Published:Updated:

கொரோனா தடுப்புப் பணிக்காக 23,123 கோடி; - தமிழகத்துக்கு ஒதுக்கப்பட்ட தொகை எவ்வளவு?

கொரோனா சிகிச்சை
கொரோனா சிகிச்சை

கொரோனா தடுப்புப் பணிகளுக்காக 15-வது நிதி ஆணையத்தின் பரிந்துரைகளின்படி தமிழ்நாட்டுக்கு ஒதுக்கப்பட்ட தொகை வெறும் 510 கோடி ரூபாய் மட்டுமே.

உலக அளவில் கொரோனா பேரிடரால் அதிக பாதிப்படைந்த நாடுகளின் பட்டியலில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை, மகாராஷ்டிரா, தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா போன்ற மாநிலங்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகின. சமீபத்தில் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை மாற்றியமைக்கப்பட்டது. சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த ஹர்ஷ் வர்தன் பதவி விலகியதை அடுத்து, புதிய சுகாதாரத்துறை அமைச்சராக மன்சுக் மாண்டவியா பதவியேற்றுக்கொண்டார். புதிய அமைச்சரவைக் கூட்டம் தலைநகர் டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்றது.

மன்சுக் மாண்டவியா
மன்சுக் மாண்டவியா
Photo: Twitter//@mansukhmandviya

இந்தக் கூட்டத்தில் இந்தியாவில் வரும் காலங்களில் கொரோனா பேரிடரை எதிர்கொள்ள சுகாதாரக் கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கு இரண்டாம்கட்ட அவசரகால நிதியாக 23,123 கோடி ரூபாய் மாநில அரசுகளுக்கு வழங்க ஒப்புதல் வழங்கியிருப்பதாக மன்சுக் மாண்டவியா தெரிவித்திருக்கிறார். `மொத்தமுள்ள 23,123 கோடியில் 15,000 கோடி ரூபாயை மத்திய அரசு வழங்கும். மீதமுள்ள 8,123 கோடி ரூபாயை மாநில அரசுகள் செலவிட வேண்டும். மேலும், இந்த நிதியில், இந்தியாவிலுள்ள 736 மாவட்டங்களிலும் குழந்தைகளுக்கான மருத்துவப் பிரிவுகளை உருவாக்கவும், நாடு முழுவதுமுள்ள அரசு மருத்துவமனைகளில் 20,000 ஐ.சி.யூ படுக்கைகளை உருவாக்கவும் பயன்படுத்தப்படும். இதில் 20 விழுக்காடு ஐ.சி.யூ படுக்கைகள் குழந்தைகளுக்காக இருப்பதை உறுதிசெய்ய வேண்டும்’ என்றும் கூறினார். மத்திய மருத்துவமனை மற்றும் எய்ம்ஸ் மருத்துவமனைகளின் படுகைகளை அதிகரிப்பது, ஆக்சிஜன் சேமித்துவைப்பதற்காக 1,050 புதிய கிடங்குகளை அமைப்பது, இ-சஞ்சீவினி திட்டத்தின் பயனாளர்களை 50,000-லிருந்து ஐந்து லட்சமாக உயர்த்துவது, புதிதாக 8,800 ஆம்புலன்ஸ்கள் வாங்குவது, மருத்துவப் பணியாளர்களை உயர்த்துவது உள்ளிட்ட பல்வேறு செயல்களுக்கு இந்தத் தொகை செலவு செய்யப்படவிருப்பதாகத் தெரிவித்திருக்கிறார்.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள கொரோனா பேரிடர் நிதியாக, மாநிலப் பேரிடர் மேலாண்மை நிதியத்துக்குக் கடந்த ஆண்டு 11,092 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. 15-வது நிதி ஆணையத்தின் பரிந்துரைகளின்படி தமிழ்நாட்டுக்கு ஒதுக்கப்பட்ட தொகை வெறும் 510 கோடி ரூபாய் மட்டுமே. அதற்கு அடுத்ததாக, தமிழகம் உள்ளிட்ட 14 மாநிலங்களுக்கு 6,157 கோடி ரூபாயை வழங்க மத்திய கணக்கு கட்டுப்பாட்டு அதிகாரிக்கு மத்திய நிதியமைச்சகம் உத்தரவிட்டிருந்தது. இதனடிப்படையில் தமிழகத்துக்கு 335.41 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. அன்றைய தமிழக முதலமைச்சர் பழனிசாமி. மத்திய அரசு கொரோனா தடுப்புப் பணிகளுக்காக ஒதுக்கிய 15,000 கோடியில் 2,000 கோடியும், தேசியப் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து 1,000 கோடியும் தமிழகத்துக்கு வழங்கவேண்டியிருந்தது. இருந்தபோதிலும் தமிழகத்துக்குக் குறைந்த அளவே நிதி ஒதுக்கிக் கொடுக்கப்பட்டது. பாஜக ஆட்சியில் இல்லாத பாதிப்பு அதிகமுள்ள மாநிலங்களில், மத்திய அரசு நிதியைக் குறைத்துக் கொடுத்ததாக ஒரு குற்றச்சாட்டு எழுந்ததும் குறிப்பிடத்தக்கது.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

