Published:Updated:

சேவைக்குத் தேவை இந்த சட்டம்!

அரசு அலுவலகங்கள்
பிரீமியம் ஸ்டோரி
அரசு அலுவலகங்கள்

மனுக்களைப் பெற்றதற்கு ஆதாரமாக ரசீது வழங்கவேண்டும். மனுக்களில் குறைபாடு இருப்பின், அதுகுறித்து மனுதாரருக்கு ஊழியர் தெரிவிக்கவேண்டும்.

சேவைக்குத் தேவை இந்த சட்டம்!

மனுக்களைப் பெற்றதற்கு ஆதாரமாக ரசீது வழங்கவேண்டும். மனுக்களில் குறைபாடு இருப்பின், அதுகுறித்து மனுதாரருக்கு ஊழியர் தெரிவிக்கவேண்டும்.

Published:Updated:
அரசு அலுவலகங்கள்
பிரீமியம் ஸ்டோரி
அரசு அலுவலகங்கள்

மக்களைத் தேடிப்போய் சேவையளிக்கும் நல்ல அதிகாரிகளும் நிர்வாகத்தில் இருக்கவே செய்கிறார்கள். ஆனாலும் சாமான்ய மனிதர்கள் ஒரு அரசு அலுவலகத்துக்குச் சென்று சேவை பெறுவதென்பது அலுப்பான, மன அழுத்தம் தரக்கூடிய வேலையாகத்தான் இருக்கிறது. அவமதிப்பது, அலட்சியமாகப் பதில் சொல்வது, அலையவிடுவதென பலருக்கு மோசமான அனுபவங்கள்தான் வாய்க்கின்றன. அதேநேரம், அரசியல் பலமுள்ளவர்களும் பணமுள்ளவர்களும் அரசு அலுவலகங்களில் எந்த சிரமமும் இல்லாமல் தங்கள் பணிகளை முடித்துக்கொள்கிறார்கள்.

இந்த அலட்சியத்துக்கும், காலதாமதத்துக்கும் தீர்வுகாணும் வகையில் மத்திய அரசு 2011-ல் ஒரு மசோதாவைத் தாக்கல் செய்தது. அதுதான் சேவை பெறும் உரிமைச் சட்டம். ‘அரசு அலுவலகங்களில் சேவை பெறுவது மக்களின் உரிமை’ என்பதை உறுதிப்படுத்தும் வகையிலான அந்தச் சட்டம், வரைவு நிலையிலேயே மத்தியில் இருக்கிறது. ஆனால் மத்தியப்பிரதேசம், பீகார், உத்தரப்பிரதேசம், கேரளா, பஞ்சாப், இமாசலப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், டெல்லி, உத்தரகண்ட், ஜார்கண்ட், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்கள் இந்தச் சட்டத்தை நிறைவேற்றி விட்டன. தமிழகத்தில் இன்னும் அது நடைமுறைக்கு வரவில்லை.

மக்களின் அதிகாரத்தையும் அரசு ஊழியர்களின் பொறுப்பையும் உறுதி செய்யும் இந்தச் சட்டம், குறிப்பிட்ட நாள்களுக்குள் மக்களின் விண்ணப்பங்களை நிறைவேற்றித்தராத அரசு ஊழியர்களுக்கு அபராதம் விதிக்க வழி செய்கிறது. அப்படி வசூலிக்கப்படும் அபராதம் விண்ணப்பித்தவருக்கே நஷ்ட ஈடாக வழங்கப்படும்.

அரசுத்துறைகள், அரசு நிதியுதவி பெறும் அமைப்புகள், நிறுவனங்கள் அனைத்தும் இந்தச் சட்ட வரம்புக்குள் வரும். ஒவ்வொரு துறையிலும் மக்கள் சாசனம் உருவாக்கப்படும். ஒவ்வொரு பணியையும் கவனிக்கும் ஊழியர்கள் பற்றி அந்தச் சாசனத்தில் தெளிவாக அறிவிக்கவேண்டும். ஒவ்வொரு சேவையும் எத்தனை பணிநாள்களுக்குள் வழங்கப்படும் என்பதையும் தெரிவிக்க வேண்டும். புகார்களைத் தெரிவிக்கும் அதிகாரியின் அலுவலக முகவரி அதில் குறிப்பிடப்படவேண்டும். அலுவலகங்களின் முகப்பில் பார்வையில் படும்படி இந்த மக்கள் சாசனம் வைக்கப்படவேண்டும்.

சேவைக்குத் தேவை இந்த சட்டம்!

மனுக்களைப் பெற்றதற்கு ஆதாரமாக ரசீது வழங்கவேண்டும். மனுக்களில் குறைபாடு இருப்பின், அதுகுறித்து மனுதாரருக்கு ஊழியர் தெரிவிக்கவேண்டும். குறிப்பிட்ட நாள்களுக்குள் சேவை கிடைக்காவிட்டால் மேல்முறையீட்டு அதிகாரியிடம் புகார் செய்யலாம். உரிய நேரத்தில் சேவை வழங்காதது உறுதிப்படுத்தப் பட்டால், உடனடியாக சேவையை வழங்குவதோடு, எத்தனை நாள் தாமதமோ அத்தனை நாளுக்குரிய ஊழியரின் சம்பளத்தைப் பிடித்தம் செய்து மனுதாரருக்கு வழங்குவார்கள். இந்த அபராதம் 500 ரூபாய் முதல் 50,000 ரூபாய் வரை இருக்கலாம். 11 துறைகளில் வழங்கப்படும் 150 சேவைகள் இந்தச் சட்டத்தின் வரம்புக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன.

டெல்லி, பஞ்சாப், ஜார்கண்ட், கேரளா போன்ற மாநிலங்களில் இச்சட்டம் சிறப்புறச் செயல்படுகிறது. மத்தியப்பிரதேசம், கோவா போன்ற மாநிலங்களில், சேவை உரிமைக்கெனத் தனித்துறைகள் உருவாக்கப்பட்டதுடன், கண்காணிப்பு ஏற்பாடுகளும் சிறப்பாகச் செய்யப்பட்டுள்ளன.

தமிழகத்தைப் பொறுத்தவரை இச்சட்டம் வலியுறுத்தும் பல விஷயங்கள் ஏற்கெனவே இருக்கின்றன. பெரும்பாலான துறைகளில் மக்கள் சாசனம் உருவாக்கப்பட்டுள்ளது. பல சேவைகள் இணைய வழியிலேயே வழங்கப்படுகின்றன. பெறப்படும் மனுக்களுக்கு ரசீதும் வழங்கப்படுகிறது. ஆனாலும் கண்காணிக்க எந்த ஏற்பாடுகளும் இல்லாதால் பெரும் இன்னல்களை மக்கள் சந்திக்க வேண்டியுள்ளது.

‘‘இன்றும் எந்தப் பின்புலமும் இல்லாமல் ஒரு மனிதர் அரசு அலுவலகத்துக்குப் போய் தனக்கான பணியை முடிப்பதென்பது அயர்ச்சி தருவதாகவே இருக்கிறது. என்னதான் இணைய சேவைகள் வந்தாலும் அதையும் நிறைவேற்ற வேண்டியவர்கள் அரசு ஊழியர்கள்தான். அவர்கள் மனநிலை மாறவேண்டுமானால் சேவை உரிமைச் சட்டம் அவசியமான தேவை’’ என்கிறார், இச்சட்டம் பற்றி நெடுங்காலமாகப் பேசிவரும் மக்கள் நீதி மய்யத்தின் மாநிலச் செயலாளரும் சட்டப் பஞ்சாயத்து இயக்கத்தின் தலைவருமான சிவ. இளங்கோ.

சிவ இளங்கோ, ஆர்.எஸ்.பாரதி,ஜெகதீஸ்வரன்,
சிவ இளங்கோ, ஆர்.எஸ்.பாரதி,ஜெகதீஸ்வரன்,

மின்வாரியத்தில் சேவை உரிமைச் சட்டம் வலியுறுத்தும் நடைமுறை ஏற்கெனவே இருக்கிறது. வீட்டிலோ, வசிக்கும் பகுதியிலோ ஏதேனும் மின்சாரப் பிரச்னை இருந்தால் 1912 என்ற மின்னக சேவை எண்ணில் புகார் செய்யலாம். அல்லது அந்தந்தப்பகுதி அலுவலகத்திற்குச் சென்று அங்குள்ள பதிவேட்டில் புகாரைப் பதிவு செய்யலாம். மாநகராட்சிப் பகுதியாக இருந்தால் 1 மணி நேரத்திலும் நகராட்சியாக இருந்தால் 3 மணி நேரத்திலும் கிராமங்களாக இருந்தால் 6 மணி நேரத்திலும் அந்தப் புகார்மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். இல்லாதபட்சத்தில் ஒவ்வொரு 6 மணி நேரத்துக்கும் 50 ரூபாய் முதல் 2000 ரூபாய் வரை அந்தப் பகுதிக்குப் பொறுப்பான மின் ஊழியர், கண்காணிக்க வேண்டிய அதிகாரியின் சம்பளத்தில் பிடித்தம் செய்து நுகர்வோரின் மின்கட்டணத்தில் கழித்துக் கொள்ளப்படும். இப்படியான நடைமுறையைத்தான் எல்லாத் துறைகளுக்கும் கொண்டுவருகிறது சேவை உரிமைச் சட்டம்.

‘‘இந்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்தக் கோரி எட்டு ஆண்டுகளுக்கும் மேலாகப் போராடிவருகிறோம். தற்போதுள்ள தமிழக அரசு நிச்சயம் இந்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் என்று எதிர்பார்க்கிறோம். இந்தச் சட்டம் நடைமுறைக்கு வந்துவிட்டால், ‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ போன்ற திட்டங்கள்கூடத் தேவையில்லை..." என்கிறார் சமூகச் செயற்பாட்டாளர் ஜெகதீஸ்வரன்.

2019-ல் மக்கள் உரிமைப் பாதுகாப்பு கவுன்சில் தமிழகத்தில் சேவை உரிமைச் சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. ‘தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும்’ என்று சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை உத்தரவிட்டது. சட்டப்பஞ்சாயத்து இயக்கம் தொடர்ந்த வழக்கில், ‘ஏற்கெனவே மக்கள் சாசனம் இயற்றிவிட்டோம். சேவை பெறும் உரிமைச் சட்டத்துக்கான தேவை இப்போது இல்லை’ என்று தமிழக அரசு பதிலளித்தது. ‘அரசின் கொள்கை முடிவுகளில் தலையிட முடியாது’ என்று நீதிமன்றம் சொல்லிவிட்டது.

சேவை உரிமைச் சட்டம் கொண்டு வருவதற்கு முன்பாக அரசு அலுவலகங்களில் உள்ள குறைபாடுகளைச் சரி செய்யவேண்டியதும் அரசின் கடமை. காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். கண்காணிப்பு ஏற்பாடுகளை மேம்படுத்தவேண்டும். 40 ஆண்டுகளுக்கு முன் அப்போதிருந்த மக்கள்தொகை அடிப்படையில் உருவாக்கப்பட்டவைதான் இப்போதிருக்கும் அரசுப் பணியிடங்கள். இன்று பல மடங்கு மக்கள்தொகை அதிகரித்துவிட்டது. புதிய பணியிடங்களை உருவாக்க வேண்டியதும் காலத்தின் தேவை.

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் தலைவர் அன்பரசுவிடம் இதுபற்றி உரையாடினேன்.

‘‘சேவை உரிமைச் சட்டத்தை நாங்கள் முழுமனதோடு வரவேற்கிறோம். மக்களின் வரிப்பணத்தில்தான் அரசு ஊழியர்கள் சம்பளம் வாங்குகிறார்கள். அவர்களின் தேவைகளை நிறைவேற்றுவதுதான் எங்களுக்குத் தரப்பட்டிருக்கும் பணி. இந்தச் சட்டத்தில் எங்களுக்கு எந்த முரணும் இல்லை’’ என்கிறார் அவர்.

தி.மு.க தனது தேர்தல் அறிக்கையில், ‘நாங்கள் ஆட்சிக்கு வந்தால் சேவை உரிமைச் சட்டத்தை நிறைவேற்றுவோம்’ என்று கூறியிருந்தது. இதுவரை அதற்கான நடைமுறைகள் ஏதும் தொடங்கியதாகத் தெரியவில்லை. தி.மு.க-வின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியிடம் இதுகுறித்துக் கேட்டேன்.

‘‘தேர்தல் வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக முதல்வர் நிறைவேற்றிவருகிறார். நிபுணர்களின் கருத்துகளைப் பெற்று சேவை உரிமைச் சட்டம் பற்றியும் சட்டமன்றத்தில் நிச்சயம் அறிவிப்பார்’’ என்றார் அவர்.

ஜனநாயகத்தில் மக்கள்தான் மையம். அவர்களுக்காகத்தான் அரசும் நிர்வாகமும். அரசு அலுவலக வாசல்களில் அவமானங்களையும் அலட்சியத்தையும் எதிர்கொண்டு கலங்கி நிற்கும் அப்பாவி மக்களின் துயர் நீக்க தமிழக அரசு உடனடியாக சேவை உரிமைச் சட்டத்தைச் செயல்படுத்த வேண்டும்!

எந்தப் பணிக்கு எத்தனை நாள்?

எஸ்.சி சான்றிதழ்- 2 நாள்கள்

எஸ்.டி சான்றிதழ்- 7 - 15

இருப்பிடச் சான்று - 7

குடியுரிமைச் சான்றிதழ் - 7

வருமானச் சான்றிதழ் - 15

வாரிசுச் சான்றிதழ் - 15

பிறப்பு, இறப்புச் சான்றிதழ்கள் - 15

ரேஷன் கார்டில் பெயர் நீக்குதல்/சேர்த்தல் - 3

ரேஷன் கார்டு முகவரி மாற்றம் - 3

புதிய ரேஷன் கார்டு - 15

நிலப்பட்டா - 15

மின் இணைப்பு - 14

குடிநீர் இணைப்பு - 7

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism