Published:Updated:

மானியக் கோரிக்கை: `உத்தவ் அரசைக் கவிழ்க்க உதவியவர்களை திருப்திப்படுத்த முயற்சி’ - எதிர்க்கட்சிகள்

ஷிண்டே

``ஏக்நாத் ஷிண்டே அரசு அமைய உதவிய எம்.எல்.ஏ-க்களை திருப்திப்படுத்தும் நோக்கில் துணை மானியக் கோரிக்கை தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது." - சட்டமேலவை எதிர்க்கட்சித் தலைவர்

மானியக் கோரிக்கை: `உத்தவ் அரசைக் கவிழ்க்க உதவியவர்களை திருப்திப்படுத்த முயற்சி’ - எதிர்க்கட்சிகள்

``ஏக்நாத் ஷிண்டே அரசு அமைய உதவிய எம்.எல்.ஏ-க்களை திருப்திப்படுத்தும் நோக்கில் துணை மானியக் கோரிக்கை தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது." - சட்டமேலவை எதிர்க்கட்சித் தலைவர்

Published:Updated:
ஷிண்டே

மகாராஷ்டிராவில் கடந்த ஜூன் மாதம் உத்தவ் தாக்கரே அரசு கவிழ்க்கப்பட்டு, ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அரசு பதவியேற்றது. ஏக்நாத் ஷிண்டே சிவசேனாவிலிருந்து வெளியேறியபோது, அவருடன் 40 எம்.எல்.ஏ-க்களும் வந்தனர். அவர்களுக்கு பா.ஜ.க தரப்பில் கணிசமான பணம் பட்டுவாடா செய்யப்பட்டதாக எதிர்க்கட்சிகள் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது. ஆனால் அதிகமான எம்.எல்.ஏ-க்கள் தங்களது தொகுதியின் வளர்ச்சித் திட்டங்களைக் கருத்தில்கொண்டே ஷிண்டே பக்கம் வந்ததாகத் தெரிவித்தனர். மகாராஷ்டிரா சட்டமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடர் இப்போது நடந்துவருகிறது.

இதில் மாநில அரசு சார்பாக துணை மானியக் கோரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. ரூ.52,327 கோடிக்கு தாக்கல் செய்யப்பட்ட இந்தத் துணை மானியக் கோரிக்கையில் அதிகப்படியான நிதி ஏக்நாத் ஷிண்டேயின் நகர்ப்புறத்துறைக்கும், அவரின் ஆதரவாளரான அமைச்சர் உதய் சாமந்த்தின் தொழிற்துறைக்கும் ஒதுக்கப்பட்டிருக்கிறது.

உத்தவ் தாக்கரே
உத்தவ் தாக்கரே

அதோடு உத்தவ் தாக்கரேயின் ஆட்சியைக் கவிழ்க்க உதவிய முதல்வர் ஏக்நாத் ஷிண்டேயின் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 40 பேரின் தொகுதி மேம்பாட்டுக்கு ரூ.5,900 கோடி நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது.

வழக்கமாக பட்ஜெட்டில் 10 சதவிகித நிதிதான் துணை மானியக் கோரிக்கையாகக் கோரப்படும். ஆனால் தற்போது தாக்கல் செய்யப்பட்டிருக்கும் துணை மானியக் கோரிக்கை பட்ஜெட் தொகையில் 10 சதவிகிதத்தைவிட அதிகமாக இருக்கிறது. ஜி.எஸ்.டி வரி வசூல் அதிகமாக இருப்பதால், அதிக அளவில் துணை மானியக் கோரிக்கை கோரப்பட்டிருப்பதாக மாநில அரசு தெரிவித்திருக்கிறது.

ஆனால், சட்டமேலவை எதிர்க்கட்சித் தலைவர் அம்பாதாஸ் தன்வே இது குறித்து, ``உத்தவ் தாக்கரே அரசு நிறைவேற்றிய பட்ஜெட்டை ஒதுக்கிவைத்துவிட்டு, துணை மானியக் கோரிக்கை மூலம் புதிய திட்டங்களை நிறைவேற்ற அரசு முயல்கிறது. ஏக்நாத் ஷிண்டே அரசு அமைய உதவிய எம்.எல்.ஏ-க்களை திருப்திப்படுத்தும் நோக்கில் துணை மானியக் கோரிக்கை தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது'' எனக் குற்றம்சாட்டினார்.