Published:Updated:

`திருமாவளவன் ஏன் மௌனம் சாதிக்கிறார்?' -ஆர்.எஸ்.பாரதி கருத்தால் வெடிக்கும் சர்ச்சை

ஸ்டாலின் - ஆர்.எஸ்.பாரதி
ஸ்டாலின் - ஆர்.எஸ்.பாரதி

அதே கூட்டத்தில் ஊடகங்கள் குறித்தும் மோசமான விமர்சனங்களை முன்வைத்திருந்தார் ஆர்.எஸ்.பாரதி.

அரசியல் வட்டாரத்தில் சிலர் தங்களது கருத்துகளால் அவ்வப்போது சர்ச்சைகளில் சிக்குவதுண்டு. தற்போது சிக்கியிருப்பவர் தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினரும் கட்சியின் அமைப்பு செயலாளருமான ஆர்.எஸ்.பாரதி. அவரது பேச்சுக்கு அனைத்து தரப்பினரிடம் இருந்தும் எதிர்ப்புகள் வரத் தொடங்கியுள்ளன.

ஆர்.எஸ்.பாரதி
ஆர்.எஸ்.பாரதி

சென்னை அன்பகத்தில் கடந்த 14-ம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் பேசிய ஆர்.எஸ்.பாரதி, ``தி.மு.க ஒழிந்தால்தான் தமிழகத்துக்கு விமோசனம் என ஹெச்.ராஜா பேசியிருக்கிறார். இந்தியாவிலே தமிழகம் தலைசிறந்த மாநிலமாக இருக்கிறது என்றால் அதற்குத் திராவிட இயக்கம்தான் காரணம்" என்றவர், தொடர்ந்து பேசியதெல்லாம் சர்ச்சை ரகம்.

குறிப்பாக,``மத்தியப் பிரதேச மாநில உயர் நீதிமன்றத்தில் பட்டியலினத்தைச் சேர்ந்த ஒரு நீதிபதிகூட இல்லை. ஆனால், தமிழகத்தில் கலைஞர் கருணாநிதி ஆட்சிக்கு வந்த பிறகு, வரதராஜனை உட்கார வைத்தார். அதன் பின்னர் ஆதி திராவிட இனத்தைச் சேர்ந்த ஏழெட்டு பேர் நீதிபதிகளாக இருந்தார்கள் என்றால் அது திராவிட இயக்கம் போட்ட பிச்சை" என்றார்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவ, பெரும் சர்ச்சை வெடித்தது. மேலும், அதே கூட்டத்தில் ஊடகங்கள் குறித்தும் மோசமான விமர்சனங்களை முன்வைத்தார். இதற்குப் பத்திரிகையாளர் சங்கங்கள் கடும் கண்டனங்களைத் தெரிவித்தன.

இதைத்தொடர்ந்து, ட்விட்டரில், `பிப்ரவரி 14-ம் தேதி சென்னை அன்பகத்தில், கலைஞர் வாசகர் வட்டம் சார்பாக நடந்த நிகழ்ச்சியில் நான் பேசிய சில வார்த்தைகள் தாழ்த்தப்பட்ட மக்கள் மனதை புண்படுத்தியதாக அறிகிறேன். அதற்காக வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன். என்னுடைய நோக்கம் தாழ்த்தப்பட்ட மக்கள் மனதைப் புண்படுத்துவது அல்ல. கலைஞர் அம்மக்களுக்காகச் செய்த நலத்திட்டங்களை எடுத்துக் கூறுவதே ஆகும்' என விளக்கம் அளித்தார்.

ஜெயக்குமாரின் கண்டனம்
ஜெயக்குமாரின் கண்டனம்

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ``ஊடகங்கள் குறித்து நான் பேசியதில் உள்நோக்கம் இல்லை. எந்த ஊடகத்தையும் புண்படுத்தும் நோக்கமும் கிடையாது. நான் கூறிய கருத்துகளால் புண்பட்டிருந்தால், அதற்கு வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன்" என்றார்.

மேலும், தி.மு.க தலைவர் ஸ்டாலின் இதுகுறித்து விளக்கமளிக்கச் சொன்னதாகவும் தானும் இது தவறு என உணர்ந்ததால் வருத்தம் தெரிவிப்பதாகவும் கூறினார். ஆர்.எஸ்.பாரதி தனது கருத்துக்கு வருத்தம் தெரிவித்திருந்தாலும் தொடர்ச்சியாகக் கடுமையான விமர்சனத்துக்குள்ளாகி வருகிறார். தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், `ஆர்.எஸ்.பாரதி தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்திருந்தாலும் அவரது பேச்சு அநாகரிகமானது' எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

குற்றப்பின்னணி வேட்பாளர்கள்... கலைஞர் செய்திகள், நமது அம்மாவில் விளம்பரம் செய்த தி.மு.க, அ.தி.மு.க!

அதேபோன்று சமூக வலைதளங்களிலும் அவருக்குக் கண்டன குரல்கள் தொடர்ந்து எழுந்து வருகின்றன. `ஆர்.எஸ்.பாரதியின் கருத்துக்கு தி.மு.க-வின் கூட்டணி கட்சியான விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் திருமாவளவன் என்ன சொல்கிறார்?' எனவும் கேள்விகளை முன்வைத்து வருகின்றனர்.

மேலும் சிலர், `திருமாவளவன் இந்த விஷயத்தில் கருத்து சொன்னாலும், எம்.பி ரவிக்குமாரால் எந்தக் கருத்தும் சொல்ல முடியாது. காரணம் அவர் தி.மு.க எம்.பி' எனவும் ட்ரோல் செய்து வருகிறார்கள். மேலும் சிலர் ஸ்டாலின், `ஆர்.எஸ்.பாரதியின் கருத்து தி.மு.க-வின் கருத்து இல்லை' எனவும் பதிவிட்டு வருகிறார்கள்.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் ஆதி திராவிடர் நல அணியின் மாநில செயலாளர் ஜெகதீஷ் குமார் இன்று வெளியிட்டுள்ள கண்ட அறிக்கையில், ``அம்பேத்கர் பெற்றுத்தந்த உரிமையில் நிமிர்ந்தெழுந்தது ஒடுக்கப்பட்ட இனம். தனது கட்சி செயலாளர் கூறிய கருத்து, ஸ்டாலினுக்கு மிகச் சாதாரணமான ஒன்றாகத் தோன்றியிருப்பது வருந்தத்தக்கது.

மநீம அறிக்கை
மநீம அறிக்கை

ஆர்.எஸ்.பாரதி வருத்தம் தெரிவித்தால் போதுமானது என்று நினைத்தது கண்டனத்துக்குரியது. இந்தநேரத்தில் தி.மு.க-வோடு கூட்டணியில் இருக்கும் வி.சி.க தலைவர், செஞ்சோற்றுக்கடனால் கட்டப்பட்டிருப்பது பரிதாபத்துக்குரியது. இவர்களின் குணம் எப்படியானது என்பதை தாழ்த்தப்பட்ட மக்கள் மட்டுமல்லாது தமிழக மக்களே உணர வேண்டிய நேரம் இது. குறிப்பாக, இடதுசாரிகள்... தேர்தல் நேரத்தில் அவர்களுக்கு கொடுக்கப்பட்டது நிதியல்ல வேறொன்று என நாளை ஆர்.எஸ்.பாரதி கூறலாம்" எனக் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு