Published:Updated:

விவசாயக் கடன் தள்ளுபடி: `ஆளும்கட்சியினருக்கு முன்னரே சொல்லப்பட்டது?!’ -சந்தேகம் கிளப்பும் முத்தரசன்

`முதல்வர் விவசாயக் கடன் தள்ளுபடி என்பதை அறிவிப்பதற்கு இரண்டு வாரத்துக்கு முன்னரே ஆளும்கட்சிகாரர்களுக்கு இது தெரிவிக்கப்பட்டு, அனைவரும் அந்தந்தப் பகுதிகளிலுள்ள கூட்டுறவுச் சங்கங்களில் 20 லட்சம் முதல் 35 லட்சம் ரூபாய்க்கு மேல் வரை கடன் பெற்றிருக்கிறார்கள்’ - முத்தரசன்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே நடைபெற்ற கட்சிக் கூட்டத்தில் கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சியில் பேசியவர், ``விவசாயக் கடன் ரத்து என்பது, இந்த ஆண்டு பெறப்பட்ட கடன் மட்டுமே ரத்து செய்யப்பட்டிருக்கிறது. யாருக்காக இந்தக் கடன் ரத்து செய்யப்பட்டுள்ளது... பழைய கடனெல்லாம் தள்ளுபடி கிடையாது" என்ற கருத்தைப் பதிவு செய்தார்.

முத்தரசன்
முத்தரசன்
ம.அரவிந்த்

மேலும், ``இந்த ஆண்டு பெறப்பட்ட கடன் மட்டுமே ரத்து என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஏற்கனவே ஒத்திவைக்கப்பட்ட கடன், ஒத்திவைக்கப்பட்டதுதான். இன்றும் அந்தப் பழைய கடன் இருந்துகொண்டேதான் இருக்கும். இந்தப் புதிய கடன் ரத்து என்பதும், தங்களின் சொந்தக் கட்சிக்காரர்கள் பயன்பெற வேண்டும் என்பதற்காகவே இந்த அறிவிப்பு செய்யப்பட்டிருக்கிறது" என்று பேசியிருந்தார்.

இதுகுறித்து முத்தரசனைத் தொடர்புகொண்டு பேசினோம். ``கடந்த 2017-ம் ஆண்டு ஓ.பி.எஸ் முதலமைச்சராக இருந்தார். தமிழகம் கடும் வறட்சியில் நிலவிய நேரம் அது. பல்வேறு மாவட்டங்களில் பயிர்களெல்லாம் கருகி, கடுமையான வறட்சி நிலவியது. அப்போது, தமிழகத்தை வறட்சியால் பாதிக்கப்பட்ட மாநிலமாக அறிவிக்கக் கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்றது. அப்படி, திருவாரூரில் நடைபெற்ற போராட்டத்தின்போது, மகாலிங்கம் என்ற விவசாயி உயிரிழந்தார். எங்களுக்கு ஒரு முடிவு கிடைக்கும் வரை கோரிக்கையை நிறைவேற்றும் வரை சடலத்தை எடுக்க மாட்டோம் என்று போராடினோம்.

முத்தரசன்
முத்தரசன்

போராட்டத்தைத் தொடர்ந்து, முதலமைச்சர் இந்த விவகாரத்தில் தலையிட்டார். தமிழக அரசு சார்பில், வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார், வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு, கைத்தறித்துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன், உணவுத்துறை அமைச்சர் காமராஜ் ஆகிய நான்கு அமைச்சர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டது. விவசாய சங்க பிரதிநிதிகளுடன் தலைமைச் செயலகத்தில் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அந்தப் பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, சென்னை நீங்கலாக, தமிழகத்தின் மற்ற மாவட்டங்கள் வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதியாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டன" என்றார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

'ரூ.12,110 கோடி விவசாயக் கடன் தள்ளுபடி; உழுவார் உலகத்தாருக்கு!' -வள்ளுவரை மேற்கோள் காட்டிய முதல்வர்

தொடர்ந்து பேசியவர், அப்போது, கூட்டுறவு குறுகியகாலப் பயிர்க் கடன்கள், மத்திய கால கடன்களாக மாற்றி அமைக்கப்பட்டன. அந்தக் கடன் இப்போது அறிவிக்கப்பட்டிருக்கும் கடன் தள்ளுபடியில் சேர்க்கப்படக்கூடாது என்று அனைத்துக் கூட்டுறவுச் சங்கங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டிருக்கிறது. அந்தக் கடன் அப்படியேதான் இருக்கும். அதைத் தள்ளுபடி செய்ய வேண்டும். விவசாயிகள் பயனடைய வேண்டும்" என்றார்.

முத்தரசன்
முத்தரசன்

மேலும், ``கடந்த 5-ம் தேதி விவசாயக் கடன் தள்ளுபடி என்ற அறிவிப்பை முதலமைச்சர் அறிவித்த பின்னர்தான் நம் அனைவருக்கும் தெரியவந்தது. முதல்வர் விவசாயக்கடன் தள்ளுபடி என்பதை அறிவிப்பதற்கு இரண்டு வாரத்துக்கு முன்னரே ஆளும்கட்சிகாரர்களுக்கு இது தெரிவிக்கப்பட்டு, அனைவரும் அந்தந்தப் பகுதிகளிலுள்ள கூட்டுறவுச் சங்கங்களில் 20 லட்சம் முதல் 35 லட்சம் ரூபாய்க்கு மேல் வரை கடன் பெற்றிருக்கிறார்கள். இது பெரும் முறைகேடு, இது குறித்து விசாரணை நடந்தக் கோரி, மதுரையில் நடைபெறும் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றவிருக்கிறோம். இந்த முறைகேடு குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும்'' என்று தெரிவித்தார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு