Published:Updated:

மகாராஷ்டிராவில் முன்கூட்டியே கொரோனா 3-வது அலை?! - நிபுணர்கள் எச்சரிக்கை

கொரோனா பரிசோதனை
கொரோனா பரிசோதனை

மகாராஷ்டிராவில் முன்கூட்டியே கொரோனா மூன்றாவது அலை தாக்கும் அபாயம் இருப்பதாக நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

நாட்டிலேயே கொரோனாவால் மகாராஷ்டிரா மாநிலம்தான் அதிகமாக பாதிக்கப்பட்டது. அதே போன்று கொரோனா இறப்பும் மகாராஷ்டிராவில்தான் அதிகமாக இருக்கிறது. தற்போதுதான் தினத்தொற்று 10,000-க்கும் கீழ் சென்றுள்ளது. அதற்குள் கொரோனா மூன்றாவது அலை குறித்து விவாதிக்க ஆரம்பித்துவிட்டனர். சமீபத்தில் மத்திய அரசே அக்டோபர் மாதத்தில் கொரோனா மூன்றாவது அலை தொடங்க வாய்ப்பு இருப்பதாக தெரிவித்திருந்தது. மூன்றாவது அலையை எதிர்கொள்ள, ஆலோசனை வழங்க மகாராஷ்டிரா அரசு நிபுணர்குழு ஒன்றை அமைத்திருக்கிறது. இந்த நிபுணர்குழுவுடன் முதல்வர் உத்தவ் தாக்கரே சமீபத்தில் ஆலோசனை நடத்தினார். இதில் கொரோனா மூன்றாவது அலை எதிர்பார்ப்பதைவிட முன்கூட்டியே தாக்க வாய்ப்பிருப்பதாக நிபுணர்கள் எச்சரித்தனர்.

கொரோனா பரிசோதனை
கொரோனா பரிசோதனை

இந்தக் குழுவில் இடம்பெற்றுள்ள ராகுல் பண்டிட் இது குறித்துக் கூறுகையில், ``கொரோனா மூன்றாவது அலை முன்கூட்டியே பரவும் பட்சத்தில் அதை எதிர்கொள்ள நாம் தயாராக இருக்க வேண்டும். உலகில் இரண்டு கொரோனா அலைகளிடையே எத்தனை நாள் இடைவெளி இருக்கிறது என்பதை கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம். 100 முதல் 120 நாள் இடைவெளியில் கொரோனா அடுத்த அலை பரவும் என்று கணிக்கப்பட்டுள்ளது. சில நாடுகளில் 14 முதல் 15 வாரத்தில் பரவியிருக்கிறது. எட்டு வார இடைவெளியில்கூட அடுத்த கொரோனா தொற்று பரவியிருக்கிறது. எனவே, கொரோனா அடுத்த அலை சற்று முன்கூட்டியே வந்தாலும் அதை நாம் சந்திக்கத் தயாராக இருக்க வேண்டும். கவனக்குறைவாக இருந்துவிடக் கூடாது. தடுப்பூசி செலுத்துவதைத் தீவிரப்படுத்த வேண்டும்.

மக்கள் இரண்டு முகக்கவசம் அணிந்து வெளியில் வர வேண்டும். கொரோனா மூன்றாவது அலையின் தாக்கம் தீவிரமாக இருக்கும்போது எட்டு லட்சம் கொரோனா நோயாளிகள் இருப்பார்கள். தற்போது கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுவருவதால், மீண்டும் தொற்று அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது” எனத் தெரிவித்தார். கொரோனா இரண்டு அலையில் பாதிக்கப்படாதவர்கள் மூன்றாவது அலையில் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகமாக இருக்கிறது என்று நிபுணர்குழு, முதல்வர் உத்தவ் தாக்கரேயிடம் எச்சரித்துள்ளது.

``மூன்றாவது அலை குழந்தைகளை பாதிக்கும் என்று சொல்லப்பட்டாலும், அதை உறுதியாக கணிக்க முடியவில்லை. மூன்றாவது அலை எப்போது வரும் என்றும் உறுதியாகச் சொல்ல முடியவில்லை. ஆனால், அதை எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும்” என்று ஜஸ்லோக் மருத்துவமனை டாக்டர் ஓம் ஸ்ரீவஸ்தவா தெரிவித்தார். ஒருசில நிபுணர்கள் தெரிவிப்பதுபோல் குழந்தைகளை மூன்றாவது அலை பாதிக்காது என்று சொல்ல முடியாது என்றும், மூன்றாவது அலையில் குழந்தைகள் மற்றும் இளம் வயதினர் 10 சதவிகித அளவுக்கு பாதிக்கப்படுவர் என்றும் மகாராஷ்டிரா அரசு அமைத்துள்ள நிபுணர்குழுவில் இடம்பெற்றுள்ள ஒரு தரப்பினர் தெரிவித்துள்ளனர். கொரோனா முதல் அலை மகாராஷ்டிராவில் 19 லட்சம் பேரைத் தாக்கியது. இரண்டாவது அலையில் 40 லட்சம் பேரைத் தாக்கியதோடு ஒரு லட்சத்துக்கும் அதிகமானோரின் உயிரையும் பறித்துள்ளது.

கொரோனா மரணம்
கொரோனா மரணம்

கணக்கில் வராத 5,000 இறப்புகள்:

இதற்கிடையே கொரோனா இரண்டாவது அலையில் இறந்த 5,000 பேர் கணக்கில் இன்னும் வரவில்லை என்று மகாராஷ்டிரா சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ் தோபே தெரிவித்தார். இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில், ``கொரோனாவால் இறந்தவர்களில் 5,000 பேர் எண்ணிக்கைக் கணக்கில் வராமல் இருக்கிறது. அவை சரிபார்க்கப்பட்டு கணக்கில் சேர்க்கப்படும். கொரோனா தொற்று பயம் காரணமாக தெருக்களில் கூட்டம் குறைவாக இருக்கிறது. ஆனால், மக்கள் முகக்கவசம் அணிவதில்லை. சுத்தமாக இருப்பதில்லை. கொரோனா மூன்றாவது அலை எப்போது வரும் என்று யாராலும் கணிக்க முடியாது. ஆனால், கொரோனா விதிகளைச் சரியாக கடைப்பிடிப்பதாலும், முகக்கவசம் அணிவதாலும் மூன்றாவது அலை வருவதை தாமதப்படுத்த முடியும்” என்று அவர் தெரிவித்தார்.

அடுத்த கட்டுரைக்கு