Published:Updated:

அரசுப் பணிகளில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு இட ஒதுக்கீடு... கோரிக்கைக்கு செவிசாய்க்குமா திமுக அரசு?

`மூன்றாம் பாலினத்தவர்களுக்குத் தனி இட ஒதுக்கீடு

``மூன்றாம் பாலினத்தவர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்குமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டபோதும், ஏன் வழங்கப்படவில்லை?" என சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கேள்வி எழுப்பினார்.

அரசுப் பணிகளில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு இட ஒதுக்கீடு... கோரிக்கைக்கு செவிசாய்க்குமா திமுக அரசு?

``மூன்றாம் பாலினத்தவர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்குமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டபோதும், ஏன் வழங்கப்படவில்லை?" என சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கேள்வி எழுப்பினார்.

Published:Updated:
`மூன்றாம் பாலினத்தவர்களுக்குத் தனி இட ஒதுக்கீடு

`மூன்றாம் பாலினத்தவர்கள் என்பதாலேயே இந்த நாட்டில் நாங்கள் மூன்றாம்தரமாக நடத்தப்படுகிறோம்; பாலியல் தொழில் செய்வதும், யாசகம் கேட்டு அலைவதும்தான் எங்களுக்கு விதிக்கப்பட்டிருக்கும் தொழிலா... ஆண்கள், பெண்களைப்போல எங்களுக்கும் எல்லாத் துறைகளிலும் பணிசெய்ய விருப்பம் இருக்காதா... அரசாங்கமே எங்களை அங்கீகரிக்காவிட்டால், இந்த பொதுச் சமூகம் எங்களை எப்படி ஏற்றுக்கொள்ளும்? சுப்ரீம் கோர்ட், ஐகோர்ட் பரிந்துரைப்படி, எங்களுக்கும் அரசுப் பணிகளில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்!' என வலுவாக கோரிக்கை வைக்கிறார்கள் திருநங்கை, திருநம்பிகள் உள்ளிட்ட மூன்றாம் பாலினத்தவர்கள்.

போராட்டத்தில் திருநங்கைகள்
போராட்டத்தில் திருநங்கைகள்

கடந்த மார்ச் 2-ம் தேதி, சென்னை உயர் நீதிமன்றத்தில் திருநங்கைகள் சார்பில் தாக்கல் செய்த வழக்கொன்று விசாரணைக்கு வந்தது. அதில், கடந்த 2018, 2019, 2020-ம் ஆண்டுகளில் இரண்டாம் நிலைக் காவலர்கள், சிறை வார்டன்கள், தீயணைப்புத்துறை வீரர்கள் உள்ளடங்கிய சீருடைப் பணியாளர்கள் தேர்வில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு எந்த இட ஒதுக்கீடும் வழங்கப்படவில்லை என்றும், மூன்றாம் பாலினத்தவர்களுக்கு வயது வரம்பு சலுகையுடன், எழுத்துத் தேர்வு, உடற்தகுதித் தேர்வுகளிலும், கட் ஆஃப் மதிப்பெண்களிலும் சலுகைகள் வழங்கக் கோரியும் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

அந்த மனுவை விசாரித்த நீதிபதி எம்.எஸ்.ரமேஷ், ``அரசுத் தேர்வுகளில் மூன்றாம் பாலினத்தவர்களாக விண்ணப்பித்தபோதிலும், அவர்களுக்கு ஆண்கள் அல்லது பெண்களுக்கான தேர்வு நடைமுறைகள்தான் பின்பற்றப்படுகின்றன. குறிப்பாக, பெண்கள் என அடையாளப்படுத்தும் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு, பெண்களுக்கான 30% இட ஒதுக்கீடு கிடைக்கிறது, ஆனால் ஆண்களாக அடையாளப்படுத்துபவர்களுக்கு எந்தச் சலுகையும் வழங்கப்படுவதில்லை!" என வேதனை தெரிவித்த நீதிபதி, மனுதாரர்கள் அனைவரும் ஆரம்பகட்ட தேர்வுகளில் தகுதி பெற்றதாகக் கருதி, உடற்தகுதி உள்ளிட்ட பிற தேர்வுகளில் பெண்களுக்கான சலுகைகளை வழங்கி, எட்டு வாரங்களில் தேர்வு நடைமுறைகளை முடிக்க வேண்டும் என சீருடைப் பணியாளர் தேர்வாணையத்துக்கு உத்தரவிட்டார்.

சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம்

மிக முக்கியமாக, ``மூன்றாம் பாலினத்தவர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்குமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டபோதும், ஏன் வழங்கப்படவில்லை?" எனக் கேள்வி எழுப்பியதோடு, எதிர்காலத்தில் அரசுப் பணி நியமனங்களில் மூன்றாம் பாலினத்தவர்களுக்குக் குறிப்பிட்ட சதவிகித இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் எனவும் தமிழக அரசுக்குப் பரிந்துரை செய்திருக்கிறார்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய அலுவலகம்
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய அலுவலகம்

இந்த விவகாரம் குறித்து, பல ஆண்டுகளாக கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் திருநங்கை, திருநம்பி உள்ளிட்ட மூன்றாம் பாலினத்தவர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் எனக் கோரி போராடிவரும் திருநங்கைகள் உரிமை செயற்பாட்டாளர் கிரேஸ் பானுவிடம் பேசினோம்.

``கடந்த 2013-ம் ஆண்டிலேயே டி.என்.பி.எஸ்.சி தேர்வுகளை எழுத திருநங்கைகளையும் அனுமதிக்க வேண்டும், எங்களுக்குத் தனியே இட ஒதுக்கீடும் வழங்கப்பட வேண்டும் என முதன்முறையாக வழக்கு தொடர்ந்தோம். அதன் பின்னர், 2016-ம் ஆண்டு அந்த வழக்கில், தமிழக அரசு ஆறு மாதங்களில் பதிலளிக்க வேண்டும் எனத் தீர்ப்பு வந்தது. அதன்படி, அப்போதைய அ.தி.மு.க அரசாங்கம், எங்களை எம்.பி.சி பிரிவில் வகைப்படுத்தி, புதிய வழிகாட்டு நெறிமுறைகளைக் கொண்டுவந்தது. ஒரு பாலினத்துக்கும், சாதிக்குமான அடிப்படை வேறுபாடே தெரியாமல், மூன்றாம் பாலினத்தவர்களை ஒரு சாதிப்பட்டியலுக்குள் சேர்த்து ஏமாற்றிவிட்டார்கள். நாங்கள் சாதிரீதியாக மட்டுமல்ல, பாலினரீதியாகவும்தான் ஒடுக்கப்படுகிறோம்.

திருநங்கைகள் உரிமை செயற்பாட்டாளர் கிரேஸ் பானு
திருநங்கைகள் உரிமை செயற்பாட்டாளர் கிரேஸ் பானு

எங்கள் போராட்டமே ஆண்கள், பெண்கள் என்ற பாலினத்தவர்களோடுதான். அவர்களுக்கும்கூட மாற்றுத்திறனாளிகள், விதவைகள், எஸ்.சி/எஸ்.டி பெண்கள் என வயது வரம்பில், கட் ஆஃப் மதிப்பெண்களில் நிறைய சலுகைகள் வழங்கப்படுகின்றன. ஆனால், திருநங்கைகளான எங்களுக்கு எந்தச் சலுகையும் இல்லை. தேர்வு எழுத அனுமதித்தாலும், தேர்ச்சி பெற்றாலும்கூட பணி நியமனத்துக்கான அழைப்பாணை அரசிடமிருந்து கிடைப்பதில்லை; இதனால், அடுத்தடுத்து அரசுத் தேர்வுகள் எழுதிய ஆராதனா, சாரதா, தேன்மொழி போன்ற நிறைய மூன்றாம் பாலினத்தவர்கள் பாதிக்கப்பட்டனர். எனவே, இவற்றையெல்லாம் குறிப்பிட்டு, தமிழக அரசு பின்பற்றும் `வெர்டிக்கல் ரிசர்வேஷனால்' எங்களுக்கு எந்தப் பயனும் இல்லை, எனவே `ஹரிசாண்டல் ரிசர்வேஷன்' வேண்டும் எனக் கோரி 2020-ம் ஆண்டு மீண்டும் வழக்கு தொடர்ந்தோம். ஆனால், நீதிமன்றம் உத்தரவிட்டு இரண்டாண்டுகளாகியும் தமிழக அரசு சார்பில் இன்றுவரை எந்தவிதமான பதிலும் அளிக்கவில்லை" எனக் குற்றம்சாட்டினார்.

திருநங்கை தேனி ஆராதனா
திருநங்கை தேனி ஆராதனா

அதேபோல, காவலர் தேர்வில் தேர்ச்சி பெற்று ஐந்து ஆண்டுகளாகியும் பணி கிடைக்காததால், என்னை கருணைக் கொலை செய்துவிடுங்கள் என மாவட்ட ஆட்சியருக்கு கடிதம் எழுதும் அளவுக்கு விரக்தியின் விளிம்புக்குச் சென்ற திருநங்கை தேனி ஆராதனாவிடம் பேசினோம். ``திருநங்கைகளைப் பொறுத்தவரை தங்களை 15 வயதிலேயே பெண்ணாக உணர்ந்து வாழ்ந்துவந்தாலும், 20, 22 வயதுக்கு மேல்தான் திருநங்கைகளாக மாறி அடையாளப்படுத்திக்கொள்கிறார்கள். சிலர் டிகிரி படித்திருக்கலாம், சிலர் பள்ளிக்கூடம் படிக்கும்போதே பெற்றோர்களால் வீட்டைவிட்டு விரட்டப்பட்டிருக்கலாம். அப்படி இருக்கும்போது, வீட்டால், சமூகத்தால் புறக்கணிக்கப்பட்டு, பிச்சை, பாலியல் தொழில் என்ற நிர்பந்தத்துக்குள் வாழ்ந்து, பின்னர் அரசுத் தேர்வுகள் எழுத முன்வரும்போதே அவர்களுக்கான வயது வரம்பு போய்விடுகிறது. அப்படித்தான் கடந்த 2017-ம் ஆண்டு முதல் சட்டரீதியாக நான் போராடிவருகிறேன்.

எனக்குப் பின் தேர்வெழுதியவர்களெல்லாம் இன்று பணிகளில் இருக்கிறார்கள். திருநங்கை என்ற ஒரே காரணத்துக்காக ஐந்தாண்டுகளாக நான் அலைகழிக்கப்பட்டுவருகிறேன். ஒருநாள் வசூலுக்குச் சென்றால்தான் உணவு என்ற எங்கள் சமுதாயத்தின் நிலைமை மாற வேண்டும், அவர்களுக்கு நாங்கள் முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் எங்களின் இத்தனை போராட்டமும். திருநங்கைகள் என்றாலே ஒரு கொலைக் குற்றவாளிகளைப்போல பார்க்கிற சமூகத்தில், நாங்கள் சுயமரியாதையுடன் வாழ வேண்டுமென்றால் முதலில் அரசாங்கம் எங்களை அங்கீகரிக்க வேண்டும். அப்போதுதான் இந்தச் சமூகம் எங்களை ஏற்றுக்கொள்ளும்!' எனக் கண்ணீர்மல்க தெரிவித்தார்.

 திருநங்கைகள்
திருநங்கைகள்

இறுதியாக திருநங்கைகள் தரப்பினர் கூறியதாவது, ``ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு, சமூகநலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் உள்ளிட்ட அனைவரையும் நேரடியாகச் சென்று சந்தித்து பிரச்னைகளைப் பேசினோம். ஆனாலும் எந்தவிதமான நடவடிக்கையும் இல்லை; ஆனால், கடந்த ஆண்டே பக்கத்து மாநிலமான கர்நாடகாவில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு 1% தனி இட ஒதுக்கீடு வழங்கியிருக்கிறார்கள். அங்கு, அரசுத்துறை தேர்வுகளுக்கு மிகக்குறைந்த எண்ணிக்கையில்தான் மூன்றாம் பாலினத்தவர்கள் தயாராகிறார்கள. இங்கு தமிழ்நாட்டிலோ இன்றைக்கு 120-க்கும் அதிகமானோர் படித்துவருகிறார்கள்.

