Published:Updated:

``ரஜினியிடம் என்ன இருக்கிறது... மக்களுக்குத் தேவை ஆன்மிகமில்லை'' - விளாசும் மார்க்கண்டேய கட்ஜு!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
மார்க்கண்டேய கட்ஜு - ரஜினிகாந்த்
மார்க்கண்டேய கட்ஜு - ரஜினிகாந்த்

``சிவாஜி கணேசன் நடித்த படம் ஒன்றைப் பார்க்கச் சென்றிருந்தேன். அந்தப் படத்தின் தொடக்கத்தில் சிவாஜி கணேசனின் கால்களைத்தான் காட்டினார்கள் (கால்கள் மட்டும்தான்). அதற்கே மக்கள் பயங்கரமாக ஆரவாரம் செய்தார்கள்.''

சர்ச்சைக் கருத்துகளைத் தொடர்ந்து பதிவிட்டு, அதன் மூலம் செய்திகளில் அடிக்கடி இடம்பிடிப்பவர், உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு. ஜல்லிக்கட்டுப் போராட்டம், விவசாயிகள் போராட்டம் எனப் பல விஷயங்களில் தமிழர்களுக்கு ஆதரவான கருத்துகளைத் தனது சமூக வலைதளப் பக்கங்களில் பதிவிட்டு, தமிழர்கள் மத்தியில் கவனம்பெற்றவர் கட்ஜு. அதேநேரத்தில், கடந்த சில மாதங்களுக்கு முன்பாக `தமிழர்கள் இந்தி கற்க வேண்டும்' என்று தொடர்ச்சியாகச் சில பதிவுகளை இட்டு, `இந்தியைத் திணிக்கிறார்' என்ற குற்றச்சாட்டுக்கும் ஆளானவர் இவர். இந்தநிலையில் தற்போது ரஜினியின் அரசியல் வருகை குறித்துச் சில கருத்துகளைப் பதிவிட்டு மீண்டும் கவனம் பெற்றிருக்கிறார் கட்ஜு.

மார்க்கண்டேய கட்ஜு
மார்க்கண்டேய கட்ஜு
`மெரினா புரட்சி' முதல் மொழிப் பிரச்னை வரை... மார்க்கண்டேய கட்ஜுவும் தமிழர்களும்!

அமிதாப் பச்சனைப்போல ரஜினி!

ஏற்கெனவே 2017-ம் ஆண்டு ரஜினிக்கு எதிராகச் சில கருத்துகளைப் பதிவிட்டு, ரஜினி ரசிகர்களின் கோபத்துக்கு ஆளானவர் கட்ஜு. 2017-ம் ஆண்டு ரஜினி குறித்து, ``எனக்குத் தென்னிந்தியர்கள் மீது நல்ல மரியாதை உண்டு. ஆனால், அவர்கள் சினிமா நட்சத்திரங்களை தெய்வமாக பாவித்து வழிபடுவது ஏன் என்பது புரியவில்லை. 1967-68 காலகட்டத்தில் நான் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் படித்து வந்தபோது தமிழ் நண்பர் ஒருவருடன் சிவாஜி கணேசன் நடித்த படம் ஒன்றைப் பார்க்கச் சென்றிருந்தேன். அந்தப் படத்தின் தொடக்கத்தில் சிவாஜி கணேசனின் கால்களைத்தான் காட்டினார்கள் (கால்கள் மட்டும்தான்). அதற்கே மக்கள் பயங்கரமாக ஆரவாரம் செய்தார்கள்.

அதேபோல தற்போது பல தென்னிந்தியர்கள் ரஜினிகாந்த் மீது பைத்தியமாக இருக்கிறார்கள். சிலர், அவர் அரசியலுக்கு வர வேண்டும் எனவும், முதல்வராக வேண்டும் எனவும் கூறிவருகின்றனர். ஆனால், ரஜினியிடம் என்ன இருக்கிறது... மக்களின் வறுமையைப் போக்கவும், வேலையில்லாத திண்டாட்டத்தைத் தீர்க்கவும், ஊட்டச்சத்துக் குறைபாடு, சுகாதாரப் பராமரிப்பு, விவசாயிகளின் கஷ்டம் போன்றவற்றைத் தீர்க்கவும் ஏதாவது தீர்வு ரஜினிகாந்த்திடம் இருக்கிறதா... அவரிடம் எதுவுமே இல்லை என்றுதான் நான் நினைக்கிறேன். அப்புறம் ஏன் மக்கள் அவர் அரசியலுக்கு வர வேண்டும் என விரும்புகிறார்கள்?'' என்று பதிவிட்டிருந்தார். அதோடு மட்டும் கட்ஜு நிறுத்திவிடவில்லை. மேலும்,

அமிதாப் பச்சன்போல ரஜினிகாந்த் தலையிலும் எதுவும் இல்லை.
மார்க்கண்டேய கட்ஜு
ரஜினி
ரஜினி

கட்ஜு முதலில் சொல்லியிருந்த கருத்துகளைக்கூடப் பொறுத்துக்கொண்ட ரஜினி ரசிகர்கள், இறுதியாக அவர் சொன்ன கருத்தைக் கேட்டுக் கொதித்தெழுந்தனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ரஜினிக்கு ஆதரவு?!

இந்த ஆண்டின் தொடக்கத்தில் நடைபெற்ற `துக்ளக்’ பொன்விழாவில் பெரியார் குறித்து ரஜினி பேசியது பெரும் சர்ச்சையானது. தமிழகத்தின் முக்கியக் கட்சிகள், பெரியாரிய அமைப்புகள் ரஜினி மன்னிப்புக் கேட்க வேண்டுமென வலியுறுத்தின. அந்தச் சமயத்தில் பெரியார் குறித்து விவாதங்கள் சமூக வலைதளங்களில் எழுந்திருந்தன. அப்போது பெரியார் குறித்த கருத்து ஒன்றைப் பதிவிட்டிருந்தார் மார்க்கண்டேய கட்ஜு. அந்தப் பதிவில்,

பெரியாரைப் புகழ்பவர்கள் தங்கள் தலையில் ஒன்றும் இல்லை என்பதை உணராதவர்கள். அவரை மிகப்பெரிய தலைவர்போல சித்திரிக்கிறார்கள். ஆனால், பெரியார் ஆங்கிலேயருக்கு ஏஜென்ட்டாக இருந்தவர். ஆங்கிலேயர்கள் என்ன சொன்னாலும் அதற்கு ஒத்துப்போனவர் பெரியார்.
கட்ஜூ
பெரியார்
பெரியார்
Vikatan

கட்ஜு, இந்தப் பதிவில் ரஜினிக்கு ஆதரவளிப்பதாக எங்கும் குறிப்பிடவில்லையென்றாலும், ரஜினிக்கு ஆதரவான கருத்தாகவே இது பார்க்கப்பட்டது. கட்ஜுவின் இந்தப் பதிவை ரஜினி ரசிகர்கள் பலரும் பகிர்ந்தனர்.

மீண்டும் ரஜினியைச் சீண்டும் கட்ஜு!

ரஜினி தனது அரசியல் வருகை குறித்து, கடந்த டிசம்பர் 3-ம் தேதி அறிவித்திருந்தார். அதன் பின்னர், மார்க்கண்டேய கட்ஜு தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார். அந்தப் பதிவில், ``ரஜினிகாந்த் அரசியலுக்கு வருகிறார். அவரிடம் என்ன இருக்கிறது என்று மக்கள் உற்சாகமடைகிறார்கள்... மக்களின் முக்கியப் பிரச்னைகளைத் தீர்ப்பதற்கு அவரிடம் யோசனைகள் ஏதாவது இருக்கின்றனவா... அப்படி எதுவும் அவரிடம் இல்லை என்றுதான் நான் நினைக்கிறேன். தமிழக மக்கள் மிகவும் அறிவார்ந்தவர்கள். ஆனால், திரைப்பட நட்சத்திரங்கள்மீது மோகம்கொண்டிருக்கும் விஷயத்தில் மட்டும் முட்டாள்களாகத் தெரிகிறார்கள்'' என்று பதிவிட்டிருக்கிறார்.

தனது ஃபேஸ்புக் பக்கத்தில் ரஜினி குறித்து, ``ரஜினிகாந்த் பெரும்பாலும் அரசியலில், ஆன்மிகம் குறித்தே பேசுகிறார். மக்களுக்கு ஆன்மிகம் தேவைப்படவில்லை. ஆனால், வேலைகள், உணவு, சுகாதாரம், நல்ல கல்வி ஆகியவை தேவைப்படுகின்றன. இவற்றையெல்லாம் மக்களுக்குக் கொடுக்க அவரிடம் எந்த ஐடியாவும் இல்லை. ஆன்மிகம் பற்றிய அவரது பேச்சு, அவர் வெறும் வாய்ப் பேச்சுக்காரர்தான் என்பதைக் குறிக்கிறது. அவரது தலையில் எதுவும் இல்லை என்பதையும் காட்டுகிறது'' என்று பதிவிட்டிருக்கிறார்.

ரஜினி
ரஜினி
ரஜினி: `அரசியலுக்கு வந்தா நிம்மதி போயிடும்' டு `உயிரே போனாலும்...' - 1990 முதல் 2020 வரை!

இந்த இரண்டு கருத்துகளும் ரஜினி ரசிகர்களைக் கோபமடையச் செய்திருக்கின்றன. அந்தக் கோபத்தை அவரது பதிவின் கீழுள்ள கமென்ட் செக்‌ஷனில் காட்டிவருகிறார்கள் ரஜினி ரசிகர்கள்.

``தமிழகத்துக்கு வந்து பார்த்தால்தான் ரஜினி என்ன யோசனைகளை வைத்திருக்கிறார் என்பது தெரியும். எங்கேயோ உட்கார்ந்துகொண்டு சமூக வலைதளத்தில் பதிவிட்டுக்கொண்டிருந்தால் எப்படித் தெரியும்... இது போன்று பேசுபவர்களுக்கெல்லாம் இந்தத் தேர்தலில் ரஜினி தனது வெற்றியின் மூலம் பதிலளிப்பார்'' என்று ரஜினி ரசிகர்கள் பலரும் தங்களது எதிர்க் கருத்துகளைப் பதிவிட்டுவருகின்றனர்.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு