Published:Updated:

கல்யாண் சிங் முதல் யோகி ஆதித்யநாத் வரை... அயோத்தி வழக்கில் `நீதி'யின் பங்கு என்ன? – பகுதி 5

பாபர் மசூதி

நீதிமன்றங்களின் உத்தரவை ஒவ்வொரு முறையும் உத்தரப்பிரதேச அரசு மீறியதுதான் 70 ஆண்டுக்கால சர்ச்சைக்குக் காரணமாக இருந்திருக்கிறது.

கல்யாண் சிங் முதல் யோகி ஆதித்யநாத் வரை... அயோத்தி வழக்கில் `நீதி'யின் பங்கு என்ன? – பகுதி 5

நீதிமன்றங்களின் உத்தரவை ஒவ்வொரு முறையும் உத்தரப்பிரதேச அரசு மீறியதுதான் 70 ஆண்டுக்கால சர்ச்சைக்குக் காரணமாக இருந்திருக்கிறது.

Published:Updated:
பாபர் மசூதி

உச்சநீதிமன்றம் எந்த முடிவெடுத்தாலும் அதற்கு உத்தரப்பிரதேச அரசு உடன்படும் என்பதுதான் கல்யாண் சிங் கொடுத்த வாக்குறுதி. அந்த மாநிலத்தின் இன்றைய முதல்வர் யோகி ஆதித்யநாத் சொன்னதும். ஆனால் நீதிமன்றங்களின் உத்தரவை ஒவ்வொரு முறையும் உத்தரப்பிரதேச அரசு மீறியதுதான் 70 ஆண்டுக்கால சர்ச்சைக்குக் காரணமாக இருந்திருக்கிறது. சர்ச்சைக்குரிய இடத்தைச் சுற்றியுள்ள இடத்தில் பூஜைக்காகக் கூடியதாகச் சொல்லி 70,000 பேர் நுழைந்தார்கள். தொடக்கத்தில் கரசேவகர்கள் பூஜையில் ஈடுபட்டதாகவே துணை இராணுவக் குழுக்கள் வாக்குமூலம் அளிக்கின்றனர்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பாரதிய ஜனதா கட்சி மற்றும் விஷ்வ இந்து பரிஷத் அமைப்புத் தலைவர்கள் கூட்டத்தில் பேசிக்கொண்டிருக்கும்போது தீடீரென 150 பேர் வரையிலான மக்கள் மசூதியின் மேல் ஏறத் தொடங்கினார்கள். இராணுவத்தின் மீதும் காவல்துறையின் மீதும் அவர்கள் கற்களை வீசத்தொடங்கியதாகக் கூறப்படுகிறது. சரியாக மதியம் 12:20 மணியளவில் அவர்களில் 80 பேர் மசூதிக் கட்டுமானத்தின் மீது ஏறி அதை இடிக்கத் தொடங்கினார்கள். அந்த சமயம் மசூதிக்குள் நுழைந்தவர்கள் எண்ணிக்கை 25,000 எனக் கணக்கிடப்பட்டிருக்கிறது. மதியம் 2:00 மணியளவில் அதே இடத்தில் கூட்டம் 75,000 -மாக அதிகரித்திருந்தது.

அத்வானி ரத யாத்திரை
அத்வானி ரத யாத்திரை

இது அத்தனையும் நிகழ்ந்துகொண்டிருந்த போது காவல்துறை எதுவும் செய்யக் கூடாது என்ற உத்தரவுக்குப் பணிக்கப்பட்டிருந்தார்கள். உத்தரப்பிரதேச முதல்வர் ஆணைக்கிணங்க மத்திய ரிசர்வ் பாதுகாப்புப் படையும் செயலற்றுக் கிடந்தது. நீதிமன்ற உத்தரவைக் காப்பாற்றுவது எங்கள் கடமை என்று வாக்குறுதியளித்த கல்யாண் சிங், தான் பிரமாணம் ஏற்றுக்கொண்ட அரசியலமைப்புக்கு எதிராக நடந்துகொண்டார். இது நம் வார்த்தைகள் அல்ல. இவை அத்தனையையும் இதே சொற்பிரயோகத்துடன் மத்திய அரசின் வெள்ளை அறிக்கை விவரிக்கிறது. மாஜிஸ்திரேட்கள் இல்லை என்பதைக் காரணம் காட்டி மத்தியப் படைகளை உபயோகிக்க முடியாத வகையிலும் நடந்துகொண்டது அவரது அரசு. அதன்பிறகு மத்திய அரசும் உத்தரப்பிரதேச மாநில ஆளுநரும் இணைந்து செயல்பட்டு கலந்தாலோசித்து தற்காலிகக் கட்டுமானம் ஒன்றை இரவு 7.30 மணியளவில் அதே இடத்தில் நிர்மாணிக்கத் தொடங்கினார்கள்.

உடனடியாக குடியரசுத்தலைவர் ஆட்சியை உத்தரப்பிரதேசத்தில் அமலுக்குக் கொண்டுவந்த மத்திய அரசு, கீழ்கண்ட உத்தரவுகளைப் பிறப்பித்தது...

1. மதச்சார்பு இயக்கங்கள் தடை செய்யப்படும்.

2. கலவரத்தைத் தூண்டிவிட்டவர்கள் உட்பட அனைவரின் மீது சட்டரீதியாக அதிதீவிரமான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

3. இதில் கடமை தவறிய அதிகாரிகளின் மீது விசாரணையின் அடிப்படையில் ஒழுங்குமுறை நடவடிக்கை எடுக்கப்படும்.

4. இடிக்கப்பட்ட இடம் மீண்டும் கட்டப்பட அரசு ஆவன செய்யும்.

5. புதிய கோயிலுக்கான தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

இவை அத்தனையும் நரசிம்மராவ் அரசு உறுதியளித்தது .

பாபர் மசூதி
பாபர் மசூதி

அரசு உறுதியளித்த அதே நேரம் கரசேவகர்களுக்குத் தலைமையேற்ற பாரதிய ஜனதா கட்சித் தலைவர் எல்.கே.அத்வானி இப்படியாகச் சொல்கிறார், ``6 டிசம்பர் 1992 அன்று கரசேவை தொடங்கும் என்று சொன்னது பஜனைகளும் கீர்த்தனைகளும் அல்ல, கற்களைக் கொண்டு கையகப்படுத்தப்பட்ட 2.77 ஏக்கர் நிலத்தில் கோயிலை எழுப்புவதுதான். காங்கிரஸ் அரசு எங்கள் ராம ஜென்ம பூமி இயக்கத்தைப் பிளவுபடுத்தி வலுவிழக்கச் செய்துவிட்டது” என்கிறார்.

எல்.கே.அத்வானி
எல்.கே.அத்வானி

உச்சநீதிமன்றத்துக்குக் கைப்படக் கடிதம் எழுதிக் கொடுத்த விஜயராஜே சிந்தியாவோ ``கோயில் கட்டுமானத்துக்காக உத்தரப்பிரதேச அரசு தங்கள் ஆட்சியை இழக்கக்கூடத் தயாராக இருந்தது. கரசேவகர்கள் இன்னும் உச்சபட்சத் தியாகங்களுக்குத் தயாராக இருக்க வேண்டும்” என்று தனது மற்றொரு பக்கத்தை வெளிப்படுத்தினார்.

யோகி, மோடி, ராஜ்நாத் சிங்
யோகி, மோடி, ராஜ்நாத் சிங்

இதுதொடர்பான வழக்கு மீண்டும் ராஜ்நாத் சிங் உத்தரப்பிரதேச முதல்வராக இருந்த ஆட்சிக்காலத்தில் அலகாபாத் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அதற்கடுத்தபடியான டைம்லைன்கள் கீழே…

2002: அயோத்தி நிலம் யாருக்குச் சொந்தம் என்கிற விவாதம் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் மீண்டும் தொடங்கியது.

