Published:Updated:

ஆர்எஸ்எஸ் Vs அமேஸான் - புதிய சர்ச்சை கிளம்பியதன் பின்னணி என்ன?

நக்சலைட்டுகள், இடதுசாரி அமைப்புகளுடன் சேர்ந்துகொண்டு நாட்டின் பொருளாதாரத்தைச் சிதைப்பதாக இன்ஃபோசிஸ் மீது குற்றச்சாட்டு வைத்து கட்டுரை வெளியிட்ட பாஞ்சஜன்யா இதழ் தற்போது அமேஸான் மீது குற்றச்சாட்டை வைத்துள்ளது. இதன் பின்னணி என்ன?

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

`கிழக்கிந்திய கம்பெனி 2.0’ என அமேஸான் நிறுவனத்தை விமர்சித்து ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் `பாஞ்சஜன்யா’ என்ற இதழில் தலையங்கம் எழுதப்பட்டிருக்கிறது. ``இந்தியாவுக்குள் நுழைந்தபோது கிழக்கிந்திய கம்பெனி என்னென்ன செய்ததோ அதே வேலையைத்தான் அமேஸான் நிறுவனமும் செய்கிறது” எனக் கூறி பல்வேறு விமர்சனங்களை முன்வைக்கிறது அந்தத் தலையங்கம்.

``இந்தியாவில் உற்பத்தியாகும் பொருள்களை சுமார் 200-க்கும் மேற்பட்ட நாடுகளில் விற்பனை செய்ய சுமார் 70,000-க்கு மேற்பட்ட சிறு வியாபாரிகளுக்குத் தளம் அமைத்துக் கொடுத்திருக்கிறோம். கொரோனாவின் தாக்கம் தீவிரமாக இருந்தபோதும் 75,000 சிறு வியாபாரிகளுடன் கைகோத்து 450-க்கும் மேற்பட்ட நகரங்களில் விற்பனை செய்து நெருக்கடிகளைச் சமாளிக்க உதவியாக இருந்தோம். இந்தியர்கள் பலருக்கும் வேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறோம். எங்கள் மீதான விமர்சனங்களை ஏற்க முடியாது” என அமேஸான் விளக்கம் அளித்துள்ளது.

``அமேஸான் மீதான விமர்சனம் அர்த்தமற்றது. இதில் தேசத்தின் நலனைக் காட்டிலும் ஆளும் பா.ஜ.க-வின் நலனுக்கு ஆதரவாக முன்வைக்கப்பட்டுள்ள கருத்துகள்தான் அதிகம். அதேவேளையில் அமேஸான் குறித்த எல்லா விமர்சனத்தையும் புறந்தள்ளிவிட முடியாது” என இது குறித்து காங்கிரஸ் கருத்து தெரிவித்துள்ளது.

பாஞ்சஜன்யா
பாஞ்சஜன்யா
ட்விட்டர்

நக்கசலைட்டுகள், இடதுசாரி அமைப்புகளுடன் சேர்ந்துகொண்டு நாட்டின் பொருளாதாரத்தைச் சிதைப்பதாக இன்ஃபோசிஸ் மீது குற்றச்சாட்டுவைத்துக் கட்டுரை வெளியிட்ட பாஞ்சஜன்யா இதழ், தற்போது அமேஸான் மீது குற்றாச்சட்டை வைத்துள்ளது. இதன் பின்னணி என்ன?

`அமேசான் கம்பெனி என்பது கிழக்கிந்திய கம்பெனியின் 2.0 வெர்ஷன்!' - ஆர்.எஸ்.எஸ் பஞ்சஜன்யா இதழ்

இந்தியாவில் 2004-ம் ஆண்டு தன்னுடைய கிளையை நிறுவிய அமேஸான் நிறுவனம் 2013-ம் ஆண்டில்தான் வர்த்தகத்தைத் தொடங்கியது. அதன் பின்னர் அமேஸான் ஆன்லைன் விற்பனைப் பிரிவு, டெலிவரி பிரிவு, அமேஸான் பிரைம் வீடியோ, அமேஸான் வீடியோ, அமேஸான் ஃபயர் ஸ்டிக், மின்னணு சாதனங்களின் உற்பத்தியிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டது. தற்போது ஆன்லைன் கேம்ஸ் தயாரித்தும் வெளியிட்டுவருகிறது. 2019-20-ம் நிதியாண்டில் இந்தியாவில் சுமார் 11,000 கோடி முதலீடு செய்துள்ளதாக ஒழுங்காற்று அமைப்பிடம் அறிக்கை அளித்தது. அதேநேரத்தில் இதே நிதியாண்டில் சுமார் 7,899 கோடி ரூபாய் இழப்பீடு ஏற்பட்டுள்ளது. இது 2018-19-ம் நிதியாண்டில் ஏற்பட்ட 7,014 கோடியைவிட அதிகம் எனவும் தெரிவித்தது. 2025-ம் ஆண்டுக்குள் இந்தியாவில் 20 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்க அமேசான் நிறுவனம் இலக்கு வைத்திருப்பதாகவும், ஏற்கெனவே 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்திருந்தது. கார்ப்பரேட் நிறுவனங்கள், ஐடி., பி.பி.ஓ துறைகளிலும் கால் பதித்துள்ளன. அறிவியல் ஆய்வு சார்ந்த துறையிலும் கால் பதிக்கவிருப்பதாகத் தெரிவித்திருக்கிறது. அமேஸான் கிசான் என விவசாயிகளுக்கான திட்டம் என அமேஸான் நுழையாத துறையே இந்தியாவில் இல்லை எனும் அளவுக்கு முதலீடுகளைச் செய்திருக்கிறது.

அமேஸான்
அமேஸான்

மத்திய அரசின் ஆத்ம நிர்பார் பாரத் அபியான் திட்டத்தின் கீழ் சென்னையில் தனது முதல் மின்னணு சாதன உற்பத்தி ஆலையைத் தொடங்கவிருப்பதாகவும், அது `மேக் இன் இந்தியா' என்ற திட்டத்தின் கீழும் வரும் எனவும் அமேஸான் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆர்.எஸ்.எஸ் இதழின் விமர்சனம் சரிதானோ என்று எண்ணும் அளவுக்கு இப்படி இந்தியாவில் எல்லாப் பகுதிகளிலும் கிளைபரப்பிச் செயலாற்றிக்கொண்டிருக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மத்திய பா.ஜ.க அரசின் திட்டங்களை ஒட்டியே அமேஸான் நிறுவனம் இந்து தெய்வங்களையும், இந்திய இறையாண்மையும் கேலி செய்யும் வகையில் தாண்டவ், பாதல் லோக் உள்ளிட்ட பல்வேறு வெப் சீரீஸைத் தயாரித்து வெளியிடுவதாக பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பைச் சேர்ந்தவர்கள் அமேஸான் நிறுவனத்தின்மீது தொடர்ந்து குற்றச்சாட்டுகளை வைத்துவருகிறார்கள். மேலும், அமேஸான் நிறுவனம் கிறித்தவ மிஷனரிகளுக்குப் பெரிய அளவில் நிதியுதவி அளித்துவருவதாகவும், விமர்சனங்களை முன்வைக்கிறார்கள். அமேஸான் நிறுவனம் தனக்குச் சாதகமாக அரசின் கொள்கைகள் அமைய வேண்டும் என்பதற்காக அரசின் முக்கியத் துறைகளில் இருக்கும் அதிகாரிகளுக்குக் கோடிக்கணக்கான ரூபாயை லஞ்சமாகக் கொடுத்திருப்பதாகவும், அமேஸான் நிறுவனம் தன்னுடைய கையாட்களாகப் பல போலி நிறுவனங்களை உருவாக்கியிருக்கிறது எனவும் குற்றச்சாட்டுகளை அடுக்குகிறார்கள். மேலும், இந்தியாவிலுள்ள சந்தையில், தான் மட்டுமே விற்பனை அமைப்பாக விளங்க வேண்டும் என்று அமேஸான் நிறுவனம் கருதுவதாகவும், அதற்காகப் பொருளாதாரம், அரசியல், குடிமக்களின் அடிப்படை உரிமைகள் ஆகியவற்றை வாரிச்சுருட்டிக் கொள்வதற்கான முன் முயற்சிகளை அந்த நிறுவனம் தொடங்கியுள்ளது எனவும் குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார்கள்.

தாண்டவ்
தாண்டவ்

அமேஸான் நிறுவனத்தின் மீது பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ் அமைப்பைச் சேர்ந்தவர்கள் மட்டுமல்ல, காங்கிரஸ் கட்சியும் இதேபோலக் குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறது. அமேஸான் நிறுவனம் பல்வேறு வழக்குகளில் சிக்கி உச்ச நீதிமன்றத்தின் விசாரணை வளையத்துக்குள் இருக்கிறது. ஆனால், அரசியல் கட்சியினர் சொல்லும் எந்தப் புகாரையும் நேரடியாக அணுக முடியாது என்பதால், இது குறித்து தீவிர விசாரணை வேண்டும் என்கிறார்கள் அரசியல் வல்லுநர்கள்.

பாஞ்சஜன்யா இதழில் வெளியான கட்டுரை குறித்து பொருளாதார வல்லுநர் நரைன் ராஜ கோபாலிடம் பேசினோம். ``அமேஸான் அமெரிக்காவிலும் சிறு வியாபாரிகளுக்கான விற்பனை சந்தையாகத்தான் இயங்குகிறார்கள். அங்கும் அமெரிக்கா சில பிரச்னைகளைச் சந்திக்கிறது.

இந்தியாவில் இதுநாள் வரை வணிகத்தைக் குறிப்பிட்ட சமூகம் மட்டுமே செய்துவந்ததை அமேஸான், ஃபிளிப்கார்ட் மாதிரியான நிறுவனங்கள் யார் வேண்டுமானாலும் வர்த்தகம் செய்யலாம் என்ற வாய்ப்பை ஏற்படுத்தி, புதிய தலைமுறை வணிகர்களை உருவாக்கிவிட்டன. இது குறிப்பிட்ட அந்தச் சமூகக் கூட்டமைப்புகளுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்துகிறது. அதுதான் ஆர்.எஸ்.எஸ் போன்ற அமைப்புகளுக்குப் பிரச்னையை ஏற்படுத்துகிறது.

ஜெஃப் பெசோஸ், அமேஸான் நிறுவனர்
ஜெஃப் பெசோஸ், அமேஸான் நிறுவனர்

அம்பானி போன்றவர்கள் இந்திய கார்ப்பரேட்கள். இவர்களும் ஆன்லைன் வர்த்தகத்துக்குள் வந்துவிட்டதால் அவர்களுக்கு உதவும் வகையில் பாலிசியை வைத்துக்கொண்டு அமேஸானை வெளியேற்ற வேண்டும் என்பதுதானே தவிர வேறெந்த அக்கறையும் இல்லை. இவர்களுக்கு மற்றொரு பிரச்னை, மேற்கத்திய நிறுவனங்கள் இந்தியாவுக்கு வரும்போது அவர்களுடன் சேர்ந்து முற்போக்கு சிந்தனைகளும் இங்கே கொண்டுவரப்படுகின்றன. பிரைம் வீடியோவால் இந்தியாவின் இறையாண்மை பாதிக்கப்படுகிறது என்கிறார்கள். ஆனால், ஆல்ட் பாலாஜி, எம்.எக்ஸ்.பிளேயரில் வருபவையெல்லாம் என்ன ரகம் என்றே சொல்ல முடியாது. நியாயமாக இந்து கலாசாரத்துக்கு எதிராக இருப்பது என்றால் இவற்றைத்தான் எதிர்க்க வேண்டும்.

சாதி, மத, பாலின வேறுபாடுகள் அனைத்தையும் அமேஸான் உடைத்ததை இவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அமேஸான் பிரச்னை என்றால் அதில் இணைப்பவர்களின் எண்ணிக்கை குறைய வேண்டும் இல்லையா? வணிகம் எங்கள் கைவிட்டுப் போகிறது என்ற உண்மையைச் சொல்ல முடியாமல்தான் இப்படியெல்லாம் குற்றம்சாட்டுகிறார்கள்.

'கிழக்கிந்திய கம்பெனி 2.0' என்ற தலைப்பே அபத்தம். வர்த்தகத்தில் சர்வாதிகாரமாக நடந்துகொண்டது கிழக்கிந்திய கம்பெனி. இந்திய சட்டங்களையும் மதிக்கவில்லை. ஆனால், அமேஸான் அப்பட்டியில்லையே... அரசியல் தலையீட்டை வைத்துத்தான் நாம் இந்தச் சொல்லாடலைப் பயன்படுத்த வேண்டும். இந்தத் தெளிவுகூட இல்லாமல் எழுதப்பட்டுள்ள கட்டுரை குறித்து இவ்வளவு கவனம் செலுத்தவேண்டிய அவசியமில்லை" என்கிறார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு