Published:Updated:

`அன்றைக்கு மட்டுமல்ல; என்றென்றைக்கும் அம்பேத்கர் ஆச்சர்யமே!' - பகுதி 4

அம்பேத்கர்
News
அம்பேத்கர்

அம்பேத்கரின் 65-வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி கடந்த 6-ம் தேதி, `என் சமூகத்துக்காக இன்னும் விழித்துக் கொண்டிருக்கிறேன்!' என்ற தலைப்பில் சிறப்புக் கட்டுரை ஒன்றை வெளியிட்டிருந்தோம். அதன் கடைசி பகுதி இது.

மதத் தலைவர்கள், சாதித் தலைவர்கள் உள்ளிட்டோர் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும்போது, அவர்களின் உயிர் காக்க, உடல் அவயங்கள் தானம் பெற... கோத்திரப் பெருமை பார்க்கமுடியாது.

குல பாரம்பரியம் பார்த்தால், சிறுநீரகம் தானம் பெறமுடியாது.

மதம் பார்த்து கண்தானம் வாங்கமுடியாது.

சாதி பார்த்து ரத்ததானம் பெறமுடியாது.

உயிரா, சாதியா, மதமா என்கிற நிலை வரும்போது எப்பேற்பட்டவராக இருந்தாலும் சாதி, மதம், குலம், கோத்திரத்தைத்தான் முதலில் தூக்கி எறிவார்கள்.

பாபா சாகேப் அம்பேத்கர்
பாபா சாகேப் அம்பேத்கர்

அறிவியல் என்பது, ஆதிக்கச் சாதி, மத கட்டமைப்புக்கு அப்பாற்பட்டது. அதைத்தான் அனைவருக்கும் உணர்த்த படாதபாடுபட்டார் அம்பேத்கர். ஆனால், சொந்த இனத்தைச் சேர்ந்தவர்களே, அக்காலத்தில் இதை முழுமையாக உள்வாங்கிக் கொள்ளாமல், ஆதிக்க சக்திகளிடம் தொடர்ந்து அடிமைப்பட்டுக் கிடப்பதற்குத் தயாராக இருந்ததுதான், அம்பேத்கருக்குள் ஆறாத ரணத்தை ஏற்படுத்தியது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

``நான் மனக் கலக்கத்துடனும் கவலையுடனும் இருப்பதற்கான காரணம், உனக்கோ உன்போன்றவர்களுக்கோ தெரியாது. என் வாழ்வின் குறிக்கோளை நிறைவேற்ற முடியவில்லையே என்ற கவலை என் உள்ளத்தை குடைந்து கொண்டிருக்கிறது. இதுதான் என் முதல் கவலை. அரசியல் அதிகாரத்தைப் பெறுவதில் மற்ற வகுப்பினருக்குச் சமமாக என் வகுப்பு மக்களும் ஆளும்வகுப்பாக என் வாழ்நாள் காலத்திலேயே ஆக்கப்பட வேண்டும் என்று பாடுபட்டேன். ஆனால், இப்போது நான் கிட்டத்தட்ட செயல் இழந்தவனாகிவிட்டேன். நோய், என்னைப் படுக்கையில் கிடத்திவிட்டது. என்னால் விளைந்த பயன்களைப் படித்த சிறுகூட்டம், நன்றாக அனுபவித்துக் கொண்டிருக்கிறது. இவர்கள் தங்களுடைய வஞ்சகமான செயல்கள் மூலம் எதற்கும் பயன்படாதவர்கள் என்பதைக் காண்பித்துக் கொண்டு இருக்கின்றனர்.

அம்பேத்கர்
அம்பேத்கர்

தாம் பிறந்த தாழ்த்தப்பட்ட நசுக்கப்பட்ட மக்களிடம் இவர்களுக்கு எள்ளளவு அன்பும் இல்லை. படித்தவர்கள் பற்றிய என் எதிர்பார்ப்புகள் தவிடு பொடியாகிவிட்டன. தங்கள் சொந்த ஆதாயத்தை மட்டுமே குறியாகக்கொண்டு, தங்களுக்கு மட்டுமே என்று வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களில் ஒருவர்கூட சமூகப் பணி செய்வதற்குத் தயாராக இல்லை. அவர்களுடைய அழிவுப் பாதையில் அவர்கள் நடந்து கொண்டிருக்கிறார்கள்.

எழுத்தறிவின்றி, பொருளாதார நிலையில் எந்த ஒரு மேம்பாடுமின்றி பலவகையான துன்பங்களைத் தாங்கிக்கொண்டு கிராமப்புறங்களில் பெரும் எண்ணிக்கையில் வாழ்கின்ற மக்களுக்காக மட்டுமே இனி உழைத்திட விரும்புகின்றேன். அதேசமயம், என் வாழ்நாள் சுருங்கி வருவதையும் உணருகிறேன்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

என் காலத்திலேயே தாழ்த்தப்பட்ட வகுப்பில் இருந்து எவரேனும் ஒருவர் முன்வந்து இயக்கத்தை நடத்துகின்ற மிகவும் சுமையான பொறுப்பை ஏற்றுக்கொள்வார்கள் என்று எதிர்பார்த்தேன். அதற்கேற்ப எவரும் தங்களைத் தகுதிப்படுத்திக் கொள்ளவில்லை. என் தளபதிகள் இந்த இயக்கத்தை வழி நடத்துவார்கள் என்று மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தேன். அவர்களோ... தங்கள் தலைமீதுள்ள கடினமான பொறுப்புகளை உணராமல் தலைமைப் பதவிக்காகவும் அதிகாரத்துக்காகவும் தங்களுக்கிடையே சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

சாதிப் பிரிவினைகளும் பொறாமையும் கொண்ட மக்கள் வாழும் நாட்டில் பிறக்க நேர்ந்தது ஒரு தீவினையாகும். இப்போது உள்ள சமூக கட்டமைப்பில் எவரொருவரும் இந்நாட்டின் நலனில் அக்கறையுடன் செயல்படுவது பெரிதும் இயலாத ஒன்றாகும். ஏனெனில் இந்த நாட்டின் பிரதம மந்திரி கொண்டுள்ள கருத்துக்கு மாறுபட்ட கருத்தை யார் சொன்னாலும், அதைச் செவிமடுக்கக்கூட இந்நாட்டு மக்கள் தயாராக இல்லை. அந்த அளவுக்கு நாட்டின் நிலை இழிந்திருக்கிறது.

எல்லா முனைகளிலிருந்தும் என் மீது தாக்குதல்கள் தொடுக்கப்பட்டன. குறிப்பாக, இந்துக்களின் செய்தி ஏடுகள், என் பெயரில் புழுதிவாரித் தூற்றின. என் வாழ்நாள் முழுவதும் என் எதிரிகளுடன் கடுமையாகப் போராடி வந்தேன். என் வகுப்பைச் சேர்ந்த சிலர், தங்கள் சுயநலத்துக்காக என்னை வஞ்சித்தனர். இவர்களை எதிர்த்தும் நான் போராட வேண்டியதாயிற்று. இவ்வளவு இன்னல்களுக்கும் இடர்பாடுகளுக்கும் இடையே தனியொருவனாய்ச் செயல்பட்டு என் மக்களுக்கான உரிமைகளை வென்றெடுத்தேன்.

அரும்பாடுபட்டு வண்டியை இன்றுள்ள வரை ஓட்டி வந்துவிட்டேன். இந்த வண்டியை, இயக்கத்தை என் மக்களும் என் தளபதிகளும் மேற்கொண்டு முன்னோக்கிச் செலுத்த முடியாவிட்டால், அது இப்போது எங்கு உள்ளதோ அங்கேயே விட்டுவிடட்டும். ஆனால், எந்தச் சூழ்நிலையிலும் எக்காரணத்தை முன்னிட்டும் அது பின்னோக்கி செல்ல இடம் தரக்கூடாது. இதுவே என் மக்களுக்கு நான் விடுக்கும் செய்தி. இதை என் மக்கள் ஏற்றுச் செயல்படுவார்கள் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது'' என்ற அம்பேத்கர்,

``மக்களிடம் சென்று சொல், அவர்களிடம் சென்று சொல், அவர்களிடம் சென்று சொல்'' என்று மூன்றுமுறை மரண வாக்குமூலம் போன்று தன்னுடைய உதவியாளரிடம் பதிவு செய்துவிட்டு, அப்படியே கண்மூடி 65 ஆண்டுகளாகிவிட்டன.

உலகம் உறங்கிக் கொண்டிருந்தபோது, இவர் ஒருவர் மட்டும்தான் விழித்துக் கொண்டிருந்தார்.

மனிதர் யாவரும் மயங்கிக் கிடந்தபோது, இவர் ஒருவர் மட்டும்தான் தெளிவோடு இருந்தார்.

வாழ்வைச் சாவாக்கிக் கொண்டவர்களுக்கு நடுவே, இவர் ஒருவர் மட்டும்தான் சாவையே வாழ்வாகக் கட்டிக்கொண்டிருந்தார்.

பல்லாயிரம் கல் நிலப்பரப்பை இருள் கவ்விக்கொண்டிருந்தபோது, இந்த ஒரே ஒரு விளக்கு மட்டும்தான் எரிந்து கொண்டிருந்தது.

மல்லை சத்யா
மல்லை சத்யா

குழம்பி நாற்றமெடுத்துப்போன குட்டையை, இந்த ஒரே ஒரு மீன் மட்டும்தான் தூய்மைப் படுத்திக் கொண்டிருந்தது.

அஞ்சி அஞ்சி மாண்ட மனித குலத்தினிடையே இந்த ஒரே ஒரு தலை மட்டும்தான் நிமிர்ந்து நின்றது.

ஒளி இழந்துபோன பல்லாயிரம் கண்களுக்கிடையே, இந்த இரண்டு கண்கள் மட்டும்தான் பேரொளி வீசிக்கொண்டிருந்தன.

வானத்தை நோக்கி நீண்டுகொண்டிருந்த பல்லாயிரம் கைகளுக்கிடையே, இந்த இரண்டு கைகள் மட்டும்தான் மனிதனை நோக்கி நீண்டு கொண்டிருந்தன.

சதி நடப்பதறிந்தும், விதியை நம்பிக் கொண்டிருந்தவர்கள், அந்த மனிதனை வேடிக்கையாக பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

`நீ யார் தெரியுமா?'

- அவர் உரத்த குரலில் கேட்டார்.

̀இவர் யார்!'

- அவர்கள் ஆச்சர்யமாகப் பார்த்தார்கள்.

அன்றைக்கு மட்டுமல்ல... என்றென்றைக்கும் அண்ணல் அம்பேத்கர் ஆச்சர்யமே!

- மல்லை சத்யா