Published:Updated:

நாடற்றவர்களின் கடவுச்சீட்டு | `அகதியின் கையில் அகப்பட்ட பணயக் கைதி!’ | பகுதி - 17

நாடற்றவர்களின் கடவுச்சீட்டு

``பொத்தடா வாயை. அந்தப் புனிதமான விசயங்களையெல்லாம், உன்னைப்போல துர்நாற்றம் பிடித்த வாயால உச்சரிக்காத. இதுவும் எனக்குப் போராட்டம்தான்.”

நாடற்றவர்களின் கடவுச்சீட்டு | `அகதியின் கையில் அகப்பட்ட பணயக் கைதி!’ | பகுதி - 17

``பொத்தடா வாயை. அந்தப் புனிதமான விசயங்களையெல்லாம், உன்னைப்போல துர்நாற்றம் பிடித்த வாயால உச்சரிக்காத. இதுவும் எனக்குப் போராட்டம்தான்.”

Published:Updated:
நாடற்றவர்களின் கடவுச்சீட்டு
``இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும் கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் கருத்துகள் அல்ல!” - ஆசிரியர்.

`அல்பா கம்பவுண்ட்’ அகதிகள் ஆளுக்கொரு திசையில் சிதறி ஓடினார்கள். பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் அவர்களைக் கலைத்துச் சென்று, அவரவர் அறைகளுக்குள் தள்ளிப் பூட்டினார்கள். அடுத்த அறிவிப்பு வெளிவரும்வரைக்கும் யாரும் வெளியில் வரக் கூடாது என்று உத்தியோகத்தர்கள் அழுத்தமான குரலில் கட்டளை போட்டார்கள். அரைவாசி உத்தியோகத்தர்கள், தங்களுக்குள் நுரைத்துக்கொண்டிருந்த அச்சத்தை காண்பித்துவிடக் கூடாது என்பதற்காக, வெளியில் சத்தமான உத்தரவுகளை விளாசி எறிந்தார்கள்.

அகுனா தடுத்துவைக்கப்பட்டிருந்த அறையின் வாசலில் மேலதிக பாதுகாப்பு அதிகாரிகள் குவிந்து நின்றார்கள். அவர்களும் பரபரத்தபடி முண்டியடித்தார்கள். அறையின் பின் ஜன்னல் பகுதியிலும், இரண்டாவது வெளிக்கதவுப் பக்கமாகவும் இரண்டு உத்தியோகத்தர்கள் நின்றுகொண்டிருந்தார்கள்.

இது என்ன புதிய கலவரம்? இது பற்றி எதுவும் சொல்லவே இல்லையே என்று நீங்கள் நெற்றியைச் சுருக்கலாம்.

ஆம்!

அகுனாவைச் சந்திப்பதற்காகக் சென்ற குடிவரவுத்துறை உத்தியோகத்தர்களில் ஒருவரை, கழுத்தோடு மடக்கி இழுத்து பணயக் கைதியாகப் பிடித்துவிட்டான்.

நான் பணிபுரிந்த காலப் பகுதியில் இந்த முகாமில் ஒரேயொரு தடவை நிகழ்ந்த புதிரான சம்பவம் இது.

ரயில் நிலையத்தில்வைத்து பொலீஸாரால் கைதுசெய்யப்பட்டு, முகாமுக்குக் கொண்டுவரப்பட்டு, இரண்டு முகாம் உத்தியோகத்தர்களின் பாதுகாப்புடன், இந்தச் சிறப்பு அறையில் தங்கவைக்கப்பட்டிருந்தபோதும் -

அகுனா தப்பியோடியதற்கான காரணம் உட்பட அவனது பிரச்னைகளைக் கேட்பதற்காக வந்த குடிவரவுத்துறை அமைச்சு அதிகாரிகளில் ஒருவரை, கடும் ஆத்திரத்தில் இழுத்து, தனது நெஞ்சோடு மடக்கிப்பிடித்து வைத்திருக்கிறான்.

தனது அறைக்குள் படுத்திருந்து, வெளியில் கேட்கும் சத்தங்களைக் கேட்டுக்கொண்டிருந்த நீதனுக்கு, அகுனாவுடன் சற்று முன்னர் பேசியபோது, அவன் கடைசியாகச் சொன்ன வசனங்கள், செவியருகில் இரைவதுபோலிருந்தன. ``இப்ப இமிக்ரேஸன் வரப்போகினமாம். வரட்டும், நான் யாரெண்டு காட்டுறன்” – என்று அவனது தடித்த வசனங்கள், மீண்டும் மீண்டும் காதுக்குள் உடைந்து உடைந்து விழுந்தன.

