Published:Updated:

தொடர்ந்து இரண்டாவது முறை ஆட்சி - எப்படி சாதித்தார் பினராயி விஜயன்?!

பினராயி விஜயன்
பினராயி விஜயன்

தற்போதைய இந்திய அரசியல் சூழலில், கம்யூனிஸ்ட் இயக்கங்களுக்கு பெரும் நம்பிக்கையையும் உற்சாகத்தையும் கேரளா சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் அளித்துள்ளன. இடது ஜனநாயக முன்னணியின் இந்த வெற்றிக்கு என்ன காரணம்?

ஐந்து ஆண்டுகளுக்கு சி.பி.எம் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணியின் ஆட்சி, அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணியின் ஆட்சி என மாறி மாறி ஆட்சிகள் வருவதுதான், கேரளாவின் 44 ஆண்டுகால அரசியல் போக்கு. அதை உடைத்தெறிந்திருக்கிறது பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி. 2016-ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சிக்கு முடிவுகட்டிவிட்டு அரியணையில் அமர்ந்த பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி, இந்தத் தேர்தலில் 99 இடங்களைப் பிடித்து மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ளது.

பினராயி விஜயன்
பினராயி விஜயன்

இடதுசாரிகள், இந்த வெற்றியை எளிதாகப் பெற்றுவிடவில்லை. மாநில மக்களின் தேவைகளை அறிந்த திட்டமிடலும், தொலைநோக்குப் பார்வையுடன் கூடிய செயல்பாடுகளும் கடின உழைப்புமே இந்த வெற்றியை சாத்தியப்படுத்தியுள்ளன. ஆட்சியை சரியாக வழிநடத்திய கேப்டனாக பினராயி விஜயன் பார்க்கப்படுகிறார். கடந்த ஐந்து ஆண்டுகளில் பல சோதனைகளையும் வேதனைகளையும் இடது முன்னணி அரசு எதிர்கொண்டது. இரண்டு முறை ஏற்பட்ட பெருவெள்ளம், நிபா வைரஸ் பாதிப்புகள், சபரிமலை விவகாரம், கொரோனா பேரிடர் ஆகியவை பினராயி விஜயன் அரசுக்கு பெரும் சவால்களை ஏற்படுத்தின.

2018-ம் ஆண்டு ஏற்பட்ட பெருவெள்ளம் கேரளாவில் பேரழிவை ஏற்படுத்தியது. கேரளாவின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. பல்லாயிரக்கணக்கான மக்கள் முகாம்களில் தங்கவைக்கப்பட்டனர். ஏராளமான சொத்துக்கள் சேதமடைந்தன. நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தினால் உயிரிழப்புகளும் ஏற்பட்டன. அந்த நேரத்தில், இரவு பகலும் ஓய்வே இல்லாமல் பாதிக்கப்பட்ட மக்களுடன் இருந்து கேரளாவைக் காப்பாற்றினார் முதல்வர் பினராயி விஜயன். அந்தப் பெருவெள்ள பாதிப்பின் சுவடு மறைவதற்குள் மற்றொரு பெருவெள்ளம் கேரளாவை மூழ்கடித்தது. அப்போதும், வீதியில் இறங்கி பாதிக்கப்பட்ட மக்களுடன் இருந்து மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டார் முதல்வர் பினராயி விஜயன்.

கேரளா பெருவெள்ளம்
கேரளா பெருவெள்ளம்

கொரோனாவுக்கெல்லாம் முன்பாக, நிபா என்ற வைரஸ் 2018-ம் ஆண்டு கேரளாவில் பேரச்சத்தை ஏற்படுத்தயது. சில உயிர்களையும் அது பலிகொண்டது. திறமையான நடவடிக்கையின் மூலம் பினராயி விஜயன் அரசு நிபா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தியது. அதன் மூலம் மனிதகுலத்துக்கு எதிரான உயிர்க்கொல்லி வைரஸ்களைக் கட்டுப்படுத்துவது குறித்து மிகப்பெரிய அனுபவத்தை பினராயி விஜயன் அரசு பெற்றது. நிபா வைரஸுக்கு எதிரான நடவடிக்கையில் கேரளா சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.சைலஜா டீச்சரின் பங்கு முக்கியமானது.

அப்போது, உயிர்க்கொல்லி வைரஸைக் கட்டுப்படுத்துவதற்கான புதிய மருத்துவக் கட்டமைப்புகளையும் கேரளா அரசு ஏற்படுத்தியது. குறிப்பாக, நிபா வைரஸ் பாதிப்பு தொடர்பான பரிசோதனைக்கு புனேயில் உள்ள தேசிய தொற்றுநோய் ஆராய்ச்சிக்கழகத்துக்குத்தான் ரத்த மாதிரிகள் அனுப்பப்பட்டன. நிபாவுக்குப் பிறகு, கேரளாவில் புதிதாக ஒரு தொற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனத்தை இடதுசாரி அரசு ஏற்படுத்தியது. நிபா வைரஸை வெற்றிகரமாகக் கட்டுப்படுத்தியதற்காக உலக அளவில் பாராட்டுகளையும் கேரளா அரசு பெற்றது.

அடுத்ததாக, சபரிமலை விவகாரம் பினராயி விஜயன் அரசுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியது. சபரிமலையில் வழிபடுவதற்கு பெண்களை அனுமதிக்கலாம் என்கிற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை அமல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பினராயி விஜயன் அரசு மேற்கொண்டது. அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த பா.ஜ.க., மாநிலம் முழுவதும் மிகப்பெரிய போராட்டங்களை நடத்தியது.

சபரிமலை
சபரிமலை

ஆரம்பத்தில் கேரளா அரசின் நிலைப்பாட்டுக்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சி இருந்தது. பின்னர், அது தன் நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு, சபரிமலையில் பெண்களை அனுமதிக்கக்கூடாது என்று அரசுக்கு எதிரான போராட்டங்களை நடத்தியது. இந்த விவகாரம், கேரளா முழுவதும் பதற்ற சூழலை ஏற்படுத்தியது. பெருவெள்ளத்திலிருந்து கேரளாவை மீட்டெடுத்தது, கேரளாவின் முன்னேற்றத்துக்காக பல்வேறு வளர்ச்சிப் பணிகளை மேற்கொண்டது ஆகியவற்றின் மூலம் பினராயி விஜயன் அரசு பெரும் பாராட்டுகளைப் பெற்றிருந்தபோதிலும், 2019-ல் நடைபெற்ற நாடாளுமன்ற பொதுத்தேர்தலில், இடது ஜனநாயக முன்னணி பெரும் தோல்வியைத் தழுவியது. சபரிமலை விவகாரத்தில் பினராயி விஜயன் அரசு மேற்கொண்ட நிலைப்பாடுதான் அந்தத் தோல்விக்குக் காரணம் என்று பேசப்பட்டது.

இந்தியாவில் கொரோனா அபாயத்தை முதன் முதலில் எதிர்கொண்ட மாநிலம் கேரளா தான். கொரோனா என்கிற பெயர் இந்தியாவில் அறியப்படாத ஒரு சூழலில், கொரோனா என்றொரு வைரஸ் சீனாவின் வூஹானில் பரவுகிறது என்கிற ஒரு செய்தியை கேரளா சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜா டீச்சர் இணையத்தில் பார்த்திருக்கிறார். வூஹானில் கேரளாவைச் சேர்ந்த மாணவர்கள் பலர் படித்துவருகிறார்கள். எனவே, அவர்கள் சொந்த ஊருக்குத் திரும்புவர் எனறும், அவர்கள் மூலமாக கேரளாவுக்கு கொரோனா வைரஸ் பரவுவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்றும் அமைச்சர் கணித்தார்.

உடனடியாக, கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கேரளா அரசு மேற்கொண்டது. எதிர்பார்ததது போலவே வூஹானிலிருந்து மாணவர்கள் கேரளாவுக்கு வந்தனர். அவர்களைத் தனிமைப்படுத்துவதற்கான ஏற்பாடுகளை அரசு மேற்கொண்டது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான மருத்துவ வசதிகளை அனைத்தையும் அரசு வழங்கியது. அதே போல, கொரோனாவைக் கட்டுப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட ஊரடங்கு நடவடிக்கையால் புலம்பெயர்த் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டபோதும், அவர்களுக்குத் தேவையான உதவிகளை அரசு செய்தது.

கொரோனாவுக்கு எதிராக பினராயி விஜயன் அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள், `கேரளா மாடல்’ என்று பரவலாகப் புகழப்பட்டது. கொரோனாவால் அதிகமானோர் கேரளாவில் பாதிக்கப்பட்டபோதிலும், உயிரிழப்புகளின் எண்ணிக்கை அங்கு மிகவும் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.

சைலஜா டீச்சர்
சைலஜா டீச்சர்

கொரேனா இரண்டாவது அலையின்போதுதான் சட்டமன்றத் தேர்தலும் வந்தது. பினராயி விஜயன் அரசு மீது மக்கள் மத்தியில் செல்வாக்கு இருப்பதாகவும், இரண்டாவது முறையாக இடது முன்னணி ஆட்சியைப் பிடிக்கும் என்று கருத்துக்கணிப்புகள் வந்தன. அந்தக் கருத்துக்கணிப்புகள், தேர்தல் முடிவுகளிலும் பிரதிபலித்தன. மிகப்பெரிய வெற்றியைப் பெற்று இரண்டாவது முறையாக இடதுசாரிகள் ஆட்சியை அமைக்கிறார்கள். இந்த வெற்றியில், பினராயி விஜயனுக்கு மிகப்பெரிய பங்கு இருக்கிறது. ஆகவேதான் மதச்சார்பற்ற சிந்தனை கொண்ட, முற்போக்காளர்கள் மத்தியில் பினராயி விஜயன் மிகப்பெரிய கதாநாயகனாகப் பார்க்கப்படுகிறார்.

சர்வதேச ஊடகங்களின் கொரோனா கவரேஜ்! - மோடியின் இமேஜை டேமேஜ் செய்துவிட்டனவா?

கேரளாவின் `டெங் சியோபிங்' என்று பினராயி விஜயனை ஊடகங்கள் கொண்டாடுகின்றன. சீனப் புரட்சியைத் தலைமை தாங்கிய நடத்தியவரும், மக்கள் சீனக் குடியரசின் முதல் தலைவருமான மாசேதுங் மறைவுக்குப் பிறகு, பத்தாண்டு காலம் மக்கள் சீனக் குடியரசின் தலைவராக செயல்பட்டவர் டெங் சியோபிங். பல பொருளாதார சீர்திருத்தங்களைக் கொண்டுவந்து சீனாவின் வளர்ச்சிக்கு வித்திட்ட அவரை, நவீன சீனாவின் சிற்பி என்கிறார்கள்.

பினராயி விஜயன்
பினராயி விஜயன்

அந்த வகையில்தான், நவ கேரளத்தின் சிற்பி என்று இடதுசாரி ஆதரவாளர்களால் பார்க்கப்படும் பினராயி விஜயனை டெங் சியோபிங்குடன் ஒப்பிடுகிறார்கள்.

சேட்டனின் சேவைகள் தொடரட்டும்!

அடுத்த கட்டுரைக்கு