2010: வாக்கெடுப்பின் அடிப்படையில் உயர்நீதிமன்றம் மூன்று தரப்புகளிடையே நிலம் பிரிக்கப்படுவதற்குத் தடைவிதித்தது.

2011: உயர்நீதிமன்றத்தின் முடிவுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்தது.

2016: பாரதிய ஜனதாவின் சுப்ரமணிய சாமி அயோத்தி நிலத்தில் ராமர் கோயில் கட்டுவதற்காக உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

2017: தொடர்ச்சியாக உத்தரப்பிரதேச வக்ஃபு வாரியத்துக்கும் உச்சநீதிமன்றத்துக்கும் இடையிலான விசாரணை நடைபெற்றது. கோயில் நிலத்திலேயே மசூதி கட்டமுடியும் என வக்ஃபு வாரியம் வாதம் செய்தது. அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் 2010ம் ஆண்டு உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் 32 சமூக ஆர்வலர்கள் மனுத்தாக்கல் செய்தார்கள்.

2018: சமூக ஆர்வலர்கள் மனுவை உச்சநீதிமன்றம் விசாரிக்கத் தொடங்கியது. சுப்ரமணிய சாமி உட்பட இடைக்கால மனுதாரர்களாகத் தங்களை இணைத்துக்கொள்ளச் சொல்லித் தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மனுக்களையும் உச்சநீதிமன்றம் ரத்து செய்தது. ஜனவரி 2019-க்கு விசாரணையை ஒத்திவைத்து தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு உத்தரவு பிறப்பித்தது.

2019: அயோத்தி வழக்கு விசாரணைக்கான உச்சநீதிமன்ற ஐவர் அமர்விலிருந்து நீதிபதி ரமணா மற்றும் லலித் பின்வாங்கினர். வழக்கு விசாரணை காலதாமதமானது. 26 பிப்ரவரியில் அயோத்தி விசாரணை அமர்வு மீண்டும் கூடியது. உச்சநீதிமன்றத்தின் பார்வையில் அமையப்பெற்ற மூவர் பேச்சுவார்த்தை குழு பேச்சு வார்த்தையைத் தொடங்கியது. பேச்சுவார்த்தை பலனளிக்காததால் ஆகஸ்ட் 6 தொடங்கி இந்த விவகாரத்தில் தினப்படி விசாரணை தொடங்கியது. நிர்மோகி அகாராவின் நில உரிமை குறித்து விசாரிக்கப்பட்டது. பல்வேறு தரப்புகளின் வாதங்களும் விவாதங்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டு விசாரணை 16 அக்டோபருடன் நிறைவுபெற்றது.

உச்சநீதிமன்ற
உச்சநீதிமன்ற

இப்படி பல ஆண்டுகளாக நடந்துவந்த மத, அரசியல் விளையாட்டுக்கான இறுதித்தீர்ப்பை இன்று எழுதியிருக்கிறது உச்சநீதிமன்றம். மக்களின் உரிமைகளையும், நலனையும், தேசிய ஒருமைப்பாட்டையும், ஜனநாயகத்தின் அடிப்படையான மதச்சார்பின்மையையும் கருத்தில்கொண்டே அந்த தீர்ப்பு இருக்கவேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக இருந்தது.

அந்த தீர்ப்பின் சிறப்பம்சங்கள் குறித்து வாசிக்க...

(முற்றும்)

குறிப்புகள்:

White Paper On Ayodhya- Government of India, Feb 1983

Architecture of the Baburi Masjid of Ayodhya, R.Nath, Historical Research Documentation Programme, May 1995

Ascetic Games: Sadhus,Akharas and the Making of the Hindu Vote, Dhirendra K.Jha, Apr 2019

Ayodhya:The Dark night, Krishna Jha and Dhirendra K.Jha,Harper Collins, Dec 2012

Anatomy of Confrontation:Ayodhya and the Rise of Communal Politics in India, Sarvepalli Gopal, Zed Books Ltd, Mar 1992