Published:Updated:

“முடியாது... மிஸ்டர் காந்தி!” - பாரதி நினைவுதினப் பகிர்வு

Bharathiyar
Bharathiyar ( விகடன் )

இந்தியச் சுதந்திரப் போராட்ட வரலாற்றில் முக்கியமான நிகழ்வுகளில் ஒன்று... காந்தியும், பாரதியாரும் நேரில் சந்தித்தது.

1919-ம் ஆண்டு இந்தியா முழுவதும் விடுதலை வேட்கை ஓங்கி ஒலிக்கத் தொடங்கியிருந்த காலகட்டம். ஆங்கிலேயரிடமிருந்து தன்னாட்சி வேண்டி இந்தியா முழுவதும் போராட்டங்கள் வலுப்பெறத் தொடங்கியிருந்தன. இந்தப் போராட்டங்கள் அன்றைய ஆங்கிலேயருடைய ஆட்சிக்குப் பெரும் இடையூறாகத் திகழ்ந்தன. இந்தப் போராட்டங்களைக் கட்டுக்குள் கொண்டுவருவதற்காக சர் சிட்னி ரௌலட் தலைமையிலான ஒரு குழுவை அமைத்தது, ஆங்கிலேய அரசு. இந்த நிலையில், ஆங்கிலேயர் அரசுக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபடுபவர்களை நீதிமன்ற விசாரணையின்றி இரண்டு ஆண்டுகள் சிறையில் அடைக்கலாம் என்பது உள்ளிட்ட புதுச் சட்டங்கள் கொண்டுவரப்பட்டன. இந்த அடக்குமுறைச் சட்டத்தை (ரெளலட் சட்டம்) எதிர்த்து இந்தியா முழுவதும் பெரும் பயணத்தை மேற்கொண்டிருந்தார், காந்தி.

Bharathiyar
Bharathiyar

அந்தக் காலகட்டத்தில் இந்த ரௌலட் சட்டம் தொடர்பான ஓர் ஆலோசனைக் கூட்டமானது, சென்னையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்வில் பங்குபெற ராஜாஜி இல்லத்தில் தங்கியிருந்தார், காந்தி. அவருடன் சத்தியமூர்த்தி, மகாதேவ் தேசாய் உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் பலரும் உடனிருந்தனர். இந்த நிலையில் காந்தி தங்கியிருந்த இல்லத்தில், நுழைந்து காந்திக்கு எதிரே அமர்ந்தார், பாரதியார். அவரிடம், “மிஸ்டர் காந்தி, நான் இன்று மாலை திருவல்லிக்கேணி கடற்கரையில் நடைபெறும் கூட்டம் ஒன்றில் பேசுகிறேன். அந்தக் கூட்டத்திற்கு நீங்கள்தான் தலைமைதாங்க வேண்டும்" என்றார்.

தன்னருகில் இருந்த தன்னுடைய செயலாளர் மகாதேவ் தேசாயிடம் காந்தி, “இன்று மாலை ஏற்கெனவே வேறு எந்த நிகழ்வுகளுக்காகவது ஒப்புக்கொண்டுள்ளோமா?” எனக் கேட்க, “ஆம், வேறொரு நிகழ்வு இருக்கிறது” எனப் பதிலளித்தார், மகாதேவ் தேசாய். அதைக் கேட்டு காந்தி, “இன்றைக்கு முடியாது. நாளைக்குத் தள்ளிவைக்க முடியுமா?" எனக் கேட்டார் காந்தி.

Bharathiyar
Bharathiyar

அதற்கு பாரதி, “முடியாது… மிஸ்டர் காந்தி. நீங்கள் தொடங்க இருக்கும் இயக்கத்திற்கு என்னுடைய ஆசீர்வாதங்கள்" எனக் கூறி அந்த இடத்தைவிட்டு நகர்ந்தார். இதுதான் பாரதியின் விடாப்பிடி குணம். அவர் கொண்டிருந்த கொள்கையின்மீதான பிடிவாதமும் இப்படிப்பட்டதுதான்.

காந்தியுடனான பாரதியின் சந்திப்பு குறித்து எழுத்தாளர் பிரபஞ்சன் இப்படிக் குறிப்பிடுகிறார். “காந்தியைச் சுற்றி நின்ற பெரியவர்கள் யாரும் முறையாகப் பாரதியை வரவேற்று, காந்தியிடம் அவருடைய இலக்கியத் திறனை அறிமுகப்படுத்தி வைக்கவில்லை. காரணம், அவர்கள் தமிழர்கள் அல்லவா?" என்றார்.

எந்த நிறமிருந்தாலும் அவை யாவும் ஒரே தரமன்றோ? இந்த நிறம் சிறிதென்றும் இஃது; ஏற்றமென்றும் சொல்லலாமோ?
பாரதியார்

காந்தி தன்னுடைய குருவாக, கோபாலகிருஷ்ண கோகலேவை ஏற்றுக்கொண்டார் என்றால், பாரதி தன்னுடைய அரசியல் முன்னோடியாக ஏற்றுக்கொண்டது, பாலகங்காதர திலகரை. காரணம், தேசபக்தியிலும்கூடத் தீவிரம் காட்டுவதுதான் திலகரின் குணம். அதுதான் பாரதியின் விருப்பமுமாக இருந்தது.

சமீபத்தில், தமிழக அரசு கல்வித் திட்டத்தில் மாற்றங்களைக் கொண்டுவந்து புதிய பாடநூல்களை அறிமுகப்படுத்தியது. அதில் 12-ம் வகுப்பு தமிழ்ப் பாடநூலின் அட்டையில் பாரதியாரின் படம் இடம்பெற்றிருந்தது. ஆனால், இதில் பாரதியின் தலைப்பாகையில் தீட்டப்பட்டிருந்த காவி நிறம் பெரும் சர்ச்சைகளை தமிழகம் முழுவதும் உருவாக்கியது. ஆயினும், அதற்குப் பாரதியின் வரிகளே உதாரணமாக இருந்தது.

"எந்த நிறமிருந்தாலும் அவை யாவும் ஒரே தரமன்றோ, இந்த நிறம் சிறிதென்றும் இஃது; ஏற்றமென்றும் சொல்லலாமோ” என்று அப்போதே நிறங்களுக்குச் சாட்டையடி கொடுத்திருந்தார், பாரதி. ஆம், வண்ணங்களால் சொந்தம் கொண்டாட முடியாதவர் பாரதியார் .

Bharathiyar in Text Book
Bharathiyar in Text Book

பாரதியை, தன்னுடைய ஆசானாக ஏற்றுக்கொண்ட பாரதிதாசன், “தமிழுக்குத் தொண்டு செய்வோன் சாவதில்லை; தமிழ்த்தொண்டன் பாரதிதான் செத்ததுண்டோ” என்று எழுதியிருப்பதைப்போல, பாரதிக்கு அழிவு என்பது கிடையாது. இன்று அவருடைய நினைவு தினம். அவருடைய நினைவைப் போற்றுவோம்!

அடுத்த கட்டுரைக்கு