Published:Updated:

ரஜினி பிரஸ் மீட்டில் என்னவெல்லாம் நடந்தது? - தி லீலா பேலஸில் இருந்து நேரடி ரிப்போர்ட்

ரஜினி பிரஸ் மீட்
ரஜினி பிரஸ் மீட்

`போயஸ் கார்டன் இல்லத்திலிருந்து ரஜினி கிளம்பி விட்டார்' என்ற செய்தி வந்தவுடன், லீலா பேலஸ் ஹோட்டலின் வாசல் களைகட்டத் தொடங்கியது. ஹோட்டல் செக்யூரிட்டிகளும் சில காவல்துறையினரும் கூடியிருந்தவர்களின் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். ரஜினி பிரஸ் மீட்டில் நடந்தது என்ன?

`இப்போது வந்துவிடுவார்... இன்று வந்துவிடுவார்' என்று எதிர்பார்க்கப்பட்ட ரஜினியின் அரசியல் வருகையை எதிர்நோக்கி, சென்னை ஹோட்டல் லீலா பேலஸ் வாசலிலும், போயஸ் கார்டனில் ரஜினியின் வீட்டு வாசலில் குழுமியிருந்தனர் ரஜினி ரசிகர்கள். கடந்த வாரம், ரசிகர் மன்ற நிர்வாகிகளோடு சந்தித்துப் பேசிய ரஜினி, இன்று கட்சி குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என்ற ஆவல் அனைவரின் முகத்திலும் வெளிப்பட்டது. ரஜினியைப் போன்ற ஹேர்ஸ்டைல், சட்டைப் பையில் ரஜினியின் படம், கார் முழுவதும் ரஜினியின் படங்கள் என ஏதோவொரு வகையில் ஒவ்வொருவரும் ரஜினியைத் தங்கள் ஆதர்சமாகக் கொண்டிருந்தனர். 'ரசிகர்களாக நின்றுகொண்டிருக்கிறோம்; இந்தப் பிரஸ்மீட் முடிந்தவுடன் ரஜினியின் கட்சித் தொண்டர்களாக பதவி உயர்வு பெற்றுவிடுவோம்' என்ற ஏக்கத்தைப் பெரும்பாலானோரிடம் காண முடிந்தது.

ரஜினி ரசிகர்கள்
ரஜினி ரசிகர்கள்

`போயஸ் கார்டன் இல்லத்திலிருந்து ரஜினி கிளம்பிவிட்டார்' என்ற செய்தி வந்தவுடன், லீலா பேலஸ் ஹோட்டலின் வாசல் களைகட்டத் தொடங்கியது. ஹோட்டல் செக்யூரிட்டிகளும் சில காவல்துறையினரும் கூடியிருந்தவர்களின் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். `உலகிலேயே மிகப்பெரிய குற்றம், உழைக்காமல் வாழ்வதே' என்ற வாசகத்தோடு, ரஜினி ரசிகர் சேகர், ரஜினி மன்றத்தின் கொடி, ரஜினி படங்களின் ஸ்டிக்கர்கள் முதலானவற்றை விற்றுக்கொண்டிருந்தார்.

"ராகவேந்திரா மண்டபத்தில்தான் தலைவர் பிரஸ் மீட் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், திடீரென லீலா பேலஸ் தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டது. அதனால் ரசிகர்கள் பெரியளவில் இங்கு குழுமவில்லை. பலரும் ராகவேந்திரா மண்டபத்தில் இருக்கிறார்கள்" என்றார். ஆயிரம் வாலா சரவெடி ஒன்றை சாலை நடுவில் போட்டுவிட்டு, `தலைவர் கார் வந்துருச்சு!' என்று கூறியபடி, ரஜினியின் கார் நுழைவதற்கு முன், பட்டாசைக் கொளுத்தினார்கள்.

ஹோட்டல் லீலா பேலஸுக்குள் நுழைவதற்கு ஏகப்பட்ட கெடுபிடிகள் போடப்பட்டிருந்தன. ஆன்லைன் சேனல்களுக்கும், ஊடகத்துறை மாணவர்களுக்கும் அனுமதியில்லை என்று முதல் கட்ட செக்யூரிட்டி பிரிவில் கூறப்பட்டது. நமது அடையாள அட்டையை சோதனை செய்து, உள்ளே அனுப்பினார்கள். கேட்டைக் கடந்து, ஹோட்டல் கட்டடத்துக்குள் நுழையும்போது, மீண்டும் சோதனை நடத்தப்பட்டது. கொரோனா தொற்று குறித்த அச்சத்தால் `இன்ஃப்ராரெட் தெர்மாமீட்டர்' கருவியைக் கொண்டு நம்மைச் சோதித்து உள்ளே அனுப்பினர். மூன்றாம் கட்டமாக, ரஜினி மன்றத்தின் பௌன்சர்கள் நமது அடையாள அட்டையைப் பார்த்துவிட்டு, மற்றொரு குழுவிடம் அனுப்பினர். அந்தக் குழு, பத்திரிகையாளர்களின் தகவல்களை வாங்கியதோடு, பிரஸ்மீட்டில் கலந்துகொள்வதற்கான டோக்கனையும் அளித்து, அரங்கத்துக்குள் அனுமதித்தனர்.

லீலா பேலஸ்
லீலா பேலஸ்
`கமல் முதல்வர் வேட்பாளரா?' கேள்விக்கு ரஜினி ரியாக்‌ஷன்!  - லீலா பேலஸ் சந்திப்பில் என்ன நடந்தது?

ஹோட்டல் லீலா பேலஸுக்குள் ரஜினி நுழைந்தவுடன், மூன்று கட்ட செக்யூரிட்டிகளும் தளர்ந்தன. வெளியில் காத்திருந்த ஆன்லைன் சேனல் பத்திரிகையாளர்களும் ரசிகர்களும் ரஜினியின் காருடன் ஹோட்டலுக்குள் நுழைந்தனர். பிரஸ் மீட் நடந்த அரங்கத்தினுள் ரஜினி நுழைந்தவுடன், அரங்கம் வெளியே கூட்டம் கூடியது. பிரஸ் மீட் நிகழ்ச்சி முடியும்வரை, வெளியில் சலசலப்பு நிலவிக்கொண்டே இருந்தது.

அரங்கத்துக்குள் வந்தவுடன் நேராக சென்று மைக்கைப் பிடித்தார் ரஜினி. என்ன பேசப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் இருந்தது. வழக்கமாகத் தனது போயஸ் கார்டன் வீட்டு வாசலில் செய்தியாளர்களைச் சந்திக்கும்போது, தனது கருத்தைக் கூறியவுடன் கேள்விகளை எதிர்கொள்வார் ரஜினி. இந்த முறை, தனது நிலைப்பாட்டைத் தெளிவாகப் பேசுவதற்காக இந்த மேடையைப் பயன்படுத்திக்கொள்ள அவர் நினைத்திருக்கலாம். மேலும், "நான் 25 வருடங்களாக அரசியலுக்கு வருகிறேன் எனச் சொல்வதாகச் சொல்கிறார்கள். இனி அப்படிச் சொல்லாதீர்கள். `2017 டிசம்பரில்தான் அரசியலுக்கு வருவேன்' எனத் தெரிவித்தேன்" என்பதை அழுத்தம் திருத்தமாகப் பதிவுசெய்தார் ரஜினி.

அறைவாசலில் ரஜினி
அறைவாசலில் ரஜினி

அடுத்ததாகத் தனக்கு முதல்வர் பதவி மீது ஆசையில்லை என்பதையும், தான் கட்சி தொடங்கி ஆட்சியைக் கைப்பற்றினால் தான் முதல்வராக இருக்கப் போவதில்லை என்பதையும் மீண்டும் மீண்டும் பதிவு செய்தார். அப்போது, அவர் அதுகுறித்த வீடியோ ஒன்றைத் திரையிட உத்தரவிட, பொறுப்பாளர்கள் தாமதப்படுத்தியதால், ரஜினி கோபமாக, "ஏய்! என்னாச்சு?" என்று கேட்க, அவசரம் அவசரமாக வீடியோ திரையிடப்பட்டது. 2017-ம் ஆண்டு ரஜினி தனது ரசிகர்களிடம் தனது அரசியல் வருகை குறித்தும், ஆன்மிக அரசியல் குறித்தும் பேசியதில், "அரசியலுக்கு பணத்துக்கோ, புகழுக்கோ நான் வர விரும்பவில்லை. அதை நீங்கள் ஆயிரம் மடங்கு எனக்கு கொடுத்துவிட்டீர்கள். பதவிமேல் ஆசையிருந்தால், 1996-ம் ஆண்டிலேயே அந்த நாற்காலி எனக்குக் கிடைத்தபோது அமர்ந்திருப்பேன். அதை 'வேண்டாம்' என்று தள்ளி வைத்தேன். 45 வயதில் எனக்கு வராத பதவி ஆசை, 65 வயதில் வருமா? அப்படி வந்தால், நான் பைத்தியக்காரன் இல்லையா?" என்று கூறியிருந்தார். அதை மீண்டும் சுட்டிக்காட்டி, "அப்போது சொன்னதையே மீண்டும் தற்போதும் சொல்கிறேன்" என்றார் ரஜினி. தொடர்ந்து ரஜினி என்ன பேசினார் என்பது குறித்து இந்த லிங்கை க்ளிக் செய்து கொள்ளலாம்.

"நான் 'முதல்வர்' இல்லை... புரட்சிக்குப் பின் அரசியல்..." - ரஜினி உரையின் டாப் 25 ஹைலைட்ஸ்!

தனது உரையை முடித்துக் கொள்ளும்போது, ரஜினி செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதில் அளிக்க இயலாது என்பதைக் கூறிவிட்டு மேடையிலிருந்து இறங்கி வெளியில் சென்றார். அப்போதும், ரசிகர்களும், செய்தியாளர்களும் அவரைச் சூழ்ந்துகொள்ள, அங்கிருந்து கிளம்பிச் சென்றார் ரஜினி. அவர் வெளியேறும் வேளையில், கூட்ட நெரிசலில், அரங்கில் வைக்கப்பட்டிருந்த ஸ்டூடியோ லைட் ஒன்று கீழே சாய்ந்தது. உடனடியாக, சிலர் அதைப் பிடித்ததால், அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

செய்தியாளர் சந்திப்பு முடிந்தவுடன் ரஜினி வெளியில் கிளம்ப, வந்திருந்தவர்களுக்கு உணவு வழங்கப்பட்டது. ஹோட்டல் லீலா பேலஸின் மதிய உணவுக்கான பஃபே வழங்கப்பட்டிருந்தது. தக்காளியும் துளசியும் வறுக்கப்பட்ட சூப் தொடங்கி, ஹைதராபாத் ஸ்டைல் பிரியாணி, ரொட்டி, பன்னீர் டிக்கா பட்டர் மசாலா, மிளகு சேர்க்கப்பட்ட சில்லி சிக்கன் முதலானவற்றோடு, ஹாட் சாக்லேட், ரசமலாய், ஐஸ் க்ரீம் ஆகியவை வழங்கப்பட்டிருந்தன.
ரஜினி பிரஸ் மீட்
ரஜினி பிரஸ் மீட்
``ரஜினிகாந்த் 71 வயசுல பொழச்சு வந்திருக்கேன்... இப்ப இல்லேன்னா..!?'' - நடிகர் ரஜினிகாந்த் #LiveUpdates #Rajinikanth

ரஜினி தனது பிரஸ்மீட்டை முடித்துவிட்டு, ஹோட்டல் லீலா பேலஸை விட்டு வெளியேறியபோது, ரசிகர்களைப் பார்த்தவுடன் ஒரிரு செகண்ட்கள் தனது காரின் மேற்புறம் வழியாக எழுந்து கையசைக்க மொத்த ரசிகர் கூட்டமும் ஆர்ப்பரித்து அவர் காரின் பின்னால் ஓடியது. தான் முதல்வர் வேட்பாளர் இல்லையென்று ரஜினி அறிவித்துச் சென்றிருப்பதைக் குறித்து, அங்கு காத்திருந்த ரசிகர்களிடம் கேட்டோம். "அப்படியெல்லாம் எங்க தலைவரை விட்ற மாட்டோம், சார். எப்படியாவது அவரை சம்மதிக்க வைப்போம். தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர், ரஜினிகாந்த்தான்!" என்று சத்தியம் செய்தனர். ரசிகர்களின் கூட்டம் அந்தப் பகுதியில் மெல்ல மெல்ல குறையத் தொடங்கியது.

அடுத்த கட்டுரைக்கு