Published:Updated:

வெங்காய விலையைக் கட்டுப்படுத்த அரசு என்ன செய்கிறது? - மக்களவையில் கனிமொழி கேள்வி

மக்களவையில் பேசிய தி.மு.க எம்.பி கனிமொழி வெங்காய விலையைக் கட்டுப்படுத்துமாறு மத்திய அரசிடம் வலியுறுத்தியுள்ளார்.

கனிமொழி
கனிமொழி

இந்தியாவில் கடந்த சில மாதங்களாகவே வெங்காய விலை உச்சத்தில் இருக்கிறது. நாட்டில் வெங்காய உற்பத்தி செய்யும் மாநிலங்களில் கனமழை பெய்ததால் வரத்து குறைந்ததாக வியாபாரிகள் கூறினர். வெங்காயத்தைப் பதுக்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. வெங்காய விலையைக் கட்டுக்குள் கொண்டு வர மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. இருப்பினும் வெங்காய விலை குறைந்தபாடில்லை. நாடாளுமன்றத்தில் பேசிய தி.மு.க எம்.பி கனிமொழி வெங்காய விலையைக் கட்டுப்படுத்துமாறு மத்திய அரசிடம் வலியுறுத்தினார்.

வெங்காயம்
வெங்காயம்

இதுகுறித்து அவர் பேசியபோது, ``வெங்காய விலை மூன்று மடங்கு உயர்ந்திருக்கிறது. மூன்று மாதங்களுக்கு முன்பு இருந்ததை விட இப்போது நான்கு மடங்கு அதிகமாகியிருக்கிறது. இதனால் நாட்டில் நடுத்தர வர்க்க குடும்பங்கள் கடுமையான சிக்கலைச் சந்திக்கின்றன. அவர்களால் உணவுத் தேவையின் முக்கிய அங்கமான வெங்காயத்தை வாங்க முடியவில்லை. தமிழ்நாடு, டெல்லி, மும்பை என நாட்டின் பல பகுதிகளில் வெங்காயம் கிலோ நூறு ரூபாய்க்கு மேல் போய்க் கொண்டிருக்கிறது.

சட்ட விரோதமாக வெங்காயம் பதுக்கப்படுவதன் காரணமாகவும், மழையின் காரணமாகவும் இந்த விலை உயர்வு ஏற்பட்டிருப்பதாக வர்த்தக ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். மேலும், தேசிய விவசாயக் கூட்டுறவு வாணிபக் கழகம் வெங்காயத்தை கிடங்குகளில் பாதுகாப்பதில் பாரம்பர்யமான முறையையே பின்பற்றுவதால் சேமிக்கப்பட்ட வெங்காயத்தின் பெரும்பகுதி வீணாகிவிட்டதாகவும் சொல்கிறார்கள்.

வெங்காய ஏற்றுமதிக்குத் தடை விதிக்கப்பட்ட பின்னரும் கூட வெங்காயத்தின் விலை குறைந்தபாடில்லை. இன்று நாட்டில் பற்றிய எரியக்கூடிய பிரச்னையாக வெங்காய விலை உயர்வு இருக்கும்போது மத்திய அரசு, வெங்காய விலையைக் கட்டுப்படுத்த என்ன செய்துகொண்டிருக்கிறது என்பதை அறிய விரும்புகிறேன். இதற்காக குறுகிய கால விவாதத்தை நாடாளுமன்றத்தில் நடத்த வேண்டும்” என்று வலியுறுத்தினார். இந்த விவகாரம் குறித்து பரிசீலிக்கப்படும் என மத்திய அரசு தரப்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளது.