Published:Updated:

`மோடியும் அமித்ஷாவும் மட்டுமே உதவ முடியாது'- டெல்லி தோல்விக்கு காரணங்களை விவரித்த ஆர்.எஸ்.எஸ் நாளேடு

பிரதமர் மோடி - அமித் ஷா
பிரதமர் மோடி - அமித் ஷா

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் குறித்து ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் நாளேடான தி ஆர்கனைஸர் ஆய்வு நடத்தி கட்டுரை ஒன்றை தலையங்கமாக வெளியிட்டுள்ளது.

2019 நாடாளுமன்றத் தேர்தலில் வெறும் 16.32 சதவிகித வாக்குகள் பெற்றிருந்த ஆம் ஆத்மி, இம்முறை 53.57 சதவிகித வாக்குகள் பெற்று மொத்தம் உள்ள 70 தொகுதிகளில் 62 தொகுதிகளைக் கைப்பற்றி மூன்றாம் முறையாக முதல்வராகப் பதவிப் பிரமாணம் எடுத்துள்ளார் அரவிந்த் கெஜ்ரிவால். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பி.ஜே.பி 8 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்றது.

தொடர்ச்சியாக மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில் பி.ஜே.பி சந்தித்து வரும் தோல்வி தேசிய அளவில் பெரிய கவனத்தைப் பெற்றுவருகிறது. பி.ஜே.பி தோல்விக்குப் பல்வேறு காரணங்கள் கூறப்பட்டு வருகின்றன. இதற்கிடையே, டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் குறித்து ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் நாளேடான தி ஆர்கனைஸர் ஆய்வு நடத்தி கட்டுரை ஒன்றை தலையங்கமாக வெளியிட்டுள்ளது.

அரவிந்த் கெஜ்ரிவால்
அரவிந்த் கெஜ்ரிவால்

`Delhi’s Divergent Mandate' என்ற தலைப்பில், ``ஒரு கெட்ட வேட்பாளர் அவர் சேர்ந்த கட்சி நல்லது என்பதால் வாய்ப்பு கோர முடியாது" என்று பண்டிட் தீனதயாள் உபாத்தியாயா சொன்ன மேற்கோளுடன் வெளியாகியுள்ள அந்தத் தலையங்கத்தில், ``டெல்லி தேர்தல் முடிவுகள் உணர்வின் அடிப்படையில் வெளிவந்துள்ளன. ஆளும் ஆம் ஆத்மி கட்சி பெரும்பான்மையுடன் அதிகாரத்தைக் கைப்பற்றியது மட்டுமல்லாமல் மீண்டும் 50 சதவிகித வாக்குகளைப் பெற்றுள்ளது. அரசியல் மற்றும் கருத்தியல் நிலைப்பாட்டைப் பொறுத்து இந்த முடிவுகளில் பல்வேறு விளக்கங்களும் பகுப்பாய்வுகளும் இருக்கும்.

இன்று முதல்வர்; நாளை பிரதமர்!

இந்தத் தேர்தலில் பா.ஜ.க தோல்விக்கு இரண்டு முக்கியக் காரணங்கள் இருக்கின்றன. ஒன்று... 2015-ம் ஆண்டுக்குப் பின் பா.ஜ.க அடிமட்டத்திலிருந்து கட்சியை வலுப்படுத்துவதில் தோல்வி அடைந்துவிட்டது. இரண்டாவது, கடைசி நேரத்தில் பிரசாரத்தில் பா.ஜ.க-வினர் கோட்டைவிட்டதுதான். பாரம்பர்யமாக, டெல்லியில் பா.ஜ.க தனது ஜனசங்க அவதாரத்தின்மூலம் எப்போதும் உறுதியான வாக்குத் தளத்தைக்கொண்டிருக்கிறது.

அது இப்போதும் தொடர்ந்துகொண்டிருக்கிறது. ஆனால், அனைத்து சட்டப்பேரவைத் தேர்தலிலும் பிரதமர் மோடியும் அமித் ஷாவும் உதவ மாட்டார்கள். கட்சியை அடிமட்டத்திலிருந்து வலுப்படுத்துவதைத் தவிர பா.ஜ.க-வுக்கு வேறுவழியில்லை. அது அவசியமான ஒன்று. டெல்லி மக்களின் எண்ணங்களை அறிந்து அவர்களின் பிரச்னைகளை உடனடியாகத் தீர்க்க வேண்டும்.

ஆர்.எஸ்.எஸ். பயிற்சி
ஆர்.எஸ்.எஸ். பயிற்சி
மாதிரி படம்

டெல்லியில் 1,700 அங்கீகாரமற்ற குடியிருப்புகளுக்கு அங்கீகாரம் அளித்து 40 லட்சம் மக்கள் பெறும்வகையில் பா.ஜ.க வாக்குறுதி அளித்ததும் பயனில்லை. காங்கிரஸின் பாரம்பர்ய நடுத்தர வர்க்க வாக்குகளைத் தவிர, இந்தக் குடியிருப்புகளில் வசிக்கும் மக்களின் வாக்குகள் பெரும்பாலும் ஆம் ஆத்மிக்குச் சென்றுள்ளன. மக்களின் உள்ளூர் அபிலாஷைகளை நிவர்த்தி செய்வதற்காக டெல்லியில் அமைப்பை மீண்டும் கட்டியெழுப்புவதைத் தவிர வேறு வழியில்லை என்பது தெளிவான செய்தி.

அதேபோல், கெஜ்ரிவாலுக்கு எதிராக நேரடியாக முதல்வர் வேட்பாளரை நிறுத்த தவறவிட்டது பா.ஜ.க. ஏராளமான மத்திய அமைச்சர்கள், பா.ஜ.க தலைவர்கள் பிரசாரம் செய்தும் கெஜ்ரிவால் வென்றுள்ளார். ஷாஹீன் பாக் போராட்டத்தில் ஆம் ஆத்மி நேரடியாக ஈடுபடாமல் திறம்பட செயலாற்றியது. உணர்வுகள் போரில், அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் அவரது அரசாங்கத்துக்கும் எதிராக எந்தவொரு எதிர்ப்பும் நிச்சயமாகத் தெரியவில்லை" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

`தேர்தல் முடிந்துவிட்டது;இனி அனைத்துக்கட்சியினரும் என் குடும்பத்தினர்!’-டெல்லியை  கவர்ந்த கெஜ்ரிவால்
அடுத்த கட்டுரைக்கு