Published:Updated:

எல்லையில் தவித்த தொழிலாளர்கள்; அமைச்சரின் ராஜிநாமா எச்சரிக்கை! -விதியை மாற்றிய மத்திய அரசு?

மத்திய அரசு
மத்திய அரசு

புதுச்சேரி பிராந்தியம், ஏனாம் எல்லையில் தடுத்துநிறுத்தப்பட்ட தொழிலாளர்கள் விவகாரத்தில், அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்வதாக புதுச்சேரி சுகாதாரத்துறை அமைச்சர் எச்சரித்ததையடுத்து, மத்திய அரசு ஊரங்கு உத்தரவு விதியை அனைத்து மாநிலங்களுக்கும் மாற்றி வெளியிட்டிருக்கிறது.

புதுச்சேரியில், நான்கு பிராந்தியங்களில் ஒன்று ஏனாம் தொகுதி. ஆந்திர மாநிலம் கோதாவரி அருகே அமைந்திருக்கும் ஏனாம் தொகுதியின் காங்கிரஸ் எம்.எல்.ஏ-வாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, தற்போது புதுச்சேரி அமைச்சரவையில் சுகாதாரத்துறை அமைச்சராகப் பதவி வகித்துவருபவர், மல்லாடி கிருஷ்ணாராவ்.

மத்திய அரசிடம் மனு கொடுக்கும் அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ்
மத்திய அரசிடம் மனு கொடுக்கும் அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ்

கொரோனா தொற்று நோய் தடுப்பு நடவடிக்கையாக நாடெங்கிலும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டிருக்கிறது. அதனால் போதுமான உணவு கிடைக்காமலும், கையில் பணமில்லாமலும் ஆயிரக்கணக்கான மக்கள் சொந்த ஊருக்கு நடந்தே செல்லும் சம்பவங்கள் நடந்துவருகின்றன. அதன்படி, ஏனாம் பிராந்தியத்தைச் சேர்ந்த 14 தொழிலாளர்கள், ஆந்திர மாநிலத்தில் பல பகுதிகளுக்கு பணிக்குச் சென்றிருக்கின்றனர்.

ஊரடங்கால், அவர்களின் சொந்த ஊரனா ஏனாமுக்குத் திரும்பியபோது, அவர்களை எல்லையில் தடுத்துநிறுத்தியது காவல்துறை. ஏனாம் திரும்பிய தொழிலாளர்கள், ஆந்திர எல்லைப் பகுதியில் மழையிலும் வெயிலிலும் அவதிப்பட்டதால், அவர்களை ஊருக்குள் அனுமதிக்கும்படி அதிகாரிகளிடம் கேட்டார் மல்லாடி கிருஷ்ணாராவ். ஆனால், கொரோனா விதிகளின்படி அவர்களை அனுமதிக்க முடியாது என்று கூறிய அதிகாரிகள், மத்திய அரசின் உத்தரவுப்படியே செயல்படுவதாகத் தெரிவித்தனர். அதையடுத்து, கவர்னர் கிரண் பேடியின் உத்தரவுப்படியே அதிகாரிகள் செயல்படுவதாகக் குற்றம் சுமத்திய அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ், 24 மணிநேரத்துக்குள் அந்த தொழிலாளர்களை ஏனாமுக்குள் அனுமதிக்காவிட்டால் அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்வேன் என்று எச்சரித்திருந்தார்.

தர்ணாவில் அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ்
தர்ணாவில் அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ்

அதையடுத்து, மத்திய கேபினட் செயலரைத் தொடர்புகொண்ட முதல்வர் நாராயணசாமி, ஏனாம் வந்திருக்கும் தொழிலாளர்களைத் தனிமைப்படுத்தி, அதன்பிறகு பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் செயல்படலாம் என்று தெரிவித்தார். அதைத்தொடர்ந்து, நேற்று இரவு நடந்த பேரிடர் கூட்டத்தில் முடிவு செய்து, தொழிலாளர்களை ஏனாம் அழைத்துவரும்படி உத்தரவிட்டார் முதல்வர் நாராயணசாமி. அந்த 14 தொழிலாளர்களும் நேற்றிரவு ஏனாம் தாவரவியல் பூங்காவுக்கு அழைத்து வரப்பட்டனர். அவர்களுக்கு படுக்கை, உணவு வசதி செய்து தரப்பட்டிருந்தது. மேலும், அவர்களுக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, மாதிரிகள் ஆந்திர மாநில மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளன.

இந்நிலையில், இன்று புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்துக்கு கறுப்பு உடையுடன் வந்த அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ், சபாநாயகர் சிவக்கொழுந்தைச் சந்தித்து, 14 தொழிலாளர்களின் பிரச்னைகள் குறித்து மனு ஒன்றை அளித்தார். தொடர்ந்து சட்டப்பேரவை வளாகத்தில் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்ட அவர், "ஏனாமைச் சேர்ந்த தொழிலாளர்களை இன்னும் ஊருக்குள் அனுமதிக்கவில்லை. இன்னும் அவர்கள் ஆந்திர மாநிலத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் தங்க வைக்கப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது. மேலும், மக்கள் நலத்திட்டங்களைச் செயல்படுத்தும் விவகாரத்தில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தடையாக இருக்கிறார். அதனை கண்டித்துதான் தர்ணாவில் ஈடுபட்டிருக்கிறேன்” என்று தெரிவித்தார்.

கிரண் பேடி
கிரண் பேடி

அமைச்சரின் தர்ணா போராட்டத்தைத் தொடர்ந்து, முதல்வர் நாராயணசாமி மத்திய உள்துறை அமைச்சகத்தைத் தொடர்புகொண்டு பேசினார். அதையடுத்து, மத்திய உள்துறை அமைச்சகம் ஊரடங்கு உத்தரவின் விதிகளை மாற்றி வெளியிட்டிருக்கிறது. அதன்படி, வெளிமாநிலங்களில் பணி புரிபவர்கள் சொந்த மாநிலங்களுக்குச் செல்வதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டு, நாடு முழுவதும் சொந்த ஊரைத் தேடி வரும் தொழிலாளர்களை அந்தந்த மாநிலங்கள் அனுமதிக்கலாம் என்று மாற்றியிருக்கிறது. அதைத் தொடர்ந்து ஏனாம் நிர்வாக அதிகாரியான சிவராஜ் மீனா, மத்திய அரசின் உத்தரவு குறித்து கூறும்போது, "ஊரடங்கு குறித்து மத்திய அரசு புதிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது. இந்தப் புதிய உத்தரவு, அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்தும். அனைத்து மாநில தலைமைச்செயலருக்கும் மத்திய உள்துறை அமைச்சகம் இந்த உத்தரவை அனுப்பியிருக்கிறது. அதன்படி, இனி சொந்த ஊருக்குத் திரும்பும் மக்களை ஊருக்குள் அனுமதிக்க வேண்டும்.

உணவு, தங்குமிடம் இல்லாததால்தான் பலரும் சொந்த ஊருக்கு வருகின்றனர். ஏற்கெனவே இருந்த மத்திய அரசின் உத்தரப்படி எங்களால் அந்தத் தொழிலாளர்களை அனுமதிக்க முடியவில்லை. உணவு, இருப்பிடம் மட்டும் ஏற்பாடு செய்திருந்தோம். தற்போது அந்த 14 தொழிலாளர்களையும் ஏனாமுக்குள் அனுமதிக்கிறோம்" என்று தெரிவித்தார்.

முதல்வர் நாராயணசாமி
முதல்வர் நாராயணசாமி

ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்தாலும் தமிழகம் உள்ளிட்ட பிற மாநிலங்களில், சொந்த ஊருக்குத் திரும்பும் மக்களை அனுமதித்து, அவர்களை தனிமைப்படுத்தி, உணவும் தங்குமிடமும் ஏற்பாடு செய்து தரப்படுகிறது. அதனடிப்படையில்தான் புதுச்சேரி அரசும் அவர்களை அனுமதிக்கும்படி கேட்டது. ஆனால் மத்திய அரசு, விதிகளின்படி அவர்களை அனுமதிக்கக்கூடாது என்று அதிகாரிகளுக்கு வாய்மொழியாக உத்தரவிட்டிருந்தார் கவர்னர் கிரண் பேடி. இந்நிலையில்தான் ஊரடங்கு உத்தரவில் திருத்தங்களைச் செய்து அனைத்து மாநிலங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு