Published:Updated:

`பார்த்திபன் இப்போதும் பசியோடுதான் இருக்கிறான்' - அஹிம்சைப் போராளி திலீபன் நினைவு தினப்பகிர்வு!

அமைதியை நிலைநாட்ட வந்தவர்கள் தந்த ஆயுதங்களும் ஈழத் தமிழ் மக்களை கொன்றொழிக்க, அவர்களுக்கு, அவர்களின் வழியிலேயே பதில் சொல்லத் துணிந்தான் திலீபன்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

இன்றிலிருந்து சரியாக 34 ஆண்டுகளுக்கு முன்பாக, உலகின் தென்கிழக்கு மூலையில் 23 வயது இளைஞன் ஒருவன் உண்ணா நோன்பிருந்து உயிர் துறந்தான். அவனுக்குப் பெற்றோர் இட்ட பெயர் பார்த்திபன். இயக்கம் தந்த பெயர் திலீபன். ஆம், பெயரின் மூலம் சாதி, மதம், பிராந்தியம் அறிந்து அதன் மூலம் சிறு பிரிவு ஏற்படா வண்ணம், தமிழ்ப்பெயர் சூட்டிக்கொள்ளும் கட்டுப்பாடும் ஒழுக்கமும் நிறைந்ததொரு இயக்கத்தின், பிராந்திய அரசியல்துறை பொறுப்பாளன். உண்ணா நோன்பு என்றாலே நகைப்புக்குரிய ஒன்றாக மாறிவிட்ட இக்காலச் சூழலில், கொண்ட கொள்கைக்காக சொட்டு நீர் அருந்தாமல் உயிர் துறந்து, உலகத்தின் செவிப்பறைகளில் உண்ணா நோன்பின் மகத்துவத்தை ஓங்கி ஒலித்தவன் அவன். பிறந்த மூன்றே மாதத்தில் தன் தாய்மடி இழந்தவன், 23 வயதில் தன் தாயகத்தின் மடியில் உயிர் துறந்தான்.

திலீபன்
திலீபன்

எதற்காக, ஏன், எப்படி?

சிங்கள ஆட்சியாளர்களிடம் அடிமைப்பட்டிருந்த தன் தாய் நிலத்தை, தன் இன மக்களை மீட்கும் போராட்டத்தில் சின்னஞ் சிறுவயதிலேயே, தன்னை இணைத்துக்கொண்டான். ஏற்கெனவே ஓர் இனத்தின் கொடுமையை, ஆதிக்கத்தைத் தாங்கமுடியாமல் துயருற்ற நேரத்தில், இரு இனங்களுக்கிடையே நல்றலுவை உண்டாக்க இந்தியப் பெருநிலத்திலிருந்து வந்த அமைதிப்படையின் ஆதிக்கமும் சேர்ந்துவிட செய்வதறியாது திகைத்தனர் ஈழத்தமிழ் மக்கள். போராட்டக் குழுக்களுக்கிடையிலும் பெரும் குழப்பங்கள்.

''நான் மனரீதியாக ஆத்மார்த்தமாக எமது மக்கள் விடுதலை அடைவார்கள் என உணர்கிறேன். மகிழ்ச்சியுடனும் பூரண திருப்தியுடனும் உங்களிடமிருந்து இறுதி விடைபெறுகிறேன்''
திலீபன்

இப்பெரிய தேசத்தை எதிர்த்து நிற்பதா? சரணடைவதா இல்லை அவர்கள் கொடுப்பதைப் பெற்றுக்கொண்டு மண்டியிடுவதா? கொடுப்பதைப் பெற்றுக்கொண்டு மண்டியிடுவதற்கா இத்தனை ஆண்டுக்காலப் போராட்டம். தம் முன்னோர் முப்பதாண்டுக்கும் மேலாக அமைதி காத்ததன், அறவழியில் போராடியதன் விளைவுதான் என்ன? என்ன மிஞ்சியது, நில உரிமை இல்லை, வரி வசூல் செய்யும் உரிமை இல்லை, காவல்துறை அதிகாரம் இல்லை , கல்வி உரிமையில் பாகுபாடு... எனில் அவர்கள் கொடுக்கும் மாகாண முதல்வர் எனும் அதிகாரத்தால் என்ன செய்துவிட முடியும், கூடுதலாகக் கொடுக்கும் அடக்குமுறைகள் வேறு. அதற்குப்பிறகுதான் ஈழத் தமிழ் இளைஞர்களின் கையில் ஆயுதம் வந்து சேர்ந்தது. சிங்களப் படையின் ஆயுதங்களுடன் நேருக்கு நேர் மோதியது.

''திலீபன் அழைப்பது சாவையா, சின்ன வயதில் இது தேவையா?''- அஹிம்சைப் போராளி திலீபன் நினைவு தினப்பகிர்வு

அத்தகைய சூழலில்தான் இந்தியப்படை ,அமைதியை நிலைநாட்ட ஈழ மண்ணுக்குள் நுழைந்தது. அமைதி ஒப்பந்தம் என்கிற பெயரில் ஈழத் தமிழ் மக்களின் உரிமைகள் பறிபோக மீண்டும் ஓர் ஒப்பந்தம் கையொப்பமானது. ஈழ மக்கள் அதை ஏற்றுக்கொள்ளவும் நிர்பந்திக்கப்பட்டனர். அதை மறுத்த காரணத்தால், அமைதியை நிலைநாட்ட வந்தவர்கள் தந்த ஆயுதங்களும் ஈழத் தமிழ் மக்களை கொன்றொழிக்க, அவர்களுக்கு, அவர்களின் வழியிலேயே பதில் சொல்லத் துணிந்தான் திலீபன். உண்ணா நோன்பு, அஹிம்சை வழி என மகாத்மா காந்தி இவ்வுலக்கு விட்டுச் சென்ற போராட்ட வழிமுறையை கையிலெடுத்தான்.

''கோரிக்கை நிறைவேறும்வரை உண்ணாவிரதம் இருப்பேன். ஒரு சொட்டு தண்ணீர்கூட குடிக்க மாட்டேன். மருத்துவப் பரிசோதனை செய்யக்கூடாது. நான் உணர்வு இழந்தபிறகும் வாயில் தண்ணீர் ஊற்றக்கூடாது. இறக்கும் வரை எந்தவிதமான சிகிச்சையும் அளிக்கக்கூடாது''
திலீபன்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

"பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு, இன்னமும் தடுப்புக்காவலில் அல்லது சிறைகளில் உள்ளோர் விடுவிக்கப்பட வேண்டும்.

புனர்வாழ்வு என்ற பெயரில் தமிழர் தாயகத்தில் நடத்தப்படும் சிங்களக் குடியேற்றங்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.

இடைக்கால அரசு நிறுவப்படும் வரை புனர்வாழ்வு என்று அழைக்கப்படும் சகல வேலைகளும் நிறுத்தப்பட வேண்டும்.

ஈழத் தமிழர்கள்
ஈழத் தமிழர்கள்

வடகிழக்கு மாகாணங்களில், காவல் நிலையங்கள் திறக்கப்படுவது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.

இந்திய அமைதிப்படையின் மேற்பார்வையில், ஊர்க்காவல் படை என அழைக்கப்படுவோருக்கு வழங்கப்பெற்ற ஆயுதங்கள் திரும்பப்பெறப்பட்டு, தமிழ்க் கிராமங்கள், பள்ளிக்கூடங்களில் குடிகொண்டுள்ள ராணுவ, போலீஸ் நிலையங்கள் மூடப்பட வேண்டும் ''என்ற ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து, நல்லூர் முருகன் ஆலயத்துக்கு முன்பாக 1987-ம் ஆண்டு செம்படம்பர் 15-ம் தேதி உண்ணா நோன்பைத் தொடங்கினான் திலீபன்.

"நான் இறப்பது நிச்சயம். அப்படி இறந்ததும் வானத்திலிருந்து என் தோழர்களுடன் சேர்ந்து நமது இலட்சியத்துக்காக உழைப்பேன்”
திலீபன்
Vikatan

"திலீபன் அழைப்பது சாவையா, இந்தச் சின்ன வயதில் இது தேவையா'' எனும் சோக முழக்கங்களோடு, கூட்டம் கூட்டமாக திலீபனைக் காணவந்தனர் ஈழத்தமிழ் மக்கள். தான் அங்கம் வகித்த இயக்கத்தின் தலைவர், இந்த உண்ணாவிரதம் வேண்டாம் என்று சொல்ல,

``நமது கொள்கையின் தீவிரத்தை நிரூபிக்க இதைவிட்டால் வேறு வழியில்லை. நாம் இந்திய - இலங்கை ஒப்பந்தத்தை ஏற்கவில்லை என்பதை ஈழ மக்களுக்கும் தமிழக மக்களுக்கும், உலகத் தமிழர்களுக்கும் சொல்லவேண்டிய தருணம் இது. இன்னொரு ராணுவம் எங்கள் மண்ணில் நிலைகொள்வதை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்பதையும் அழுத்தமாகச் சொல்லவேண்டியத் தருணம். அதையும் இந்தியாவின் வழியிலேயே சொல்ல உண்ணாவிரதம்தான் ஒரே வழி " என்று பதில் சொன்னான்.

திலீபனின் உண்ணா நோன்பு அஹிம்சை தேசத்து ஆட்சியாளர்களின் காதில் விழாததால், அவனின் கோரிக்கை ஏற்கப்படாததால், காந்திய தேசம்தானே, காந்திய வழிப் போராட்டத்தை ஏற்பார்கள் என அவன் கொண்டிருந்த நம்பிக்கை சிதைக்கப்பட்டதால், பன்னிரண்டாம் நாள் (26.9.1987) மண்ணை விட்டுப் பிரிந்தான் தியாகி திலீபன்.

இறுதிப் போரின்போது ஈழத் தமிழர்கள்
இறுதிப் போரின்போது ஈழத் தமிழர்கள்

ஆயுதப்போராட்டம்தான் ஈழத் தமிழ் மக்களின் உரிமைக்குத் தடையாக இருக்கிறது எனப் பேசியவர்கள், அது கைவிடப்பட்டு 12 ஆண்டுகள் ஆன பின்பும் அதே நிலை நீடிப்பது குறித்து வாய் திறக்காமல் மௌனியாக இருக்கிறார்கள். எனில், அங்கே அமைதிக்குத் தடையாக ஆயுதமோ அஹிம்சை வழிப் போராட்டங்களோ இல்லை என்பது நிரூபணமாகிறது. மறுக்கப்படும் உரிமைகள்தான் அம்மக்களை மீண்டும் மீண்டும் போராடத் தூண்டுகிறது என்பதும் புலப்படுகிறது. பார்த்திபன் இப்போது மட்டுமல்ல, ஈழத் தமிழ் மக்களின் உரிமைகளும் அவர்களுக்கான நீதியும் மறுக்கப்படும் காலம் வரைக்கும் பசியோடுதானிருப்பான்... பசியோடுதானிருப்பான்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு