Published:Updated:

''அகதிகள் சிறையில் அடைக்கப்படவில்லை; சீமான் குழப்பம் செய்கிறார்!'' - சொல்கிறார் இராஜீவ் காந்தி

சீமான் - இராஜீவ் காந்தி

''உரிய ஆவணங்கள் இன்றி தமிழகம் வந்து சேர்ந்தவர்களை, சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது உண்மை... ஆனால், ஓரிரு மணி நேரத்திலேயே தமிழக அரசு இவ்விஷயத்தில் தலையிட்டு, நல்லதொரு தீர்வை ஏற்படுத்திவிட்டது'' என்கிறார் இராஜீவ் காந்தி.

''அகதிகள் சிறையில் அடைக்கப்படவில்லை; சீமான் குழப்பம் செய்கிறார்!'' - சொல்கிறார் இராஜீவ் காந்தி

''உரிய ஆவணங்கள் இன்றி தமிழகம் வந்து சேர்ந்தவர்களை, சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது உண்மை... ஆனால், ஓரிரு மணி நேரத்திலேயே தமிழக அரசு இவ்விஷயத்தில் தலையிட்டு, நல்லதொரு தீர்வை ஏற்படுத்திவிட்டது'' என்கிறார் இராஜீவ் காந்தி.

Published:Updated:
சீமான் - இராஜீவ் காந்தி

உச்சகட்ட பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்துவரும் இலங்கையிலிருந்து மக்கள் கூட்டம் கூட்டமாக வெளியேறிவருகின்றனர். விடுதலைப் புலிகளுக்கும், இலங்கை ராணுவத்துக்கும் இடையே பல பத்தாண்டுகளாக நீடித்துவந்த போர்ச்சூழலுக்கும் பதற்றநிலைக்கும் 2009-ம் ஆண்டு இறுதிப்போர் முற்றுப்புள்ளிவைத்தது. ஆனாலும் இலங்கையில் வாழ்ந்துவரும் ஈழத் தமிழர்களின் வாழ்வாதாரம் முள்கம்பிகளால் வேலியிடப்பட்ட முகாம்களுக்குள்ளேயே முடங்கிப்போய்விட்டது!

இந்த நிலையில், நாட்டை ஆண்டுவரும் சிங்களப் பேரினவாத அரசுகளின் முதிர்ச்சியற்ற அரசியல் அணுகுமுறைக் குளறுபடிகளால் இன்று அந்நாடு வரலாறு காணாத பொருளாதார வீழ்ச்சியைச் சந்தித்துவருகிறது. அத்தியாவசிய உணவுப்பொருள்களின் விலை தாறுமாறாக உயர்ந்துவிட, வாழ வழி தெரியாமல் மக்கள் நாட்டைவிட்டு இடம்பெயரத் தொடங்கிவிட்டனர். சரிந்துவரும் பொருளாதார வீழ்ச்சியைத் தடுத்து நிறுத்த வழி தெரியாமல் திணறிவருகிறது இலங்கை அரசு.

அகதிகள்
அகதிகள்

இதையடுத்து, ஈழத்தைச் சேர்ந்த தமிழ்க் குடும்பங்கள், கடல் மார்க்கமாக தமிழகம் வரும் எண்ணிக்கையும் அதிகரித்துவருகிறது. இந்த நிலையில், உயிர் பிழைக்க தஞ்சம் தேடிவரும் இந்த அகதிகளை பாஸ்போர்ட் சட்ட நடைமுறைகளின் அடிப்படையில் சிறையில் அடைக்குமாறு ராமேஸ்வரம் நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது பேரிடியாக இறங்கியிருக்கிறது.

அண்மையில், ஈழத்திலிருந்து தப்பிப்பிழைத்து தமிழக கடற்கரையில் கால் பதித்த அகதிகள் சிலர், நீதிமன்ற உத்தரவுப்படி சிறையிலும் அடைக்கப்பட்டனர். பெண்கள் உள்ளிட்ட அகதிகளை மனிதாபிமானமற்ற முறையில் சிறையில் அடைத்த விவகாரம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து நாம் தமிழர் கட்சியின் சீமான் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், 'அடைக்கலம் தேடிவரும் தமிழர்கள்மீது வழக்கு பதிந்து சிறையிலடைப்பது கொடுமை! அதிலும் பெற்றோர்களையும் குழந்தைகளையும் பிரித்து சிறையிலும் முகாம்களிலும் அடைப்பது கடும் கண்டனத்துக்குரியது' என்று கண்டன அறிக்கை வெளியிட்டனர்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்த விவகாரம் குறித்துப் பேசுகிற பத்திரிகையாளர் ஷ்யாம், ''போர்க் காரணங்கள் என்றாலும், இது போன்ற பொருளாதார வீழ்ச்சி சூழ்நிலையாலும் தன் தாய்நாட்டைவிட்டு வெளியேறி தஞ்சம் தேடி வருபவர்களை அகதிகளாகத்தான் பார்க்க வேண்டும். இப்போது உக்ரைனில் போர் நடைபெற்றுவருகிறது. எனவே, அந்நாட்டிலிருந்து வெளியேறி, பக்கத்து நாடுகளில் தஞ்சமடைபவர்களை அகதிகளாகக் கணக்கில் எடுத்துக்கொண்டுதான் அவர்களுக்கான உதவிகளை அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளும் செய்துவருகின்றன்.

எனவே, பொருளாதார வீழ்ச்சியினால் பாதிக்கப்பட்டு புலம்பெயர்ந்து வருபவர்களையும்கூட அகதிகளாக கணக்கில் எடுத்துக்கொண்டு அவர்களுக்கான உதவிகளைச் செய்வதுதான் நமது கடமையும்கூட. மாறாக அவர்களைச் சிறையில் அடைப்பதெல்லாம் தவறு என்றுதான் நான் கருதுகிறேன். ஏனெனில், அகதிகளுக்கான சர்வதேச சட்ட நடைமுறைகளின்படி உரிய சோதனைகளை செய்து முடித்துத்தான் அகதிகளாக ஏற்றுக்கொள்கிறோம். இன்னும் சொல்லப்போனால், இலங்கையிலிருந்து அகதிகளாக இங்கே வருபவர்கள் ஈழத் தமிழர்கள்தான்... அவர்கள் அந்நியர்கள் கிடையாது.

ஷ்யாம்
ஷ்யாம்

1983-காலகட்டங்களில் போர்ச்சூழல் காரணமாக இலங்கையிலிருந்து தமிழகத்தை நோக்கி வந்த அகதிகளை, இங்கே குடியமர்த்துவதற்காக 'மறுவாழ்வுத்துறை' என்ற ஒரு சிறப்புத்துறையை ஏற்படுத்தி, அதற்கென அதிகாரிகளையும் நியமித்திருந்தனர். அகதிகளை வழிநடத்துவதும், அவர்களை குடியமர்த்துவதற்கான பணிகளைச் செய்துகொடுப்பதும்தான் இவர்களின் பணி.

இப்போது மறுபடியும் இலங்கையிலிருந்து தமிழகத்தை நோக்கி வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவரும் சூழலில், மேற்கண்ட துறையினரது பணியை முடுக்கிவிடும் வேலையை தமிழக அரசு செய்ய வேண்டும்!'' என்றார் கோரிக்கையாக.

இதையடுத்து தி.மு.க செய்தித் தொடர்பு இணைச் செயலாளர் இராஜீவ் காந்தியிடம் இந்த விவகாரம் குறித்துப் பேசியபோது, ''இலங்கையில் நிலவிவரும் கடுமையான பொருளாதார நெருக்கடிகள் காரணமாக, அங்கிருந்த சில குடும்பங்கள் இந்தியாவில் அடைக்கலம் தேடி வந்திருக்கின்றன. இப்படிக் கடந்த சில தினங்களுக்கு முன்பு முதன்முதலாக தமிழகம் வந்திருந்த மூன்று பேரிடம், செக்‌ஷன் 13-ன்படி உரிய ஆவணங்கள் இல்லை என்ற காரணத்தால் காவல்துறை கைதுசெய்து ராமேஸ்வரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியது. அப்போது நடைபெற்ற விசாரணையில்தான், 'இவர்களை சிறையில் அடைக்கலாம்' என மாஜிஸ்ட்ரேட் உத்தரவிட்டிருந்தார்.

ஆனால், இந்த விவகாரம் தமிழக அரசின் கவனத்துக்கு வந்தவுடனேயே, 'பொருளாதார நெருக்கடிகளால் பாதிக்கப்பட்டு, அடைக்கலம் தேடி நம் நாட்டுக்குள் வருபவர்களை நாம் அகதிகளாகத்தான் கருத வேண்டும். எனவே சம்பந்தப்பட்டவர்களை சிறையில் அடைக்க வேண்டாம். அவர்களைத் தற்காலிக முகாம்களில் ஒப்படையுங்கள்' என்று மாஜிஸ்ட்ரேட்டுக்குப் பரிந்துரை செய்து, சம்பந்தப்பட்ட நபர்களுக்குப் பிணையும் வாங்கிவிட்டது. எனவே இவர்கள் அனைவரும் இடைத்தங்கல் முகாம்களில்தான் தங்க வைக்கப்பட்டிருக்கின்றனரே தவிர... யாரும் சிறையில் அடைக்கப்படவில்லை.

இராஜீவ் காந்தி
இராஜீவ் காந்தி

ஆனால், சீமான் போன்றவர்கள் இந்த உண்மைகளையெல்லாம் முழுமையாக அறிந்துகொள்ளாமல், அவசரப்பட்டு அறிக்கை வெளியிட்டு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளனர். நீதிமன்றம் உத்தரவிட்டது உண்மை... ஆனால், ஓரிரு மணி நேரத்திலேயே தமிழக அரசு இவ்விஷயத்தில் தலையிட்டு, நல்லதொரு தீர்வை ஏற்படுத்திவிட்டது. நம் முதல்வரும்கூட சட்டமன்றத்திலேயே, 'இலங்கை மக்களுக்கு நாங்கள் எப்போதும் ஆதரவாக இருப்போம்' என்று சொல்லி இது குறித்த தமிழக அரசின் நிலைப்பாட்டையும் தெளிவுபடுத்தியுள்ளார். மேலும் இப்படி இலங்கையிலிருந்து நம் நாட்டுக்குத் தஞ்சம் தேடிவருபவர்களை பாதுகாப்பது குறித்த ஆலோசனைக்காக மத்திய அரசின் கவனத்துக்கும் இந்தப் பிரச்னையை தமிழக அரசு கொண்டுசென்றுள்ளது. ஆனால், வழக்கம்போல் மத்திய அரசிடமிருந்து இதுவரை எந்த பதிலும் வரவில்லை!'' என்கிறார் விளக்கமாக.