Published:Updated:

`உள்ளாட்சியில் இடஒதுக்கீடு இல்லையென்றால்..?!' -கொந்தளிக்கும் செ.கு.தமிழரசன்

இடஒதுக்கீடு என்பது அரசியல் சாசனம் அங்கீகரித்த ஒன்று. இதை யாரும் எடுத்துவிட முடியாது.

செ.கு.தமிழரசன்
செ.கு.தமிழரசன்

தமிழகத்தில், உள்ளாட்சித் தேர்தலுக்கான ஏற்பாடுகள் கனஜோராக நடைபெற்று வருகின்றன. அரசியல் கட்சிகளும் விருப்ப மனுக்களைப் பெறும் திருவிழாவைத் தொடங்கியுள்ளதால், தேர்தல் களம் களைகட்டியுள்ளது. மூன்றாண்டுகளுக்குப் பிறகு, ஒரு லட்சத்துக்கும் அதிகமான உள்ளாட்சிப் பதவிகளுக்கு நடைபெறும் தேர்தல் என்பதால், தோராயமாக சுமார் 10 லட்சம் பேர் தேர்தலில் களம் காண்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம்
தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம்

`டிசம்பர் 2-ம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணை வெளியிடப்படும்' என இன்று உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு தேர்தல் ஆணையம் உத்தரவாதம் அளித்துள்ள நிலையில், இடஒதுக்கீடு முறையை ஒழுங்காகக் கடைபிடிக்கவில்லை என்றால், நீதிமன்றத்துக்கு செல்லப்போவதாக இந்திய குடியரசுக் கட்சித் தலைவர் செ.கு.தமிழரசன் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செ.கு.தமிழரசனிடம் பேசினோம். ``உள்ளாட்சித் தேர்தலை நடத்தியே ஆக வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். தேர்தல் நடைபெறாததால், மத்திய அரசிடமிருந்து நமக்கு வரவேண்டிய சுமார் 15 ஆயிரம் கோடி ரூபாய் நிதி முடக்கப்பட்டுள்ளது. சாமானியர்களின் அதிகாரம் தடுக்கப்பட்டுள்ளது. அதேவேளையில், உள்ளாட்சித் தேர்தலில் இடஒதுக்கீடு முறை சரியாகக் கடைபிடிக்கப்பட வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கிறோம்.

செ.கு.தமிழரசன்
செ.கு.தமிழரசன்

தற்போதுள்ள உள்ளாட்சித் தேர்தல் முறையில், மாநகராட்சித் துணை மேயர் முதல் ஊராட்சி துணைத்தலைவர் வரை, துணைப் பதவிகளுக்கு இடஒதுக்கீடு முறை கடைபிடிக்கப்படுவதில்லை. இது, 1989-ல் இயற்றப்பட்ட பஞ்சாயத்துராஜ் சட்ட திட்டத்துக்கு எதிரானது. நகரப் பஞ்சாயத்துச் சட்டத்தில், தேர்தல் முறையை மாநில அரசே தீர்மானித்துக்கொள்ளலாம் எனக் கூறப்பட்டுள்ளதே தவிர, இதற்காக இடஒதுக்கீடு முறையை நீக்கலாம் எனக் கூறவில்லை. இட ஒதுக்கீடு என்பது அரசியல் சாசனம் அங்கீகரித்த ஒன்று. இதை யாரும் எடுத்துவிட முடியாது.

`அம்மா இருந்தவரை உழைத்தவர்களுக்கு சீட் கிடைத்தது..இனி?’- உள்ளாட்சி அரசியலால் கலங்கும் அ.தி.மு.க

ஆந்திரா, கர்நாடகா, மத்தியப்பிரதேசம் எனப் பல மாநிலங்களிலும் துணைப் பதவி இடங்களுக்கு இட ஒதுக்கீடு முறையை அமல்படுத்துகின்றனர். ஒடிசாவில் ஒருபடி மேலே போய், மாநகராட்சி நிலைக்குழுக்களிலும் இட ஒதுக்கீட்டைக் கொண்டுவந்துள்ளனர். இதற்காக சட்டமும் இயற்றியுள்ளனர். உள்ளாட்சிப் பதவிகளிலுள்ள துணை மேயர், துணைத் தலைவர் பதவியிடங்களில் இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டுமென்பதுதான் எங்களுடைய நெடுநாள் கோரிக்கை. இதன் மூலமாக, பட்டியலின சமூக மக்கள் மட்டுமல்லாமல், இட ஒதுக்கீட்டால் பயன்பெறும் அனைத்து சமூகத்தினரும் அரசு அதிகாரத்தில் சட்டரீதியாக அமர முடியும். சமூகநீதி பற்றிப் பேசும் தி.மு.க., அ.தி.மு.க. உள்ளிட்ட அனைத்து கட்சிகளுக்கும் இந்தக் கோரிக்கையை முன்வைக்கிறோம்.

செ.கு.தமிழரசன்
செ.கு.தமிழரசன்

மாநில தேர்தல் ஆணையம், உள்ளாட்சி, மாநகராட்சி, நகராட்சி செயலாளர்கள், ஆளுங்கட்சி, எதிர்க்கட்சித் தலைவர்களுக்குக் கடிதமாகவும் அனுப்பியுள்ளோம். இடஒதுக்கீட்டு முறையைக் கடைபிடிக்காமல் உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணை வெளியிடப்பட்டால், நிச்சயமாக அதை எதிர்த்து நீதிமன்றம் செல்வோம்.

2016-ல் உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டபோது, உள்ளாட்சிப் பதவிகளில் பழங்குடியினருக்கு முறையாக இடஒதுக்கீடு பின்பற்றப்படவில்லை என நீதிமன்றத்தில் தி.மு.க வழக்கு தொடர்ந்தது. பலகட்ட தடைகளைத் தாண்டி, மூன்றாண்டுகளுக்குப் பிறகு, உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில், உள்ளாட்சி துணைப் பதவிகளில் இட ஒதுக்கீட்டை அமல்படுத்தவில்லை என்றால் நீதிமன்றம் செல்லப்போவதாக செ.கு.தமிழரசன் கூறியிருப்பது அரசியல் வட்டாரத்தில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.