பொருளாதார நெருக்கடியின் எதிர்விளைவாய் இலங்கையில் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்கள் நாளுக்கு நாள் வலுப்பெற்று வருகின்றன. போர்ச்சூழல்களில் அரசாங்கத்தால் அநீதிக்கு உள்ளாக்கப்பட்ட இலங்கைப் பத்திரிகையாளர்களின் பெயர்களைத் தாங்கிய பதாகைகளுடன் நீதி வேண்டி தெருவில் முழங்கிக் கொண்டிருக்கின்றனர் அந்நாட்டு மக்கள். கடந்த பத்தாண்டுகளில் இலங்கைப் பத்திரிகையாளர்களின் வாழ்க்கை என்பது ரத்தத்தாலும் காயங்களாலும் எழுதப்பட்டிருக்கிறது.

பத்திரிகையாளர்கள் அரசுக்கு எதிரானவர்களாகச் சித்திரிக்கப்பட்டு, கொல்லப்பட்டிருக்கின்றனர். மயில்வாகனம் நிமலராஜன், பிரகீத் எக்னலிகொட, சிவராம் தராக்கி, கெய்த் நோயார், லசந்த விக்கிரமதுங்க, போடல ஜெயந்தா என அநீதி இழைக்கப்பட்ட பத்திரிகையாளர்களின் பட்டியல் பெரிது. கொழும்புவின் அரசு அலுவலகமான ஜனாதிபதி செயலகத்தின் அருகில் இருக்கும் கோல்ஃபேஸ் (Galle Face) மாகாணத்தில் இந்தப் பத்திரிகையாளர்களின் படங்கள் நிறைந்த பதாகைகளைத்தான் தற்போது போராட்ட சுடர்களாக மக்கள் ஏந்தியிருக்கின்றனர். மேலும், கல்லி பேஸ் என்ற அம்மாகாணத்தின் பெயரை ‘கோகோதாகாமா' என்று போராட்டக்காரர்கள் மாற்றியிருக்கின்றனர். ‘கிராமத்தைத் தேடி போ கோதா' என்பதே இதன் பொருள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALS2000 முதல் 2010 வரையிலான ஆண்டுகளில் இலங்கை வீதிகளில் உலா வரும் வெள்ளை வேன்களும் திடீரென தொலைந்து போகும் பத்திரிகையாளர்களும் மிக எளிதாகக் கடந்துபோகக் கூடிய ஒரு நிகழ்வுகளாக இருந்தன. பெயர்களில் வரும் செய்திகளும் எதார்த்தமாகக் கடந்து போகக் கூடிய ஒன்றாகவே இருந்தது. ராஜபக்சே ஆட்சி செய்துவந்த அந்தப் பத்தாண்டுகள், அரசுக்கு எதிராகக் குரல் கொடுக்கும் பத்திரிகையாளர்களின் நிலை என்ன என்பதை அறியாமல் செய்துவிடும் அளவுக்குக் கொண்டுசென்றது.
தராக்கி என்ற புனைப்பெயருடன் எழுதிவந்த தமிழ் ஊடகவியலாளர் சிவராம், அரசுக்கு எதிராக எழுதிய தன்னுடைய ஊடக நண்பர் நடேசன் கொலை செய்யப்பட்டபோது, அரசின் அடுத்த குறி தானாக இருக்கலாம் என்று நண்பர்கள் பலர் தன்னை எச்சரித்ததாகக் காணொலி ஒன்றில் பதிவுசெய்திருக்கிறார். அவர் பதிவிட்டதைப் போல, 2005 ஏப்ரல் 28 அன்று வெள்ளை வேனில் கடத்தப்பட்ட சிவராம் அடுத்த நாள் கொலையுண்ட நிலையில் சடலமாகக் கிடைக்கப் பெற்றார்.