போராட்டம்
போராட்டம்

நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித்தேர்தலில்கூட இந்திய வரலாற்றிலேயே தமிழகத்தில்தான் 15 திருநங்கைகள் போட்டியிட்டார்கள். இப்படி, சமூகநீதி, இட ஒதுக்கீட்டுக்கு இந்தியாவிலேயே முன்னோடி மாநிலமாக தமிழ்நாட்டைப் பெருமைபேசிக்கொண்டிருக்கும் நமது அரசு தாமதிக்காமல் இதைச் செய்ய வேண்டும். மக்கள்தொகை அடிப்படையில் மூன்றாம் பாலினத்தவர்ளுக்கு ஒரு குறிப்பிட்ட சதவிகிதம் தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும், உடல்தகுதி, வயது வரம்புகளில் சலுகைகள் வழங்க வேண்டும்! அப்போதுதான் எங்களுக்கான முழு சமூக விடுதலை கிடைக்கும்" என ஆணித்தரமாக அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

இந்தக் கோரிக்கைகளின் அடிப்படையில், சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவனைத் தொடர்புகொண்டோம். தொடர்ந்து நமது அழைப்பை ஏற்காத சூழ்நிலையில், தி.மு.க மகளிரணி துணைச் செயலாளரும், தமிழக அரசின் முன்னாள் சமூக நலவாரியத் தலைவருமாக இருந்த கவிஞர் சல்மாவிடம் பேசினோம். ``அரசுப் பணிகளில் எங்களுக்கும் இட ஒதுக்கீடு வேண்டும் எனக் கோரி கோர்ட் வரைக்கும் இன்று திருநங்கைகள் சென்றிருக்கிறார்கள் என்றால் அதற்கான துணிவைக் கொடுத்ததே தி.மு.க அரசாங்கம்தான்! பல்வேறு பெயர்களில் கேலிசெய்யப்பட்ட மூன்றாம் பாலினத்தவர்களுக்கு திருநங்கை, திருநம்பி என சூட்டியும், கடந்த 2008-ம் ஆண்டிலேயே தமிழ்நாடு திருநங்கைகள் நலவாரியத்தை உருவாக்கி அவர்களுக்கான சமூக அங்கீகாரத்தைத் தந்தவர் கலைஞர்தான்.

தி.மு.க மகளிரணி துணைச் செயலாளரும், தமிழக அரசின் முன்னாள் சமூக நலவாரிய தலைவருமாக இருந்த கவிஞர் சல்மா
தி.மு.க மகளிரணி துணைச் செயலாளரும், தமிழக அரசின் முன்னாள் சமூக நலவாரிய தலைவருமாக இருந்த கவிஞர் சல்மா

அவர் வழியில்தான் தற்போது முதலமைச்சர் ஸ்டாலினும் அனைவருக்குமான ஆட்சி நடத்திக்கொண்டிருக்கிறார். தமிழ்நாடு திருநங்கைகள் நலவாரியத்தின் புதிய அலுவல் சாரா உறுப்பினர்களாக 13 திருநங்கைகளைப் புதிதாக நியமித்திருக்கிறார். திருநங்கைகள் கோரிக்கை வைத்த உடனே, அரசுப் பேருந்துகளில் பெண்களோடு சேர்த்து திருநங்கைகளுக்கும் இலவச பயணத்துக்கு வழிவகை செய்துகொடுத்தார். நடந்த முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க சார்பில் திருநங்கைகளும் போட்டியிட வாய்ப்பு கொடுத்ததன் மூலம், திருச்செங்கோட்டில் திருநங்கை ரியாவும், வேலூரில் திருநங்கை கங்காவும் வெற்றிபெற்று இன்று மக்கள் பணி செய்துவருகிறார்கள். எனவே, திருநங்கைகள் முன்வைத்திருக்கும் இந்த நியாயமான கோரிக்கையை நிச்சயம் முதலமைச்சர் ஸ்டாலின் விரைவில் நிறைவேற்றுவார்" எனத் தெரிவித்தார்.