Published:Updated:

``குடியுரிமையை மனிதாபிமான அடிப்படையில் வழங்க வேண்டும்!'' - முன்னாள் நீதிபதி அரிபரந்தாமன்

குடியுரிமைத் திருத்தச் சட்டம் தொடர்பாக ஓய்வுபெற்ற முன்னாள் நீதிபதி அரிபரந்தாமன் பேசியிருக்கிறார்.

அரிபரந்தாமன்
அரிபரந்தாமன்

குடியுரிமை திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டதிலிருந்து அதைப் பற்றிய விவாதங்களும் அதற்கு எதிரான போராட்டங்களும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் குடியுரிமை திருத்தச் சட்டம், அதற்கு வருகிற எதிர்ப்பு தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி அரிபரந்தாமனிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாக பா.ஜ.க சொல்கிற விஷயங்களை எப்படிப் பார்க்கிறீர்கள்?

இந்தச் சட்டம் இந்தியக் குடிமக்களைப் பற்றியது இல்லை என்கிறார்கள். ஆனால் என்.ஆர்.சி, என்.பி.ஆர் உடன் சேர்த்துப் பார்த்தால் இது அனைவரையும் பற்றியதும்தான்.

இந்தச் சட்டம் மூன்று நாடுகளின் அகதிகளைப் பற்றியதுதான் என்கிறார்கள். உயிர்வாழ வழியின்றி இந்தியாவுக்கு வரும் அகதிகளிடம் உன் மதத்தைச் சொல், நீ முஸ்லிம் என்றால் உனக்குக் குடியுரிமை கிடையாது என மதத்தை அடிப்படையாக வைத்துச் சொல்லலாமா என்பதே இங்குள்ள கேள்வி. இலங்கையில் தமிழர்கள் கொல்லப்படுகிறார்கள், மியான்மரில் ரோஹிங்யா முஸ்லிம்கள் கொல்லப்படுகிறார்கள். இரண்டு நாடுகளிலும் பௌத்தம்தான் அரச மதம். இதுவும் மதரீதியான ஒடுக்குமுறைதானே! இதை எப்படி நிராகரித்தார்கள்?

`மம்தா உங்களுக்கு என்ன ஆனது... வெறுப்பை என்னிடம் காட்டுங்கள்!' - டெல்லியில் நீண்ட உரை கொடுத்த மோடி

தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC), தேசிய மக்கள்தொகை பதிவேடு (NPR) என்பவை 100 கோடிக்கும் அதிகமான இந்தியர்கள் சம்பந்தப்பட்ட நடவடிக்கை. தற்போது இதற்கான தேவை என்ன?

NRC, NPR இரண்டுமே இன்று தேவையில்லை என்கிற கருத்து நிலவுகிறது. ஏற்கெனவே ஆதார் கார்டு, வாக்காளர் அட்டை உள்ளது. இதை வைத்தே அவர்கள் தகவல்களை உருவாக்கிக்கொள்ளலாம். அது அவர்களின் நோக்கமல்ல. இப்போது அஸ்ஸாமில், மேற்கு வங்கத்தில் மதத்தை அடிப்படையாக வைத்து வாக்கு வங்கி அரசியல் நடத்த வேண்டும் என்பதே அவர்களின் நோக்கம்.

அதற்கு உகந்த சூழ்நிலை இந்தியாவில் நிலவுகிறதா?

இதற்கு அவசியமே இல்லை. இதில் ஒரு அச்சமும் இருக்கிறது. இது அகதிகள் தொடர்பானது அல்ல. இதன் மூலம் இந்தியக் குடிமக்களை, குடிமக்கள் இல்லை என அறிவித்துவிடுவார்களோ என்கிற அச்சம்தான் மக்களிடத்தில் உள்ளது. பெரும்பான்மை மக்களிடம் சரியான ஆவணங்கள் இருக்காது. குடியுரிமை திருத்தச் சட்டம் வெறும் முதல்படிதான். இதன்மூலம் முஸ்லிம்களுக்கு குடியுரிமை மறுக்கப்பட்டு அவர்களைத் தடுப்புக் காவலில் வைக்க வேண்டும், அதுதான் அவர்களின் எண்ணம். ஈழத் தமிழர்கள், தற்போதே அந்த நிலையில்தான் இருக்கிறார்கள். இனி முஸ்லிம்களையும் அவ்வாறு வைக்க வேண்டும் என்பதுதான் அவர்களின் எண்ணம்.

அரிபரந்தாமன்
அரிபரந்தாமன்

இது கொண்டு வரப்பட்டால் யார் அதிகம் பாதிக்கப்படுவார்கள்?

மதத்தை வைத்து அரசியல் என்றால் சாதாரண மக்கள் அனைவருமே பாதிக்கப்படுவர். முதல் பாதிப்பு முஸ்லிம்களுக்கு என்றாலும் அதோடு நிற்காது. மாட்டுக்கறி, கும்பல் கொலைகள், அயோத்தி எனத் தொடர்ந்து முஸ்லிம்களைக் குறிவைத்து செய்யும் அரசியலின் தொடர்ச்சியே இது. இன்று வரலாறு காணாத பொருளாதார மந்தநிலை, நிதி நெருக்கடி, விலையேற்றம் உள்ளது. இவற்றையெல்லாம் தவிர்த்துவிட்டு மதத்தையும் குடியுரிமையையும் நாம் பேசிக் கொண்டிருக்கிறோம். அதுவே அவர்களுக்கு வெற்றிதான். லாபகரமான பொதுத்துறை நிறுவனங்களை எல்லாம் விற்கப்போகிறார்கள். இதைப் பற்றியெல்லாம் நாம் தற்போது பேசவில்லை.

NRC, NPR தங்கள் மாநிலத்தில் மேற்கொள்ளப்படாது எனச் சில மாநில அரசுகள் தெரிவித்துள்ளன. இதற்கான் அதிகாரம் உண்மையில் யாரிடத்தில் உள்ளது?

NRC, NPR, மக்கள் தொகைக் கணக்கெடுப்பு (சென்சஸ்) என மூன்று விதமான கணக்கெடுப்பு உள்ளது. சென்சஸ் வேண்டாம் என யாரும் சொல்லவில்லை. சென்சஸ் போன்ற போர்வையில் குடியுரிமை சம்பந்தமாக இந்த நடவடிக்கையை இவர்கள் மேற்கொள்வதுதான் ஆட்சேபனை. இதற்கான செயல்திட்டம் மாநில அரசிடம்தான் உள்ளது. சில மாநில அரசுகள் கொள்கை முடிவு எடுத்து செயல்படுத்த மாட்டோம் எனச் சொல்லியிருக்கிறார்கள். ஆனால், அது தொடர்பான அதிகாரம் மத்திய அரசிடம்தான் உள்ளது. இந்திய வரலாற்றிலே முதல்முறையாக மாநில அரசுகள் மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றன. இதற்கு என்ன விளைவுகள் ஏற்படும் என்பதைத் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

குடியுரிமை திருத்தச் சட்டம்: எளிதானப் புரிதலுக்கு விகடனின் சிறப்புக் கவரேஜ்!

இந்தச் சட்டத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. சட்டபூர்வமாக இதை எவ்வாறு அணுகலாம்?

தனிப்பட்ட முறையில் அரசியல் பிரச்னைகளுக்கு நீதிமன்றம் மூலம் தீர்வு என்பதில் எனக்கு உடன்பாடில்லை. அரசியல் பிரச்னைகளுக்கு அரசியல் தீர்வுதான். மக்களுக்கு, தேர்தல் ஆணையம் தொடங்கி உச்ச நீதிமன்றம் வரை அனைத்து அமைப்புகளின் மீதும் நம்பிக்கை குறைந்து வருகிறது. காஷ்மீர் வழக்குகளை எவ்வாறு கையாண்டுள்ளார்கள், எப்போது இதை விசாரித்து முடிப்பார்கள் என்பது தெரியவில்லை. காந்தி சுதந்திரம் கேட்டு எந்த நீதிமன்றத்தையும் நாடவில்லை. அம்பேத்கரும் பெரியாரும் சாதி ஒழிப்பு, ஆலய நுழைவு கேட்டு எந்த நீதிமன்றத்திலும் வழக்கு நடத்தவில்லை. மதத்தின் அடிப்படையிலான அரசியல் பிரச்னைக்கு நீதிமன்றத்தைவிட மக்கள் மன்றம்தான் சிறந்தது.

இந்தச் சட்டம் எந்த வழிகளில் அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிராக உள்ளது?

அரசியலமைப்புச் சட்டத்தில் சமத்துவம் மற்றும் மதச்சார்பின்மை என்பது இன்றியமையாத அடிப்படைக் கோட்பாடு. அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 5 - 11 குடியுரிமை பற்றி பேசுகிறது. அரசியலமைப்புச் சட்டத்திலும், 1955 குடியுரிமைச் சட்டத்திலும் அதற்குப் பிறகு மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள் எதிலுமே மதம் அளவுகோலாக வைக்கப்படவில்லை. அடிப்படை உரிமைகளில் கல்வி, வேலைவாய்ப்பு, பேச்சுரிமை, எழுத்துரிமை உள்ள இடத்தில் மட்டுமே குடிமக்கள் என்பது உள்ளது. ஆனால், சட்டத்தின் முன் அனைவரும் சமம், வாழ்வதற்கான சுதந்திரம், மதச் சுதந்திரம் என எங்குமே குடிமக்கள் என்கிற வார்த்தை குறிப்பிடப்படவில்லை. இவை இந்தியாவில் உள்ள அனைவருக்கும் பொதுவானது.

அரிபரந்தாமன்
அரிபரந்தாமன்

மெரினா ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது பீட்டா ராதா ராஜன், தற்போது ஒய்.ஜி.மகேந்திரன் தெரிவித்துள்ள கருத்துகளை எப்படிப் பார்க்கிறீர்கள்?

இவர்களைப் போன்றவர்கள் சமூகத்தில் எப்போதும் இருக்கத்தான் செய்வார்கள். இவர்களுக்கு என்ன சமூகப் பின்னணி உள்ளது? ஒய்.ஜி.மகேந்திரன் என்ன அரசியல்களம் கண்டிருக்கிறார் எனத் தெரியவில்லை.

குடியுரிமை சட்டத்தைப் பற்றி பிரதமரும் உள்துறை அமைச்சரும் பேசியவை முரண்பாடாக இருப்பதாக விமர்சிக்கப்பட்டுள்ளதே?

100 சதவிகிதம் முரண்படுகிறது. என்.ஆர்.சிக்கும் - குடியுரிமைச் சட்டத்துக்கும் தொடர்பில்லை எனப் பிரதமர் சொல்கிறார். அமித் ஷா அதற்கு நேர் மாறாகப் பேசியிருக்கிறார். குடியுரிமைச் சட்டத்தை நிறைவேற்றிவிட்டு பின்னர் என்.ஆர்.சி மேற்கொள்வோம் எனப் பல மேடைகளிலும் நாடாளுமன்றத்திலுமே அமித் ஷா பேசியிருக்கிறார். அமித் ஷாவும் மோடியும் ஒன்று சொல்கிறார்கள். எடப்பாடி புதிதாக ஒன்று சொல்கிறார். இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை கொடுத்தால் அங்கிருந்து அனைவரும் இங்கு வந்துவிடுவார்கள் என முதல்வர் சொல்கிறார். இலங்கைத் தமிழர்கள் உலகம் முழுவதும் சென்றிருக்கிறார்கள். தமிழகம் ஆதரவுக் கரம் நீட்டவில்லை என்பதுதான் உண்மை.

அரிபரந்தாமன்
அரிபரந்தாமன்

அகதிகள் பிரச்னையை எவ்வாறு கையாள்வது?

அகதிகள் பிரச்னை ஒரு அரசியல் பிரச்னை. குடியுரிமை தருவது என்பதை மனிதாபிமான அடிப்படையில் அனைவருக்கும் வழங்க வேண்டும். மதம், இனம் என எதையும் அடிப்படையாக வைக்காமல் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் புகலிடம் வழங்கப்பட வேண்டும்.

இவ்வளவு எதிர்ப்புகளுக்குப் பிறகு மத்திய அரசு பின்வாங்கும் என நினைக்கிறீர்களா?

இந்த அரசு அரிதிப் பெரும்பான்மை கொண்டது. அவ்வளவு எளிதில் பின்வாங்குவார்கள் என நான் நினைக்கவில்லை. போராட்டங்கள் பல கடுமையான கட்டங்களை அடைந்தால்தான் இந்த அரசு பின்வாங்கும் என நினைக்கிறேன்.

`என்.ஆர்.சிக்கும் என்.பி.ஆருக்கும் எந்தத் தொடர்பும் இல்லை; பிரதமர் சொன்னது சரிதான்!' - அமித் ஷா

அரசியலமைப்புச் சட்டத்துக்கு அச்சுறுத்தல் வந்துள்ளதாக எதிர்க்கட்சிகள் சொல்லிவருகின்றனவே?

அரசியலமைப்புச் சட்டத்துக்கு எப்போதும் அச்சுறுத்தல் இருந்துவந்துள்ளது. அது மிகப்பெரிய விவாதம். பா.ஜ.க-வுக்கு ராஜ்ய சபையில் இன்னும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. அப்படி ஒருவேளை கிடைத்துவிட்டால் இந்தியாவை இந்து நாடாக அறிவித்து, மற்றவர்களை இரண்டாம் தர குடிமக்களாக்கிவிடுவார்கள். அதற்கான சாத்தியம் தற்போது இல்லை என்பதால்தான் அமைதியாக இருக்கிறார்கள்.