Published:Updated:

"நான் குறுக்கீடுகளால் கூச்சமடைகிறவன் அல்ல!” - அண்ணா பிறந்த நாள் சிறப்புப் பகிர்வு

"தமிழன் நல்வாழ்வு வாழ வேண்டும் என்பதே என்னுடைய லட்சியம்" - அண்ணா

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

“பொதுத்தேர்தலுக்கு ஆறு மாதங்களுக்கு முன் ஆளுங்கட்சியின் உறுப்பினர்களும் மந்திரிகளும் தங்களின் பதவியை ராஜினாமா செய்துவிட்டுத் தேர்தலில் பங்கேற்க முடியுமா என அறைகூவல் விடுக்கிறேன்” என மாநிலங்களவையில் தன்னுடைய கன்னிப்பேச்சை அரங்கேற்றிக்கொண்டிருந்தார் அண்ணா. அப்போது மைசூரைச் சார்ந்த உறுப்பினர் ராம்ரெட்டி, "இதற்கு ஏதாவது முன்னுதாரணம் இருக்கிறதா“ எனக் கேட்டார்.

நான் குறுக்கீடுகளால் கூச்சமடைகிறவன் அல்ல. எனவே, குறுக்கீடுகளை விரும்புகிறேன்.
அண்ணா

அண்ணாவுக்கு ஆதரவாக மேற்கு வங்க உறுப்பினர் பூபேஷ் குப்தா எழுந்து, "ஒருவருடைய கன்னிப்பேச்சில் குறுக்கிடுவதற்கு ஏதாவது முன்னுதாரணம் இருக்கிறதா“ என்றார். அதற்கு அண்ணா, “இது என்னுடைய கன்னிப்பேச்சுதான்; ஆனால், குறுக்கீடுகளால் கூச்சமடைகிறவன் அல்ல. எனவே, குறுக்கீடுகளை விரும்புகிறேன்“ என முழங்கினார். ஆம், அண்ணா என்றும் உரையாடல்களை விரும்புகிறவர். காரணம், அவர் ஒரு முழுமையான ஜனநாயகவாதி. உரையாடல்களின் வழியேதான் ஜனநாயகத்தை மலரச் செய்ய முடியும் என்ற அரசியல் பாடமறிந்தவர்.

ஆனால், தற்போதைய சமகால அரசியல் சூழலில் அதற்கு எதிரானவையாகப் பல நிகழ்வுகள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. சமீபத்தில் ஒரு செய்தியாளர் சந்திப்பின்போது கேள்விகளை முன்வைத்த பத்திரிகையாளரிடம், ”நீ எந்தச் சாதி?“ எனப் பதில் கேள்வி எழுப்பும் அரசியல்வாதிகள் அண்ணாவின் உரையாடல்களிடமிருந்து கற்க வேண்டிய பாடங்களும் நிறைய இருக்கின்றன...

Journey of CN Annadurai
Journey of CN Annadurai

1960-களில் தமிழகத்தில் மொழிப்போராட்டம் உச்சத்தில் இருந்த சமயம். அப்போது தமிழகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களைப் பார்த்து, ‘நான் சென்ஸ்’ என நேரு சொன்னது பெரும் அதிர்வலைகளை உருவாக்கியது. அந்தச் சூழலில் நேரு தமிழகம் வருவதற்கான ஏற்பாடுகள் தயாராகிக்கொண்டிருந்தன. அப்போது நேருவுக்கு எதிராகக் கறுப்புக்கொடி காட்டும் போராட்டத்தை அறிவித்திருந்தார், அண்ணா. ஆனால், அந்தப் போராட்டத்துக்கு அவர் அளித்திருந்த கட்டளைகள்தான் கொஞ்சம் வித்தியாசமானவை. “கறுப்புக்கொடி காட்ட வேண்டும்; ஆனால், ’திரும்பிப் போ’ எனச் சொல்லக் கூடாது; எதையும் எரிக்கக் கூடாது; தங்கியிருக்கும் இடம் நோக்கிச் செல்லக் கூடாது; இவற்றை மீறினால் துரோகி எனச் சொல்ல மாட்டேன். நீ என் தம்பி இல்லை என்பேன்” எனத் தம்பிகளுக்கு பாசத்தின் வழியாகத்தான் தன் கட்டளைகளை முன்வைத்தார் அண்ணா.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

என்றைக்கும் அவருடைய தம்பிகளுடனான அண்ணாவின் உரையாடல்கள், உணர்ச்சிகள் நிறைந்தவை. அதனால் தன் உடல் நிலை மோசமாகிக்கொண்டிருந்ததையும்கூடத் தன் தம்பிகளிடமே முதலில் அறிவித்தார் அண்ணா. "செய்ய வேண்டிய பணிகள் நிறைய இருக்கின்றன. ஆனால், உடல்நிலைதான் மோசமாகிக் கொண்டிருக்கிறது. இதை உன்னிடம் சொல்லாமல் வேறு யாரிடம் சொல்வேனடா தம்பி” எனத் தன்னுடைய உடல்நிலை குறித்து தன்னுடைய தம்பிகளிடமே தெரிவித்தார். பல லட்சம் தம்பிமார் படைகள் சூழ்ந்து அண்ணா எனப் பற்றுதலோடு அழைத்தாலும், பெரியாரிடமிருந்து வெளியேறி, 1949 செப்டம்பர் 17-ம் தேதி ராபின்சன் பூங்காவில் கட்சி தொடங்கியபோது அண்ணாவுக்கு வயது என்னவோ 40-தான்.

ஒவ்வொருவரும் `நடப்பது நம் ஆட்சி‘ என்ற உணர்வுகளோடு தத்தம் கடமைகளைச் செய்திட வேண்டும்.
அண்ணா

1967 தமிழகச் சட்டமன்றத் தேர்தல் வெற்றிக்குப் பிறகு சட்டமன்றத்தில் அண்ணா நிகழ்த்திய உரை, அரசியல் கட்சி தலைவர்களுக்கும் பொதுமக்களுக்கும் அரசியல் பாடம் எடுக்கக்கூடிய ஒன்று. பெருந்திரளான மக்களைப் பார்த்து, "நாட்டு ஆட்சி செம்மையாக நடந்திட, நானும் என்னுடைய நண்பர்களும் அமைச்சரகத்தில் அமர்ந்து ஆட்சி நடத்தினால் மட்டும் போதாது. ஒவ்வொருவரும் ‘நடப்பது நம் ஆட்சி ‘ என்ற உணர்வுகளோடு தத்தம் கடமைகளைச் செய்திட வேண்டும்“ என்றார் அண்ணா.

அண்ணாவின் பேச்சுகள் எளிமையானவை. ஆனால் அவரால், “லாஸ்கியின் கூற்றுப்படி சமத்துவம் என்பது அனைவரையும் சமமாக நடத்துவது அல்ல; அனைவருக்கும் சமவாய்ப்பு அளிப்பதுதான்” என நாடாளுமன்றத்தில் அதிகாரவர்க்கத்துடன் தத்துவார்த்தரீதியான உரையாடல்களை நிகழ்த்தவும் முடியும். பாமர மக்களிடம், “நேர்முக வரி கொசுக்கடி; மறைமுக வரி மூட்டைப்பூச்சிக் கடி, இப்படி வைத்துக்கொள்ளுங்களேன் என்ன கெட்டுவிடப்போகிறது“ என்ற மக்களை அரசியல்படுத்தவும் முடியும். அண்ணாவுக்கு நாடாளுமன்றத்தில் நடத்தும் உரையாடல்களைவிடவும், தமிழகக் குக்கிராமத்தில் நடைபெறும் மேடைப்பேச்சில் பங்குபெறுவதில்தான் விருப்பம் அதிகம்.

C. N. Annadurai
C. N. Annadurai

அண்ணாவின் நாடாளுமன்றக் கன்னிப்பேச்சு, அரங்கேறி 50 ஆண்டுகளைக் கடந்துவிட்டாலும், அதில் அவர் குறிப்பிட்டுப் பேசிய மூன்று கருத்துகள் இன்றும் விவாதப் பொருளாக விவாதிக்கப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன. அவை, “ஜனநாயகத்தைப் பொறுத்தவரை, விகிதாசார பிரதிநிதித்துவ முறையும், அரசின் குறிப்பிட்ட செயல்திட்டங்களுக்குப் பொது மக்களிடம் ஆதரவு உண்டா இல்லையா என்பது தொடர்பான வாக்கெடுப்பு முறையும் இந்தப் பெரிய உப கண்டத்தில் நிகழாத வரையில் ஜனநாயகத்துக்கான எந்தப் பெரிய பலனையும் நீங்கள் எதிர்பார்க்க முடியாது. இங்கு சமவாய்ப்பு தந்துகொண்டிருக்கிறோம் என்பதைக் கூற முடியுமா? தாழ்த்தப்பட்டோர் பிற்படுத்தப்பட்டோர் என்பதெல்லாம் எவற்றைக் குறிக்கின்றன. ஒருமைப்பாடு பெற்ற மக்கள் சமுதாயம்தான் நாடாகிறது. அப்படி ஒரு நாடு உருவாகி இருந்தால், ஒருமைப்பாட்டுக்கு இப்போது என்ன அவசியம் வந்தது?” என்றார்.

அண்ணாவின் லட்சியம் மிக எளிமையானதுதான். அதை அவரே, சொல்லியிருக்கிறார். “தமிழன் யாருக்கும் தாழாமலும், யாரையும் தாழ்த்தாமலும், தமிழன் யாருக்கும் அடிமையாகாமலும், யாரையும் அடிமைப்படுத்தாமலும் நல்வாழ்வு வாழ வேண்டும் என்பதே என்னுடைய லட்சியம்“ என எடுத்துரைக்கிறார். அண்ணாவின் விருப்பபடியே தமிழன் நல்வாழ்வு வாழட்டும். இன்று அண்ணாவின் பிறந்த நாள் அவரின் நினைவுகளைப் போற்றுவோம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு