Published:Updated:

உ.பி: நீதியரசர்களின் நெஞ்சை உலுக்கிய புல்டோசர் நடவடிக்கை... அணுகுமுறையை மாற்றுமா யோகி அரசு?!

புல்டோசர் அரசியல்

வீடுகளை இடிக்கும் யோகி அரசின் புல்டோசர் அரசியலுக்கு ஓய்வுபெற்ற நீதிபதிகள் உட்பட பல தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

உ.பி: நீதியரசர்களின் நெஞ்சை உலுக்கிய புல்டோசர் நடவடிக்கை... அணுகுமுறையை மாற்றுமா யோகி அரசு?!

வீடுகளை இடிக்கும் யோகி அரசின் புல்டோசர் அரசியலுக்கு ஓய்வுபெற்ற நீதிபதிகள் உட்பட பல தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Published:Updated:
புல்டோசர் அரசியல்

உத்தரப்பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ.க அரசால் முடுக்கிவிடப்பட்டிருக்கும் புல்டோசர் அரசியலுக்கு, பல்வேறு தரப்பினரும் எதிர்வினை ஆற்றிவருகிறார்கள். இஸ்லாமியர்களின் இறைத்தூதர் முகமது நபி குறித்து பா.ஜ.க-வின் தேசிய செய்தித் தொடர்பாளராக இருந்த நுபுர் ஷர்மா தெரிவித்த கருத்துக்கு பல நாடுகள் கண்டனம் தெரிவித்தன.

நுபுர் சர்மா
நுபுர் சர்மா

அதையடுத்து, நுபுர் ஷர்மாவை கட்சியிலிருந்து பா.ஜ.க இடைநீக்கம் செய்தது. அவரை கைதுசெய்ய வேண்டும் என்று வலியுறுத்தி உத்தரப்பிரதேசம், சத்தீஸ்கர் உட்பட பல மாநிலங்களில் போராட்டங்கள் நடைபெற்றன. உத்தரப்பிரதேசத்தில் கான்பூர், சஹரான்பூர், பிரயாக்ராஜ் உள்ளிட்ட இடங்களில் கடந்த வெள்ளிக்கிழமை ( ஜூன் 10) போராட்டங்கள் நடைபெற்றன. அப்போது, சில இடங்களில் வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்தன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்த நிலையில், சட்டம் ஒழுங்கு குறித்து உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய முதல்வர் யோகி ஆதித்யநாத், ‘புல்டோசர் நடவடிக்கையைத் தொடருங்கள்’ என்று அதிரடியாக உத்தரவிட்டார். அதையடுத்து, போராட்டத்தில் பங்கேற்ற பலரின் வீடுகளை புல்டோசரைக் கொண்டு அதிகாரிகள் இடித்தனர். இன்னும் யார் யாருடைய வீடுகளை இடிக்கலாம் என்று அதிகாரிகள் பட்டியல் தயாரித்துவருவதாகவும் செய்திகள் கூறுகின்றன.

அஃப்ரீன் பாத்திமா
அஃப்ரீன் பாத்திமா

பிரயாக்ராஜில் நடைபெற்ற போராட்டத்தின்போது ஏற்பட்ட வன்முறைக்கு காரணமானவர் என்று காவல்துறையால் குற்றம்சாட்டப்பட்ட ஜாவேத் என்பவரின் வீடு இடிக்கப்பட்டது. ஜாவேத், வெல்ஃபர் பார்ட்டி ஆஃப் இந்தியா என்ற கட்சியின் முக்கிய நிர்வாகி ஆவார்.

அவரின் மகள் அஃப்ரீன் பாத்திமா, குடியுரிமை திருத்தச் சட்டம், ஹிஜாப் போராட்டம் உட்பட பல போராட்டங்களில் தீவிரமாகப் பங்கெடுத்தவர். மாணவர் அமைப்பின் தலைவராக இருக்கும் அஃப்ரீன் பாத்திமாவின் ஆலோசனையில்தான், அவரின் தந்தை போராட்டத்தில் ஈடுபட்டதாக பிரயாக்ராஜ் காவல்துறை குற்றம்சாட்டுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

காவல்துறையின் கூற்று உண்மையா.... இந்த குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இருக்கிறதா என்கிற விவாதங்கள் இருக்கட்டும். ஒருவர் குற்றம் செய்தார் என்றே வைத்துக்கொண்டாலும், அவர் மீது வழக்கு பதிவு செய்து, அதை நீதிமன்றத்தில் நிரூபித்து தண்டனை பெற்றுத்தருவதே சட்டத்தின் ஆட்சி. ஆனால், ஒருவரை குற்றவாளி என்று முத்திரை குத்திவிட்டு, அடுத்த நிமிடமே அவரது வீட்டை புல்டோசர் கொண்டு இடித்துத்தள்ளுவது எந்த ஊர் சட்டம் என்கிற கேள்வியை பலரும் எழுப்புகிறார்கள்.

யோகி ஆதித்யநாத்
யோகி ஆதித்யநாத்

குறிப்பாக, மக்கள் குடியிருக்கும் வீடுகள் புல்டோசர் கொண்டு இடிக்கப்படும் விவகாரத்தை உச்ச நீதிமன்றம் உள்ளிட்ட நீதிமன்றங்கள் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரிக்க வேண்டும் என்கிற குரல்கள் எழுந்துள்ளன. ஆனால், அப்படியான நடவடிக்கையை நீதிமன்றங்கள் எடுக்கவில்லை. இந்த நிலையில், இந்த விவகாரம் குறித்து உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதிகளும் மூத்த வழக்கறிஞர்களும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணாவுக்கு கடிதம் எழுதியிருக்கிறார்கள்.

நீதிபதி பி.சுதர்சன் ரெட்டி, நீதிபதி வி.கோபால கவுடா, நீதிபதி ஏ.கே.கங்குலி ஆகிய உச்ச நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதிகளும் டெல்லி உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ஏ.பி.ஷா, சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.சந்துரு, கர்நாடகா உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி முகமது அன்வர் ஆகியோரும்... மூத்த வழக்கறிஞர்களான சாந்தி பூஷண், இந்திரா ஜெய்சிங், சந்தர் உதய் சிங், ஸ்ரீராம் பஞ்சு, பிரசாந்த் பூஷண், ஆனந்த் குரோவர் ஆகியோரும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு எழுதப்பட்ட கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.

உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்
ட்விட்டர்

“உத்தரப்பிரதேசத்தில், போலீஸ் காவலில் இருக்கும் இளைஞர்கள் லத்தியால் தாக்கப்படுவது, போராட்டம் நடத்தும் சிறுபான்மை முஸ்லிம்கள், காவல்துறையினரால் விரட்டிச் சென்று தாக்கப்படுவது போன்ற வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவுகின்றன. அந்த காட்சிகள் தேசத்தின் மனசாட்சியை உலுக்குகின்றன. மாநில அரசின் இந்த மிருகத்தனமான நடவடிக்கைகளை ஏற்க முடியாது.

உத்தரப்பிரதேசத்தில் குடிமக்களின் அடிப்படை உரிமைகள் மீறப்படுவதையும், காவல்துறை மற்றும் அதிகாரிகளின் அத்துமீறல்களையும் தடுத்து நிறுத்தவும், சட்டம் ஒழுங்கு சீர்குலைவைச் சரிசெய்யவும் உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து உடனடியாக வழக்குப்பதிவு செய்ய வேண்டும்” அந்த கடிதத்தில் கூறியுள்ளனர்.

டெல்லி ஜஹாங்கிர்புரியில் வீடுகளையும் கடைகளையும் இடிப்பதற்கு தடைவிதித்த உச்ச நீதிமன்றம், ஷாகீன்பாக்கில் இடிப்பு நடவடிக்கைக்குத் தடைவிதிக்க வேண்டும் என்று தாக்கல் செய்யப்பட்ட மனுவைத் தள்ளுபடி செய்தது. புல்டோசர் மூலம் வீடுகளை இடிக்கும் விவகாரத்தில், நீதிமன்றங்கள் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற குரல் பலராலும் எழுப்பப்படுகிறது.

புல்டோசர் கொண்டு குடியிருப்புகள் அகற்றம்
புல்டோசர் கொண்டு குடியிருப்புகள் அகற்றம்

இந்த நிலையில், உத்தரப்பிரதேச அரசு புல்டோசர் மூலம் வீடுகளை இடிக்கும் நடவடிக்கைக்கு தடை விதிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உட்பட பல நீதிமன்றங்களில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இந்த வழக்கை ஜூன் 16-ம் தேதி விசாரித்த உச்ச நீதிமன்றம், ``வீடுகளை இடிக்கும் விவகாரத்தில் உரிய சட்ட நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும்” என்று உத்தரப்பிரதேச அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. இதன் பிறகாவது புல்டோசர் நடவடிக்கையை யோகி அரசு நிறுத்துமா?!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism