1925-ம் ஆண்டு விஜயதசமி பண்டிகையின்போது தொடங்கப்பட்டது ஆர்.எஸ்.எஸ் அமைப்பு. இந்தியாவின் அரசியலோடு பிணைந்து, தற்போது நூற்றாண்டைத் தொடவுள்ள ஆர்.எஸ்.எஸ் அமைப்பு, ஒவ்வோர் ஆண்டும் விஜயதசமியின் போது 'சாஸ்த்ரா பூஜை' நடத்துவதோடு, அதன் உறுப்பினர்கள் அணிவகுப்பும் நடத்துகின்றனர். இறுதியாக, ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தலைவர் உரையோடு, கொண்டாட்டங்கள் நிறைவு பெறுகின்றன.

ஆர்.எஸ்.எஸ், இந்தியாவின் சமகால அரசியலை நிர்ணயம் செய்யும் அமைப்பு. பி.ஜே.பி-யின் தாயாக இருக்கும் ஆர்.எஸ்.எஸ் எடுக்கும் முடிவுகள், பி.ஜே.பி-யின் ஆட்சியில் திட்டங்களாக வெளிப்படுகின்றன. எனவே, ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் பேசுவது அரசியல் முக்கியத்துவம்பெறுகிறது. கடந்த மாதம், ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மோகன் பகவத், "இந்து ராஷ்ட்ரம் என்ற கருத்தியலில் இருந்து ஆர்.எஸ்.எஸ் பின்வாங்கவில்லை" என்றும், "எந்தக் கருத்தியலில் இருந்தும் பின்வாங்குவோம். இந்து ராஷ்ட்ரம் மட்டும் அப்படியில்லை" என்றும் கூறியிருந்தது அதிர்வுகளை ஏற்படுத்தியது. அதே நிகழ்ச்சியில், "தன்பால் ஈர்ப்பாளர்களுக்கும் சமூகத்தில் இடம் உள்ளது" எனவும் கூறியிருந்தார் மோகன் பகவத்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
"இந்து ராஷ்ட்ரம் என்ற கருத்தியலில் இருந்து ஆர்.எஸ்.எஸ் பின்வாங்கவில்லை!"மோகன் பகவத், ஆர்.எஸ்.எஸ் தலைவர்.
இந்த ஆண்டின் விஜயதசமி கொண்டாட்டம், நாக்பூர் ரேஷிம்பாக் திடலில் நடத்தப்பட்டது. இந்த ஆண்டின் சிறப்பு விருந்தினராக, ஹெச்.சி.எல் நிறுவனத்தின் நிறுவனர் ஷிவ் நாடார் பங்கேற்றார். மோகன் பகவத்தின் உரையை ஒலிபரப்புசெய்ய, நாடு முழுவதும் இணைய வானொலி சேவையை ஆர்.எஸ்.எஸ் அமைப்பு அறிமுகப்படுத்தியது.

முதலில், ஆயுதங்களை வைத்து நிகழ்த்தப்படும் 'சாஸ்த்ரா பூஜை' நடத்தப்பட்டது. ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர்களின் அணிவகுப்பையும் மரியாதையையும் அதன் தலைவர் மோகன் பகவத் ஏற்றுக்கொண்டார். மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி வி.கே.சிங், மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோர் கலந்துகொண்டனர்.
உங்களுக்குப் பிடிக்காத செயல் ஒன்றை என் மகள் செய்திருக்கிறாள். ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்கு புரதச்சத்து கிடைப்பதற்காக, அவர்களுக்கு சிக்கன் ஊட்டியிருக்கிறாள்.ஷிவ் நாடார், HCL நிறுவனர். ஆர்.எஸ்.எஸ் நிகழ்ச்சியில் பேசிய போது.
சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட ஷிவ் நாடார் பேசிய போது, "அரசு மட்டுமே முயன்றால், நாடு அடுத்த கட்டத்திற்குச் செல்லாது. தனியார் நிறுவனங்கள், குடிமக்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் ஆகியோரும் சமமாகப் பணியாற்ற வேண்டும்" என்றார். உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஊட்டச்சத்துக் குறைபாடு கொண்ட குழந்தைகளுக்காக அவர் தொடங்கிய 'சிக்ஷா' என்ற திட்டத்தைப் பற்றி பேசியபோது, "என் மகள் அந்தத் திட்டத்தை முன்னின்று நடத்துகிறார். உங்களுக்குப் பிடிக்காத செயல் ஒன்றை என் மகள் செய்திருக்கிறாள். ஊட்டச்சத்துக் குறைபாடுள்ள குழந்தைகளுக்கு புரதச்சத்து கிடைப்பதற்காக, அவர்களுக்கு சிக்கன் ஊட்டியிருக்கிறாள். இந்தியாவின் கிராமப்புறங்களில் வாழும் மக்களின் வாழ்வாதாரம் இப்படியாக மாறியிருக்கிறது" என்றார்.

இறுதியாகப் பேசினார் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத். "குரு நானக்கின் 550-வது ஆண்டு விழா, மகாத்மா காந்தியின் 150-வது ஆண்டு விழா ஆகியவற்றின் தொடர்ச்சியாக இந்த விஜயதசமியைக் கொண்டாடுவது மகிழ்ச்சி" என்று தொடங்கியவர், "இந்த ஆண்டின் தேர்தல் முடிவுகளை உலகமே எதிர்நோக்கியது. 2014-ம் ஆண்டு தேர்தல்களில், அப்போதைய ஆட்சியாளர்கள்மீது அதிருப்தி இருந்ததால், மக்கள் நம்மைத் தேர்ந்தெடுத்தார்களா அல்லது தெளிவான பாதையில் பயணிக்க முடிவுசெய்தார்களா என்பதை இந்த ஆண்டு தேர்தல் முடிவுகள் தெளிவுபடுத்தியுள்ளன. மக்கள், தங்கள் முடிவை உறுதியாக வெளிப்படுத்தியுள்ளனர். ஜனநாயகம் என்பது வெளியில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட கருத்தியல் அல்ல; நூற்றாண்டுகளாக இந்தியக் கலாசாரத்தில் மக்களோடு பிணைந்திருப்பது என்பதை உறுதிசெய்ததோடு, மக்கள் சிறந்த எதிர்காலத்தை எதிர்பார்க்கின்றனர்" என்றார்.
தொடர்ந்து பேசிய மோகன் பகவத், காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து அளிக்கும் சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டதை வரவேற்று, பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களை வாழ்த்தினார். மேலும், 'சந்திராயன்' குழுவையும் வாழ்த்தினார் மோகன் பகவத்.
ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர்கள் கூட்டத்தை நோக்கிப் பேசிய மோகன் பகவத், "இந்த ஆண்டு மகிழ்ச்சியளிக்கும் நிகழ்வுகள் நடந்துள்ளன. இவற்றைக் கொண்டாடி, நமது பொறுப்புகளை அரசிடம் மட்டும் ஒப்படைத்துவிடக்கூடாது. 'பாரதம் புகழும் செழிப்பும் பெற வேண்டும்' என்ற நமது இலக்கில் இருந்து தவறக் கூடாது. சமீபத்தில், நமது நாட்டின் பாதுகாப்பு அதிகரித்துள்ளது. தீவிரவாதம் குறைந்துள்ளது. பாரதத்தின் சிந்தனையில் மாற்றம் நிகழ்ந்துள்ளது" என்றார்.

மேலும், "பாரதத்தில் மாற்றம் நிகழ்வதை வெளிநாட்டில் உள்ளவர்கள் மட்டுமல்ல; உள்நாட்டிலும் பலர் விரும்பவில்லை. சாதி, மொழி, பகுதி என நிலவும் வேற்றுமைகளைப் பயன்படுத்தி, மோதல்களைத் தூண்டுகின்றனர்" என்றார்.
'கும்பல் படுகொலை' என்று சுட்டுவது, நமது நாட்டையும் இந்து சமூகத்தையும் இழிவுசெய்வதாகவும், சிறுபான்மையினர் என்று அழைக்கப்படுபவர்களிடம் அச்சத்தை ஊட்டுவதாகவும் உள்ளது.மோகன் பகவத், ஆர்.எஸ்.எஸ் தலைவர்.

கும்பல் படுகொலைகள் குறித்துப் பேசிய மோகன் பகவத், "சமீப காலங்களில், நமது சமூகத்தில் வாழும் ஒரு சாரார் மீது மற்றொரு சாரார் தாக்குதல் நடத்துவதால், தாக்கப்படும் சமூகம் பாதிக்கப்படுவதாக பிம்பம் உருவாகிறது. இது சட்டம் ஒழுங்கை மீறுவதோடு, நமது பாரம்பரியத்திலும் அரசியலமைப்பிலும் இடம்பெறாத ஒன்றாக இருக்கிறது. எனவே, நாம் சட்டத்திற்குக் கட்டுப்பட்டு, நீதித்துறையின்மீது நம்பிக்கை கொள்ள வேண்டும். இதுபோன்ற நிகழ்வுகளைக் 'கும்பல் படுகொலை' என்று சுட்டுவது, நமது நாட்டையும் இந்துச் சமூகத்தையும் இழிவுசெய்வதாகவும், சிறுபான்மையினர் என்று அழைக்கப்படுபவர்களிடம் அச்சத்தை ஊட்டுவதாகவும் உள்ளது. 'கும்பல் படுகொலை' என்பது இந்தியாவை இழிவுசெய்யும் மேற்கத்திய சதி" என்றார். ஆர்.எஸ்.எஸ் எப்போதும் பல்வேறு வகுப்பினரிடமும் உரையாடலுக்குத் தயாராக இருப்பதாகவும் மோகன் பகவத் கூறினார்.
சுதேசிப் பொருளாதாரம் குறித்துப் பேசிய மோகன் பகவத், கல்வித்துறையில் 'இந்தியப் பார்வை' இடம்பெற வேண்டுமானால், பாடத்திட்டம் முதல் ஆசிரியர்கள் வரை மாற்றப்பட வேண்டும் எனக் கூறினார். பெண்கள் மீதான ஆண்களின் பார்வை மாற்றப்பட வேண்டும் எனவும் மோகன் பகவத் கூறினார்.
ஆர்.எஸ்.எஸ் அமைப்பு மீது வைக்கப்படும் மதவாதம் குறித்த குற்றச்சாட்டுகள் பொய்யானவை எனக் கூறிய மோகன் பகவத், மொழி, மாநிலம் ஆகியவற்றால் வேறுபட்டாலும், ஒரே தேசம் என்ற அழைப்பில் ஒன்றிணைவது அவசியம் என்றார்.
"பாரதத்தைச் சேர்ந்தவர்கள், பாரதத்தைச் சேர்ந்தவர்களை மூதாதையர்களாகக் கொண்டவர்கள், ஒட்டுமொத்தமாக தேசத்தின் புகழுக்காக உழைப்பவர்கள், அமைதியையும் வேற்றுமையையும் மதிப்பவர்கள், பாரதத்தை ஏற்றுக்கொண்டவர்கள்... அனைவரும் இந்துக்களே!"மோகன் பகவத், ஆர்.எஸ்.எஸ் தலைவர்
"ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தேசம், சமூக அடையாளம், தேசிய அடையாளம் குறித்த பார்வையில் எந்த மாற்றமும் இல்லை. பாரதம் ஹிந்துஸ்தான் என்பதிலும், ஹிந்து ராஷ்ட்ரம் என்பதிலும் ஆர்.எஸ்.எஸ் உறுதியாக இருக்கிறது" எனக் கூறிய மோகன் பகவத், "பாரதத்தைச் சேர்ந்தவர்கள், பாரதத்தைச் சேர்ந்தவர்களை மூதாதையர்களாகக் கொண்டவர்கள், ஒட்டுமொத்தமாக தேசத்தின் புகழுக்காக உழைப்பவர்கள், அமைதியையும் வேற்றுமையையும் மதிப்பவர்கள், பாரதத்தை ஏற்றுக்கொண்டவர்கள்... அனைவரும் இந்துக்களே!" என்றார்.

"கலாசாரத்தில் சிறந்து விளங்கும் பாரதம், பலம் மிக்க நாடாக மாற வேண்டும். இதற்காக, ஆர்.எஸ்.எஸ் பணியாற்றுகிறது. ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர்கள் சம காலத்தின் தேவைகளை அறிந்து, நமது நோக்கத்தை நிறைவேற்ற செயல்பட வேண்டும்" என முடித்தார் மோகன் பகவத்.