இதே போல் கொல்லப்பட்ட மற்றொரு பத்திரிகையாளர் லசந்த விக்கிரமதுங்க. தான் கொல்லப்படப் போகிறோம் என்பதை அறிந்த லசந்த, தனது இறுதி தலையங்கத்தைத் தன் இறப்பிற்குப் பிறகு பிரசுரிக்கச் சொல்லி தனது ஊடக ஊழியர்களிடம் ஒப்படைத்துச் சென்றுள்ளார். 2,500 வார்த்தைகளைக் கொண்ட அந்தத் தலையங்கத்தை அவர் தனது அலுவலகக் கணினியில் 'ஃபைனல் எட்' (Final Ed) எனக் குறிக்கப்பட்ட கோப்பில் சேமித்து வைத்திருந்திருக்கிறார். அந்த 2,500 வார்த்தை தலையங்கத்தை உலகின் முன்னணிப் பத்திரிகைகள் அனைத்தும் பிரசுரித்தன. “எனது படுகொலை சுதந்திரத்தின் தோல்வியாகக் கருதப்படாது, உயிர் பிழைப்பவர்களுக்கு ஒரு உத்வேகமாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்” என்று அந்தத் தலையங்கத்தை முடித்திருந்தார் லசந்த விக்கிரமதுங்க.
போடல ஜெயந்தா, கெய்த் நோயார் போன்றோர் அடையாளம் தெரியாத நபர்களால் கடத்தப்பட்டு கடும் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டனர். 2010-ம் ஆண்டு ஜனவரி 24, ஜனாதிபதி தேர்தலுக்கு இரண்டு நாள்களுக்கு முன்னர் காணாமல் போன கார்ட்டூனிஸ்ட் பிரகீத் எக்னலிகொடவின் நிலை என்னவென்று இன்றுவரை தெரியவில்லை.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
அரசின் அநீதிக்கு எதிராகக் குரல் கொடுத்து தங்கள் குரல் வளைகள் நெறிக்கப்பட்ட நிலையிலும் இறுதிவரை போராடி வந்த கடந்தகால பத்திரிகையாளர்களே இந்தப் போராட்டச் சூழலில் மக்களின் நம்பிக்கை குரல்களாக அடையாளம் காணப்பட்டு இருக்கின்றனர். இந்த நம்பிக்கையின் வெளிப்பாடாகவே அவர்களின் படங்கள் ஏந்திய பதாகைகள் போராட்டக் களங்களில் காணப்படுகின்றன.
போராட்டக் களத்திலிருந்து படங்களைப் பகிர்ந்த, இலங்கையின் கொழும்பு மாகாணத்தில் சட்டம் மற்றும் சமூகம் அறக்கட்டளையில் பணியாற்றும் ஆய்வாளர் சகுணா கமேஜ் பேசும்போது, “அரசுக்கு எதிரான குரல்கள் 2005 முதலே ஒலிக்கத் தொடங்கிவிட்டன. தற்போதைய பொருளாதார நெருக்கடி அதனை ஒற்றைக் குரலாக நிற்கச் செய்யாமல் ஒருங்கிணைந்த பெரும் குரலாக ஒலிக்கச் செய்திருக்கிறது. கடந்த கால எதிர்ப்புகள் தேசியப் பாதுகாப்பு, தேசிய ஒருமைப்பாடு போன்ற காரணிகளால் நியாயப்படுத்தப்பட்டு வந்த சூழலில் அரசையே இயக்க முடியாத இந்த நெருக்கடி நிலை அநியாயங்களுக்கு இடமளிக்கமுடியாத ஒரு சூழலை ஏற்படுத்தியிருக்கிறது. அநியாயங்களை நம்பி தவறுகளைப் போற்றிவந்த மக்கள் தற்போது சமூகத்தின் மனநிலை மாற்றத்திற்கான ஒரு அடியை எடுத்து வைத்துள்ளனர். மக்களின் இந்தக் கூட்டு எதிர்ப்பு முறை ஆக்கப்பூர்வமான ஒரு விஷயமாகவே பார்க்கப்பட வேண்டும்” என்றார்.
பேனா பிடித்த கைகளை எதிர்த்து கத்திகளையும் துப்பாக்கிகளையும் பிடித்த அரசு, தற்போது அப்பேனாவின் உரிமையாளர்கள் படங்களை ஏந்திவரும் பதாகைகளுக்கு என்ன பதில் அளிக்கப் போகிறது?