தற்போது அவசரகால நிதியாக ஒதுக்கப்பட்டுள்ள 23,123 கோடியில் எவ்வளவு தமிழகத்துக்கு வழங்கப்படும் என்ற கேள்வி அனைவரின் உள்ளத்திலும் எழுந்துள்ளது. கடந்த முறை தமிழக அரசின் சார்பில் என்ன கேட்கப்பட்டது, எவ்வளவு கொடுக்கப்பட்டது என்பது தொடர்பாக தமிழக சுகாதாரத்துறையைச் சேர்ந்த உயர்மட்ட அதிகாரி ஒருவரிடம் பேசினோம். தற்போதும் அரசுப் பணியில் இருப்பதால் பெயரை வெளியிட வேண்டாம் என்ற கோரிக்கையோடு நம்மிடம் பேசினார். ``கடந்த முறை நிதி ஒதுக்கீடு செய்வதற்கு முன்பாகவே தமிழகத்தில் நோய்ப் பரவல் விகிதம், நமது மருத்துவ கட்டமைப்புகளை மேம்படுத்த என்னென்ன தேவைகள் உள்ளன, நமக்கு எவ்வளவு நிதி வேண்டும் என்பதையெல்லாம் விரிவாக எடுத்துக் கூறியிருந்தோம். தமிழகத்தில் நோய் பாதிப்பு அதிகம் இருந்த நேரத்திலும், குறைவான தொகையே ஒதுக்கப்பட்டது. உண்மையைச் சொல்லப்போனால், கடந்த ஆட்சியில் பெரிய அளவில் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை. பெரிய அளவில் அழுத்தம் கொடுத்திருந்தால் கண்டிப்பாக இன்னும் அதிக தொகை கிடைத்திருக்க வாய்ப்பிருந்திருக்கும்" என்று கூறினார்.

மத்திய அரசின் செயல்கள் குறித்து முன்னாள் மத்திய நிதித்துறை இணை அமைச்சரும், தற்போதைய தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினருமான எஸ்.எஸ்.பழனிமாணிக்கத்திடம் பேசினோம். ``மத்திய அரசு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு நோய் பாதிப்பு அதிகமுள்ள மாநிலங்களுக்கு ஏற்ப நிதியைப் பிரித்துக்கொடுக்க வேண்டும். நோய் பாதிப்பு அதிகமாக இருக்கிறது என்று அவர்களேதான் கூறுகிறார்கள். அதேநேரத்தில், ஒதுக்கும் நிதியையும் குறைத்துவிடுகிறார்கள். பாஜக பேசுவது ஒன்றாக இருக்கிறது; செய்வது ஒன்றாக இருக்கிறது. இங்கு தமிழகத்தில் இருக்கும் பாஜக நிர்வாகிகளும் மற்ற அனைத்து விஷயங்களையும் பற்றிப் பேசுகிறார்களே தவிர இந்தப் பிரச்னைகள் குறித்துப் பேசுவது இல்லை" என்றார்.

எஸ்.எஸ். பழனிமாணிக்கம்
எஸ்.எஸ். பழனிமாணிக்கம்

தொடர்ந்து பேசியவர், ``மாநில அரசுகளின் வரி விதிக்கும் அதிகாரத்தைப் பிடுங்கிக்கொண்டு, மாநிலங்கள் தங்களின் பங்குக்கு நிதியைத் தரச் சொல்வது எந்த வகையில் நியாயமாகும்? மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் மத்திய அரசு நம்மை நடத்துகிறது என்பது அவர்களின் அனைத்துச் செயல்பாடுகளிலும் தெரியவருகிறது. கடந்த அரசோடு தற்போதைய அரசை எந்த வகையிலும் ஒப்பிட முடியாது கொரோனாவைக் கட்டுப்படுத்த தமிழக முதல்வர் கடுமையாக உழைத்துக்கொண்டிருக்கிறார். சென்ற ஆட்சியிலிருந்தவர்களுக்கு அவர்களின் ஆட்சியைத் தக்கவைப்பதே குறிக்கோளாக இருந்தது. தற்போதைய ஆட்சி மக்களுக்கான ஆட்சி. மத்திய அரசிடமிருந்து கண்டிப்பாகத் தமிழக அரசுக்கு உரிய நிதியைப் பெறுவதற்கு அனைத்து வகையான முயற்சிகளையும் மேற்கொள்வோம்'' என்று கூறினார்.

மத்திய அரசு மாநிலங்களுக்கு கொரோனா நிதி ஒதுக்குவது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினர் க.கனகராஜிடம் பேசினோம். ``கொரோனா தொடர்பாக நிதி ஒதுக்குவதிலும் சரி, தடுப்பூசி ஒதுக்குவதிலும் சரி, மக்கள்தொகை அடிப்படையிலும் சரி, நோய் பாதிப்பு அடிப்படையிலும் சரி மத்திய அரசு நிதியை ஒதுக்குவது கிடையாது. அன்று முதல் இன்று வரை ஒரு சார்பாகவே நடந்துகொள்கிறது. நோய் பாதிப்பு அதிகமுள்ள மாநிலங்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் அப்படிச் செய்வது கிடையாது.

க.கனகராஜ்
க.கனகராஜ்

அதேபோல அவர்கள் ஒரு பகுதி தொகையைக் கொடுத்துவிட்டு இன்னொரு பகுதி தொகையை மாநில அரசுகளைக் கொடுக்கச் சொல்வதும் சரியல்ல. ஜி.எஸ்.டி என்ற பெயரில் மாநிலங்களின் வரி விதிக்கும் அதிகாரத்தையும் மத்திய அரசு எடுத்துக்கொண்டது. மத்திய அரசு, மாநிலங்களுக்குத் தரவேண்டிய ஜி.எஸ்.டி நிதியையும் வழங்குவது கிடையாது. பிறகு எப்படி ஒரு பகுதி தொகையை மாநில அரசுகள் வழங்க வேண்டும் என்று கூறுவது சரியாக இருக்கும்? முன்பு நேரடி வரி அதிகமாக இருந்தது. மறைமுக வரி குறைவாக இருந்தது. கடந்த ஆண்டு முதல் மறைமுக வரியை உயர்த்திவிட்டு, நேரடி வரியைக் குறைத்திருக்கிறது மத்திய அரசு. அதோடு, மாநிலங்களின் அதிகாரத்தைக் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைத்துக்கொண்டே வருகிறது. எந்த விருப்பு வெறுப்பும் இல்லாமல் நிதியை அந்தந்த மாநிலங்களில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளுக்கு ஏற்ப பிரித்துக்கொடுக்க வேண்டும்'' என்று கூறினார்.

மத்திய அரசின் கொரோனா நிதி ஒதுக்கீட்டு செயல்பாடுகள் குறித்து தமிழக பாஜக செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதியிடம் பேசினோம். ``மத்திய அரசுதான் கொரோனா தடுப்புப் பணிகளுக்கான, வென்ட்டிலேட்டர், சுவாசக் கருவிகள், மருந்துகள், ஆர்.டி பி.சி.ஆர் சோதனைக் கருவிகள், ஆக்சிஜன் உட்பட அனைத்துச் செலவுகளையும் வழங்கியிருக்கிறது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். பல்வேறு வரி விலக்குகளையும் வழங்கியிருக்கிறது.

நாராயணன் திருப்பதி
நாராயணன் திருப்பதி

மாநிலங்களுக்கு எந்த அடிப்படையில் நிதி ஒதுக்கப்பட்டது என்பதைத் தெரிந்துகொள்ளாமல் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுவது மிக மலிவான அரசியல். மாநிலங்களுக்கு ஒதுக்கப்படும் தொகை அனைத்துமே மிக வெளிப்படையாக இருக்கிறது. நிதி மட்டுமல்ல... பல்வேறு மருத்துவக் கட்டமைப்புகளையும் மத்திய அரசு ஏற்படுத்தியிருக்கிறது. அவை அனைத்தையும் தெரிந்துகொண்டு பேச வேண்டும். மேலோட்டமாக `நாங்கள் அவ்வளவு கேட்டோம்... இவ்வளவுதான் மத்திய அரசு வழங்கியிருக்கிறது’ என்று பேசுவதெல்லாம் வெறும் அரசியல் மட்டுமே" என்று கூறினார்.

மிரளவைக்கும் கொரோனா கொள்ளை!

மத்திய அரசு ஒதுக்கியுள்ள நிதியில் மாநிலங்களின் மீது எந்த விருப்பு வெறுப்பும் இல்லாமல் மாநிலங்களின் நோய் பாதிப்பு, மக்கள்தொகை விகிதம், மாநிலங்களின் செயல்பாடுகள் இவை அனைத்தையும் கருத்தில்கொண்டு மாநிலங்களுக்குத் தேவையான நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பதே அனைவரின் கருத்தாக இருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு