்று அறிவதற்கு அகதிகள் தங்களுக்குள் போட்டிபோட்டனர்.

தேநீர் தயாரித்துக்கொண்டு நின்ற சில முதியவர்களை, அதிகாரிகள் கைகளில் பிடித்து அழைத்துச் சென்று, அவர்களது அறைகளுக்குள் ஏற்றிவிடுவதை, ஏனைய அகதிகள் தங்களது அறை ஜன்னல்கள் வழியாக எட்டிப்பார்த்தபடி நின்றனர்.

`சார்ளி கம்பவுண்ட்’ குடும்ப அகதிகளைக் கட்டுப்படுத்துவதில்தான் அதிகாரிகள் பெரும்பாடுபட்டார்களே தவிர, `அல்பா கம்பவுண்ட்’ ஆண் அகதிகள், கட்டளை வெளியான சில நிமிடங்களிலேயே தங்களது அறைகளுக்குள் போய்விட்டார்கள்.

``அகுனா முகாமின் வேலியால் பாய்ந்து தப்பிவிட்டானாம்.”

இழுத்து மூடப்பட்ட அறைகளுக்குள்ளேயும் அந்தத் தகவல் சகல அகதிகளுக்கும் எப்படியோ தெளிவாகப் போய்ச் சேர்ந்தது.

தூரத்தில் குடிவரவு அதிகாரிகள் வேகமாக ஓடி வந்துகொண்டிருந்தார்கள்.

நாடற்றவர்களின் கடவுச்சீட்டு
நாடற்றவர்களின் கடவுச்சீட்டு
pixabay
தடுப்பு முகாமின் இவ்வளவு பெரிய பாதுகாப்பை மீறி, ஓர் அகதி தப்பியோடி விட்டான் என்றால்,

அதற்காக முகாம் பாதுகாப்பு அதிகாரிகள், குடிவரவுத்துறை அமைச்சு அதிகாரிகளிடம் படும்பாடு இருக்கிறதே, அதை உலகின் மிகக்கொடிய சித்திரவதைகளில் ஒன்றாகப் பட்டியல்படுத்திவிடலாம்.

முகாமில் கொண்டுவந்து அடைக்கப்படுகிற அகதி எனப்படுகின்றவன், வெறும் தஞ்சக் கோரிக்கையாளன்தானே தவிர, அவன் கிரிமினல் கிடையாது. ஆனால், கிரிமினலாகவும் இருக்கலாம் என்பதுதான் இங்குள்ள பெரிய பிரச்னை. தஞ்சம் கோரி வருபவர்களை முதலில் அவர்கள் அகதிகளா, இல்லையா என்று தரம் பிரிக்கிறார்கள். அதற்குப் பிறகு, அந்த அகதி இந்த நாட்டுக்குள் அனுமதிக்கப்பட உகந்தவனா, இல்லையா என்று நடத்தைச் சோதனை செய்கிறார்கள்.

சட்டவிரோதமாக வெளிநாடுகளிலிருந்து வருபவர்கள், தங்களது நாட்டில் செய்த பெருங்குற்றங்களோடு வந்து, ஆஸ்திரேலிய சமூகத்தைச் சிதைத்துவிடுவார்களோ என்ற சந்தேகத்தில்தான், முகாமில் வந்து சேர்பவர்கள் எல்லோரையும் இரண்டாம் கட்டமாக வடிகட்டி, சோதனை செய்கிறார்கள் குடிவரவுத்துறையினரும் புலனாய்வுத்துறையினரும்.

ஆனால்,

இந்தச் சோதனை நடைபெறுவதற்கு முன்னரே ஒருவன் முகாமிலிருந்து தப்பிவிட்டால், கடி நாய் ஊருக்குள் புகுந்துவிட்டதுபோல டென்ஷனாகிவிடுவார்கள் குடிவரவுத்துறையினர்.

மெல்போர்ன் முகாமில் எப்போதாவது ஒரு தடவை நடைபெறும் மிகவும் அபூர்வமான சம்பவம் இது. பெரும்பாலான அகதிகள், இந்த முகாமிலிருந்து தப்பிச் செல்வதற்குப் போதுமான வாய்ப்புகளிருக்கிறபோதும், தங்களது விசாவுக்கு விவகாரமான எந்தச் செயலையும் செய்துவிடக் கூடாது என்பதில் கரிசனையோடிருந்தார்கள்.

நீளமான கால்கள் உள்ளன என்பதற்காக, ஆழமான கடல்களில் இறங்கிவிடக் கூடாது என்பதில் அவர்கள் தெளிவாக இருந்தார்கள்.

ஆனால், இன்று அந்தப் பெருங்குழப்பம் நடந்துவிட்டது என்பதுதான் சிக்கலே!

தப்பியோடியவனின் தடம் தேடி அவனைப் பிடித்துவருவதற்கு, உடனடியாக பொலீஸின் உதவி நாடப்படுவதுதான் முகாமின் நடைமுறை. அவன் குறித்த மொத்தத் தகவல்களும் முகாம் பாதுகாப்பு அதிகாரிகளாலும் குடிவரவுத்துறையினராலும் பொலீஸிடம் கொடுக்கப்படும். அவனை, வேட்டை நாய்களாக பொலீஸார் ஊரெங்கும் தேடத் தொடங்குவர்.

நாடற்றவர்களின் கடவுச்சீட்டு
நாடற்றவர்களின் கடவுச்சீட்டு
pixabay

முகாமில் பதற்றம் தொற்றத் தொடங்கிய ஒரு மணி நேரத்தில், முகாம் வேலிகளில் சிவப்பு – நீல விளக்குகளால் மின்னத் தொடங்கின. நான்கு வாகனங்களில் பொலீஸார் வந்து குதித்தனர்.

முகாமுக்கு யார் வந்தாலும் ஓடிச் சென்று வேலியில் தொங்கி நின்று புதினம் பார்க்கும் சிறுவர்கள், அன்று கண்களுக்கு விருந்தாக அழகிய பொலீஸ் வாகனங்கள் வெளியே வெளிச்சமிட்டபடி நின்றுகொண்டிருந்தபோதும், அவற்றைத் தெளிவாகப் பார்க்க முடியவில்லை. மடிப்பு கலையாத நீல வண்ணச் சீருடையில் மெழுகு பொம்மைகள்போல கறுப்புக் கண்ணாடிகளுடன் அவ்வப்போது வருகிற பொலீஸாரைப் பார்ப்பதற்கு முகாம் குழந்தைகளுக்கு எப்போதும் விருப்பமிருந்தது. தங்கள் தங்களது நாடுகளில் வேறு நிறச் சீருடைகளில்

அடக்குமுறையாளர்களாக, அட்டூழியம் செய்பவர்களாகக் கண்ட பொலீஸாரை, இந்த நாட்டில், அமைதியானவர்களாகவும், மீசையற்ற அழகர்களாகவும் பார்ப்பதில் குழந்தைகளுக்குள் புதிர் நிறைந்த புழுகம் நுரைத்திருந்தது.

அகுனா பாய்ந்து சென்ற வேலி, சார்ளி கம்பவுண்டின் கிழக்குப் பக்கமாக இருந்தது. தப்பியோடுவதற்கு அவன் மிகத் தெளிவாகத் திட்டமிட்டிருக்கிறான் என்பது மாத்திரம் தெரிந்தது. குயிலனும் மனைவியும் விடுதலையாகிப் போனபோது, மொத்த அகதி முகாமும் அவர்களை வழியனுப்புவதில் கவனமாயிருந்தது. அதிகாரிகளும் அவர்களைக் கட்டுப்படுத்துவதில் சிரத்தையாக நின்றுகொண்டிருந்தார்கள். குடிவரவுத்துறை அதிகாரிகளும் பின் படலையில், வழியனுப்பும் வேலைகளில் தீவிரமாக இருந்தார்கள். இவற்றையெல்லாம், மிக நுட்பமாக அவதானித்து, கணித்துக்கொண்ட அகுனா –

ராதாவும் குழந்தையும் விடுதலையாகிப்போன தருணத்தைத் தனக்காக உபயோகிப்பது என்று முடிவெடுத்திருக்கிறான்.

பெரும் கில்லாடியாக இருப்பானோ என்று அதிகாரிகள் அனைவரும் பொலீஸாரின் முன்னால் தலையைச் சொறிந்துகொண்டு நின்றார்கள்.

முகாமின் கிழக்குப் பக்கவேலியில் கண்காணிப்பு கேமரா இல்லை. கண்காணிப்பு அலாரம் மாத்திரமே பொருத்தப்பட்டிருந்தது. அந்த வேலிக்கு அடுத்த பக்கமாக இருநூறு மீற்றர் தொலைவில், பலகை அறுக்கும் பெரியதொரு ஆலையிருந்தது. தங்களை நோக்கிய வேலியில் கண்காணிப்பு கேமரா பொருத்துவதற்கு அந்த ஆலை நிர்வாகம், ஆரம்பத்தில் எதிர்ப்பு தெரிவித்த காரணத்தால், அலாரத்தை மாத்திரம் பொருத்தியிருந்தது குடிவரவுத்துறை அமைச்சு. யாராவது அந்த வேலியால் பாய்ந்து ஓடினால், கட்டுப்பாட்டு அறையிலிருப்பவருக்கு, அது காட்சியாகத் தெரியாவிட்டாலும், ஏதோ அசம்பாவிதம் அந்த வேலிப்பக்கமாக இடம்பெறுகிறது என்பதை அலாரத்தின் உதவியோடு அலாரக் குறிப்பாக கண்டுகொள்ள முடியும்.

அன்றைய தினம், அந்த வேலி அலாரம் சிவப்பாக பொறிகாட்டியவுடன், கட்டுப்பாட்டு அறை அதிகாரி, வானொலியில் ``கோடு யெல்லோ” என்று அலறியடிக்க, கிழக்குப் பக்கமாக அதிகாரிகள் ஓடிச்சென்று பார்ப்பதற்குள், அகுனா லாகவமாக வேலியால் பாய்ந்து, மரம் அறுக்கும் ஆலைக்குள் ஓடிச் சென்று, அதன் முன்வாயில் வழியாகப் பாய்ந்து ஓடியிருக்கிறான் என்பது, பொலீஸார் வந்த பிறகு தெரிந்தது.

`கோடு யெல்லோ’ என்றால், முகாமுக்குள் இடம்பெற்றிருக்கும் பாரதூரமானதொரு சம்பவத்தைத் தடுப்பதற்கு மிக அவசரமாக உதவி தேவைப்படுகிறது.

மேலதிக அதிகாரிகள் எங்கிருந்தாலும் உடனடியாக அந்த இடத்துக்கு விரையவும் என்று, சங்கேத மொழியில் பொருள்படும்.

மாலைவேளை, மரம் அறுக்கும் ஆலையிலிருந்தவர்கள் வேலையை முடித்துவிட்டுப் போய்விட்டார்கள். பூட்டியிருந்த ஆலையை எவ்வாறு தனக்குச் சாதகமாகப் பயன்படுத்த முடியும் என்பது முதற்கொண்டு அனைத்தையும், அகுனா நுட்பமாகத் திட்டமிட்டிருக்கிறான்.

நாடற்றவர்களின் கடவுச்சீட்டு
நாடற்றவர்களின் கடவுச்சீட்டு
pixabay

நான்கைந்து பொலீஸார் அகுனா ஏறிப்பாய்ந்த வேலிக்குக் குறுக்கும் மறுக்காக ஓடியோடிப் படமெடுத்தார்கள். மரமறுக்கும் ஆலைவரை சென்று வீடீயோ எடுத்தார்கள். முகாமின் வேலியை முழுவதுமாக மேய்ந்து முடித்துவிட்டு, அலுவலகத்தில் வந்து அகுனாவின் படங்கள் பலவற்றைப் பிரதியெடுத்துக்கொண்டு காரில் போய் ஏறிக்கொண்டார்கள்.

தாங்களும் ஏதாவது தகவல் கொடுக்க வேண்டும் என்று வந்த பொலீஸாரில் தலைமை வகித்த அதிகாரியைக் கலைத்துச் சென்று குடிவரவு அமைச்சு அதிகாரியொருவர், அகுனாவின் பின்னணி குறித்தும்,

அவன் நைஜீரிய உள்நாட்டுப் போரில் தப்பிவந்த அரசியல் போராளி

என்றும் தாங்கள் இதுநாள் வரைக்கும் எடுத்துவைத்திருந்த அறிக்கைகளை விரல்களால் கோடிட்டுக் காண்பித்தார்.

முகாமின் வேலிகள் முழுவதையும் பாதுகாப்பு அதிகாரிகள் ஒவ்வொரு நாளும் சோதனை செய்கிறார்கள், லகுவில் யாரும் தாண்டி ஓடிவிட முடியாது, இருந்தாலும் ஒருத்தன் தப்பியோடிவிட்டான் என்பதை நம்ப முடியாமலுள்ளது என்று அழுதுவிடாத குறையாக பொலீஸாரிடம் மன்றாட்டமாகக் கூறிக்கொண்டிருந்தார் குடிவரவு அதிகாரி. ஆஸ்திரேலியாவின் கடல் எல்லையை மாத்திரமன்றி, தரை எல்லையையும் ஒரு நைஜீரியாக்காரன் கெட்டித்தனமாகத் தப்பியோடியிருக்கிறான் என்றால், இதற்கு என்ன அர்த்தம் என்பதுபோல பொலீஸ் அதிகாரியும் குடிவரவுத்துறை அதிகாரியும் பரஸ்பரம் தங்களுக்குள் பரிதாபமானதொரு பார்வையைப் பரிமாறிக்கொண்டார்கள்.

தொடரும்..!