ஆத்திரமும் வலுவும் நிறைந்த அகுனாவின் கைகள், குடிவரவுத்துறை அமைச்சு அதிகாரி லீஸாவின் கழுத்தை இறுக்கிப் பிடித்திருந்தன. லீஸாவை விடுவிப்பதற்கு உடனடியாகப் பாய்ந்து சென்ற அதிகாரிகளை அகுனா எட்டி உதைந்தான். யாராவது மேலதிக சாகசங்களில் ஈடுபட்டால், லீஸாவின் கழுத்தை நெரிக்கப்போவதாக, அழுத்திச் சொன்னான். குதியுயர்ந்த சப்பாத்துடன் அகுனாவின் பிடியில் முன்னும் பின்னுமாக இழுபட்ட லீஸாவுக்கு, கழுத்தருகில் சிவத்துக்கிடந்தது.

அகுனாவின் இரைந்த குரலும், சிவந்த கண்களும், இறுக்கமான பிடியும் அதிகாரிகளுக்குப் பீதியூட்டின.

கடந்த இரண்டு வருடங்களாக முகாமின் இரண்டாம் நிலை குடிவரவுத்துறை அதிகாரியாக சிட்னியிலிருந்து மாற்றலாகி வந்த லீஸா, மெல்போர்ன் முகாமில் தனக்கு இப்படியொரு நிலை வருமென்று எதிர்பார்த்திருக்கவே மாட்டாள். அகுனாவின் பிடியில், அவள் வேள்விக்கு அறுக்கப்போகும் ஆடுபோல திடுக்குற்றுக்கிடந்தாள். அவளின் வெண் சருமத்தில் வியர்வை வழிந்து, அகுனாவின் கைகளில் வடிந்தது. அவளை வெகு நிதானமாகவும் மரியாதையுடனும் தனது கைகளில் மடக்கி வைத்திருந்தான் அகுனா.

நாடற்றவர்களின் கடவுச்சீட்டு
நாடற்றவர்களின் கடவுச்சீட்டு

நொடி நேரத்தில் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில், லீஸாவுடன் சென்ற இன்னொரு குடிவரவுத்துறை அமைச்சு அதிகாரி பதறி எழுந்து ஓடி, அவர் நெற்றியில் அறைக் கதவு இடித்து, வாசலருகில் குப்புற விழுந்தார். காவலுக்கு நின்றுகொண்டிருந்த உத்தியோகத்தர்கள், எஞ்சிய அந்த அதிகாரியை ஒருவாறு காப்பாற்றி, வெளியில் கொண்டுசென்றுவிட்டனர். இந்தப் பதற்றத்தில், லீஸாவை வெகு லாகவமாக – எந்த எதிர்ப்புமின்றி – அகுனா தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிட்டான்.

அதன் பிறகு, வழக்கம்போல,

``ரெஸ்போன்ஸ்…..ரெஸ்போன்ஸ்….கோட் யெல்லோ” - என்று பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் வானொலியில் கூவினார்கள். கட்டுப்பாட்டு அறையிலிருந்தும் அழைப்பு விடுக்கப்பட்டது. மேலதிக உத்தியோகத்தர்கள் ஓடிவந்தார்கள். ஆனால், யாரும் அகுனாவை நெருங்க முடியாத நிலையில், சர்வமும் சிக்கலாகியிருந்தன.

முகாமில் இவ்வாறு பணயக் கைதிகளாக யாராவது பிடிக்கப்பட்டாலோ அல்லது அகதிகள் யாராவது கட்டுக்கு அடங்காமல் சூழ்நிலையைச் சிக்கலாக்கிக்கொண்டாலோ, அவர்களிடம் பேசுவதற்கு அதிகாரிகள் தரப்பிலிருந்து சமாதானப் பேச்சாளர் ஒருவரை அழைத்துவருவது வழக்கம்.

முகாம் பாதுகாப்பு அதிகாரிகளில் ஒருத்தியான கத்தரின்தான் சமாதானப் பேச்சுப் பணிக்கு நியமிக்கப்பட்டவள். அன்றைய தினம், அவள் வேலையில் இல்லை. இப்போது என்ன செய்வது?

அகுனா பிடித்துவைத்திருப்பது முகாம் பாதுகாப்பு அதிகாரியையோ, இன்னொரு அகதியையோ அல்ல. அரசு அதிகாரியை. குடிவரவுத்துறை அமைச்சின் முக்கிய உத்தியோத்தரை. இந்த நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கு பொலீஸை அழைத்தால்கூடப் பரவாயில்லை என்ற பதற்றம்தான் ஒவ்வொருவரிடமும் பீடித்தபடியிருந்தது.

ஆனால், அகதி முகாமுக்குள் பொலீஸ் வருவதாக இருந்தால், அதற்கென விசேட காரணங்கள் தெரிவிக்கப்பட வேண்டும். ஏனென்றால், ஆஸ்திரேலியப் பொலீஸார் எனப்படுகிறவர்கள், ஆஸ்திரேலிய மக்களுக்கானவர்கள் என்கிறது ஆஸ்திரேலியச் சட்டம். முகாமிலிருப்பவர்கள் ஆஸ்திரேலியர்கள் அல்லர். அகதிகளுக்கு ஏதாவதொரு ஆஸ்திரேலிய விசா வழங்கப்படும்வரைக்கும், அவர்கள் வெளிநாட்டவர்களே ஆவர். ஆகவே, அகதிகள் முகாமில் செய்யும் திருகுதாளங்களுக்கு, பொலீஸார் வந்தாலும், எவ்வாறு நடவடிக்கை எடுப்பது என்பது சிக்கலான விவகாரம்.

அன்றைய தினம் முகாமுக்குப் பொறுப்பாக இருந்த பாதுகாப்பு அதிகாரி ஜேம்ஸ், ஓரளவுக்கு அகுனாவுடன் பேசிப் பார்ப்பதற்கு முயன்றான்.

பொலீஸாரை அழைக்காமலேயே நிலைமையை சுமுகமாகத் தீர்க்க முடியுமா என்று துணிச்சலாக சில அடிகள் முன்வைத்தான்.

அறையின் வாசலில் நின்றுகொண்டிருந்த பாதுகாப்பு உத்தியோகத்தர்களை வெளியில் போகச் சொன்னான். ஜன்னலுக்கு வெளியில் நின்றுகொண்டிருந்த பாதுகாப்பு உத்தியோகத்தரிடம் வீடியோ கேமராவைக் கொடுத்து, உள்ளே நடப்பவற்றை அகுனாவுக்குத் தெரியாதவண்ணம் ரகசியமாகப் பதிவு செய்யச் சொன்னான். ஒரு தேநீரை ஊற்றிக்கொண்டு அறைக்குள் போனான்.

லீஸாவை ஒரு கதிரையில் அமர்த்தி, அவளின் கழுத்தை வளைத்துப் பிடித்தபடி நின்றான் அகுனா.

`அகுனா, நான் உன்னோடு சுமுகமாகப் பேச வந்திருக்கிறேன். முதலில் இந்தத் தேநீரைக் குடி.”

அகுனாவின் மூச்சில் உஷ்ணம் பெருக்கெடுத்தது. சிவந்த கண்களில் ரத்த நரம்புகள் கிளைவிரித்துத் தெரிந்தன. யாராவது வந்து, எதையாவது பேசி, அது தனக்குப் பொல்லாத காலமாகிவிடுமோ என்று லீஸா பதறினாள்.

``எவ்வளவு நாளைக்கு என்னை ஏமாற்றப்போகிறாய், இமிக்ரேஸனிடம் கூலிக்கு வேலை செய்யும் நாயே. யாரைப் பேய்க்காட்டுவதற்காக இங்கே வந்திருக்கிறாய்?”

வேகமாக வந்த மூச்சில், அகுனாவின் சொற்கள் சிதறி விழுந்தன. ஜேம்ஸைக் கண்டதும் அவன் அதிகம் கோபமடைந்தவனாகத் தெரிந்தான்.

அமைதியின் வடிவமாக நின்றபடி, அகுனாவின் வசைகளைக் கேட்டான் ஜேம்ஸ். அகுனாவின் கண்களையே பார்த்தான்.

நாடற்றவர்களின் கடவுச்சீட்டு
நாடற்றவர்களின் கடவுச்சீட்டு

``இங்கு நடைபெறுவது எனக்கும் இமிக்ரேஸனுக்கும் இடையிலான பிரச்னை. நீ தேவையில்லாமல் உள்ளுக்குள்ள வர வேண்டாம். என்னுடைய கையில் இருப்பவளுக்கு உன்னால ஏதாவது பிரச்னை வந்தால், அதற்கு நான் பொறுப்பில்லை. நான் எல்லா நேரமும் ஒரே மாதிரி இருக்க மாட்டன். உனக்குத் தெரியும் ஜேம்ஸ். கிட்ட வராத.”

அகுனாவின் பேச்சில் தன்மீது கட்டுப்பாடு இல்லாத அச்சம் தெரிந்தது. அது இப்போதைய நிலைமைக்குச் சற்று சாதகமானதுதான் என்று ஜேம்ஸ் உணர்ந்துகொண்டான்.

``அகுனா, உனது இந்த நடத்தையால் நீ என்ன சாதித்துவிடலாம் என்று நினைக்கிறாய்... இப்படியே எவ்வளவு நேரத்துக்கு இந்த அதிகாரியைப் பிடித்துவைத்திருக்கப் போகிறாய். நீ படித்தவன் அல்லவா... இந்த முகாமிலேயே புத்தியுடையவன் அல்லவா... ஒரு தேசத்தின் போராட்ட இயக்கத்துக்காக அரசியல் வேலை செய்தவன் இல்லையா?”

``பொத்தடா வாயை. அந்தப் புனிதமான விசயங்களையெல்லாம், உன்னைப்போல துர்நாற்றம்பிடித்த வாயால உச்சரிக்காத. இதுவும் எனக்குப் போராட்டம்தான்.”

லீஸாவின் கழுத்து அவள் வியர்வையும், அகுனாவின் வியர்வையும் சேர்ந்து பிசுபிசுத்தன. அகுனா உரத்துக் கத்துகின்ற ஒவ்வொரு வார்த்தையும், லீஸாவுக்குள் பீதியாக இறங்கியது. அடுத்த கணம், கழுத்தை இறுக்கிவிடுவானோ அல்லது சுவரோடு தனது தலையை மோதிவிடுவானோ என்று அவளுக்கு இதயம் கழுத்துவரை ஏறி ஏறி இறங்குவதுபோலிருந்தது.

``எனது அண்ணன் செத்த செய்தியை இவ்வளவு காலமும் மறைத்துவைத்தீர்களே நாய்களே... நீயாவது சொல்லியிருக்கலாம்தானே... எத்தனை தடவை, நீ சிகரெட் பிடிக்கும்போதெல்லாம் உனக்குத் தேநீர் ஊற்றித் தந்திருப்பேன்... உன்னை மரியாதைக்குரிய உத்தியோகத்தனாய் பார்த்திருப்பேன்... கடைசியில் நீயும் அதிகாரத்தில் உள்ளவனை நக்கும் பேர்வழியென்று காண்பித்துவிட்டாய்தானே ஜேம்ஸ்?”

அகுனா கேட்ட கேள்விகள் அனைத்தும், முகத்திலேயே சவுக்கை விட்டெறிந்ததுபோல ஜேம்ஸின் மீது வந்து விழுந்தன. அவன் கேட்டதில் எந்தத் தவறும் இல்லை என்பது ஜேம்ஸின் மனச்சாட்சிக்குத் தெரியும். ஆனால், மனச்சாட்சியை கழற்றிவைத்துவிட்டு, சீருடையை அணிந்து வேலை செய்கிற இடம்தான் இந்த முகாம். ஜேம்ஸ் மாத்திரமல்ல. பாதுகாப்பு அதிகாரிகள், குடிவரவுத்துறை அதிகாரிகள் என்று அனைவருக்கும் இங்கு இதுதான் நிலைமை.

தனது அண்ணன் பற்றிச் சொல்லும்போது அகுனாவின் குரல் உயர்ந்து, கைகள் நடுங்கின. அவனுக்குள் ஆழக்கரைந்து கிடந்த அண்ணனது நினைவுகள் கண்களில் கொப்பளித்தன. அவன் நிலைதடுமாறிக் கத்தினான்.

அந்தக் கோபத்தில் எதையாவது செய்துவிடுவானோ என்பதை ஜேம்ஸும் லீஸாவும் பெரும்பீதியாக உணர்ந்துகொண்டாலும், இயன்றளவு அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல் நின்றுகொண்டார்கள்.

அகுனாவின் சத்தத்தைக் கேட்டு, அறைக்குள் நுழைய முற்பட்ட பாதுகாப்பு உத்தியோகத்தர்களை, `வர வேண்டாம்’ என்று ஜேம்ஸ் சைகை காண்பித்தான்.

இதற்கு மேலும் இந்த அறைக்குள் நின்றுகொண்டிருந்தால், நிலைமை மோசமடையலாம் என்று உணர்ந்து, ஜேம்ஸ் வெளியில் போவதற்குத் திரும்பினான். அதற்கு முன்னர் -

``சரி அகுனா, உன் அண்ணன் இறந்த செய்தியை நாங்கள் உனக்குச் சொல்லவில்லைதான். மன்னித்துக்கொள்.

உனது மனநிலை கருதித்தான் அந்த முடிவை இமிக்ரேஸன் எடுத்தது. வேண்டுமென்றே செய்யவில்லை. கடைசியாக என்னை ஒரு தடவை நம்பு. அதற்கு இப்போது நான் என்ன செய்ய வேண்டும்?”

ஒரே மூச்சில் கேட்டு முடித்தான்.

தனது மனநிலை குறித்து ஜேம்ஸ் சொன்னது, அவனுக்குள் ஒரு குற்ற உணர்வாகப் பாய்ந்தது. அதை அவனால் நிராகரிக்க முடியவில்லை. புத்திபேதலித்தவன்போல செயற்பட்டிருந்த அந்த நேரத்திலும்,

ஜேம்ஸ் சொன்னதில் ஒரு நியாயம் இருந்ததைப்போல அகுனா உணர்ந்தான்.

அகுனா மௌனமாக நின்றுகொண்டிருந்த அந்த நேரத்தில, அவனிடமிருந்து எந்த பதிலையும் எதிர்பாராதவனாக, அங்கிருந்து வெளியேறினான் ஜேம்ஸ். அகுனாவுக்கு அது மேலும் ஓர் இழப்பாக இதயத்தில் மோதியது. திடீரென்று நீதனைக் கட்டியணைத்து அழ வேண்டும்போலிருந்தது அகுனாவுக்கு.

``நீதன்…”

குழறி அழுதான்.

தேம்பித் தேம்பி அழுதான்.

சத்தமாக அழுதான்.

அவன் அழுத சத்தத்தில் லீஸா மிரண்டாள். அவளால் அவனைத் திரும்பிப் பார்க்க முடியவில்லை.

``வாய்விட்டு அழுதுவிடு அகுனா. மனதைத் தேற்றுவதற்கு அழுகை மிகப்பெரிய மருந்து. நான் வேண்டுமானால் அணைத்துக்கொள்கிறேன்.”

லீஸா சற்றுத் திரும்பவும், அகுனா தன் பிடியை விடுவித்துக்கொண்டு, அருகிலிருந்து சோபாவில் பக்கவாட்டாக விழுந்தான்.

லீஸா அவனை இயன்றளவு தாங்கியபபடி அவனோடு சோபாவில் அமர்ந்தாள்.

தூரத்தில் இதைக் கண்ட பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் உள்ளே ஓடி வர –

``குளிர் நீர் மாத்திரம் கொண்டு வாருங்கள் ப்ளீஸ்” – என்றாள் லீஸா.

அகுனாவின் வாய் வழியாக நுரை தள்ளியது. சிறிய நடுக்கம் அவன் தலையில் தெரிந்தது.

மெதுவாக எழுந்த லீஸா மருத்துவர்களை உடனடியாக அழைக்கச் சொன்னாள்.

``ரெஸ்போன்ஸ் ரெஸ்போன்ஸ் கோட் புளூ...”

வானொலிச் சத்தங்கள் முகாமெங்கும் அலறி அடங்குவதற்குள், முகாம் வைத்தியர், தாதியொருவருடனும் தள்ளுவண்டியுடனும் அறைக்குள் ஓடிவந்தார்.

அதற்குள், லீஸாவும் பாதுகாப்பு உத்தியோகத்தர்களும் சேர்ந்து அகுனாவை, பக்கவாட்டாகப் புரட்டி, ஒரு காலை மடக்கி, கையை நீட்டிப் போட்டிருந்தார்கள்.

மருத்துவர் வந்த பிறகும் தலையாட்டத்துடன் நடுங்கியபடி கிடந்த அகுனா, ஒருவாறு நினைவு திரும்பினான். கனவு கலைந்து எல்லோரையும் பாதி மூடிய சிவந்த கண்களால் பார்த்தான்.

மெல்லிய குரலில்

``நீதன்...” என்றான்.

(தொடரும்)