Published:Updated:

பறந்த செங்கொடி... சறுக்கிய காங்கிரஸ்... உடைந்த பா.ஜ.க கனவு...

பறந்த செங்கொடி
பிரீமியம் ஸ்டோரி
பறந்த செங்கொடி

20 ஆண்டு அரசியல் சரித்திரத்தை மாற்றிய கேரள உள்ளாட்சித் தேர்தல்!

பறந்த செங்கொடி... சறுக்கிய காங்கிரஸ்... உடைந்த பா.ஜ.க கனவு...

20 ஆண்டு அரசியல் சரித்திரத்தை மாற்றிய கேரள உள்ளாட்சித் தேர்தல்!

Published:Updated:
பறந்த செங்கொடி
பிரீமியம் ஸ்டோரி
பறந்த செங்கொடி
கேரளத்தில் ஆட்சியிலிருக்கும் கட்சி, உள்ளாட்சித் தேர்தலில் குறைவான இடங்களில் வெற்றிபெறுவதும்... அடுத்துவரும் சட்டசபைத் தேர்தலில் தோல்வியடைவதும் கடந்த 20 ஆண்டுக்கால தேர்தல் வரலாறு. 2000-ம் ஆண்டுக்குப் பிறகு முதன்முறையாக இந்த வரலாற்றை மாற்றி, உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிக்கொடி நாட்டியிருக்கிறது ஆளும் சி.பி.எம் தலைமையிலான எல்.டி.எஃப் கூட்டணி.
பறந்த செங்கொடி... சறுக்கிய காங்கிரஸ்... உடைந்த பா.ஜ.க கனவு...

கேரள மாநிலத்தில் சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் நான்கு மாதங்களே இருக்கும் நிலையில், உள்ளாட்சித் தேர்தல் ஓட்டெடுப்பு டிசம்பர் 8, 10 மற்றும் 14-ம் தேதிகளில் மூன்றுகட்டங்களாக நடத்தப்பட்டது. சி.பி.எம் தலைமையிலான எல்.டி.எஃப்., காங்கிரஸ் தலைமையிலான யு.டி.எஃப்., பா.ஜ.க தலைமையிலான என்.டி.ஏ என மும்முனைப் போட்டி கடுமையாக இருந்தது. இந்தநிலையில்தான் டிசம்பர் 16-ம் தேதி வெளியான தேர்தல் முடிவுகளில், யாரும் எதிர்பார்க்காத வகையில் எல்.டி.எஃப் அதிக இடங்களில் வென்று செங்கொடியை நாட்டியிருக்கிறது.

கேரள மாநிலத்தில் மொத்தமுள்ள 941 ஊராட்சிகளில் சி.பி.எம் கூட்டணி 514, காங்கிரஸ் கூட்டணி 375, பா.ஜ.க கூட்டணி 23, சுயேச்சை உள்ளிட்ட இதர கட்சிகள் 29 ஊராட்சிகளைக் கைப்பற்றியுள்ளன. 14 மாவட்ட பஞ்சாயத்துகளில் 11-ஐ சி.பி.எம் கூட்டணியும், மீதமுள்ள மூன்றை காங்கிரஸ் கூட்டணியும் கைப்பற்றின. 152 ஊராட்சி ஒன்றியங்களில், சி.பி.எம் கூட்டணி 108-ஐயும், மீதமுள்ள 44-ஐ காங்கிரஸ் கூட்டணியும் பிடித்துள்ளன. 86 நகராட்சிகளில் காங்கிரஸ் கூட்டணி 45, சி.பி.எம் கூட்டணி 35, பா.ஜ.க கூட்டணி இரண்டு, மற்றவை நான்கு இடங்களைப் பிடித்துள்ளன. ஆறு மாநகராட்சிகளில் சி.பி.எம் கூட்டணி ஐந்தையும், மீதமுள்ள ஒன்றை காங்கிரஸ் கூட்டணியும் பிடித்துள்ளது. கேரளத் தலைநகரமான திருவனந்தபுரம் மாநகராட்சியை சி.பி.எம் மீண்டும் தக்கவைத்துக்கொண்டிருக்கிறது.

இந்த வெற்றி, வரும் சட்டசபைத் தேர்தலிலும் தொடரும் என சி.பி.எம் கூட்டணி உற்சாகம் அடைந்துள்ளது. அடுத்த தேர்தலில் ஆட்சியைப் பிடிக்கலாம் என்ற கனவுடன் இருந்த காங்கிரஸுக்கு இந்த முடிவுகள் பேரதிர்ச்சியை அளித்துள்ளன. காங்கிரஸை ஓரங்கட்டிவிட்டு கேரளத்தில் இரண்டாவது இடத்துக்கு முன்னேறிவிடத் துடித்த பா.ஜ.க-வின் கனவிலும் மண் விழுந்துள்ளது.

பறந்த செங்கொடி... சறுக்கிய காங்கிரஸ்... உடைந்த பா.ஜ.க கனவு...

‘பலமுனை நெருக்கடிகளைத் தாண்டி சி.பி.எம் கூட்டணி வெற்றிபெற்றது எப்படி... காங்கிரஸ் குற்றச்சாட்டுகளும், பா.ஜ.க-வின் வியூகமும் பலிக்காமல் போனது ஏன்?’ என்ற கேள்விகளுடன் கேரள அரசியல் விமர்சகர்களிடம் பேசினோம்.

‘‘கடந்த ஜூலை 5-ம் தேதி, திருவனந்தபுரம் விமான நிலையத்தில் யு.ஏ.இ தூதரக பார்சலில் கடத்தப்பட்ட தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. கடத்தலுக்கு சூத்ரதாரியாக இருந்த ஸ்வப்னா சுரேஷ் கைதுசெய்யப்பட்டார். அன்று முதல் கேரள அரசுக்கு எதிரான விமர்சனங்கள் வரிசை கட்டின. முதல்வர் பினராயி விஜயனின் முதன்மைச் செயலாளராக இருந்த சிவசங்கரன் கைது செய்யப்பட்டதும், சி.பி.எம் மாநிலச் செயலாளராக இருந்த கொடியேரி பாலகிருஷ்ணனின் மகன் பினோய் கொடியேரி கைதுசெய்யப்பட்டதும் ஆளும் சி.பி.எம்-க்கு கடும் தலைவலியை ஏற்படுத்தின. மீடியாக்களிலும் சமூக வலைதளங் களிலும் சி.பி.எம் அரசுக்கு எதிரான குரல்களே ஒலித்தன. இதையெல்லாம் தாண்டி, உள்ளாட்சியில் சி.பி.எம் அரசு செய்த புரட்சிகளே அந்தக் கூட்டணியை வெற்றிபெற வைத்திருக்கின்றன.

இரண்டரை லட்சத்துக்கும் அதிகமான வீடில்லாத ஏழைகளுக்கு வீடுகள் கட்டிக்கொடுக்கப் பட்டன. மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்டப் பணியாளர்களைவைத்து தரிசு நிலங்களை மேம்படுத்தி, விவசாயம் செய்து, அதில் கிடைக்கும் வருவாய் அவர்களுக்கே பகிர்ந்தளிக்கப்பட்டது. இருபது வகையான காய்கறிகளுக்கு அடிப்படை ஆதார விலை நிர்ணயம் செய்து, அதைக் கொள்முதல் செய்யும் திட்டம் செயல்படுத்தப் பட்டது. மாதம் 1,400 ரூபாய் வீதம் முதியோருக்கு பென்ஷன் வழங்கும் திட்டம், அனைத்து ஸ்கூல் களையும் ஸ்மார்ட் ஸ்கூல்களாக மாற்றியது போன்றவைதான் சி.பி.எம் கூட்டணியின் வெற்றிக்குக் காரணங்கள். இவை மட்டுமல்ல... இந்தத் தேர்தலில் போட்டியிட அதிகப்படியான இளைஞர்களுக்கு சி.பி.எம் வாய்ப்பளித்திருக்கிறது. இதை மற்ற கட்சிகளும் பின்பற்றியிருக்கின்றன.

காங்கிரஸ் எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் சென்னிதலா, முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி, மாநில காங்கிரஸ் தலைவர் முல்லப்பள்ளி ராமச்சந்திரன் ஆகியோர் ஒருங்கிணைந்து திட்டங் களை வகுக்கவில்லை. மக்களிடம் பேசாமல், மீடியாக்களிடம் மட்டுமே பேசிக்கொண்டிருந்ததும் காங்கிரஸ் கூட்டணியின் தோல்விக்கு ஒரு காரணம்.

பறந்த செங்கொடி... சறுக்கிய காங்கிரஸ்... உடைந்த பா.ஜ.க கனவு...

திருவனந்தபுரம் மாநகராட்சியை பா.ஜ.க பிடிக்கும் என உறுதியாக நம்பினார்கள். ஆனால், டெல்லி தலைமையிலிருந்து அவர்களுக்கு ஒத்துழைப்பு கிடைக்கவில்லை. பக்கத்திலிருந்து முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மட்டுமே திருவனந்தபுரத்துக்குப் பிரசாரத்துக்கு வந்தார். சொல்லிக்கொள்ளும்படி வேறு எந்தத் தலைவரும் பிரசாரத்துக்கு வராததும் பா.ஜ.க-வின் பின்னடைவுக்குக் காரணம்’’ என்றார்கள்.

கடந்த 20 ஆண்டுகள் நீடித்துவந்த வரலாறு, இந்த உள்ளாட்சித் தேர்தலில் மாற்றி எழுதப்பட்டி ருக்கிறது. இது வரும் சட்டமன்றத் தேர்தலிலும் தொடருமா என்பதை, கேரள அரசியல் கட்சிகளின் செயல்பாடுகள்தான் முடிவு செய்யும்!