Published:Updated:

`இது இன்னொரு சுதந்திரப் போராட்டம்!' - கைகோத்த கேரள கம்யூனிஸ்ட் - காங்கிரஸ் #CAA

பினராயி விஜயன், ரமேஷ் சென்னிதலா
பினராயி விஜயன், ரமேஷ் சென்னிதலா

இந்தப் போராட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த முதல்வர் பினராயி விஜயனும் எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலாவும் ஒரே மேடையில் கலந்துகொண்டு பேசினர்.

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக நாட்டின் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. இந்தநிலையில், மத்திய அரசின் இந்தச் சட்டத்தை எதிர்த்து கேரளாவில் ஆளும் கட்சியுடன் எதிர்க்கட்சியும் கைகோத்து போராட்டத்தை முன்னெடுத்திருக்கின்றன. திருவனந்தபுரத்தில் நடைபெற்று வரும் இந்தப் போராட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த முதல்வர் பினராயி விஜயனும் எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலாவும் ஒரே மேடையில் கலந்துகொண்டு பேசினர். சத்தியாகிரக வழியில் அமைதியாக இன்று நாள் முழுவதும் இந்தப் போராட்டம் நடைபெறும் என்று கேரள அரசியல் கட்சிகள் கூட்டாக அறிவித்துள்ளன.

பினராயி விஜயன்
பினராயி விஜயன்
Twitter

போராட்டத்தில் பேசிய முதல்வர் பினராயி விஜயன் ``அரசியலமைப்பைப் பின்பற்றுவதே அரசாங்கத்தின் கடமை. ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் அஜெண்டாவைப் பின்பற்றுவது அல்ல; மதத்தை அடிப்படையாகக் கொண்டு குடியுரிமைச் சட்டத்தில் கொண்டுவரப்பட்டுள்ள திருத்தம், மாநிலங்களை மட்டுமல்ல இந்த நாட்டையே பலவீனப்படுத்தும். கேரளாவின் மதச்சார்பற்ற மற்றும் ஜனநாயகக் குரல்கள் ஒன்றிணைந்து குடியுரிமைச் சட்டத் திருத்தத்துக்கு எதிராகத் தொடர்ந்து போராடி வருகின்றன. நாம் கண்டிப்பாக இந்தச் சட்டத்தை எதிர்க்க வேண்டும். எதிர்ப்போம்” என்றார். தொடர்ந்து பேசிய அவர், ``குடியுரிமைச் சட்டத் திருத்தத்தில் ஆப்கானிஸ்தான் சேர்க்கப்பட்டுள்ளது. இலங்கை, மியான்மர், பூட்டான் ஆகிய நாடுகள் ஏன் சேர்க்கப்படவில்லை?'' என்றும் கேள்வி எழுப்பினார்.

குடியுரிமைச் சட்டம் குறித்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ``நமது நாட்டில் ஜனநாயகம் ஆபத்தான நிலையில் உள்ளது. இந்திய அரசியலமைப்பு மற்றும் ஜனநாயகத்தின் அடிப்படையை அழிக்கவே நாடாளுமன்றத்தில் அவர்களின் பெரும்பான்மையைப் பயன்படுத்துகிறார்கள்.

திருவனந்தபுரம் போராட்டம்
திருவனந்தபுரம் போராட்டம்

இது மதச்சார்பின்மைக்கு எதிரானது. பா.ஜ.க-வின் முக்கியக் கொள்கையே வகுப்புவாதம் என்று தெளிவுபடுத்தியுள்ளது. இதை நாம் எதிர்க்க வேண்டும்” என்றும் பினராயி விஜயன் பதிவிட்டிருக்கிறார்.

போராட்டத்தில் பேசிய கேரள எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலா,``இந்தியாவில் அச்சத்தை ஏற்படுத்துகிற சூழல் உருவாகியுள்ளது. இந்தியாவில் இருக்கும் கோட்பாட்டை அழிக்க வேண்டும் என்பதற்காக எடுக்கப்பட்டுள்ள முயற்சி இது. மதத்தை அடிப்படையாகக்கொண்டு இந்தியாவைக் கட்டமைக்க முயல்கிறார்கள். தேசத்தைப் பிளப்படுத்தும் கோட்பாடு சாவர்க்கரால் முன்வைக்கப்பட்டது. மகாத்மா காந்தி, இதைக் கண்டித்தார். ஒற்றுமை மற்றும் சகோதரத்துவத்தில் காங்கிரஸ் கட்சி நம்பிக்கை கொண்டிருக்கிறது.

ரமேஷ் சென்னிதலா
ரமேஷ் சென்னிதலா

குடியுரிமைச் சட்டம், இந்திய அரசியலமைப்பின் அடிப்படைக்கு எதிரானது. சட்டத்தைப் பிளவுபடுத்தும் அரசியலமைப்பற்ற இந்தச் சட்டத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப் போகிறேன். இதுபோன்ற பாசிச சக்திகளிடமிருந்து அரசியலமைப்பைக் காக்க இன்னொரு சுதந்திரப் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம்'' என்று அவர் பேசினார்.

அடுத்த கட்டுரைக்கு