Published:Updated:

`முதல்வர் ஒப்புதலுடன் வரும்!’- பா.ஜ.க-வின் திருக்குறள் கோரிக்கைக்கு ராஜேந்திர பாலாஜி பதில்

`பிரதமர் மோடி திருக்குறளை உலக அரங்கில் அனைத்துத் தரப்பு மக்களிடமும் எடுத்துச் சென்று பெருமை சேர்த்து வருகிறார்’ - தமிழக பா.ஜ.க -வின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகப் பிரிவு மாநிலத் தலைவர் நிர்மல் குமார்.

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

தமிழக அரசியலில் கடந்த ஒருவாரத்துக்கும் மேலாக ட்ரெண்டில் இருப்பது திருவள்ளுவர் விவகாரம்தான். திருவள்ளுவருக்குக் காவி நிறம் அளித்து பா.ஜ.க வெளியிட்ட புகைப்படம் ஏற்படுத்திய சர்ச்சையை நன்கு அறிவோம். இந்நிலையில் தமிழக பா.ஜ.க -வின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகப் பிரிவு மாநில தலைவர் நிர்மல் குமாரின் திருக்குறள் தொடர்பாக கோரிக்கையை தமிழக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஏற்பதாக தெரிவித்துள்ளார்.

பா.ஜ.க வெளியிட்ட திருவள்ளுவர் படம்
பா.ஜ.க வெளியிட்ட திருவள்ளுவர் படம்

அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு நிர்மல் குமார் எழுதிய கடிதத்தில், ``தி.மு.க கடந்த 60 வருடங்களுக்கு மேலாக திருவள்ளுவரின் வரலாற்றை மறைத்து தமிழர்களுக்கும் இந்துக்களுக்கும் பெரும் துரோகம் இழைத்துள்ளனர். தமிழையும் திருக்குறளையும் அரசியலுக்காக மட்டுமே பயன்படுத்தினார்களே தவிர மக்களிடம் கொண்டுபோய் சேர்க்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

பிரதமர் மோடி திருக்குறளை உலக அரங்கில் அனைத்துத் தரப்பு மக்களிடமும் எடுத்துச் சென்று பெருமை சேர்த்து வருகிறார். திருக்குறளை மக்களிடம் எளிமையாக கொண்டு சேர்க்க பல முயற்சிகளை நாங்கள் எடுத்து வருகிறோம். அதன் தொடர்ச்சியாக ஆவின் பால் பைகளில் திருக்குறளை அச்சிட்டு வழங்குதல் மூலம் ஒவ்வொரு இல்லங்களிலும் திருக்குறளை எளிமையாக கொண்டு சேர்க்க முடியும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்தக் கடிதத்தை ட்விட்டரில் பதிவேற்றி அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் கவனத்துக்கும் கொண்டு செல்லப்பட்டது. இந்த ட்விட்டர் பதிவுக்குப் பதிலளித்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, ``மிக விரைவில் தமிழக முதல்வரின் ஒப்புதலை பெற்று ஆவின் பால் பாக்கெட்களில் திருக்குறள் அச்சிட்டு விநியோகிக்கப்படும்” என்றார்.