Published:Updated:

விழுப்புரம்:`சசிகலா குடும்பம் அடித்த கொள்ளையால்தான் அம்மா சிறைக்குப் போனாங்க!' - சி.வி.சண்முகம்

சி.வி.சண்முகம்
சி.வி.சண்முகம் ( தே.சிலம்பரசன் )

விழுப்புரம் அ.தி.மு.க மாவட்ட கழகம் சார்பாக, இன்று சசிகலாவுக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

சசிகலா, அ.தி.மு.க நிர்வாகிகளிடையே தொலைபேசியில் உரையாடும் ஆடியோக்கள் வெளியாகி, கட்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திவந்தது. அதனால், சசிகலாவுடன் தொலைபேசியில் பேசிய முன்னாள் அமைச்சர் ஆனந்தன் உள்ளிட்ட அ.தி.மு.க நிர்வாகிகள் 15 பேர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்டனர்.

இந்தநிலையில், விழுப்புரம் அ.தி.மு.க கட்சி அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தலைமையில் இன்று (17.06.2021) ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் பேசிய சி.வி.சண்முகம், "ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளரின் தலைமையில் அ.தி.மு.க இயக்கம் சிறப்பாகச் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. ஆடுன காலும், பாடிய வாயும் சும்மா இருக்காது. மீண்டும் இந்த இயக்கத்தை எப்படியாவது அபகரித்து, கொள்ளையடிக்கலாம் என்று திட்டம் போடும் சசிகலாவுக்கும் அவரது குடும்பத்துக்கும் எந்தக் காலத்திலும், எந்த நிலையிலும் கட்சியில் சம்பந்தமில்லை என தெளிவுபடுத்தியாகிவிட்டது. அப்படியிருக்க, தினந்தோறும், தொலைபேசியில் பேசி, நாடகத்தை நடத்திக்கொண்டு, வேஷம் போட்டுக்கொண்டு, அ.தி.மு.க தொண்டர்களை ஏமாற்றி இந்தக் கட்சியை கைப்பற்றி 'கொள்ளையடிக்கலாம்' என்ற கனவு எந்தக் காலத்திலும் நிறைவேறாது.

சசிகலா
சசிகலா
அம்மா ஏன் சிறைக்குப் போனாங்க..? இந்தக் குடும்பம் அடித்த கொள்ளையால் அம்மா மீது வீண்பழி ஏற்பட்டது. அதை ஏற்க வேண்டிய நிலை ஏற்பட்டுத்தான், அம்மா சிறைக்குப் போனாங்க. அந்தப் பாவம்தான், அவங்களை சும்மா விடலை. நாலு வருஷம் சிறைக்குப் போனாங்க.
சி.வி.சண்முகம்

சாதாரண உறுப்பினர் அட்டை வைத்துள்ள தொண்டர்கள் உள்ளவரை... இவர்களின் கனவு ஒருபோதும் பலிக்காது. நமது எதிரி தி.மு.க மட்டுமல்ல, நம் கூடவே இருந்து, வளர்ந்து, தங்களை பலப்படுத்திக்கொண்டு, அதிகாரத்தைச் சுவைத்தவர்கள்; தொண்டர்கள் ரத்தத்தை வியர்வையாகப் பிழிந்தெடுத்தவர்கள். அந்த துரோகிகளைக் கண்டு, ஜாக்கிரதையாக நம் இயக்கத்தை நடத்த வேண்டும்.

சசிகலா குடும்பத்தைச் சார்ந்தவர்கள், குறிப்பாக மன்னார்குடி குடும்பத்தைச் சார்ந்தவர்களை எக்காரணம் கொண்டும் அண்டவிடக் கூடாது. ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் மூலம் சென்னையில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின்படி, இயக்கத்துக்குச் சம்பந்தமில்லாத, கழகத்தில் சாதாரண உறுப்பினராகக்கூட இல்லாத, உறுப்பினர் ஆவதற்கான தகுதியே இல்லாத, நான்கு ஆண்டுக்காலம் ஊழல் வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருந்த சசிகலாவுக்கு எந்தத் தகுதியும் இல்லை. தார்மிக உரிமையும் இல்லை.

`கருவாடு கூட மீன் ஆகும்.. சசிகலா, அதிமுக உறுப்பினர் ஆக  முடியாது!’ - சி.வி.சண்முகம் காட்டம்

தலைமைக் கழகத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை, விழுப்புரம் மாவட்டக் கழகம் சார்பாக, இங்கு வந்துள்ள நிர்வாகிகள் சார்பாக வரவேற்று ஏற்றுக்கொள்கிறோம்" எனக் கூறிய சி.வி.சண்முகம், தீர்மானத்தை நிர்வாகிகள் முன் வாசித்துக் காட்டினார். அதைத் தொடர்ந்து விழுப்புரம் மாவட்டக் கழகம் சார்பாக தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

அடுத்த கட்டுரைக்கு