Published:Updated:

'15 ஆண்டுகளில் தமிழகத்தில் மூடப்பட்ட டாஸ்மாக் கடைகள் எவ்வளவு?' - ஆர்.டி.ஐ ரிப்போர்ட்

டாஸ்மாக் பார்
டாஸ்மாக் பார்

கடந்த 15 வருடங்களில் தமிழகத்தில் மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கை எவ்வளவு என்பது ஆர்.டி.ஐ தகவல் மூலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கையைக் குறைப்பது என்பது தி.மு.க., அ.தி.மு.க இரண்டு திராவிடக் கட்சிகளின் தேர்தல் வாக்குறுதிகளாக இருக்கிறது. 2016 சட்டமன்றத் தேர்தலின்போது, ஒருபடி மேலே சென்று ‘பூரண மதுவிலக்கு’ வாக்குறுதியை அளித்தது தி.மு.க. ஆனால், 2021 சட்டமன்றத் தேர்தல் வாக்குறுதியில் அதுபோல எந்த வாக்குறுதியையும் தி.மு.க அளிக்கவில்லை. இந்தச் சூழலில், கடந்த பதினைந்து வருடங்களில் எத்தனை டாஸ்மாக் கடைகள் குறைக்கப்பட்டுள்ளன. இன்று தமிழகத்தில் இயங்கும் டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கை எவ்வளவு என்கிற விவரத்தை தகவல் அறியும் உரிமைச் சட்டம் வாயிலாக சமூக ஆர்வலர் காசி மாயன் என்பவர் கேள்வி எழுப்பியிருந்தார். அவருக்கு தமிழ்நாடு வாணிப கழகம் அனுப்பியிருக்கும் பதிலில், டாஸ்மாக் கடைகள் குறைக்கப்பட்ட விவரம் வெட்ட வெளிச்சமாகி இருக்கிறது.

டாஸ்மாக்
டாஸ்மாக்

ஆர்.டி.ஐ மூலமாக காசி மாயனுக்கு அனுப்பியிருக்கும் பதிலில், 2006-ம் ஆண்டு தொடக்கத்தில் மொத்தம் 6,736 டாஸ்மாக் கடைகள் இயங்கியதாகக் குறிப்பிட்டிருக்கிறது தமிழ்நாடு வாணிபக் கழகம். இந்த எண்ணிக்கை அடுத்த ஐந்து வருடத்தில் 40 ஆகக் குறைக்கப்பட்டு, அ.தி.மு.க ஆட்சி அமைந்த 2011-ம் ஆண்டு 6,696 டாஸ்மாக் கடைகள் தமிழகத்தில் இயங்கியுள்ளன. ஜெயலலிதா தலைமையிலான அடுத்த ஐந்து வருட ஆட்சியில் 19 கடைகள் புதிதாக தொடங்கப்பட்டுள்ளன. 2016-ம் ஆண்டு தொடக்கத்தில், தமிழகத்தில் 6715 டாஸ்மாக் கடைகள் இயங்கியிருக்கின்றன. அந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், டாஸ்மாக் விவகாரம் பேசுபொருளானதால், கடைகளின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டிய நெருக்கடி அரசுக்கு ஏற்பட்டது. தவிர, தங்களது தேர்தல் வாக்குறுதிகளில் ‘பூரண மதுவிலக்கு’ கோஷத்தை தி.மு.க., பா.ம.க உள்ளிட்ட கட்சிகள் எழுப்பின. நெருக்கடி முற்றியதால், படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்று ஜெயலலிதா 2016 தேர்தல் பிரசாரத்தின் போது கூறினார்.

`தமிழக டாஸ்மாக் கடைகளுக்காகத் தயாரான போலி மதுபானங்கள்?' - அதிகாரிகள் துணையோடு கூட்டுக் கொள்ளை?!

2016 சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க வெற்றிப் பெற்று மீண்டும் அரியணை ஏறியவுடன், முதற்கட்டமாக 500 டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கு உத்தரவிட்டார் ஜெயலலிதா. ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு முதல்வராகப் பொறுப்பேற்ற எடப்பாடி பழனிசாமியும் தன் பங்கிற்கு 500 கடைகள் மூடப்படும் என்று அறிவித்தார். இதற்கிடையே, நெடுஞ்சாலை ஓரங்களில் செயல்பட்டு வந்த டாஸ்மாக் கடைகளை மூட நீதிமன்றம் உத்தரவிட்டது. அந்த உத்தரவுப்படியும் நெடுஞ்சாலையில் செயல்பட்டு வந்த கடைகள் மூடப்பட்டு, நகருக்குள் புதிதாக திறக்கப்பட்டன. இப்படி, 2016-2021 காலகட்டத்தில் மட்டும் 1290 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. ஆக, கடந்த பதினைந்து வருடங்களில் தமிழகத்தில் மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளின் மொத்த எண்ணிக்கை 1311 மட்டுமே. இந்த விவரங்களை ஆர்.டி.ஐ மூலமாக தமிழ்நாடு வாணிப கழகம் அளித்துள்ளது.

ஆர்.டி.ஐ தகவல்
ஆர்.டி.ஐ தகவல்

இதுகுறித்து நம்மிடம் பேசிய ஆர்.டி.ஐ ஆர்வலர் காசி மாயன், “டாஸ்மாக் கடைகளை நிரந்தரமாக மூடி, பூரண மதுவிலக்கை அமல்படுத்துவதை தி.மு.க., அ.தி.மு.க இரண்டு பெரிய கட்சிகளும் தங்களுடைய கொள்கையாகப் பிரகடனப்படுத்தியுள்ளன. ஆனால், அவர்களின் ஆட்சிக்காலத்தில் இந்த கொள்கையை செயல்பாட்டுக்குக் கொண்டுவரத் தேவையான நடவடிக்கையை எடுக்கவில்லை. டாஸ்மாக் கடைகள் மூடப்படும் விகிதாச்சாரத்திற்கு ஈடான மறுவாழ்வு மையங்களை ஏற்படுத்தி, குடிக்கு அடிமையானவர்களுக்கு உரிய கவுன்சிலிங்கை அளித்திருக்கவேண்டும். அதையும் செய்யவில்லை. பெயருக்கு கடைகளை மூடிவிட்டு, மற்றொருபுறம் டாஸ்மாக் மூலமாக வருமானத்தைப் பெருக்கிக்கொள்வதையே இரண்டு பெரிய கட்சிகளும் தந்திரமாக வைத்துள்ளன. தற்போது, 5,425 டாஸ்மாக் கடைகள் தமிழகத்தில் இயங்கி வருகின்றன. இவற்றின் எண்ணிக்கையைக் குறைத்து, மறுவாழ்வு மையங்களை அரசு அமைக்க வேண்டும். குடியினால் குடும்பங்கள் சீரழிவதை முனைப்போடு அரசு தடுக்க வேண்டும்” என்றார்.

காசி மாயன். ஆர்.டி.ஐ ஆர்வலர்
காசி மாயன். ஆர்.டி.ஐ ஆர்வலர்

டாஸ்மாக் கடைகள் மூடும் விவகாரத்தை பெண்களின் வாக்குகளைக் கவர மட்டும் பயன்படுத்தாமல், அதைச் செயல்பாட்டிலும் கொண்டு வர வேண்டும். கடந்த அ.தி.மு.க ஆட்சியில் 1,290 கடைகள் மூடப்பட்டிருக்கும் நிலையில், தற்போது அரியணை ஏறியிருக்கும் தி.மு.க அரசு, அதைவிடக் கூடுதல் எண்ணிக்கையிலான டாஸ்மாக் கடைகளை மூடி, தங்களுடைய கடந்தகால ‘பூரண மதுவிலக்கு’ வாக்குறுதியை செயல்படுத்த வேண்டும் என்பதே தமிழக மகளிரின் எதிர்பார்ப்பு.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு