Published:Updated:

புதுச்சேரி: முதல்வர், அமைச்சர்களின் வாகன எரிபொருள் ஆண்டுச் செலவு... ஆர்.டி.ஐ தகவல் கூறுவதென்ன?

புதுச்சேரி அமைச்சர்கள் | ஆர்.டி.ஐ

”புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் என நான்கு பிராந்தியங்களையும் உள்ளடக்கிய பரப்பளவே 480 சதுர கிலோமீட்டர்தான். அதில் அமைச்சர்கள் ஒரு நாளைக்கு 200 கிலோமீட்டர் செல்வது என்பது எப்படிச் சாத்தியமாகும்?”

புதுச்சேரி: முதல்வர், அமைச்சர்களின் வாகன எரிபொருள் ஆண்டுச் செலவு... ஆர்.டி.ஐ தகவல் கூறுவதென்ன?

”புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் என நான்கு பிராந்தியங்களையும் உள்ளடக்கிய பரப்பளவே 480 சதுர கிலோமீட்டர்தான். அதில் அமைச்சர்கள் ஒரு நாளைக்கு 200 கிலோமீட்டர் செல்வது என்பது எப்படிச் சாத்தியமாகும்?”

Published:Updated:
புதுச்சேரி அமைச்சர்கள் | ஆர்.டி.ஐ

புதுச்சேரியைச் சேர்ந்த ராஜீவ் காந்தி மனித உரிமைகள் விழிப்புணர்வு அமைப்பு, புதுச்சேரி சட்டப்பேரவை கடந்த ஆண்டில் கூடிய நாள்கள் எத்தனை, அமைச்சர்கள் வாங்கிய புதிய கார்களுக்கான எரிபொருள் செலவு எவ்வளவு எனத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேட்டிருந்தது. அதில் கிடைத்த தகவல்களை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனுக்கு புகாராக அனுப்பியிருக்கிறது அந்த அமைப்பு. அது குறித்து நம்மிடம் பேசிய அதன் தலைவர் ரகுபதி, “புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்குப் பொறுப்பேற்ற அரசின் அமைச்சர்கள் பயன்படுத்துவதற்காகப் பழைய கார்களைத் தவிர்த்துவிட்டு 3.3 கோடி ரூபாய்க்குப் புதிய வாகனங்கள் வாங்கப்பட்டன.

ஆர்.டி.ஐ
ஆர்.டி.ஐ

முதல்வர் உட்பட ஆறு அமைச்சர்கள், பேரவைத் தலைவர், பேரவைத் துணைத் தலைவர், அரசு கொறடா, முதல்வரின் நாடாளுமன்றச் செயலர் ஆகியோரின் வாகனங்களுக்கு எரிபொருள் செலவு ரூ.70.12 லட்சம் எனவும், புதுச்சேரி சட்டப்பேரவை பத்து நாள்கள் கடந்த நிதியாண்டில் கூடியிருப்பதாகவும் ஆர்.டி.ஐ-யில் தகவல் தந்துள்ளனர். புதுச்சேரி சட்டப்பேரவையுடன்கூடிய மிகச் சிறிய யூனியன் பிரதேசம். இந்நிலையில் சட்டப்பேரவையில் அங்கம் வகிக்கும் 10 பேரின் வாகனங்களுக்கு ஓராண்டு எரிபொருள் செலவு ரூ.70.12 லட்சம் எனில், ஒருவருக்குச் சராசரியாக ஒரு மாதத்துக்கு ரூ.58,439/- ஆகிறது. அதன் மூலம் இவர்கள் சராசரியாக நாளொன்றுக்கு 200 கிலோமீட்டர் பயணம் செய்திருக்க வேண்டும்.

புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் என நான்கு பிராந்தியங்களையும் உள்ளடக்கிய பரப்பளவே 480 சதுர கிலோமீட்டர்தான். அதில் அமைச்சர்கள் ஒரு நாளைக்கு 200 கிலோமீட்டர் தூரம் செல்வது என்பது எப்படிச் சாத்தியமாகும் என்ற கேள்வி எழுகிறது. நிதி நெருக்கடியில் இருக்கும் புதுச்சேரி அரசு, மூன்று மாதங்களுக்கு ஒரு முறை பிணைப் பத்திரங்களை வைத்து 100 கோடி ரூபாய், 125 கோடி ரூபாய் எனக் கடன் பெறும் அளவுக்குத்தான் இருக்கிறது. மேலும், மதுபான விற்பனை வரியின் மூலம்தான் அரசு ஊழியர்களுக்கு ஊதியம் அளிக்கப்படுகிறது என நீதிமன்றத்தின் பிரமாணப் பத்திரத்தில் உறுதிகூறும் நிலையில் இருக்கிறது அரசு.

கடுமையான நிதி நெருக்கடி உள்ள நிலையில், மக்கள் நலத்திட்டங்களை முழுமையாகச் செயல்படுத்த முடியாமலும், பல அரசுப் பொது நிறுவன ஊழியர்களுக்கு ஆண்டுக் கணக்கில் ஊதியம் அளிக்க முடியாமலும் இருக்கிறது. அதனால் புதுச்சேரி மாநில மக்களின் நலன் கருதியும், அரசின் நிதி நிலையைக் கருத்தில்கொண்டும் அமைச்சர்களின் எரிபொருள் செலவினம் மற்றும் பிற அநாவசியச் செலவினங்களையும் தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.