தேசிய அளவில் எதிர்பார்க்கப்பட்ட கர்நாடகா மாநில சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கியிருக்கிறது. வாக்குப்பதிவு முடிந்து வரும் 13-ம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படவிருக்கிறது. இந்த முறை கடுமையான போட்டி நிலவுவதால், கட்சிகள் பல்வேறு வழிகளில் மக்களைக் கவர பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்திருக்கிறது.
தென்னிந்தியாவில் கர்நாடகத்தில் மட்டுமே ஆட்சிக்கட்டிலை தன்வசம் வைத்திருக்கும் பா.ஜ.க அதிதீவிர பிரசாரம் செய்தது.

மறுபுறம் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க-வுக்கு எதிரணியை உருவாக்க, கர்நாடகத் தேர்தலில் வெற்றிபெற்று, வலுவான அடித்தளத்தை நிறுவ காங்கிரஸும் தீவிர பிரசாரம் செய்தது. மூன்றாம் அணியாக இருக்கும் மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் குமாரசாமி, கூட்டணிப் பேச்சுவார்த்தைக்குக் கட்சிகள் வரும்போது, முதல்வர் பதவி கேட்டுப்பெற காய் நகர்த்தி, பிரசாரம் செய்திருக்கிறார்.
1,087 கோடீஸ்வர வேட்பாளர்கள்!
வழக்கத்தைவிட இந்த முறை கடும் போட்டி நிலவுவதால், மூன்று கட்சிகளுமே செல்வ செழிப்பான வேட்பாளர்களுக்கு வாய்ப்பு கொடுத்து களமிறக்கியிருப்பது வேட்புமனுவை ஆய்வு செய்தாலே தெரியும். நடப்பு தேர்தலுக்கு மொத்தம், 2,615 வேட்பாளர்கள் வேட்புமனுத் தாக்கல் செய்திருந்த நிலையில், வேட்புமனுவின் அடிப்படையில் வேட்பாளர்களின் நிதிநிலை குறித்து, டெல்லியைச் சேர்ந்த ஜனநாயகச் சீர்திருத்த அமைப்பு ஆய்வுசெய்து, எந்தெந்தக் கட்சியைச் சேர்ந்த வேட்பாளர்கள் கோடீஸ்வரர்களாக இருக்கின்றனர் என அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது.

அறிக்கையின் அடிப்படையில், நடப்பு தேர்தலில், 1,087 வேட்பாளர்கள் கோடீஸ்வரர்களாக இருப்பது கண்டறியப்பட்டிருக்கிறது. இதுவே, 2018 தேர்தலில், 651 பேர் மட்டுமே கோடீஸ்வர வேட்பாளர்களாக இருந்தனர். இம்முறை 7 சதவிகிதம் கோடீஸ்வர வேட்பாளர்கள் அதிகரித்திருக்கின்றனர்.
தேசிய அளவில் காங்கிரஸ் மீண்டும் வலுப்பெறுகிறதா, இல்லை தென்னிந்தியாவில் பா.ஜ.க வலுப்பெறுகிறதா என்பதைத் தீர்மானிக்கும் காரணியாக, கர்நாடகா தேர்தல் இருப்பதால், கடந்த தேர்தலைவிட இந்த முறை அதிக ‘பண மழை’ பொழிகிறது என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள் சிலர்.

மார்ச் 29-ம் தேதி தேர்தல் நடத்தை விதிமுறை அமல்படுத்தப்பட்டதிலிருந்து, மொத்தமுள்ள, 224 தொகுதிகளில், 91-க்கும் மேற்பட்ட தொகுதிகளை, ‘செலவு மிகுந்த பகுதி’ என, அறிவித்து, பறக்கும்படையினர் சோதனை செய்தனர். நேற்று வரையில், பறக்கும்படையினர் மொத்தம், ரூ. 375 கோடி மதிப்பிலான ரொக்கம், வெள்ளிப் பொருள்கள், பரிசுப் பொருள்களைப் பறிமுதல் செய்திருக்கின்றனர். இதில், குறிப்பாக 97 கோடி ரூபாய்க்கு வெள்ளிப் பொருள்கள், 24 கோடி ரூபாய்க்கான பரிசுப் பொருள்கள் அடக்கம்.

4.5 மடங்கு அதிக பறிமுதல்!
இது குறித்து, மத்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ‘நடப்பு கர்நாடகா தேர்தலில் பறக்கும் படையால், ரூ. 375 கோடி ரூபாய் மதிப்பிலான பொருள்கள், ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன. இது, 2018 தேர்தலைக்காட்டிலும், 4.5 மடங்கு அதிகம்’’ எனக் குறிப்பிட்டிருக்கிறது.
இந்தப் பறிமுதல்களில் குறிப்பிடும்படியாக, மாண்டியா மாவட்டத்தின் மத்தூர் தொகுதியில் போட்டியிடும், காங்கிரஸ் வேட்பாளர் கே.எம்.உதய் நண்பர்களின் வீடுகளில், வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்வதற்காகப் பதுக்கப்பட்ட, ரூ. 2 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. சிக்கமங்களூர் மாவட்டம் தரிகிரியில், 23.51 கோடி மதிப்பிலான தங்கம், வெள்ளிப் பொருள்கள் பறிமுதல்; தேவனகிரி தெற்குத் தொகுதி பா.ஜ.க வேட்பாளர் பி.ஜி.அஜய்குமாரின், ‘நாமினி’ வீட்டில், வெள்ளி விநாயகர் சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

அதேபோல், மைசூர் அடுத்த புத்தூர் காங்கிரஸ் வேட்பாளர் அஷோக் குமார் ராயின் சகோதரர் வீட்டிலுள்ள மரத்தில் பதுக்கப்பட்டிருந்த ஒரு கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. இதுபோல, காங்கிரஸ், பா.ஜ.க., மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் வேட்பாளர்களிடமிருந்து பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன.
இது எல்லாவற்றையும் மீறி கர்நாடகா மக்கள், எந்தக் கட்சியைத் தேர்ந்தெடுக்கிறார்கள் என்ற கேள்விக்கு, வரும், 13-ம் தேதி வெளியாகும் தேர்தல் முடிவில் விடை கிடைக்கும்...