மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் - பா.ஜ.க இடையே வெடித்திருக்கும் மோதலால் அரசியல் களத்தில் அனல் பறந்துகொண்டிருக்கிறது. குறிப்பாக, வீடுகள் எரிக்கப்பட்டு இரண்டு குழந்தைகள் உட்பட எட்டுப் பேர் உயிரிழந்த பிர்பூம் வன்முறைச் சம்பவம் அங்கு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த விவகாரத்தில் பா.ஜ.க-வினரின் வலியுறுத்தலால் மத்திய உள்துறை அமைச்சகம் தலையிட்டு சம்பவம் தொடர்பாக அறிக்கை சமர்ப்பிக்க மேற்கு வங்க அரசுக்கு உத்தரவிட்டிருந்தது. அதுமட்டுமல்லாமல், இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணையை மத்திய குழுவுக்கு அனுப்பக் கூடாது என்று முதல்வர் மம்தா முன்வைத்த கோரிக்கையை, கொல்கத்தா உயர் நீதிமன்றம் நிராகரித்துவிட்டு, விசாரணையை சி.பி.ஐ-க்கு மாற்றியிருக்கிறது.

இந்த நிலையில், மேற்கு வங்க சட்டசபையில் இன்று நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் பா.ஜ.க - திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் இடையே வெடித்த மோதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. பிர்பூம் கலவரத்தைப் பற்றி பா.ஜ.க எம்.எல்.ஏ-க்கள் விவாதிக்கக் கோரியதையடுத்து இந்த மோதல் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் சட்டசபையில் பெரும் பரபரப்பு உண்டானது. இதன் காரணமாக ஐந்து பா.ஜ.க எம்.எல்.ஏ-க்கள் உடனடியாக அவையிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். பட்ஜெட் கூட்டத்தொடரின் கடைசி நாளில் சட்டசபையிலேயே இவ்வாறு நடந்திருப்பது, பா.ஜ.க மற்றும் திரிணாமுல் காங்கிரஸுக்கு இடையே உள்ள மோதலை வெளிப்படுத்துவதாக அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கிறார்கள். மேலும், சட்டசபையில் நடந்த இந்த மோதலின் வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.
