Published:Updated:

`புரட்சி அலை பொங்கி வருகையில்..!' - ரஜினியின் கருத்தும் ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரியின் பார்வையும்

ரஜினிகாந்த்
ரஜினிகாந்த்

கவிஞர் மேத்தா இப்படி சொல்கிறார், `புரட்சி அலைகள் பொங்கி வருகையில் புல்லின் நுனியும் புதுமை சிலிர்க்கும். புல்லாங்குழலும் புரட்சி வெடிக்கும்!"

நடிகர் ரஜினிகாந்த் அரசியல் பேச்சுகள் எப்போதுமே வைரல் ரகம் தான். அவர் பேசும் ஒரிரு வார்த்தைகள் கூட தலைப்புச் செய்தியாவது உண்டு. 2017-ம் ஆண்டு, `அரசியலுக்கு வருவது உறுதி' என அவர் அறிவித்தப்பிறகு கடந்த 12 -ம் தேதிதான் மீண்டும் அதிகாரபூர்வமாக செய்தியாளர்களைச் சந்தித்தார். பல்வேறு சந்தேகங்களுக்கு விளக்கம் சொல்வதாக தொடங்கிய அந்த உரையில் பல்வேறு விஷயங்கள் குறித்து விரிவாகப் பேசினார். எனினும் அதில் பல கேள்விகள்தான் மீண்டும் எழுந்தன.

ரஜினிகாந்த்
ரஜினிகாந்த்

அவர் பேசியது தொடர்பாக இன்னும் விவாதங்கள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக கட்சிக்கு ஒரு தலைமை ஆட்சிக்கு ஒரு தலைமை, இளைஞர்களுக்கு அதிக வாய்ப்பு, ஆட்சி மாற்றம் கட்டாயம் தேவை, நல்லவர்களுக்கு நேர்மையானவர்களுக்கு வாய்ப்பு, தேர்தல் முடிந்ததும் தேவையில்லாத கட்சிப் பதவிகள் நீக்கப்படும் உள்ளிட்ட பல அறிவிப்புகள் நடைமுறையில் சாத்தியமா என்று பல கட்டங்களாக விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், ரஜினி அன்று பேசுகையில், 60 - 65 சதவிகித இடங்களை 50 வயதுக்குக் கீழே உள்ளவர்களுக்கு அளிக்கப்போவதாகவும் மீதமுள்ள இடங்களை ஓய்வுபெற்ற நீதிபதிகள், ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் போன்றோருக்கு அளிக்கப்போவதாகவும் தெரிவித்தார். இதைக் கொண்டு ஒரு பெரும் விவாதமே நடைபெற்று வருகிறது. ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நெருக்கடி நேரத்தின்போது மட்டும் களத்துக்கு வருவார்கள். ஆனால், அடிமட்ட அரசியல் கட்சியினர்தான் மக்களின் அன்றாட பிரச்னைகளோடு வாழ்கிறார்கள் என்ற விவாதமும் வலம் வருகிறது.

ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி பாலச்சந்திரன்
ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி பாலச்சந்திரன்

மேற்கு வங்க அரசில் கூடுதல் தலைமைச் செயலாளராக இருந்து ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி பாலச்சந்திரனிடம் பேசினோம். அவர் ரஜினியின் செய்தியாளர் சந்திப்பில் பேசிய விஷயங்கள் தொடர்பாக விரிவாகப் பேசினார், ``எம்.ஜி.ஆர் என்ற மந்திரச்சொல் எப்படி அன்று மக்களின் மனதில் ஊடுருவி நின்றதோ, அதேபோன்று இன்று ரசிகர்களின் மனதில் ஊடுருவி நிற்கும் ஒரு மந்திரச் சொல் ரஜினிகாந்த் என்று சொல்லலாம். சிறியவர்கள் முதல் முதியவர்கள் வரை அனைத்து தரப்பு மக்களையும் கவரும் நடிப்புத் திறன் கொண்டவர். அவரது பொதுவாழ்கையை ஊடகங்களில் வரும் செய்திகள் மூலம் பார்த்தால், அவர் நல்ல எளிமையான மனிதர். யாருக்கும் தீங்கு நினைக்காத மனிதர். கோடிகள் சம்பாதித்தாலும் எளிமை இவரது ப்ளஸ் பாயின்ட்!

ரஜினி அரசியல் குறித்து முதன்முதலாக பேசியது ஒரு விபத்தாக கூட இருக்கலாம். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுடன் ஏற்பட்ட சில கருத்து வேறுபாடுகள் இதற்கு காரணமாக சொல்லப்பட்டது. மேலும், இருவரும் போயஸ் கார்டன் பகுதியில் வசித்து வந்ததால் ரஜினியின் வீட்டின் முன்பு கூடும் ரசிகர்களின் கூட்டம் அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா அவர்களுக்கு மனச் சோர்வை ஏற்படுத்தியதாகச் சொல்வதுண்டு.

இது போன்று இன்னும் சில பிரச்னைகள் இவர்களுக்கு இடையே ஏற்பட, `இனியும் இந்த ஆட்சி நீடித்தால் கடவுளால் கூட மக்களை காப்பாற்ற முடியாது' என ரஜினி பேசும் அளவுக்குச் சென்றது. ரஜினியின் இந்தப் பேச்சும் இன்னும் சில காரணங்களும் ஜெயலலிதாவின் அரசு தோல்வியைச் சந்திக்க காரணமாக அமைந்தது. ஆனால், இதில் ஒன்றை நாம் புரிந்துகொள்ள வேண்டும். ரஜினியின் கருத்து மட்டுமே ஜெயலலிதாவின் தோல்விக்கு காரணம் கிடையாது" என்றவர்,

ரஜினிகாந்த்
ரஜினிகாந்த்

தொடர்ந்து, ``அன்றைக்கு இருந்த அரசியல் சூழலில் மூப்பனார், அ.தி.மு.க - காங்கிரஸ் கூட்டணியை எதிர்த்தது, ஆடம்பரங்கள், வெறுக்கத்தக்க அளவுக்குச் சென்ற லஞ்ச குற்றச்சாட்டுகள், தனது தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை நிறைவேற்றிக்கொள்ள முதல்வர் அரசு இயந்திரத்தைப் பயன்படுத்துகிறார் என்ற பரவலான பேச்சு என பல காரணங்கள் தோல்விக்கு காரணமாக அமைந்தன. இதற்கு கூடவே ரஜினியின் கருத்தும் ஒரு காரணம், அவ்ளவே.. காரணம் அதற்குப் பிறகு பல சமயங்களில் ரஜினியின் பேச்சும் அதற்கு வாக்காளர்கள் அளித்த வாக்குகளுக்கும் வித்தியாசம் இருந்ததைப் பார்த்திருக்க முடியும். பா.ம.க-வுக்கு எதிராக ரஜினி தெரிவித்த கருத்து அக்கட்சியைப் பாதிக்கவில்லை என்பது நடந்த உண்மை.

ரஜினிகாந்த் சமீபத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, மக்களிடம் எழுச்சி ஏற்பட்டதும் தான் அரசியலுக்கு வருகிறேன் எனப் பேசினார். அ.தி.மு.க, தி.மு.க ஆகிய இருபெரும் கட்சிகளை எதிர்கொள்வதற்கு தன்னுடைய ரசிகர்களின் ஆதரவு மட்டும் போதாது என அவர் சொன்னது முழுக்க முழுக்க உண்மை. ரஜினியின் பேச்சை கேட்கும்போது சில விஷயங்கள் தோன்றுகிறது.

ரஜினியை இன்றைய அரசியல் சூழல்களைப் பார்த்து வெம்பி நிற்கும் ஒரு பொது ஜனம் எனலாம். தன்னிடம், பொருள் பலமும் மக்கள் பலமும் இருந்தாலும் தற்போது இருக்கும் அரசியல் சூழலில் வெற்றிபெற முடியாது என்பதை புரிந்துகொண்ட மக்கள் சக்தி கொண்ட பொது ஜனமாகதான் அவரைப் பார்க்கிறேன். வள்ளுவர் சொல்கிறார், `ஒரு காரியத்தில் இறங்கும்முன் அந்த காரியத்தின் பலம், அதில் இறங்கும் தனது பலம், எதை அடைய நினைக்கும் மற்றவர்களின் பலம், தனக்குகிடைக்கும் ஆதரவு பலம், அவர்களுக்குக் கிடைக்கும் ஆதரவு பலம் ஆகியவற்றை ஆராய வேண்டும்' என்று.

ரஜினிகாந்த் இதை ஆராய்ந்துதான் தனக்கு இருக்கும் பிரபலமும் ரசிக பலமும் வெற்றிபெற போதாது என்ற முடிவுக்கு வந்துள்ளார் என நினைக்கிறேன். ஆனால், எப்படிப்பட்ட சூழல் வந்தால் தன்னால் களத்தில் போராட முடியும் என்ற தெளிவு இருக்கிறது. அதனால்தான் மக்கள் சக்தி பிறக்கட்டும் என்கிறார். கவிஞர் மேத்தா இப்படிச் சொல்கிறார், `புரட்சி அலைகள் பொங்கி வருகையில் புல்லின் நுனியும் புதுமை சிலிர்க்கும். புல்லாங்குழலும் புரட்சி வெடிக்கும்!"

ரஜினி
ரஜினி

ரஜினிகாந்துக்கு சமூக, பொருளாதார விஷயங்கள் குறித்த புரிதல் இல்லை என்பது எனது கருத்து. இதற்கு `எந்த 7 பேர்' என அவர் கேட்டது, சிஏஏ தொடர்பான அவரது புரிதல் என சில உதாரணங்கள் சொல்லலாம். ரஜினி நல்ல மனிதர். ஆனால் சமூக, பொருளாதாரப் புரிதலோடு செயல்படுபவராக எனக்குத் தெரியவில்லை. அதனால் என்னைப் பொறுத்தவரையில் உலகில் தற்போது கார்ப்பரேட் அரசியல் பரவலாக இருக்கிறது, கார்ப்பரேட் நிறுவனங்கள் அவர்களுக்குத் தேவையானவர்களை ஆட்சி அதிகாரத்துக்குக் கொண்டு வருவது. அப்படி கொண்டு வந்துவிட்டால் பின்னர் அவர்களுக்குத் தேவையானவற்றை நிறைவேற்றிக்கொள்ளலாம் என்பதால் இப்படிச் செய்வார்கள். ரஜினி பின்னால் அப்படியான கார்ப்பரேட் சக்தி இருப்பதாக தெரியவில்லை. காரணம் அப்படி இருந்திருந்தால் அவர் மக்கள் எழுச்சி பெறட்டும் என அவர் இருந்திருக்க மாட்டார்.

`மக்களின் தகுதிக்கேற்ற தலைவர்கள்தான் அவர்களுக்கு கிடைப்பார்கள் என்பார்கள். மக்கள் தங்கள் தகுதியை வளர்த்துக் கொள்ளவில்லை என்றால் தற்போது இருக்கும் சூழலே தான் நீடிக்கும். இந்தச் செய்தி ரஜினியால் அழுத்தமாக சொல்லப்பட்டிருக்கிறது" என்றார்.

தொடர்ந்து அவர், ``ரஜினிகாந்த் பேசியதில் இருந்து மூன்று விஷயங்கள் தெரிய வருகிறது. தங்கள் சுயநலத்துக்காக ரஜினியை அரசியலுக்கு இழுத்துவிட வேண்டும் என நினைப்பவர்களிடம் இருந்து ரஜினிகாந்த் மீண்டுவிட்டார். மக்கள் எழுச்சி ஏற்பட்டால் தான் அரசியலுக்கு வருவேன் என்பதன் மூலம் அவர்களின் வற்புறுத்தலில் இருந்து மீண்டு விட்டார். இரண்டாவது, அவர் இத்தனை காலம் அரசியலுக்கு வருவேன் என சொல்லி வந்ததுக்கு, திடீரென அரசியலுக்கு வரமாட்டேன் என்று சொல்லாமல், எழுச்சி ஏற்பட்டால் வருவேன் என சொல்லி தனது பிம்பத்துக்கும் பிரச்னை வராமல் பார்த்துக்கொண்டார். இப்படி சொல்வதன் மூலம் தனது படங்கள் தொடர்ந்து வெளியாகும் என்றும் மக்கள் மத்தில் இருக்கும் பாப்புலாரிட்டியை தக்கவைத்துவிட்டதாகவும் ரஜினி எண்ணலாம். மூன்றாவது, ரஜினி சொல்வது முழுக்க முழுக்க உண்மையே.. மக்கள் புரட்சி வெடிக்காமல் இங்கு பெரிய மாற்றங்கள் எதுவும் நிகழாது. ஆனால் அப்படிபட்ட மக்கள் புரட்சியை முன்னெடுத்து செல்வதற்கு ஒரு தலைவன் தேவை. ரஜினிகாந்த் இதனை மறந்துவிட்டாரா அல்லது அந்த ரோலை எடுப்பதற்கு தான் தயாராக இல்லை என்பதனை தெளிவு படுத்திவிட்டாரா என்பது ஒரு கேள்வி.. தான் அந்த பொறுப்பை ஏற்க தயாராக இல்லை என தோன்றுவது தான் அந்த பத்திரிகையாளர் சந்திப்பின் சாராம்சமாக இருக்கிறது” என்றார்.

இதற்கிடையே, இன்று ரஜினி ட்விட்டரில், ``அரசியல் மாற்றம்... ஆட்சி மாற்றம் இப்ப இல்லைன்னா எப்பவுமே இல்லை என்கிற கருத்தை பாமர மக்களும் பேசுகின்ற, சிந்திக்கின்ற வகையில் கொண்டுபோய் சேர்த்த ஊடகங்களுக்கும் பத்திரிகைகளுக்கும் சமூக வலைதளங்களுக்கும் மன்ற உறுப்பினர்களுக்கும் ரசிகர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி" என பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த கட்டுரைக்கு