Published:Updated:

கொரோனா ஊரடங்கை மீறி கோலாகல நிகழ்ச்சி நடத்திய ஆளும்கட்சி பிரமுகர்கள்!

பொது நிகழ்ச்சி
பொது நிகழ்ச்சி

கொரோனா தொற்று பாதிப்பினால் மக்கள் கூடும் நிகழ்ச்சிகளைத் தவிர்க்க வேண்டும் என அரசு கூறிக்கொண்டிருந்தபோதே, எதையும் பொருட்படுத்தாமல் அ.தி.மு.க பிரமுகர்கள் தமிழகம் முழுவதும் இஷ்டம்போல நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளனர்.

கொரோனா அச்சத்தால் ‘நான்கு பேருக்கு மேல் கூடவே கூடாது’ என்று நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை பிரதமர் மோடி அறிவித்த நாள் வரையிலும் 250 பேருக்கும் மேல் கூடும் சட்டமன்றக் கூட்டத்தை நடத்திக் கொண்டிருந்தது எடப்பாடி தலைமையிலான அ.தி.மு.க அரசு.

கொரோனாவை எதிர்கொள்ள எல்லா வகையிலும் தயாராக இருக்கிறது தமிழக அரசு என்று தினமும் அமைச்சர்கள் ஜெயக்குமாரும், சி.விஜயபாஸ்கரும் தொடர்ந்து பேட்டி கொடுத்துக்கொண்டிருந்தார்கள். அதே சென்னையில்தான் பல்லாயிரக்கணக்கான மக்கள், தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்வதற்கு கோயம்பேட்டில் அடித்துக்கொண்டு செல்லும் அவலமும் நேரிட்டது. அதில் மட்டும் எத்தனை பேருக்குக் கொரோனா பரவியிருக்கும் என்பதை யாராலும் யூகிக்கவே முடியாது.

`12 மணிநேர ஆயுட்காலம்...27 டிகிரி செல்சியஸ்!’- #Corona வதந்திகளும் விசாரித்த உண்மையும் #Factcheck
இந்தக் கொடுமைகள் எல்லாம் நடப்பதற்கு முன்பே, மாநிலம் முழுவதும் அ.தி.மு.க பிரமுகர்களால் இஷ்டம்போல பொது நிகழ்ச்சிகள் நடத்தப்பட்ட தகவல்கள் கிடைத்துள்ளன.

சேலம் மாவட்டம், ஆத்தூர் அ.தி.மு.க நகரச் செயலாளர் மற்றும் மாவட்ட அறங்காவலர் குழுத்தலைவராகவும் இருப்பவர் மோகன். இவர் வரவிருக்கும் மார்ச் 30-ம் தேதி, ஆத்தூர் பெரிய மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகத்தை நடத்தத் திட்டமிட்டுள்ளார். அதற்கான அழைப்பிதழைப் படுவேகமாக அமைச்சர்கள் மற்றும் முக்கியப் பிரமுகர்களுக்கு வழங்கி வருகிறார். சமீபத்தில், இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரனுக்கு அழைப்பிதழ் வழங்கியுள்ளார். கும்பாபிஷேக நிகழ்ச்சியில் சுமார் ஒரு லட்சம் பக்தர்கள் கலந்து கொள்ளுமாறு அழைப்புவிடுத்து அதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருகிறார். மோகனிடம் இதுகுறித்துப் பேசியபோது, "கும்பாபிஷேகத்தை ரத்து செய்வது பற்றி எந்த முடிவும் எடுக்கவில்லை" என்கிறார்.

திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளத்தில் இரு அணு உலைகள் செயல்பட்டு வருகின்றன. மேலும் 3 மற்றும் 4-ம் அணு உலைகளுக்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகளில் 5000-த்துக்கும் மேற்பட்ட வடமாநிலத்தவர்கள் பணியாற்றி வருகிறார்கள். 2 நாள்களுக்கு முன்பு வரை தினமும் நூற்றுக்கணக்கானோர் திருநெல்வேலியிலிருந்து கிளம்புவதும் வருவதுமாக இருந்தனர். இவர்கள் எவ்விதக் கட்டுப்பாடுமின்றிக் கூட்டம் கூட்டமாக, அணு உலையின் சுற்று வட்டார கிராமங்களில் நடமாடுகிறார்கள். இதனால், கடும் அச்சத்தில் இருக்கிறார்கள், அணு உலையின் சுற்று வட்டாரத்தில் வசிக்கும் மக்கள்.

கூடங்குளம்
கூடங்குளம்

பிரதமர் மோடி சுய ஊரடங்கு உத்தரவு பிறப்பித்திருந்த மார்ச் 22-ம் தேதியன்று மதுரை மாவட்டம் மேலூர் தொழிலதிபர் ராஜ மார்த்தாண்டன், தன் குடும்பத் திருமணத்தைப் பெரிய மஹாலில் விமரிசையாக நடத்தினார். அதே நாளில், தனது வீட்டில் நடக்கவிருந்த ஒரு நிகழ்ச்சியை அமைச்சர் செல்லூர் ராஜு தள்ளி வைத்திருக்கிறார். ஆனால், ராஜமார்த்தாண்டனின் நிகழ்ச்சிக்குத் தடைவிதிப்பதற்கு, மாவட்ட நிர்வாகமோ காவல்துறையோ எந்த முயற்சியும் எடுக்கவில்லை.

விருதுநகர் மாவட்டம், ஶ்ரீவில்லிபுத்தூர், பெரிய மாரியம்மன் திருக்கோயிலில் திருவிழா கோலாகலமாக நடந்துள்ளது. தமிழகம் முழுவதும் திருக்கோயில்கள் மூடப்பட்ட நிலையில், பெரிய மாரியம்மன் கோயிலும் மூடப்பட்டு, ஆறு கால பூஜை மட்டும் நடந்து வருகிறது. ஆனாலும், கடந்த 12 நாள்களாக விரதம் இருந்து வந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயில் நடை சாத்தப்பட்டிருந்த போதும் வெளியிலிருந்தே சாமி தரிசனம் செய்து வந்தனர். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான அக்கினிச் சட்டி ஏந்தும் திருவிழா, கடந்த மார்ச் 23-ம் தேதி நடந்தது. ஏராளமான பக்தர்கள் பூக்குழி இறங்கினர். தினந்தோறும் கோயில் முன்பு கூடும் பக்தர்களைத் தடுக்க முடியாமல் காவல்துறையினர் திணறினர்.

திருவிழா
திருவிழா
விக்டோரியா மகாராணி உத்தரவிட்டு இயற்றப்பட்ட `தொற்றுநோய் சட்டம் 1897’ - இன்றைய நடைமுறைக்கு சரியா?

கொரோனா எச்சரிக்கை வெளியான பிறகும்கூட திருச்சியில் உழவர் சந்தை உள்ளிட்ட பகுதிகளில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டங்கள் தொடர்ந்தன. கடந்த 16-ம் தேதி காலை திருச்சி உழவர் சந்தையிலிருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம்வரை நூற்றுக்கணக்கானோர் பேரணியாகச் சென்று தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இதேபோல், திருச்சி தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் சார்பாகக் கடந்த 18-ம் தேதி திருச்சி மத்திய சிறைச்சாலையை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்பட்டது. இப்போராட்டத்தில் கிட்டத்தட்ட 10,000 பேர் கலந்து கொண்டனர்.

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே சிலட்டூரைச் சேர்ந்தவர் திருஞானம். இவர் அ.தி.மு.க கிளைக்கழகப் பொறுப்பாளராக இருக்கிறார். இவரது இல்லக் காதணி விழா, மார்ச் 22-ம் தேதி நடத்தப்படுவதாக இருந்தது. அன்றைய தினம், சுய ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருந்ததால், மார்ச் 23-ம் தேதி அவ்விழாவை நடத்தினார், திருஞானம். சுமார் 200 கிலோ ஆட்டிறைச்சி கொண்டு விருந்து தயார் செய்யப்பட்டு தடபுடலாக விழா நடத்தப்பட்டது. ஐந்நூறுக்கும் மேற்பட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். கொரோனாவைத் தடுக்க தமிழக அரசு கடும் முயற்சிகள் எடுத்துவரும் நிலையில், அ.தி.மு.க பிரமுகரே விதிகளை மீறி விழா நடத்தியது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

பொது நிகழ்ச்சி
பொது நிகழ்ச்சி

சுய ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையிலும், தஞ்சாவூர் அருகே உள்ள பாபநாசம் பகுதியில் இருக்கும் அனைத்துத் திருமண மண்டபங்களிலும் மார்ச் 22-ம் தேதி திருமண விழாக்கள் நடந்தன. அவற்றில் பல விழாக்கள் பாபநாசம் மற்றும் அம்மாபேட்டை பகுதிகளைச் சேர்ந்த அ.தி.மு.க பிரமுகர்கள் இல்ல விழாக்கள். இந்தத் திருமண விழாக்கள், நாளிதழ் விளம்பரங்கள், தடபுடலான விருந்துகள் எனப் படாடோபமாக நடத்தப்பட்டன. தமிழக அரசின் உத்தரவை ஆளுங்கட்சிப் பிரமுகர்களே மதிக்காமல் விழாக்களை நடத்தியதால், அப்பகுதி மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.

இப்போது ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுவிட்டாலும் மாநிலம் முழுவதும் ஆளும்கட்சியினராலும், பணம், அரசியல் மற்றும் அதிகாரபலம் கொண்டவர்களாலும் நடத்தப்பட்ட திருவிழாக்கள், நிகழ்ச்சிகள் மற்றும் போராட்டங்களாலும் எவ்வளவு பேருக்கு நோய்த்தொற்றுகள் ஏற்பட்டிருக்கும் என்ற கேள்வியும் அச்சமும் ஒருசேர எழுகிறது. இதன் விளைவுகள் இன்னும் சில நாள்களுக்குப் பின்பே தெரியவரும்.

ஊரடங்கும் போதாவது இவர்களும் அமைதி காக்க வேண்டும்!

அடுத்த கட்டுரைக்கு