Published:Updated:

`பா.ஜ.க-வைப் பார்த்து அதிகாரிகள் பயப்படுகின்றனர்!' - டெல்லி காவல்துறையை விமர்சித்த முன்னாள் ஐ.பி.எஸ்

அஜய் ராஜ் ஷர்மா ஐ.பி.எஸ்
அஜய் ராஜ் ஷர்மா ஐ.பி.எஸ் ( twitter )

``நான் அவரிடம் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என விளக்கம் கேட்டிருப்பேன். அதற்கு சரியான பதிலை அவர் அளிக்காதபட்சத்தில், நான் அவரை இடைநீக்கம் செய்திருப்பேன்."

டெல்லியின் வடகிழக்குப் பகுதிகளில் குடியுரிமை திருத்தச் சட்டத்தின் ஆதரவாளர்களுக்கும் எதிர்ப்பாளர்களுக்கும் இடையிலான வன்முறையில் 40-க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டனர். மேலும், 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த வன்முறையைக் கட்டுப்படுத்த காவலர்கள் திணறியதாகவும் தாக்குதல் நடத்தியவர்களுக்கு ஆதரவாக செயல்பட்டதாகவும் டெல்லி காவல்துறையினர்மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், தலைநகரின் முன்னாள் காவல் ஆணையர் அஜய்ராஜ் ஷர்மா, வடகிழக்குப் பகுதிகளில் குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக நடந்த வன்முறைகளைக் குறிப்பிட்டு காவல்துறையினரை கடுமையாக விமர்சித்துள்ளார்.

அனுராக் தாக்கூர்
அனுராக் தாக்கூர்

அஜய் ராஜ் ஷர்மா, டெல்லியின் காவல் ஆணையாளராக 1999 முதல் 2002 வரை பணியாற்றினார். எல்லை பாதுகாப்புப் படையின் இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார். இவர் சமீபத்தில் தி வயர் பத்திரிகைக்கு அளித்துள்ள பேட்டியில், ``பா.ஜ.க-வைச் சேர்ந்த மத்திய இணை அமைச்சரான அனுராக் தாக்கூர், பர்வேஷ் வர்மா மற்றும் கபில் மிஸ்ரா ஆகியோர் சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருக்கும்போதே கைது செய்யப்பட்டிருக்க வேண்டும். ஒருவர் இந்த உரைகளைப் பதிவு செய்திருக்க வேண்டும். நான் பதவியில் இருந்திருந்தால் உள்துறை அமைச்சகத்துக்குத் தகவல் தெரிவித்த பின்னர் அனுராக் தாகூரை கைது செய்திருப்பேன். கபில் மிஸ்ரா சட்டமன்ற உறுப்பினர்கூட கிடையாது. அவரைக் கைது செய்வதில் எந்தப் பிரச்னையும் இல்லை" என்று கூறியுள்ளார்.

`வன்முறை வாழ்க்கையின் ஒரு பகுதி!'- டெல்லி குறித்து அமைச்சரின் சர்ச்சை பதில்

முன்னதாக, டெல்லி தேர்தல் தொடர்பான பிரசாரக் கூட்டத்தில் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர், ``துரோகிகளை சுட்டுவிடுங்கள்" எனப் பேசியிருந்தார். அதேபோல பா.ஜ.க எம்.பி பர்வேஷ் வர்மா,``குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டக்காரர்கள் உங்களுடைய வீடுகளுக்குள் புகுந்து உங்கள் மனைவி மற்றும் சகோதரிகளைப் பாலியல் வன்கொடுமை செய்வார்கள்" எனப் பேசியிருந்தார். இவர்களைத் தொடர்ந்து டெல்லி பா.ஜ.க-வின் முக்கிய நபரான கபில் மிஸ்ராவும், ``டெல்லி போலீஸ் உட்பட யாருடைய பேச்சையும் நாங்கள் கேட்க மாட்டோம். சி.ஏ.ஏ எதிர்ப்பு ஆர்ப்பாட்டக் காரர்களால் ஆக்கிரமிக்கப்பட்ட அனைத்துச் சாலைகளையும் நாங்கள் விடுவிப்போம்” உள்ளிட்ட பல கருத்துகளைத் தெரிவித்திருந்தார்.

டெல்லி போலீஸார்
டெல்லி போலீஸார்

மிஸ்ரா பேசும்போது அவரது அருகில் நின்றுகொண்டிருந்த துணை காவல் ஆணையாளர் வேத் பிரகாஷ் சூர்யாவைக் குறிப்பட்ட அஜய், ``நான் அவரிடம் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என விளக்கம் கேட்டிருப்பேன். அதற்கு சரியான பதிலை அவர் அளிக்காதபட்சத்தில், நான் அவரை பணியிடைநீக்கம் செய்திருப்பேன். காவல்துறையினர் திறம்பட முடிவுகளை எடுப்பதில் பிரச்னை உள்ளது. காவல்துறையினர் விரைவாக செயல்பட்டிருந்தால், வன்முறையை தடுத்திருக்க முடியும்" என்றும் குறிப்பிட்டார்.

``ஷஹீன் பாக்கில் போராட்டங்களுக்கு அனுமதி அளித்திருக்கக் கூடாது. இதைத் தடுத்திருந்தால் பல்வேறு பிரச்னைகள் நடந்திருக்காது. சாலைகளை வழிமறித்து சிரமங்களை ஏற்படுத்த யாருக்கும் உரிமை கிடையாது" என்றவர் ``ஆளும் பா.ஜ.க-வைப் பார்த்து காவல்துறையினர் அச்சப்படுகின்றனர்" என்றும் கூறியுள்ளார்.

`துரோகிகளை சுட்டுத் தள்ளுங்கள்!’ - டெல்லி மெட்ரோவில் எதிரொலித்த வன்முறை கோஷங்கள்
அடுத்த கட்டுரைக்கு